ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

பின் வாங்கிய கம்யூனிஸ்ட்... முன்னேறுது ஆளும்கட்சி!

புதுக்கோட்டை பரபரப்பு

##~##

ங்கரன்கோவில் பாணியில், நகர்மன்றத் தலை​வரையே புதுக்கோட்டை இடைத்தேர்தலிலும் வேட்​பாளர் ஆக்கிவிட்டார் ஜெயலலிதா. தேர்தல் தேதியும் அறிவித்து விட்டதால், தொகுதியில் தேர்தல் பரபரப்பு எகிறுகிறது. 

புதுக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட அத்தனை கிராமங்களிலும் இலவசப் பொருட்களை ஆளும் கட்சியினர் வேகவேகமாக விநியோகித்து வந்தார்கள். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், திடுமென இலவசப் பொருட்கள் கொடுப்பது ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. பொருட்கள் கிடைக்காதவர்கள் டென்ஷனாகிப்​ போனார்கள். அதனால் ஜீவா நகர், பிச்சத்தான்பட்டி, அரசு மருத்துவமனை, அசோக் நகர்

பின் வாங்கிய கம்யூனிஸ்ட்... முன்னேறுது ஆளும்கட்சி!

ஆகிய இடங்களில் மறியல் நடந்தன. 'எப்படியும்’ கொடுத்து விடுவோம் என்று ஆளும் கட்சி சார்பில் சத்திய சமாதானம் சொன்ன பிறகே மக்கள் கலைந்தனர்.

அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்​கப்​பட்டு இருக்கும் கார்த்திக் தொண்டைமானுக்கு ஏரியாவில் ஆதரவை விட எதிர்ப்பு அதிகமாக இருக்கிறது. புதுக்கோட்டைத் தொகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் சிலர், ''காங்கிரஸ் பாரம்பரியத்தைச் சேர்ந்த மன்னர் விஜயரகுநாத தொண்டை​மானின் மகன்தான் கார்த்திக் தொண்டைமான். இவரது தந்தை மூன்று முறை புதுக்கோட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருந்தவர். கார்த்திக் தொண்டைமான், கடந்த 2007-ம் ஆண்டுதான் அ.தி.மு.க-வில் இணைந்தார். இவர், மன்னார்குடி மூத்த புள்ளி ஒருவர் மூலமாகத்தான் கட்சிக்குள் நுழைந்தார். இப்போதும் அவர்களுடன் தொடர்பில் இருக்கிறார்.

காங்கிரஸ் பாரம்பரியமும் மன்னார்குடி ஆதரவும் உள்ள ஒருவரை கட்சியின் வேட்பாளராக அறிவித்து இருப்பது சரிதானா? இவரை நகர்மன்றத் தலைவராக தேர்ந்து எடுத்த மக்களுக்கு, இன்னமும் இவர் நன்றி சொல்லியே முடிக்கவில்லை. அதற்குள் அடுத்த பதவியைக் கொடுத்தால், உண்மையில் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு எப்போதுதான் பதவி கிடைக்கும்'' என்று புலம்புகிறார்கள்.

அது சரி... மற்றக் கட்சிகளின் நிலை என்ன?

புதுக்கோட்டை தொகுதியை எங்களுக்கு விட்டுத் தர வேண்டும் என்று ஜெயலலிதாவிடம் கேட்பதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் முடிவு எடுத்தது. இது தொடர்பாகப் பேசுவதற்கு தங்களுக்கு நேரம் ஒதுக்க

பின் வாங்கிய கம்யூனிஸ்ட்... முன்னேறுது ஆளும்கட்சி!

வேண்டும் என்று ஜெயலலிதாவுக்கு தா.பாண்டியன் கடிதம் அனுப்பினார். ஆனால், கார்டனில் இருந்து அழைப்பு வரவே இல்லை. விரக்தி அடைந்த இந்தியக் கம்யூனிஸ்ட், தி.மு.க. தரப்புடனும்  பேசியதாகக் கூறப்படுகிறது. 'தி.மு.க. சம்மதித்தால், அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஒரே வேட்பாளரை அ.தி.மு.க-வுக்கு எதிரான பொது வேட்பாளராக நிறுத்தலாம்’ என்று அந்தக் கட்சி முடிவு எடுத்திருந்ததாம். இந்த முடிவு குறித்து கருணாநிதியிடம் பேசியபோது, 'உங்களுக்குள் பேசி முடித்துவிட்டு வாருங்கள். பிறகு சொல்கிறேன்’ என்று சாதகமாகவே சொல்லி இருந்தாராம். கருணாநிதி சம்மதத்துக்கும் ஒரு பின்னணி சொல்கிறார்கள். சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் டெபாசிட் இழந்தது. அதே நிலை புதுக்கோட்டையிலும் தி.மு.க-வுக்கு வந்துவிட வேண்டாம் என்று கருணாநிதி நினைக்கிறாராம்.

சி.பி.ஐ. தரப்பில் பேச்சுவார்த்தை நடத்த வந்தால் இணங்கிப்போவதற்கு விஜயகாந்த் தயாராக இருந்ததாகக் கூறப்படுகிறது. அதேநேரம் இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவில் வைகோ உறுதியாக இருக்கிறார். முத்துக்குமரனின் மனைவி சுசிலாவை பொதுவேட்பாளராக அறிவிக்கும் முயற்சி ஒரு பக்கம் நடந்தது.

சுசிலாவின் மனநிலையை அறிய, நெடுவாசலில் இருக்கும் அவரது வீட்டுக்குச் சென்றோம். ''என்னோட கணவர் எனக்காகவும், என்னோட குழந்தை​களுக்காகவும் வாழ்ந்ததை விட, மக்களுக்காக வாழ்ந்த நேரம்தான் அதிகம். நான் இன்று வரை விழுப்புரத்தில்தான் வேலை பாத்துக்கிட்டு இருக்கேன். அம்மாவோட ஆசியிலதான் அவர் ஜெயிச்சு பதவிக்கு வந்தார். அவரோட பணியைப் பத்தி அம்மாவுக்கு நல்லாத் தெரியும். அதனால இடைத்தேர்தல்ல எனக்கு வாய்ப்புத் தருவாங்கன்னு நம்பிட்டு இருந்தேன். ஏன்னா... ஒரு பெண்ணோட வேதனை இன்னொரு பெண்ணுக்குத்தான் தெரியும். இப்பக்கூட அவங்க எடுத்து இருக்குற முடிவை மறுபரிசீலனை செய்வாங்கன்னு நம்புறேன். அதோட என் கணவர் சார்ந்திருக்கிற கட்சி என்ன சொன்னாலும் அதைச் செய்யவும் கடமைப்பட்டிருக்கேன்'' என்கிறார்.

இத்தகைய நிலையில், 'தேர்தலில் போட்டியிடப் போவதில்லை’ என்று தா.பாண்டியன் அறிவித்தார். வியாழன் மாலையில் அவரது இந்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ''எங்களுக்கு போட்டியிட வாய்ப்பு கேட்டோம். ஆளும்கட்சி பேச்சுவார்த்தைக்கே அழைக்கவில்லை. பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைக்கவும் முடியவில்லை. தனித்துப் போட்டியிடும் அளவுக்கு எங்களுக்கு நிதிவசதியும் இல்லை. எனவே, இந்த முடிவை எடுத்தோம்'' என்று அக்கட்சியின் நிர்வாகி நம்மிடம் கூறினார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த முடிவு ஆளும் கட்சியை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

முத்துக்குமரன் குடும்பத்துக்கு நிதிஉதவி அறிவிக்க​வும், பிரசாரத்துக்கு வரும் நேரத்தில் சுசிலாவை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லவும் ஜெயலலிதா  திட்டமிட்டு இருக்கிறாராம்.!

- மாணிக்கவாசகம்

படங்கள்: கே.குணசீலன்