Published:Updated:

தமிழக சட்டமன்றம் உங்களை வரவேற்கிறது!

எம்.பரக்கத் அலிபடங்கள் : வி.செந்தில்குமார், வீ.நாகமணி

பிரீமியம் ஸ்டோரி
##~##

ல நூறு கோடிகளைக் கொட்டி கருணாநிதியால் உருவாக்கப்பட்ட புதிய சட்டசபைக் கட்டடம் புராதனமாகிவிட, பழைய கோட்டைதான் இப்போதும் பரபரத்துக்கிடக்கிறது. இரண்டு மாத கால பட்ஜெட் கூட்டத் தொடரின் சட்டசபை உயர் வெளிச்சத் துளிகள் இங்கே...

 'செல்லாத’ போன்கள்!

சட்டசபைக்குள் உறுப்பினர்கள் செல்போன்களைக் கொண்டுவரக் கூடாது என்ற அறிவிப்பு வெளியானது  நினைவு இருக்கலாம். ஆனால், செல்போன்களுக்குத்தான் தடை. ஸ்மார்ட் கார்டு போட்டுப் பேசும் போன்கள் சட்டசபை வளாகத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்டு இருக்கின்றன. உறுப்பினர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகளும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அவற்றை யாரும் பயன்படுத்துவதாகத் தெரியவில்லை.

தமிழக சட்டமன்றம் உங்களை வரவேற்கிறது!

செல்போனுக்குத் தடை என்பதால், உறுப்பினர்களின் செல்போன்களைப் பாதுகாப்பாக வைக்க இரண்டு லாபியிலும் குட்டிக் குட்டி அறைகள் ஒதுக்கப்பட்டன. ஒவ்வோர் அறைக்குரிய எண் பொறித்த சாவி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. செல்போன் பயன்படுத்தாத ஜெயலலிதாவின் அறை எண் ஒன்று. கட்சி, ஆட்சி, அவை என எங்கெங்கும் ஜெய லலிதாவுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் அறை எண் 23. சரி, இரண்டாம் எண் யாருக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது தெரியுமா? சங்கரன்கோவிலில் வென்ற முத்துச்செல்விக்கு!  

ஃப்ளாஸ்க்கில் ஜூஸ்!

தமிழக சட்டமன்றம் உங்களை வரவேற்கிறது!

எதிர்க் கட்சி உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளுக்கு, சம்பந்தப்பட்ட அமைச்சர் களே விளக்கம் அளிக்க வேண்டும் என்பது ஜெ-வின் கட்டளை. காரசார விவாதங்களுக்கு நடுவில் மேஜையில் வைக்கப்பட்டு இருக்கும் ஃப்ளாஸ்க்கில் உள்ள ஜூஸை அவ்வப்போது முதல்வர் குடிக்கிறார். அம்மாவைச் சந்திக்க அபாயின்ட்மென்ட் கிடைக்க நேரம் ஆகும் என்பதாலோ என்னவோ... சட்டசபையிலேயே அம்மா அருகில் சென்று பார்த்துக் கும்பிடு போட்டு, ஃபைல்களை நீட்டுகிறார்கள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள். எதிர்க் கட்சிகளில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ-க்கள் மட்டும் அப்படிச் சந்தித்து பைல்களை நீட்டுகிறார்கள். அந்த ஃபைல்கள் உடனுக் குடன் முதல்வரின் செயலாளர்களிடம் அனுப்பிவைக்கப்படுகின்றன.

'துலுக்கானம் ஒரு மசால் டீ!’

அரட்டை, ஆரவாரம், அனல் விவாதம் என காலேஜ் கேன்டீன்போலக் கலகலப்பாக இருக்கிறது சட்டசபை கேன்டீன். தலைமைச் செயலகக் கூட்டுறவுச் சங்க ஹோட்டல்தான் கோட்டை கேன்டீன் உணவுகளுக்குப் பொறுப்பு. மசால்வடை, மெதுவடை, பக்கோடா, சுண்டல், வெஜிட பிள் சூப் என அனைத்தும் கட்டுப்பாடான விலையில் கிடைக்கின்றன. மறுபக்கம் இருக்கும் சங்கீதா ஹோட்டலில் சாண்ட்விச், கேசரி, பப்ஸ், பொங்கல் என்று சுடச்சுட கிடைக்கும் வெரைட்டி டிபன்களின் விலை கொஞ்சம் அதிகம்தான். ஆனாலும், அந்தப் பக்கம்தான் அள்ளுகிறது ஆளும் கட்சியின ரின் கூட்டம். கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ-க்களை அரசு கேன்டீன் பக்கம் பார்க்கலாம்.

காலை 10 மணிக்குத் தொடங்கும் அவையில் முதல் ஒரு மணி நேரம் கேள்வி நேரம். அது முடிந்ததும் ஜீரோ ஹவர். அப்போதுதான் அன்றைய சென்சேஷன் பரபரப்புகள் கிளம்பும். அது அடங்கிய பிறகு கேன்டீன் ஏரியாவில்தான் கூட்டம் மொய்க்கும். அதிலும் ஜெயலலிதா அவை யைவிட்டு அறைக்குக் கிளம்பியவுடன் அ.தி.மு.க. உறுப்பினர்கள் கேன்டீன் ஏரியா வைக் குத்தகைக்கு எடுத்துவிடுகிறார்கள். கடந்த காலங்களில் கேன்டீனில் அமைச்சர் களைப் பார்ப்பது அபூர்வம். இப்போது கே.பி.முனுசாமி உட்பட பலரும் உறுப் பினர்களோடு அரட்டை அடித்தபடியே காலி டிபன் பிளேட்டுகளைக் கடாசித் தள்ளுகிறார்கள். 'துலுக்கானம்... துலுக் கானம்’ - கேன்டீனில் அடிக்கடி ஒலிக்கும் பெயர் இதுதான். எம்.எல்.ஏ-க்களின் நீக்கு போக்கு அறிந்து பரபரபவென வேலை பார்க்கும் சப்ளையர்தான் துலுக்கானம்!

டூப் விஜயகாந்த்!

தமிழக சட்டமன்றம் உங்களை வரவேற்கிறது!

கையை உயர்த்தி, நாக்கைத் துருத்தி சஸ்பெண்டான சம்பவத்துக்குப் பிறகு விஜயகாந்த் சட்டசபை பக்கம் எட்டிப் பார்க்கவே இல்லை. இதற்கிடையில் அவரைப் போலவே சாயல்கொண்ட ஒரு எம்.எல்.ஏ-வைத்தான் கேப்டன் இல்லாத சமயம், 'கறுப்பு விஜயகாந்த்’தாகப் பார்த்து ரசிக்கிறது சட்டசபை வளாகம். திட்டக்குடி தே.மு.தி.க-வின் எம்.எல்.ஏ-வான தமிழ்அழகனைத் தூரத்தில் இருந்து பார்த்தால், அச்சு அசல் விஜயகாந்த் போலவே இருக்கிறார். 'டூப்ளிகேட் விஜயகாந்த்’ என்பது அவருக்கான பட்டப் பெயர்!

திருவாரூர் அம்பு... ஸ்ரீரங்கம் வம்பு!

32 அமைச்சர்களால் அவை நிறைந்து இருந்தாலும் எதிர்க் கட்சி கள் குற்றம் சொல்லிப் பேசும்போது ஆளும் கட்சித் தரப்பில் பதிலடி கொடுப்பது ஆறு பேர் மட்டும்தான். ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டை யன், நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி, வளர்மதி, சி.வி.சண்முகம். இவர்களில் முதல் இடம் கே.பி.முனுசாமிக்குத்தான். ஆர்வ மிகுதியா அல்லது அம்மாவிடம் ஸ்கோர் பண்ணும் ஆசையா எனத் தெரியவில்லை. ஆனால், எந்தக் குற்றச்சாட்டாக இருந்தாலும் சளைக்காமல் பதில் கொடுக்கிறார். ''சென்னையில் தோற்றுவிடுவோம் எனப் பயந்து திருவாரூக்கு ஓடினார் கருணாநிதி!'' என்று முனுசாமிசொல்ல... அப்போது அவையில் இருந்த ஸ்டாலின் எழுந்து, ''எங்க தலைவர் சொந்த ஊருக்குப் போனார். உங்க தலைவர் ஏன் ஸ்ரீரங்கம் போனார்?'' என்று மடக்க... திணறித்தான் போனார் முனுசாமி. ''ஸ்ரீரங்கம் அம்மாவின் பூர்வீகம். தவிர, அம்மா வின் பாட்டியின் ஊர்'' என்று என்னென்னவெல்லாமோ சொல்லி அப்போதைக்கு நிலைமையைச் சமாளித்தது முனுசாமி அல்ல...சீனியர் செங்கோட்டையன்!  

நேருக்கு நேர்!

சுமார் 10 வருடங்கள் கழித்து ஜெயலலிதாவும் கருணாநிதியும் அருகருகே காணக் கிடைத்தார்கள். கடந்த வாரம் சட்டசபை வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட கோட்டை வளாகம் வந்தார் கருணா

தமிழக சட்டமன்றம் உங்களை வரவேற்கிறது!

நிதி. ஜெயலலிதாவின் கான்வாய் கோட்டைக்குள் நுழைய, அதற்குப் பின்னாலேயே கருணாநிதியின் கார் அணிவரிசையும் வந்தது. இருவரும் அருகருகே இருந்தாலும் நேருக்கு நேர் பார்த்துக்கொள்ளவில்லை. மோட்டார் நாற்காலியில் உள்ளே சென்று கையெழுத்திட்ட கையோடு திரும்பினார் கருணாநிதி. இதற்கு முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின் போது, ஒரே ஒரு முறைதான் சட்ட சபையினுள் அமர்ந்தார் கருணாநிதி. அப்போதுதான் ஜெயலலிதாவும் கருணாநிதியும் எதிரும் புதிருமாக காணக் கிடைத்தார்கள். இப்போது இருவரும் அருகருகே இருந்தாலும் மீடியா வெளிச்சத்தில் சிக்காத அளவுக்கு இரும்புத் திரை போட்டு விட்டார்கள் காவல் துறையினர். இப்போது மோட்டார் நாற்காலி அவைக்குள் நுழைவதற்கு வசதிகள் இல்லாததால், அதற்கான வசதி செய்து தருமாறு கேட்டிருக்கிறார் முன்னாள் முதல்வர் கருணாநிதி!

மண்டப ராசி, சட்டமன்றத்திலும்!      

கடந்த தி.மு.க. ஆட்சியில் எதிர்க் கட்சித் தலைவருக்கு என அமைக்கப்பட்ட அறைதான் இப்போது விஜயகாந்துக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆட்சிக்கு வந்த புதிதில் அந்த அறைக்குள் எப்போதாவது அமர்ந்து செல்வார் விஜயகாந்த். அந்த அறை யைத்தான் வெட்டிப் பிரித்து ஒரு பங்கை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி விட்டார்கள். காங்கிரஸ் கட்சியின ருக்கு வழங்கப்பட்டு இருக்கும் அறை யைவிட விஜயகாந்தின் அறை அளவில் சிறியது. சட்டமன்றத்தில் அறைப் பிரச்னைக்காகக் குரல் கொடுத்த தன் கட்சி எம்.எல்.ஏ-க்களிடம், ''அட விடுங்கப்பா... இதுக்காக எதுக்குப் போய் அவங்களோட மல்லுக்கட்டிக்கிட்டு இருக்கீங்க'' என்றாராம் விஜயகாந்த்.

கடைசி பெஞ்சு கலக பார்ட்டிகள்!

பள்ளிக்கூடத்தில் எப்போதும் கடைசி பெஞ்சு மாணவர்களிடம் துடுக்குத்தனம் அதிகம் இருக்கும்.

தமிழக சட்டமன்றம் உங்களை வரவேற்கிறது!

இப்போது சபையிலும் அப்படித்தான். கடைசி வரிசைகளில் இடம் பிடித்திருக்கும் எ.வ.வேலு, பெரியகருப்பன், ஜெ.அன்பழகன் ஆகியோரிடம் வேகம் அதிகம். அடிக்கடி எழுந்து குரல் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். அதில் ஜெ.அன்பழகனின் குரல் கொஞ்சம் அதிகமாகவே ஒலிக்கும். முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில், உள்துறை மானியக் கோரிக்கையின்போது தி.மு.க. சார்பில் ஒவ்வொரு முறையும் ஜெ.அன்பழகன் பேசியபோதும் அவையில் அனல் கிளம்பியது. போக்குவரத்துத் துறை தனியார்மயமாக்கப்படுவதாக விவாதம் கிளம்பிய நிலையில், ''எல்லாத் துறைகளையும் தனியார்மயமாக்கி வருகிறது இந்த ஆட்சி. சட்டம் - ஒழுங்கைச் சரிவர நிர்வகிக்க முடியாத நிலையில் பேசாமல் காவல் துறையையும் தனியாரிடமே  ஒப்படைத்துவிடலாம்'' என்று அன்பழகன் சொல்ல, கொந்தளித்தார்கள் அ.தி.மு.க-வினர். இப்போதும் அடிக்கடி எழுந்து பிரச்னையைக் கிளப்புவதாலேயே, அடுத்தடுத்து இரண்டு முறை அவையைவிட்டு வெளியேற்றப்பட்டார் அன்பழகன்!

''கழுத்து நெரிக்கப்படும் மரபுகள்!''  

'பாரம்பரியம் மிக்க தமிழக சட்டசபையின் சமீப நடவடிக்கை களைப் பற்றி உங்கள் பார்வை என்ன?''
துரைமுருகன், சட்டமன்ற தி.மு.க. துணைத் தலைவர்.

தமிழக சட்டமன்றம் உங்களை வரவேற்கிறது!

''சட்டசபையில் செயல்பட முடியாத அளவுக்கு எதிர்க் கட்சிகள் முடக்கப்பட்டு இருக்கின்றன. பொதுவாக, எதிர்க் கட்சி உறுப்பினர்களுக்குத்தான் அவையில் அதிகம் பேச வாய்ப்பு தருவார்கள். ஆனால், அந்தப் பாக்கியம் இந்த அவையின் எதிர்க் கட்சிகளுக்குக் கிடைக்கவில்லை. எதிர்க் கட்சித் தலைவர்கள் எழுந்து நின்றால், சபாநாயகர் பேச அனுமதி கொடுப்பது மரபு. அந்த மரபுகள் இப்போது கழுத்து நெரிக்கப்பட்டு இருக்கின்றன. சட்டமன்றப் பேரவை விதிகள்கூட மீறப்படுகின்றன. சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் முதல்வரோ அல்லது அமைச்சர்களோ அவையில் அறிக்கை வாசிக்கலாம். அப்படி வாசித்த பிறகு, அந்த அறிக்கையை ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ யாரும் எதுவும் பேச முடியாது என்பது விதி. இந்த மன்றத்தில் அந்த விதி முழுக்க மீறப்படுகிறது. முதல்வர் அறிக்கை படித்த பிறகு, அவரைப் பாராட்டி துதி பாடிப் பேசுகிறார்கள்.

பூஜ்ஜிய நேரத்தில் சில முக்கிய விஷயங்கள் குறித்து அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக எதிர்க் கட்சித் தலைவர்கள் எழுந்து நிற்பது வழக்கம். ஆனால், கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு மட்டுமே அந்த வாய்ப்புகள் வழங் கப்படுகின்றன. எங்களைப் போன்றவர்களுக்கு மறுக்கப்படுகின்றன. ஒரு கட்சியில் இருந்து தேர்வுசெய்யப்பட்டவராகச் சபாநாயகர் இருந்தாலும், அந்த ஆசனத்தில் அமரும் அவர் எல்லாக் கட்சிகளுக்கும் பொதுவானவர்தான். சபாநாயகர் மீது நம்பிக்கை வைத்துதான் நாங்கள் அவைக்கே செல்கிறோம். எங்கள் உரிமையைப் பாதுகாப்பது சபாநாயகரின் கடமை. ஆனால், அந்தப் பண்பாடு இப்போது காற்றில் பறந்துவிட்டது. அவருடைய அதிகாரத்தை எங்கள் மீது மட்டுமே செலுத்திக்கொண்டு இருக்கிறார்.

சபாநாயகரைத் தனிப்பட்ட முறையில் குறை சொல்ல மாட்டேன். பழகுவதற்கு இனிய நண்பர். படித்தவர். நாகரிகம் அறிந்தவர். சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்த பிறகும் அவர் அப்படியே இருந்தால் எங்களின் பாராட்டுக்கு உரியவர். ஆனால், என்ன செய்வது? அந்த நல்ல நாள் என்றோ ஒருநாள் வரும் என்ற நம்பிக்கையில்தான் எத்தனையோ அவமானங்களுக்கு மத்தியிலும் சபைக்குச் சென்றுகொண்டு இருக்கிறோம்.

இது புதிய அவை. புதிய உறுப்பினர்களுக்கு அவையில் இன்னும் பிடிமானம்கூட ஏற்படவில்லை. அதனால், புதிய உறுப்பினர்கள் பேசும்போது பொறுத்துக்கொண்டு அவர்களை அனுமதிக்க வேண்டும். அரசைக் குறைகூறிப் பேசும் புதுமுகங்களைக்கூடப் பேச விடாமல் அமைச்சர்கள் சரமாரியாகக் குறுக்கிடுகிறார்கள். மூத்த உறுப்பினர்கள் பேச்சில் குறுக்கிடுவதில் தவறு இல்லை. அவைக்குப் புதிதாக வந்த உறுப்பினர்களின் கன்னிப்பேச்சிலும் குறுக்கிடுவது நல்லதல்ல!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு