Published:Updated:

மிஸ்டர் கழுகு: கொடநாட்டில் ஸ்டாலின்?

மிஸ்டர் கழுகு: கொடநாட்டில் ஸ்டாலின்?

பிரீமியம் ஸ்டோரி
##~##

ழுகார் உள்ளே நுழைந்து நம் முன் உட்காரும்போது ஒரு எஸ்.எம்.எஸ்.! 

''திடீர்த் தலைவலி காரணமாக, கோவையில் இருந்து அவசர அவசரமாக சென்னை திரும்புகிறார் ஸ்டாலின். அதுதான் தகவல்!'' என்றார்.

''ஊட்டியில் குதிரை சவாரி செய்​ததாக தகவல் வந்ததே!'' என்றோம்.

''கடந்த 25-ம் தேதி சென்னையில் நடந்த பிரமாண்டக் கூட்டத்தில் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போதே அவருக்குக் காய்ச்சல். முக்கியப் பேச்சாளர் கருணாநிதி என்றாலும், அவரது கொளத்தூர் தொகுதியில் கூட்டம் நடப்பதால் நிச்சயம் கலந்துகொள்வேன் என்று வந்தார் ஸ்டாலின். கூட்டத்தில் நீண்ட நேரம் ஆக்ரோஷமாகப் பேசினார். அங்கு இருந்து ஓய்வுக்காக ஊட்டி சென்றார். பெர்சனல் விசிட் என்றால் பல ஹேஸ்யங்களுக்கு இலக்காக நேரிடும் என்பதால் கட்சிப் பொதுக்கூட்டம் ஒன்றை அறிவித்து, அதையே காரணம் ஆக்கினார்கள். 28-ம் தேதி சனிக்கிழமை பொதுக் கூட்டத்துக்காக 26-ம் தேதியே ஸ்டாலினுடன் மனைவி துர்காவும் பேரன் இன்பாவும்

மிஸ்டர் கழுகு: கொடநாட்டில் ஸ்டாலின்?

வந்திருந்தனர். ஊட்டியில் நகரத் தி.மு.க. சார்பில் நடந்த வரவேற்புக் கூட்டத்தில் மைக் பிடித்தவர், 'இந்த வரவேற்பைப் பார்க்கும்போது, 28-ம் தேதி கூட்டத்​துக்குப் பதிலாக இப்போதே பேசிட​லாம்னு தோணுது. இருந்தாலும் எண்ணத்தை மாத்திக்கிறேன்’ என்று கலகலவென இருந்தார். வெள்ளி அன்று மனைவி மற்றும் பேரனுடன் தொட்டபெட்டா, படகு சவாரி, மினி ரயில் என்று வலம் வந்தார். சனிக்கிழமை மாலை ஊட்டியில் அவரே எதிர்பாராத அளவுக்குக் கூடி இருந்த மெகாகூட்டத்தில் பேசிய​வர் இரவிலேயே மலையை விட்டு இறங்கி, கோவை வந்து சேர்ந்தார். ஊட்டியில் இருந்த நேரத்தில் கொடநாடு போய்வந்தாராம்...''

''போனாரா என்ன?''

மிஸ்டர் கழுகு: கொடநாட்டில் ஸ்டாலின்?

''என்ன நடந்தது என்பதைச் சொல்கிறேன் கேளும். ஊட்டியில் இருந்த​போதே கொடநாடு எஸ்டேட் பற்றி பேச்சு வந்திருக்கிறது. 'போன ஆட்சி சமயத்திலேயே அனுமதி இல்லாம அந்தம்மா டீ ஃபேக்டரி கட்டுறது சம்பந்தமாப் பிரச்னை வந்ததே?’ என்று கேட்டவர், ஜெயலலிதாவின் எஸ்டேட்டுக்குள் வாழும் தொழிலாளிகள் பயன்படுத்தும் பாதைகள் அடைக்கப்படுவது சம்பந்தமாகவும் கேட்டுள்ளார். 'அந்த எஸ்டேட்டும் பங்களாவும் எப்படித்தான் இருக்குது? நான் பார்க்க முடியுமா?’ என்று திடீரென்று கேட்டாராம். தி.மு.க. புள்ளிகள் பரபரப்பு ஆனார்கள். வழக்கமான காரில் சென்றால் தெரிந்துவிடும் என்பதால், வேறு ஒரு கார் இதற்காகத் தயார் ஆனதாகவும் சொல்கிறார்கள்.

தி.மு.க. முன்னாள் அமைச்சர் இளித்துறை ராமச்சந்திரனின் சொந்தங்​களுக்குச் சொந்தமான மேடநாடு எஸ்டேட்டில் இருந்து பார்த்தால், கொடநாடு பகுதி தெரியுமாம். சனிக்கிழமை அதிகாலை, அங்கே இருந்து கொடநாடு பகுதியைப் பார்த்துள்ளார். அது என்ன? இது என்ன? என்று கேட்டுத் தெரிந்துகொண்டாராம் ஸ்டாலின். ஜெயலலிதாவின் பங்களாவில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து சில தகவல்களைக் கேட்டு, உன்னிப்பாகக் குறித்துக்​கொண்டாராம். நன்றாக விடி​வதற்குள் தான் தங்கி இருந்த ஹோட்டலுக்குத் திரும்பி​விட்டாராம் ஸ்டாலின்.

அன்றைய தினம் நடந்த பொதுக் கூட்டத்தில் கொடநாடு எஸ்டேட் சம்பந்தமான தகவல்​களை அதிகமாகச் சொன்னதற்கும் இதுதான் காரணம் என்கிறார்கள். கோவை வட்டாரத்து தி.மு.க.

மிஸ்டர் கழுகு: கொடநாட்டில் ஸ்டாலின்?

புள்ளிகளிடம் கேட்டால், 'அந்த மாதிரி எல்லாம் எதுவும் நடக்கலேங்க’ என்று பட்டும் படாமலும் சொல்கிறார்கள்!''

''ஓ!''

''காய்ச்சலுடன் ஊட்டி வந்ததவருக்கு குளிர் ஒப்புக்​கொள்ளவில்லை. . சனிக்கிழமை ஊட்டிப் பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு காரில் கோவை வந்தார் ஸ்டாலின். கடும் தலைவலியால் அவதிப்பட்​டவருக்கு லேசான பரிசோதனை முடித்து, மாத்திரை கொடுத்து இருக்கிறது டாக்டர் டீம் ஒன்று. ஒரு மணி நேரமாகியும் தலைவலி தீராததால் நள்ளிர​வில் கே.எம்.சி.ஹெச். மருத்துவ​மனைக்கு அழைத்துச் சென்று ஸ்கேன் எடுத்துப் பார்த்திருக்​கிறார்கள். 'ஹாஸ்பிடலுக்குள்ளே வந்தது வந்தாச்சு. ஃபுல் பாடி செக்அப் பண்ணிடுங்க’ என்று ஸ்டாலினே விருப்பப்பட, அதுவும் நடந்ததாம்'' என்ற கழுகார், அடுத்து புதுக்கோட்டை மேட்டரை எடுத்தார்!

''புதுக்கோட்டைக்கு கார்த்திக் தொண்டைமானை வேட்பாளராக அறிவித்து, பிரசாரத்தையும் அ.தி.மு.க. தொடங்கி விட்டது. அவர் பிரசாரத்துக்குக் கிளம்பிய போதே, அவருடன் சேர்ந்து சில வழக்குகளும் கிளம்பி விட்டன.

கட்சித் தலைவியின் சென்டிமென்ட்டை மீறாமல் கடந்த 27-ம் தேதி, மிகச் சரியாக காலை 9 மணிக்கு, கட்சிப் பிரமுகர்கள் புடைசூழ பிரகதாம்பாள் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டுத்தான் பிரசாரத்தைத் தொடங்கினார் கார்த்திக் தொண்டைமான். அடப்பன்வயல், திருக்கோகர்ணம், திருவப்பூர் ஆகிய பகுதிகளில் நடந்து சென்று வாக்கு சேகரிக்க... வழி நெடுகிலும் வெடிச் சத்தம் காதைப் பிளந்தது. கூட்டமாக நின்ற பெண்கள், 'புதுக்கோட்டையில குடிநீர்ப் பிரச்னை தீரலையே?’ என்று கார்த்திக் தொண்டைமானிடம் புகார் கூற... 'இதோ... வேகமாச் சரி பண்ணிடுறோம்... நீங்க மறக்காம ஓட்டுப் போடுங்க’ என்று லாவகமாகத் தப்பித்துச் சென்றார்.''

''ஏதோ வழக்கு என்றீரே?''

'' கடந்த 27.2.2000 அன்று அவரது சித்தி சாருபாலா தொண்டைமானுடன் ஏற்பட்ட சொத்துத் தகராறில் ஆட்களை அழைத்துப் போய்ப் பிரச்னை செய்ததாக கார்த்திக் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கு நடைபெற்று வருகிறதாம். 2.8.2003-ல் பதியப்பட்ட ஒரு வழக்கில்  மூன்று மாதம் சிறைத் தண்டனையும், 3,000 ரூபாய் அபராதமும் இவருக்கு விதிக்கப்பட்டதாம். இதை எதிர்த்து கார்த்திக் தொண்டைமான் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதாகவும் சொல்கிறார்கள். இந்த வழக்குகளை மோப்பம் பிடித்திருக்கும் தி.மு.க. தரப்பு, இதையே பிரசாரத்துக்குப் பயன்படுத்த இருக்கிற​தாம்.''

''தி.மு.க. வட்டாரத்தில் வேட்பாளர் யாராம்?''

''மாவட்டச் செயலாளர் பெரியண்ணன் அரசுதான் போட்டி​யிடுவார் என்று இருந்த நிலை மாறி, போட்டியிட விருப்பம் தெரிவிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. விஜயகாந்த் கட்சியில், மாவட்டச் செயலாளரான ஜாஹிருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என பேசிக்​கொள்கிறார்கள்.

சங்கரன்கோவில் பாணியிலேயே 5,000 வாக்காளர்களுக்கு ஓர் அமைச்சரை ஒதுக்கி இருக்கிறார்

மிஸ்டர் கழுகு: கொடநாட்டில் ஸ்டாலின்?

ஜெயலலிதா. இவர்கள் எல்லோரும் களம் இறங்கும்போது... ஏரியா அமளிதுளியாகத்தான் போகிறது. பார்ப்​போம்!'' என்ற கழுகார், ''முதல்வரின் மூன்றாவது செயலாளராக இருந்த வெங்கட்ரமணனின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிகிறது!'' என்றார்!

''குடும்பத்துடன் சென்று முதல்வரைச் சந்தித்து ஆசி பெற்ற போட்டோ கூட ரிலீஸ் செய்யப்​பட்டதே?''

''வெங்கட்ரமணனுக்கு ஆறு மாதங்கள் வரை மறுபணி நிய​மனம் கிடைக்கலாம் என்கிறார்கள். முதல்வருக்கு வரவிடாமல் தடுக்கப்பட்ட பல தகவல்களை, தயக்கம் இன்றிக் கொண்டுபோய்ச் சேர்த்தவர் என்ற வகையில், வெங்கட்​ரமணனைப் பற்றி பலரும் நல்லவிதமாகவே சொல்கிறார்கள். 'முதல்வருக்குப் பக்கத்தில் இருக்கும் தைரியத்தில் சில அதிகாரிகள் அதிகமாகவே ஆடுகிறார்கள். அவர்களோடு ஒப்பிடும்போது வெங்கட்ரமணன் ஓகேதான்’ என்கிற அளவுக்குப் பெயர் வாங்கி உள்ளார். 'சசிகலா வட்டாரத்தின் நடமாட்டங்கள் குறைந்த பிறகு, இரண்டு அதிகாரிகளின் ஆட்டம் அளவுக்கு அதிகமாகப் போய்விட்டது. தங்களைத் தட்டிக்கேட்க யாரும் இல்லை என்பது அவர்களுக்கு தைரியம்’ என்றும் சொல்கிறார்கள். தலைவர் ஒருவரின் பெயர் கொண்ட நகரில் இருக்கும் ஓர் அதிகாரியின் வீட்டில் தலைமைச் செயலகத்துக்கு இணையான கூட்டம் தினமும் காலையில் கூடிவிடுகிறதாம். கான்ட்ராக்ட், வர்த்தகங்கள் என்று பல்வேறு விஷயங்கள் கொடி கட்டிப் பறக்கிறதாம். ஏற்கெனவே இவரை ஒருமுறை முதல்வர் கண்டித்தார். ஆனாலும் அடங்குவது மாதிரித் தெரியவில்லை என்றும் சொல்​கிறார்கள். 'தி.மு.க. வட்டாரத்துக்கு நெருக்கமான ஓர் அதிகாரிக்கு சில தகவல்கள் இங்கிருந்து செல்வதற்கும் இவர்தான் காரணம் என்றும் சொல்கிறார்கள்''

''முதல்வர்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!''

''முதல்வரின் ஜாக்கிரதை உணர்வுக்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். சசிகலா கல்தா படலத்துக்குப் பிறகு தோட்டத்தில் கூடுதல் அந்தஸ்து பெற்றார் அந்த சட்டப் பிரமுகர். அதையே முதலீடு ஆக்கி சில காரியங்களைச் செய்துள்ளார் அவர். 'சசிகலா கார்டனை விட்டுச் சென்ற பிறகு பெங்களூரு வழக்குகள் சம்பந்தமான பேச்சு வார்த்தைக்காக ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு ஹோட்​டலில் நிரந்தமான அறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. அங்குதான் சட்டப் பிரமுகர் உட்கார்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தினார். ஆடிட்டர், வக்கீல்கள் பலரும் கார்டனுக்குள் அடிக்கடி வந்து போனால், அரசாங்கத் தகவல்கள் லீக் ஆகலாம் என்பதால், இந்த ஹோட்டல் அறை எடுக்கப்​பட்டது. ஆனால், அங்கே சில டீலிங்குகள் முடித்ததாக தகவல் வந்தது. உடனடியாக அந்த அறையைக் காலி செய்ய உத்தரவு போட்டு விட்டார்’ என்று சொல்கிறார்கள்.''

''அப்படியா?''

''ஆனால் அந்த சட்டப் பிரமுகரின் செயல்பாடுகள் அடங்கவில்லையாம்! கார்டனில் சில அமைச்சர்கள் உட்கார்ந்து இருக்கும்போது, இவரும் அந்த இடத்துக்குப் போய் சேர்ந்தாராம். அதில் இருக்கும் அப்பாவி அமைச்சரைப் பார்த்து, 'என்ன விஷயமா வந்தீங்க? ஏன் கேட்கிறேன்னா... அம்மா அப்புறமா என்னிடம் இதுபற்றி விசாரிப்பாங்க’ என்று சொன்னாராம். இதை கிண்டலாகப் பார்த்துச் சிரித்துக் ​கொண்டார்களாம் சீனியர் மந்திரிகள்''

''சிரிக்கத்தானே செய்வார்கள்?''

''முதல்வருக்கு அடுத்த நிலையில் இருந்து ஓ.பன்னீர்​செல்வம், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன் ஆகிய மூவர் அணி முக்கியத்துவம் பெற்றுள்ளது. இவர்களுக்கு இணையாக இன்னொரு மூவர் அணி உருவாகி உள்ளதாம். பி.எச்.பாண்டியன், அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி ஆகியோர் இதில் அங்கமாம்!''

''கடந்த ஆட்சியில் பொன்முடி கோஷ்டிக்கு எதிராக நேரு கோஷ்டி இருந்​தது மாதிரியா?'' என்று நாம் கேட்டதும் தலை​​யாட்டி​யபடியே நகர்ந்தார் கழுகார்.

படம்: சு.குமரேசன்

ஜனாதிபதி வேட்பாளர்?

மிஸ்டர் கழுகு: கொடநாட்டில் ஸ்டாலின்?

பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி, கருணாநிதியை சி.ஐ.டி. காலனியில் சந்தித்துப் பேசினார். துணை ஜனாதிபதியான அமீத் அன்சாரியை, ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு காங்கிரஸ் முடிவு செய்து இருக்கிறதாம். அப்துல் கலாமை மீண்டும் நிறுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருவதால், முஸ்லிம் வேட்பாளரான அமீத் அன்சாரியையே நிறுத்த நினைக்கிறதாம் காங்கிரஸ். இதற்குக் கருணாநிதியிடம் ஆதரவு கேட்டிருக்கிறார். எந்தப் பதிலும் சொல்லாத கருணாநிதி, 'எங்களுக்குத் தர வேண்டிய இரண்டு மத்திய அமைச்சர் பதவிகள் இன்னும் நிரப்பப்படாமல் இருக்கிறது. இலங்கை விவகாரத்தில் காங்கிரஸ் எடுக்கும் முடிவுகள் எங்களைப் பாதிக்கிறது. சுகதுக்கங்களில் உங்களோடு பங்கெடுக்கும் எங்களை உதாசீனப்படுத்தி வருகிறீர்கள்’ என்று மனம் நொந்து சொன்னாராம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு