Published:Updated:

அதிமுக நாளேடு மீது சட்டப்படி நடவடிக்கை: கருணாநிதி

Vikatan Correspondent

சென்னை, மே 4,2011

வாக்கு எண்ணிக்கையை சீர்குலைக்க திட்டமிட்டதாக செய்தி வெளியிட்ட அதிமுக நாளேடு மீது சட்டப்படி நடவடிக்கை முடிவு செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். ##~~##

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "ஜெயலலிதா அம்மையாரை நிறுவனராகக் கொண்டு வெளிவரும் அ.தி. மு.க.வின் "நமது எம்.ஜி.ஆர்." நாளேட்டில், 3.5.2011 அன்று "வாக்கு எண்ணிக்கையைச் சீர்குலைக்க திட்டமா? தேர்தல் ஆணையம் கடும் அதிர்ச்சி" என்று தலைப்பிட்டு அரைப் பக்கத்துக்கு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 

அதில், "ஓட்டு எண்ணிக்கையின் போது, தி.மு.க.வுக்கு ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன, அப்போது அதனை எப்படி எதிர்கொண்டு தி.மு.க.வுக்குச் சாதகமாக திருப்புவது" என்பது குறித்து, காவல்துறை உயர் அதிகாரி ஒருவர், காவல்துறைத் தலைமை இயக்குனர் அலுவலகத்திலேயே கூட்டம் நடத்தி, ஆலோசனைகள் வழங்கியதாகவும், இந்த சதிக் கூட்டம் பற்றி தேர்தல் ஆணையத்திற்கு தகவல் கிடைக்கவே, உண்மைகளைக் கண்டறியும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதென்றும் சொல்லப்பட்டுள்ளது.
 
இப்படி உண்மைக்கு மாறாகவும், தமிழக மக்களைத் திசை திருப்பி, குழப்பம் ஏற்படுத்தவும், மக்கள் மத்தியிலும், வாக்கு எண்ணிக்கைக்குச் செல்ல இருக்கும் அலுவலர்கள் மத்தியிலும் பீதியை உருவாக்கவும், திட்டமிட்டு வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, இதுகுறித்து அந்த நாளேட்டின் மீதும், சம்மந்தப்பட்டவர்கள் மீதும் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
நாளேட்டில் வெளியிடப்பட்ட செய்தியில், தேர்தல் ஆணையத்தையும் இணைத்து, உண்மைகளைக் கண்டறியும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகச் சொல்லப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் அப்படி முயற்சி மேற்கொண்டு, உண்மையைக் கண்டறிந்திருந்தால், அதனை உடனடியாக அந்த ஆணையம் வெளியிடும் என்றும், உண்மைக்கு மாறானது என்று உணர்ந்தால், தேர்தல் ஆணையம், சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்றும் நம்புகிறேன். தமிழக மக்களும் அதனையே எதிர்பார்க்கிறார்கள்," என்று கருணாநிதி கூறியுள்ளார்.