Published:Updated:

புதிய கல்விக் கட்டண விவரத்தை வெளியிடுக: ராமதாஸ்

Vikatan Correspondent

சென்னை, மே.2,2011

புதிய கல்வி கட்டண விவரத்தை நீதிபதி ரவிராஜபாண்டியன் தலைமையிலான குழு உடனடியாக வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ##~~##

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "நீதிபதி ரவிராஜபாண்டியன் தலைமையிலான கட்டண நிர்ணயக் குழு, கல்விக் கட்டணத்தை உயர்த்தி நிர்ணயிக்கும்வரை பள்ளிகளைத் திறக்கமாட்டோம் என்றும் சமச்சீர்கல்விக்கான பாடநூல்கள் தரம் குறைவாக இருப்பதால் அக்கல்வி முறையை நடப்பாண்டில் நடைமுறைப்படுத்தமாட்டோம் என்றும் தனியார் பள்ளிகள் அறிவித்துள்ளன. இது தமிழக அரசுக்கு சவால் விடுக்கும் செயல்.

தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள சமச்சீர் கல்வியில் சில குறைபாடுகள் இருக்கலாம். இது காலப்போக்கில் களையப்பட வேண்டும்.

தனியார் பள்ளிகளின் இந்த முயற்சிகளை முறியடிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மாநில அரசுக்கு உண்டு.

கட்டண உயர்வுகோரி மேல்முறையீடு செய்துள்ள 6400 பள்ளிகளிடமும் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுவிட்ட நிலையில் புதிய கல்விக் கட்டண விவரத்தை நீதிபதி ரவிராஜபாண்டியன் தலைமையிலான தமிழக அரசின் கட்டண நிர்ணயக்குழு உடனடியாக வெளியிட வேண்டும்.

அக்கட்டணம் ஏழைகள் செலுத்தக்கூடிய அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அதை தனியார் பள்ளிகள் ஏற்றுக்கொள்வதை உறுதிசெய்ய சட்டப்படியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

இதன் பிறகும் தனியார் பள்ளிகள் வழிக்கு வரவில்லை என்றால் அவற்றுக்கு அரசின் நிதி உதவியை வழங்கி அனைத்து குழந்தைகளுக்கும் இலவசக்கல்வி தர வேண்டும். இல்லாவிட்டால் தனியார் பள்ளிகள் அனைத்தையும் அரசே ஏற்று நடத்த வேண்டும்," என்று ராமதாஸ் கூறியுள்ளார்.