Published:Updated:

பெட்ரோல் விலை உயர்வு: அரசின் தவறுக்கு மக்களை தண்டிப்பதா?-ராமதாஸ் கண்டனம்!

பெட்ரோல் விலை உயர்வு: அரசின் தவறுக்கு மக்களை தண்டிப்பதா?-ராமதாஸ் கண்டனம்!
பெட்ரோல் விலை உயர்வு: அரசின் தவறுக்கு மக்களை தண்டிப்பதா?-ராமதாஸ் கண்டனம்!
பெட்ரோல் விலை உயர்வு: அரசின் தவறுக்கு மக்களை தண்டிப்பதா?-ராமதாஸ் கண்டனம்!

சென்னை: மத்திய அரசு செய்த தவறுகளால் ரூபாய் மதிப்பு குறைந்ததற்காக, பெட்ரோல் விலையை உயர்த்தி மக்களை தண்டிப்பதா? என மத்திய அரசுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பெட்ரோல், டீசல் விலை என்ற பெயரில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது மத்திய அரசு மீண்டும் ஒரு தாக்குதலை தொடுத்திருக்கிறது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.99 உயர்ந்து ரூ.77.48 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு 61 பைசா உயர்ந்து ரூ.55.37 ஆகவும் அதிகரித்திருக்கிறது.

நடப்பாண்டில் மட்டும் டீசல் விலை 9 தவணைகளில் ரூ.5.24ம், பெட்ரோல் விலை 2 மாதங்களில் 6 தவணைகளாக ரூ 11.58ம் உயர்த்தப்பட்டிருக்கிறது. கடந்த 2008 ஆம் ஆண்டில் உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மிக அதிகமாக ஒரு பீப்பாய் 147 டாலர் என்ற அளவை எட்டியபோது கூட, ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.37.13 ஆகவும், ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.55.07 ஆகவும் தான் இருந்தது. ஆனால், இப்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் 114 டாலராக இருக்கும் நிலையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.55.37 ஆகவும், பெட்ரோல் விலை ரூ.77.48 ஆகவும் உயர்த்தப்பட்டிருப்பதன் நியாயத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வை கருத்தில் கொண்டால் கூட இந்த விலை உயர்வு அநியாயமானதாகும்.

##~~##
ரூபாய் மதிப்பு குறைந்ததன் காரணமாகவே பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டிருப்பதாக மத்திய அரசு கூறியிருக்கிறது. ரூபாய் மதிப்பு குறைந்ததற்கு மத்திய அரசின் தவறான கொள்கைகளும், பெரு நிறுவனங்களுக்கு லட்சக்கணக்கான கோடி ரூபாயை ஊக்குவிப்பு என்ற பெயரில் வாரி வழங்கியதும் தான் காரணமாகும். மத்திய அரசின் தவறுகளால் ஏற்பட்ட விளைவுகளுக்காக ஏழை மற்றும் நடுத்தர மக்களைத் தண்டிப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருவதாலும், டாலர் மதிப்பு உயர்வு உள்ளிட்ட காரணங்களாலும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இதனால், மக்கள் வாழவே முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் ஒரு முறை உயர்த்தியிருப்பது மக்கள் மீது மத்திய அரசுக்கு இரக்கம் இல்லை என்பதையே காட்டுகிறது.

எனவே, மக்களின் துயரத்தைப் போக்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப்பெறுவதுடன், எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள விலை நிர்ணய உரிமையையும் ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை ஓரளவு குறைத்து தமிழக மக்களுக்கு உதவ வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.