ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: கருணாநிதி விடும் தமிழ் ஈழத் தூண்டில்!

மிஸ்டர் கழுகு: கருணாநிதி விடும் தமிழ் ஈழத் தூண்டில்!

மிஸ்டர் கழுகு: கருணாநிதி விடும் தமிழ் ஈழத் தூண்டில்!

ழுகார் உள்ளே நுழைந்ததும், ''ஒரு கேள்வி!'' என்றோம்.

 சிரித்தபடியே, ''கேளும்'' என்றார்.

''தமிழீழம் பற்றி கருணாநிதி திடீரெனத் தொடர்ந்து பேச ஆரம்​பித்து உள்ளாரே... என்ன மேட்டர்?'' என்றோம்!

''நானே அதில்தான் ஆரம்​பிக்​கலாம் என்று வந்தேன். நீரே அதைக் கேட்டு​விட்டீர்!'' என்றபடி சொல்ல ஆரம்பித்தார் கழுகார்...

''கருணாநிதியின் தமிழீழப் பாசத்தைப் பார்த்து தமிழீழ ஆதர​வாளர்களே கலவரமாகி​ விட்டனர். ஈழத் தமிழர் விவகாரம் சூடு பிடிக்கும்​போதெல்லாம் 'தமிழ் ஈழம்தான் என் லட்சியம்’ என்பார் கருணாநிதி. சீஸன் முடிந்ததும் அவரும் மறந்து விடுவார். மற்றவர்களும் அவரிடம் அதுபற்றிக் கேட்க மாட்டார்கள். ஆனால், கடந்த ஒரு வாரமாக தினமும் தமிழ் ஈழ முழக்கம்தான். ஒரு காலத்தில் அவர் நடத்தி வந்த தமிழீழ ஆதரவாளர் கூட்டமைப்பு என்று சொல்லப்படும் டெசோ அமைப்பை மறுபடியும் புதுப்பிக்கும் அளவுக்கு கருணாநிதி மும்​முரமாக இருப்பதுதான் புதிர்!''

''சொல்லும்!''

##~##

''இந்தப் புதுப்பிக்கும் வேலைக்குப் பின்னணியாக இருப்பது கருணாநிதியின் புதுக் கூட்டணிக் கனவு என்கிறார்கள் அரசியலை உன்னிப்பாகக் கவனிப்பவர்கள். காங்கிரஸ் கட்சியை எப்படியாவது கழற்றிவிடும் மன​நிலைக்கு கருணாநிதி வந்து விட்டாராம். இலங்கைப் பிரச்னை​யை அதிகமாகக் கையில் எடுத்தால்தான், டெல்லி மேலிடம் கோபிக்கும். அதன் பிறகு கழன்றுகொள்ளலாம் என்பது திட்டமாம். 'அடுத்து வரப்​போகும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவு எப்படிப் பார்த்தாலும், காங்கிரஸுக்குச் சாதகமாக அமையாது. அப்படி இருக்க, அவர்களுடன் நாம் ஏன் இருக்க வேண்டும். நைஸாக நடுவிலேயே வெட்டிக்கொள்வது நல்லது என்று கருணாநிதி நினைக்கிறார். இலங்கை செல்லும் இந்தியக் குழுவில் இருந்து கடைசித் தருணத்தில் கழன்றுகொண்டதற்கும் இது​தான் காரணம். இப்போது தினமும் தமிழ் ஈழத்தைப் பற்றிப் பேசி வருவதற்கும் இதுவேதான் காரணம்!''

''காங்கிரஸைக் கழற்றிவிட்டால் என்னவாகும்..?''

''காங்கிரஸுடன் இருப்பதால்தானே பலரும் கருணாநிதி பக்கம் வரத் தயக்கம் காட்டுகிறார்கள். அவர்கள் இல்லை என்றால் இந்தியக் கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இரண்டையும் தனது கூட்டணிக்குள் கொண்டுவரலாம். அதைவிட வைகோ, விஜயகாந்த் ஆகிய இரண்டு பேரையும் தனது அணிக்குள் கொண்டுவர வேண்டும் என்பது கருணாநிதியின் ஆசை. அப்படி ஓர் அணியைத் தொடங்கினால் மட்டுமே, நாடாளு​மன்றத் தேர்தலில் தி.மு.க.வின் மரியாதையைக் காப்பாற்ற முடியும் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார். தி.மு.க.வை நோக்கி இவர்களை இழுப்பதற்காகத்தான் தமிழ் ஈழத் தூண்டிலைக் கருணாநிதி வீச ஆரம்பிக்கிறார். அதற்கு முன்னோட்​டமாக, சென்னைக் கொளத்தூரில் அவர் பேச்சிலேயே சில வார்த்தைகள் வந்து விழுந்தன...''

''ம்!''

''டெசோவைக் கருணாநிதி ஆரம்பித்த காலத்தில் ஐந்து பேர் அதில் அங்கம் வகித்தார்கள். கருணாநிதி, அன்பழகன், வீரமணி, பழ.நெடு​மாறன், ஃபார்வர்டு பிளாக் தலைவராக இருந்த அய்யணன் அம்பலம் ஆகியோர் இருந்தனர். இப்போது, கருணாநிதி அனைவரையும் அழைக்கிறார். 'இன்னும் யார் யாரை அதிலே இணைத்துக்கொள்ள வேண்டுமோ, அவர்களையும் இணைத்துக்கொண்டு அந்த டெசோ பணியாற்றும்’ என்று கருணாநிதி சொல்லி இருப்பது அரசியல் கூட்டணிக்கான ஒரு முன்னோட்டமாகவே சொல்லப்​படுகிறது!''

''காத்திருந்து கவனிப்போம்! அழகிரி விவகாரத்தில் என்ன நடக்கிறது?''

மிஸ்டர் கழுகு: கருணாநிதி விடும் தமிழ் ஈழத் தூண்டில்!

''மதுரை மாவட்ட அவைத் தலைவர் இசக்கி முத்துவைக் கட்சியை விட்டு நீக்கியதைப் பார்த்து எரிமலையாகக் குமுறிக்கொண்டு இருக்கிறார் அழகிரி. 'இசக்கிமுத்து என்னுடைய விசுவாசி. எனக்காக நியாயம் கேட்டவர். அவர்மீது கைவைத்தால், எனக்கே எச்சரிக்கை விடுவது போலத்தானே அர்த்தம்’ என்று எகிறியவர், 23-ம் தேதி இரவு டெல்லியில் இருந்து வீரபாண்டி ஆறுமுகத்துக்கு போன் செய்து பேசியதாகச் சொல்கிறார்கள். 'தலைவர்கூட என் தரப்பு நியாயத்தைப் புரிஞ்சுக்கிட்டாரு. ஆனா, ஸ்டாலின் இந்த விஷயத்துல எதுக்கு இவ்வளவு வீம்பு பிடிக்கிறார்னு தெரியலை. கட்சிக்குள்ள கலகம்னு வெளியில் இருக்கிறவங்க குளிர் காஞ்சுடக் கூடாதேனுதான் பல்லைக் கடிச்சுக்கிட்டு இருக்கேன்’ என்று தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தாராம்.''

''அப்படியா?''

''டெல்லியில் தனது இல்லத்தில் இருந்தபடியே, தென் மண்டலத்திலும் மற்ற மண்டலங்களிலும் உள்ள தனது ஆதரவாளர்களின் பெயர்களை அழகிரி சொல்லிக்கொண்டே வர, அதை ஒரு தாளில் எழுதிக்கொண்டே வந்தாராம் அருகில் இருந்தவர்.  '27-ம் தேதி அண்ணன் மதுரை வந்ததும், முதல் கட்டமாக தென் மண்டலத்தில் உள்ள தனது ஆதரவாளர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தலாம்’ என்று  யூகிக்கிறார்கள் அழகிரி விசுவாசிகள். 'மாவட்டச் செயலாளராக இருந்த தளபதி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். அதை இன்னும் ஏன் ஏற்காமல் இருக்க வேண்டும். இதுவே அண்ணனை அலட்சியப்படுத்துவதுதானே! மன்னன் அல்லது கௌஸ் பாட்சா ஆகிய இரண்டு பேரில் யாராவது ஒருவரை மாவட்டச் செயலாளராகப் போடுங்கள் என்று அண்ணன் சாய்ஸ் கொடுத்து விட்டார். அதை ஏற்றுச் செயல்படுத்த வேண்டியது​தானே’ என்று அழகிரி ஆட்கள் கேட்கிறார்கள். இதை பேராசிரியர் அன்பழகனிடமே அழகிரி கேட்ட​தாகவும் சொல்கிறார்கள்''

''அவரிடமுமா கோபப்பட்டார் அழகிரி?''

''அவரிடம் எப்போதும் அழகிரி பேச மாட்டார். பேசி​னால், மரியாதை கொடுத்து அமைதியாகத்தான் பேசுவார். 'தென் மண்டல அமைப்புச் செயலாளர் என்ற முறையில் எனக்கு எந்த மரியாதையும் தரப்படவில்லை. மதுரையில் ஒருவரைக் கட்சியைவிட்டு நீக்குகிறீர்கள்... ஆனால் எனக்கு அந்தத் தகவலே சொல்லப்படவில்லை’ என்று மட்டும் வருத்தப்பட்டாராம். 'இதை எல்லாம் தலைவர்ட்ட சொல்லுப்பா’ என்பதோடு பேராசிரியர் முடித்துக்கொண்டாராம். தன்னுடைய கோபதாபங்கள் அனைத்தையும் வார்த்தைகளால் வடித்து கருணாநிதிக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பத் தயார் ஆனாராம் அழகிரி. ஆனால், தயாளு அம்மாள்தான், 'கடிதமா எதுவும் எழுதாதே... அப்பாவை வந்து பார்’ என்று சொன்னாராம். அநேகமாக இரண்டொரு நாட்களில் இந்தச் சந்திப்பு நடக்கலாம் என்கிறார்கள். இதற்கு மத்தியில் இன்னொரு சிக்கலும் ஆரம்பம்!''

''அது என்ன?''

''நான் கடந்த இதழில் சொன்னேன் அல்லவா! 'ஜனநாயகம் படும்பாடு’ என்ற தலைப்பில் நடக்கப்போகும் மதுரைக் கூட்டத்துக்கு ஸ்டாலினின் தீவிர விசுவாசியான கோவி.செழியனை பேசச் சொல்லி இருக்கிறார்கள். மே 7-ம் தேதி நடக்க இருக்கும் செழியனின் கூட்டத்தை மதுரையில் நடத்த அழகிரி தரப்பில் இருந்து இப்போதே எதிர்ப்பு. மாவட்டச் செயலாளர் பதவி அந்தரத்தில் தொங்குவதால், பகுதிச் செயலாளர்கள் யாராவதுதான் கூட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனால், ஒன்பது பகுதிச் செயலாளர்களில் இளைஞர் அணி அமைப்பாளர் ஜெயராமைத் தவிர எட்டு பேர் ஷோ - காஸ் லிஸ்ட்டில் இருக்கிறார்கள். ஜெயராமே இதையும் ஏற்பாடு செய்தால், அழகிரிக்கு எதிராகத் தொடர்ந்து அவர் திட்டமிட்டுச் செயல்படுவதாக செய்தி கிளம்பும். எனவே, அந்தக் கூட்டத்தை யார் நடத்துவது, எந்தப் பகுதியில் நடத்துவது என்ற குழப்பம் தொடங்கி விட்டது. மதுரையில் முக்கியக் கூட்டங்கள் நடக்கும் இடங்கள் அனைத்துமே மூன்று பகுதிச் செயலாளர்களின் கட்டுப்பாட்டுக்குள்தான் வருகின்றன. அவர்களில் ஒருவர், கூட்டத்தை நடத்தத் தயாராய் இருக்கிறாராம். ஆனால், 'அவசரப்படாதே; அண்ணன் கோவிச்சுப்பார்’னு அழகிரி ஆட்கள் அவரை எச்சரிக்கிறார்களாம்.''

''பிரச்னையில் இருந்து எப்படி மீளப்போகிறதோ தென் மண்டல தி.மு.க?''

மிஸ்டர் கழுகு: கருணாநிதி விடும் தமிழ் ஈழத் தூண்டில்!

''சமீபத்தில் ராஜபாளையம் எம்.எல்.ஏ. மீது நடந்த தாக்குதல் குறித்து உமது நிருபர் கடந்த இதழில் எழுதி இருந்தார் அல்லவா? ஜூ.வி.யில் இந்தச் செய்தி வெளியான அன்று சட்டசபை கூட்டம் முடிந்து கிளம்பிய முதல்வர் ஜெயலலிதா, திடீரென்று ராஜபாளையம் எம்.எல்.ஏ. கோபால்சாமியை அழைத்து, 'என்ன நடந்தது?’ என்று விசாரித்தாராம். அமைச்சருக்கும் மற்ற எம்.எல்.ஏ.க்களுக்கும் இருக்கும் உட்பூசல் குறித்து அப்போது இவர் சொன்னாராம். இதைக் கோபமாகக் கேட்டுக்கொண்டாராம் முதல்வர். அருகில் இருந்த அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அழைத்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவும் போட்டாராம். இதைத் தொடர்ந்து ராஜபாளையம் பகுதி அ.தி.மு.க.வினர் அனைவரையும் அழைத்து தலைமைக் கழகத்தில் விசாரணை நடந்து வருகிறது. இதைக் கேள்விப்பட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரொம்பவும் அப்செட்!''

''வேட்டு வைத்து விடுவார்களோ என்ற பயமாகவும் இருக்கலாம்!''

''அருப்புக்கோட்டை ம.தி.மு.க., பிரமுகர் முருகன் கொலை வழக்கில் சந்தேகப்படும் குற்றவாளியாக இருக்கிறார் அப்போதைய தி.மு.க. பிரமுகரும் இப்போதைய அ.தி.மு.க. பிரமுகருமான யோக.வாசுதேவன். அவரைக் காப்பாற்றுவதற்கு ஆளும் கட்சியிலேயே பலரும் துடியாகத் துடித்துவரும் நிலையில் போலீஸ் மானியக் கோரிக்கையில் பேசிய முதல்வர், இந்தக் கொலை வழக்கு குறித்து விலாவாரியாகப் பேசி இருப்பது ஆளும் கட்சியில் இருப்பவர்களுக்கே அதிர்ச்சி. முதல்வரின் பேச்சைத் தொடர்ந்துதான்   தலைமறைவான யோக.வாசுதேவனைக் கைது செய்ய சி.பி.சி.ஐ.டி., போலீஸும் தீவிரம் காட்டி வருகிறதாம்'' என்று சொல்லி கிளம்பத் தயாரான கழுகார்,

''தி.மு.க. வட்டாரத்தில் ஒரு தகவல் கிசுகிசுக்கப்​படுகிறது. 'ஜனாதிபதி தேர்தலில் தலைவரையே நிறுத்தினால் என்ன?’ என்பதுதான் அது. 'தலைவரை நிறுத்தினால் அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்குமே’ என்று சிலர் ஆசையைத் தூண்டி விடுகிறார்கள்'' என்று சொல்லிப் பறந்தார் கழுகார்!

 சசிகலா வராத மானியம்!

மிஸ்டர் கழுகு: கருணாநிதி விடும் தமிழ் ஈழத் தூண்டில்!

'காவல்துறை மானியக் கோரிக்கை வரும் போதெல்லாம் எதிர்க் கட்சிகள் போருக்குத் தயாராகி வருவது போல வந்து குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவார்கள்’ கடந்த முறை முதல்வராக இருந்த போது சட்டசபையில் ஜெயலலிதா உதிர்த்த வார்த்தைகள் இவை. ஆனால், இந்த முறை சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை உப்பும் இல்லாமல் சப்பும் இல்லாமல் இருந்தது. தி.மு.க. அவைக்கு வராததால் பெரிய அளவில் எதிர்ப்பு ஏற்படவில்லை. ராமஜெயம் கொலை வழக்கு பற்றி யாருமே பேசவில்லை. கோட் சூட்டோடு அவைக்கு வந்திருந்தார் டி.ஜி.பி. ராமானுஜம். சட்டசபையில் பேசும் விஷயங்களுக்கு உடனுக்குடன் குறிப்புகளை எழுதி அனுப்பியபடியே இருந்தார்.

காவல்துறை மானியக் கோரிக்கையின் போதெல்லாம் தவறாமல் வந்து மாடத்தில் அமரும் சசிகலா, இந்த முறை வரவில்லை. உரசல் விரிசல் இணைப்புக்குப் பிறகு அவர் வருகைக்கு அம்மா தடை போட்டிருக்கிறாராம்.

 தத்தளிக்கும் தமிழ் ஆய்வு!

'கருணாநிதி முன்னிலைப்படுத்தினார் என்பதற்காகவே, தமிழ் சார்ந்த நிறுவனங்களை ஜெயலலிதா கவனிப்பதே இல்லை’ என்று, தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ''செம்மொழி நிறுவனம் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டது. உரிய வசதிகள் இன்றி அது ஏறத்தாழ முடக்கப்படும் நிலைக்கு வந்திருக்கிறது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நிலத்தை மற்ற பணிகளுக்கு ஒதுக்கி இருக்கிறார்கள்.  சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் பதவியை ஆறு மாதங்களுக்கும் மேலாக காலியாகவே வைத்து இருக்கிறார்கள். தமிழ் வளர்ச்சித் துறையின் பொறுப்பு இயக்குனராக இருந்த சேகரை, தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் பொறுப்பு இயக்குனராக நியமித்தார்கள். பிறகு, தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குனராக சேகர் ஆனபின்னரும் உ.த.ஆ. நிறுவனத்தின் இயக்குனராகவும் கூடுதல் பொறுப்பு வகிக்கிறார். இயக்குநர் பதவி காலியாகவே உள்ளதால், ஆராய்ச்சி மாணவர்கள், கல்விப் பணியாளர்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது'' என்று புலம்புகிறார்கள், தமிழ் ஆய்வாளர்கள்.

புதிதாக இயக்குனர் யாரையும் தேர்ந்தெடுக்க விடாமல், இரண்டு அதிகாரிகள்  கூட்டாக தடை போடுகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

மிஸ்டர் கழுகு: கருணாநிதி விடும் தமிழ் ஈழத் தூண்டில்!