Published:Updated:

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்-ஜெயலலிதா

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்-ஜெயலலிதா
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்-ஜெயலலிதா
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்-ஜெயலலிதா

சென்னை: 'பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்' என மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் பெட்ரோலியப் பொருட்களின் விலையை பல முறை உயர்த்தி, அதன் மூலம் விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்து, 'மக்களை வாட்டி வதைக்கும் சாதனை' புரிந்துள்ள ஒரே அரசு காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு என்று சொன்னால் அது மிகையாகாது.

மக்களின் வேதனையை, சோதனையை தனது சாதனையாக கருதி செயல்படும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, தனது சாதனையை மேலும் அதிகரிக்கும் வண்ணம், ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் பெட்ரோலின் விலையை லிட்டருக்கு 70 காசாகவும், டீசலின் விலையை லிட்டருக்கு 50 காசாகவும்  உயர்த்தி, அந்தச் சுமை ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து மக்கள் இன்னமும் மீளாத சூழ்நிலையில், மீண்டும் பெட்ரோலின் விலையை இன்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு 2 ரூபாய் 35 காசு என்றும், டீசல் விலையை லிட்டருக்கு 50 காசு என்றும் உயர்த்தி இருப்பது ஏழை, எளிய நடுத்தர மக்களின் வயிற்றில் அடிக்கும் செயலாகும். இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடாளுமன்றத்தில் பாரதப் பிரதமர் 30.8.2013 அன்று இந்திய நாட்டின் நடப்பு பொருளாதார நிலை பற்றி பேசும் போது, 'எளிதான பொருளாதார சீர்திருத்தங்கள் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டு விட்டன' என்றும், 'மானியங்களைக் குறைப்பது', 'காப்பீடு மற்றும் ஓய்வூதியத் துறைகளில் சீர்திருத்தம்' போன்ற கடினமான சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்' என்றும் தெரிவித்து உள்ளார். ஒருவேளை பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்த்தப்படும் என்பதை இவ்வாறு சூசகமாக அவர் அன்றே தெரிவித்துவிட்டார் போலும்!

மேலும், இது குறித்து பேசிய பாரதப் பிரதமர், இந்தியாவில் அதிக அளவில் பண வீக்கம் ஏற்பட்டுள்ளது என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளார். இவ்வாறு பேசிய மறுநாளே பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியிருப்பது பண வீக்கத்தை மேலும் அதிகரிக்கவே வழிவகுக்கும். மத்திய அரசின் இந்த நடவடிக்கையைப் பார்க்கும் போது 'படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்' என்ற பழமொழி தான் நினைவிற்கு வருகிறது.

மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தும் ஏழை, எளிய மக்களையும், விவசாயிகளையும், தொழிலாளர்களையும், நடுத்தர வகுப்பு மக்களையும், சாமானிய மக்களையும் கடுமையாக பாதிக்கும். இந்த விலை உயர்வின் காரணமாக, வாகனங்களின் கட்டணங்கள் மேலும் அதிகரித்து, அதன் மூலம் அத்தியாவசியப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் உட்பட அனைத்துப் பொருட்களின் விலைகளும் பன்மடங்கு உயரக் கூடும் என்பதையும் இந்தத் தருணத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதையும், மத்திய கிழக்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள பூகோள அரசியல் நிலைமை காரணமாக சர்வதேச அளவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதையும் சுட்டிக் காட்டி, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையினை உயர்த்தி உள்ளது ஏற்றுக்கொள்ள இயலாதது ஆகும்.

பாரதப் பிரதமர் நாடாளுமன்றத்தில் பேசும் போது, 'வளர்ந்த நாடுகளைவிட இந்தியாவில் பண வீக்கம் அதிகமாக உள்ளதால், பண வீக்க வேறுபாட்டின் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவது இயற்கையே' என்று தெரிவித்துள்ளார். எனவே, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதைச் சுட்டிக் காட்டி பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்துவது நியாயமற்றதாகும். ஏனெனில், இந்த விலை உயர்வு பண வீக்கத்தை மேலும் அதிகரித்து, ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி அடையவே வழிவகுக்கும்.

பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதற்கு மூலக் காரணமாக விளங்கும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவதற்கான காரணிகளை கண்டறிந்து, அதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமல், நுனிப்புல் மேயும் பணியை மேற்கொள்வது நாட்டின் பொருளாதாரத்தை மேலும் சீரழிக்கவே வழிவகுக்கும் என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

இதையே தான், பாரத ரிசர்வ் வங்கியின் கவர்னர் சுப்பாராவ் சில தினங்களுக்கு முன் ஒரு கூட்டத்தில் பேசுகையில், 'இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைவதற்கான அடிப்படைக் காரணம் Domestic Structural Factors தான் என்று கூறி இருக்கிறார்.

இதனை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் வரை, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதை தடுக்க இயலாது. இதன் காரணமாக பெட்ரோலியப் பொருட்களின் விலையை அடிக்கடி ஏற்றுவதும் தவிர்க்க இயலாது. எனவே, மத்திய அரசு இதனை சரி செய்வதற்கு உடனடி நடவடிக்கைகளை இனியாவது எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

##~~##
இது மட்டுமல்லாமல், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெயை கருத்தில் கொள்ளாமல், சர்வதேச பெட்ரோலியப் பொருட்களின் விலையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுவது எண்ணெய் நிறுவனங்களின் லாபத்திற்கு வழிவகுக்குமே தவிர, பொதுமக்களுக்கு எந்த விதப் பயனையும் அளிக்காது என்பதை நான் பல முறை என்னுடைய அறிக்கைகள் வாயிலாக சுட்டிக் காட்டியுள்ளேன். இதைத் தற்போதும் மத்திய அரசுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
எனவே, இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு, இந்தப் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணய அதிகாரத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுவதில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும் என்றும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.