Published:Updated:

முதல் முதல்வர் !

இரா.வினோத்படம்: சு.குமரேசன்

##~##

லயோலா, செயின்ட் ஜோசப், செயின்ட் சேவியர் என பல பெயர்களில்... சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு என பல ஊர்களில் பரந்து விரிந்திருக்கின்றன இயேசு சபையின் கல்வி நிலையங்கள். இந்திய அளவில் டாப் டென் வரிசையில் இடம்பிடிக்கவல்ல, 200 ஆண்டு கால பழமை வாய்ந்த இக்கல்வி நிலையங்களில்... இதுவரை ஒரு பெண், முதல்வர் பதவி வகித்ததில்லை. இந்த வரலாற்றை மாற்றி எழுதியிருக்கிறார்... கிரேஸ்லெட் ஸ்டேன்லி!

பெங்களூரூ செயின்ட் ஜோசப் மாலைக் கல்லூரியில், முதல் பெண் பிரின்சிபாலாக பொறுப்பேற்றிருக்கிறார் கிரேஸ்லெட். அனைவரும் ஆச்சர்யத்தோடு பிரமிக்கும் கிரேஸ்லெட், நாகர்கோவிலைச் சேர்ந்த பச்சை தமிழச்சி! 'அவள் விகடன்' சார்பாக பூங்கொத்தை பரிமாறி, பேச ஆரம்பித்தோம்!

''நாகர்கோவில் பக்கம் மறவன்குடியிருப்புதான் நான் பிறந்து, வளர்ந்து, படிச்சது எல்லாமே. என்கூட பிறந்தவங்க மொத்தம் 16 பேர். சின்ன வயசுல இருந்தே எதையும் என்னால் செய்ய முடியும்ங்கிற ஓவர் டோஸ் தன்னம்பிக்கை எனக்கு மட்டுமில்ல... என் சகோதர, சகோதரிகள் எல்லாருக்கும் உண்டு. அதுக்குக் காரணம், எங்கம்மா. படிப்பு மட்டுமில்லாம பேச்சு, கட்டுரை, கவிதைனு எல்லாத்துலயும் உற்சாகப்படுத்துவாங்க. அதனாலதான் இன்னிக்கு டாக்டர், இன்ஜினீயர், பேராசிரியர், அட்வகேட்னு எல்லாரும் நல்ல பேரோட உலகம் முழுக்க பரந்து இருக்கோம்'' என பால்யத்தின் மகிழ்ச்சியான காட்சிகளை மனதில் ஓடவிட்டார்.

முதல் முதல்வர் !

''ப்ளஸ் டூ வரை தமிழ் மீடியத்தில்தான் படிச் சேன். அதனால எனக்கு வசப்படாம இருந்த ஆங்கிலம் மேல கோபமும் காதலும் சேர்ந்து வந்தது. கல்லூரியில் ஆங்கில இலக்கியம் சேர்ந் தேன். ஆரம்பத்தில் ரொம்ப தடுமாறினேன். 'அப்போவே சொன்னோம் கேட்டியா..?’னு சிலர் குத்திக் காட்டிப் பேச, ரௌத்திர குணத்தோடு 'நானா, ஆங்கிலமா’னு மல்லுக்கட்டிப் படிச்சேன். பி.ஏ, எம்.ஏ-ல யுனிவர்சிட்டி டாப் ரேங்க். மதுரை யில் டீச்சர், லெக்சரர்னு நாட்கள் ஓடிட்டு இருக்க, 1985-ல் பெங்களூரு செயின்ட் ஜோசப் ஈவ்னிங் காலேஜில் பேராசிரியரா வேலை கிடைச்சது!'' என்பவரின் கணவர், ஒரு பத்திரிகையாளர். 'தி எகனாமிக் டைம்ஸ்’ ஆங்கில பத்திரிகையின் பெங்களூரு பதிப்பின் எடிட்டர் ஸ்டேன்லி.

பெங்களூரு வந்த புதிதில் தான் சந்தித்த நிகழ்வுகளை கிரேஸ்லெட் சொல்லும்போது, அதை அவருடைய முகமும் பிரதிபலிக்கிறது. ''பொதுவா ஈவ்னிங் காலேஜ் ஸ்டூடன்ட்ஸ் எல்லாரும் வேலை செஞ்சுட்டே படிக்கிற மிடில் கிளாஸ், ஏழைப் பசங்களாதான் இருப்பாங்க. நாள் முழுக்க வேலை செஞ்சுட்டு, மாலையில் களைப்பா கல்லூரி வர்ற அவங்களுக்கு, அக்கறையோடதான் நான் பாடம் நடத்துவேன். அவங்கள பாடம் படிக்க வைக்கிறதுக்கு முன்ன அவங்களோட உளவியலை நான் படிப்பேன். வேலை பார்க்கிற இடத்தில், வீட்டில் உள்ள பிரச்னைகளை எல்லாம் கேட்டுத் தெரிஞ்சு அவங்களுக்கு தைரியமூட்டி, உற்சாகப் படுத்துவேன். பொதுவா, 80 சதவிகித மாணவர்கள் தமிழர்களா இருப்பாங்க. அவங்களுக்கு அடிப்படை ஆங்கிலத்துல இருந்து பொறுமையா ஆரம்பிச்சு, கல்லூரி லெவலுக்கு கொண்டு வருவேன். இன்னொரு பக்கம், நானும்     கன்னடம் கத்துக்க ஆரம்பிச்சேன். இப்போ டிகிரி லெவல் வரைக்கும் கன்னடம் படிச் சிருக்கேன்!''

- தோள்களை உயர்த்துகிறார் கிரேஸ்லெட்.

''ஈவ்னிங் காலேஜ் மாணவர்களில் பாதி பேர் பெண்கள். இன்னிக்கு இருக்கிற மாதிரி 20 வருஷத்துக்கு முன்ன பெண்களுக்கு சமூக விழிப்பு உணர்வு கிடையாது. வெறும் ஏட்டுக் கல்வியை மட்டும் கொடுக்காம, சமுதாயத்தில் தான் சந்திக்கும் பிரச்னைகளோடு எப்படிப் போராடணும்னு அவங்களுக்கு சொல்லித் தரணும்ங்கிறது என்னோட எண்ணம். அதை காலேஜ் மேனேஜ்மென்ட்கிட்ட பேசி, 91-ம் வருஷம் காலேஜ்ல 'வுமன் செல்’ ஆரம்பிச்சேன். அதன் மூலமா மாணவிகளுக்கு குடும்பத்தில், அலுவலகத்தில், சமூகத்தில் எழும் பிரச்னைகளை அணுகவும், காதல், பாலியல் கல்வி சார்ந்த சரியான பார்வையைப் பெறவும் வழிகாட்டினேன். பெண்ணியவாதிகளைக் கொண்டு கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், கவுன்சிலிங், சந்தேகங்கள் களைதல்னு இதுவரை 15 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்களுக்கு அறிவூட்டி இருக்கேன். இதன் பலனாத்தான் 2010-ல் அமெரிக்காவில் நடந்த இன்டர்நேஷனல் பெண்கள் விழிப்பு உணர்வு கருத்தரங்குல கலந்துக்கற வாய்ப்பு தேடி வந்தது!' என்ற கிரேஸ்லெட், தான், 'முதல் பெண் முதல்வர்' ஆன பெருமை பற்றியும் பகிர்ந்தார்.

''எங்க ஈவ்னிங் காலேஜ்ல வுமன் செல், கல்ச்சுரல், கல்லூரி நிகழ்ச்சிகள்னு எல்லாத்துக்கும் இன்சார்ஜ் நான்தான். அதையெல்லாம் சிறப்பா கையாண்டதால், 2000-ம் ஆண்டு எனக்கு 'காலேஜ் கவர்னர்’ போஸ்ட் கொடுத்தாங்க. அதற்குப் பின் இந்தக் கல்லூரிக்கான என்னோட பொறுப்பும் உழைப்பும் இன்னும் அதிகமானது. அதன் பலனா, கல்லூரியின் மதிப்பு இந்திய அள வில் கூடிக்கொண்டே வந்தது, கல்லூரிக்கு 'நேக்' (ழிகிகிசி) அங்கீகாரம் கிடைச்சுது. இந்தியாவில் 'நேக்’ அங்கீகாரம் பெற்ற முதல் மாலை நேரக் கல்லூரிங்கிற பெருமையும் கிடைச்சுது. 2011-ல் காலேஜ் பிரின்சிபால் ஃபாதர் பிரஷாந்த், பணி மாற்றமாகி போன பிறகு, சீனியர் ஆண் பேராசிரியர்கள் லிஸ்ட்ல இருந்தாங்க. அந்த லிஸ்ட்ல ஒரு பெயரைத்தான் நானும் எதிர்பார்த்துட்டு இருந்தேன். ஆனா... கல்லூரிக்கான என்னோட ஆக்கப்பூர்வ செயல்பாடுகளுக்கான அங்கீகாரமா, என்னை முதல்வர் ஆக்கிட்டாங்க. இந்த அங்கீகாரம் கிடைச்சதில், நிறையவே பெருமைப்படறேன். சமூக மாற்றத்தின் சாவியான கல்வி, ஏழை களுக்கும் கிடைக்கணும்ங்கிற இலக்கை நோக்கி இனி என் பயணம் தொடரும்!''

- கம்பீரமாக முடித்தார் கிரேஸ்லெட்!

'முதல்’வர்!