Published:Updated:

மகள்களுடன் மெளனப் போராட்டம்!

அழகிரி குடும்ப அல்லாட்டம்சஞ்சய்

மகள்களுடன் மெளனப் போராட்டம்!

அழகிரி குடும்ப அல்லாட்டம்சஞ்சய்

Published:Updated:
##~##

ட்சிக்குள் மட்டும் அல்ல... குடும்ப வட்டத்திலும் சிக்கலில் சிக்கித் தவிக்கிறார் மத்திய உரத் துறை அமைச்சர் மு.க.அழகிரி. மகள்கள் கயல்விழி, அஞ்சுகச்செல்வி இருவருடனும் அழகிரி நன்றாகப் பேசி மூன்று மாதங்களுக்கும் மேலாகிறதாம். எப்போதும் கோடை விடுமுறையில் கயல்விழியின் மகன் இன்பநிதிக்கும் அஞ்சுகச் செல்வியின் மகனுக்கும் அழகிரின் மடியில்தான் பொழுது கழியும். ஆனால், இப்போது அதுவும் கட். இளைய மகள் அஞ்சுகச்செல்வி அமெரிக்காவில் செட்டிலாகிவிட, மூத்த மகள் கயல்விழி சென்னையிலேயே தங்கிவிட்டார். ஸ்டாலின் - அழகிரி மோதல் தூள் பறக்கும் இந்த நிலையில்தான், மகள்கள் இருவருடனும் அழகிரி நடத்தும் மௌன யுத்தம் வெளி உலகுக்குத் தெரிய ஆரம்பித்திருக்கிறது.

 என்னதான் நடக்கிறது அழகிரி வீட்டில்?

மனைவி காந்தி மீது அவர் வைத்திருக்கும் அலாதியான பாசம் மதுரை உடன்பிறப்புகள் அத்தனை பேரும் அறிந்தது. வாரிசுகள் விஷயத்திலும் அழகிரி பாசக்காரர். மகன் துரை தயாநிதியின் சினிமா ஆசைக்கும், மகள் கயல்விழியின் அரசியல் ஆசைக்கும் அவர் ஒருபோதும் குறுக்கே நிற்கவில்லை. அப்படி இருந்தும் எப்படி விழுந்தது இந்த விரிசல்? அழகிரியின் குடும்பத்துக்கு நெருக்கமான சிலர் பின்னணியை விவரிக்கிறார்கள்.

மகள்களுடன் மெளனப் போராட்டம்!

''கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடைந்தது. குறிப்பாக, மதுரையை உள்ளடக்கிய தென் மண்டலத்தில் தி.மு.க-வுக்கு செமத்தியான அடி. அவருடைய பெயரைப் பயன்படுத்தி சிலர் நடத்திய அடாவடிகளும் சொத்துக் குவிப்புகளும் அந்தத் தோல்விக்குப் பிறகுதான் அழகிரிக்குத் தெரியவந்தன. சிலருடைய அடாவடிகள் குறித்துச் சொல்லத் தயங்கிய அழகிரியின் குடும்ப உறவுகளும் அதன் பிறகுதான் நிறைய விஷயங்களைப் போட்டு உடைத்தார்கள். 'கடந்த ஆட்சியில் நாங்கள் மதுரைக்கு வருவதாக இருந்தால், சிலரிடம் இருந்து உத்தரவு வாங்கிக் கொண்டுதான் வர வேண்டி இருந்தது. சொந்த மகள்கள்கூட அப்பாவைப் பார்க்க அனுமதி வாங்க வேண்டிய நிலையில்தான் நாங்கள் இருந்தோம்’ என கயல்விழியும் அஞ்சுகச்செல்வியும் சொல்ல, தான் எத்தகைய சுற்றுச்சுவருக்குள் இருந்தோம் என்பதே அப்போதுதான் அழகிரிக்குப் புரிந்திருக்கிறது.

மகள்களுடன் மெளனப் போராட்டம்!

துரை தயாநிதியை மதுரைப் பக்கமே வரவிடாமல் சிலர் அவரை எப்படிச் சூழ்ச்சி செய்து அடக்கி இருந்தார்கள் என்பதும், அழகிரியின் மருமகன்கள் இரு வரும் சிலரால் நாசூக்காக மிரட்டப்பட்ட தகவலும் அவர் காதுக்கு வந்தது. உடனே, மகள்களையும் மகன் துரை தயாநிதி யையும் அழைத்த அழகிரி, 'சிலரைப் பற்றி நீங்கள் எவ்வளவோ சொன்னபோதும் நான் நம்பவில்லை. ஆனால், அதுவே கட்சியின் தோல்விக்கு வித்திடுகிற அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துவிட்டது. இனி, அப்படி எல்லாம் நடக்காது!’ என மனம் திறந்து பேசினார்.

இதற்கிடையில், அழகிரியின் தளபதியாக இருந்த பொட்டு சுரேஷ் மீது வழக்குகள் பாய, அதற்கு அழகிரி பெரிதாக ரியாக்ஷன் காட்டிக்கொள்ளவில்லை. மரியாதை நிமித்தமாகப் போய்ப் பார்த்து ஆறுதல் சொன்னதோடு சரி. அதே நேரம், குடும்ப உறவுகள் எல்லோரையும் டெல்லிக்கும் மதுரைக்குமாக அழைத்துப்போய் மிகுந்த பாசம் பாராட்டினார். இதற்கிடையில்தான், ஒதுக்கிவைக்கப்பட்ட சில புள்ளிகளின் ரீ-என்ட்ரி அரங்கேறியது. 'உங்கள் மகள்களை நாங்கள் கண்டித்தது உண்மைதான். உங்களின் நன்மைக்காகத்தான் கண்டித்தோமே தவிர, எங்களுக்காக அல்ல. உங்களைத் தாண்டிய அரசியல் வளர்ச்சி கயல்விழிக்கு அமைவது நல்லது அல்ல. ஸ்டாலினின் அரசியல் வாரிசாக உதயநிதியை முன்னிறுத் துவதைப் போல், துரை தயாநிதியை முன்னிறுத்துவதுதான் சரியாக இருக்கும்’ எனத் தூபம் போட்டது அந்தக் கும்பல். இதுபற்றி கயல்விழியிடம் அழகிரி பேச, அவரோ அந்தப் புள்ளிகள் குறித்த பல விவகாரங்களைக் கொட்டிக் குமுறினார்.

அப்போது தற்போதைய மதுரை மாவட்டச் செயலாளரான தளபதி குறித்த பேச்சும் அடிபட்டது. 'பொட்டு சுரேஷ§க்குப் பயப்படும் அளவுக்குக்கூட தளபதி உங்களுக்குக் கட்டுப்படுவது இல்லை. உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே உங்களுக்குத் தெரியவில்லை’ என்று கயல்விழி ஆவேசப்பட்டு இருக்கிறார். அதே வேகத்தில் மதுரை வீட்டில் இருந்த தன் உடைமைகளோடு கிளம்பி சென்னைக்கு வந்துவிட்டார். அதன் பிறகு இன்று வரை அவர் மதுரைப் பக்கமே தலை வைக்கவில்லை. கட்சியில் தான் வகிக்கும் பிரசாரக் குழு நிர்வாகப் பொறுப்பை ராஜினாமா செய்யவும் கயல்விழி முடிவு எடுத்தார். பாட்டி தயாளு அம்மாளின் சமாதானத்துக் குப் பிறகுதான் சமாதானம் ஆனார். இது குறித்து அஞ்சுகச்செல்வி பேசியபோது, அவருக்கும் மனம் நோகும்படியான பதிலே கிடைத்திருக்கிறது. அதனால், 'நான் அமெரிக்காவிலேயே தங்கிவிடுகிறேன்’ எனச் சொல்லிவிட்டார் அஞ்சுகச்செல்வி. இந்த விவகாரத்தில் மகள்களுக்கும் கணவ ருக்கும் இடையில் கிடந்து அல்லாடுவது காந்தி அழகிரிதான்!'' எனச் சொன்னவர்கள் அழகிரியின் தற்போதைய தர்மசங்கடமான நிலை குறித்தும் சொன்னார்கள்.

''தனக்கு விசுவாசியாக இருந்த பலரை யும் சென்னையில் உள்ள சிலர் திட்டமிட்டு அவர்கள் பக்கம் திருப்பி இருக்கும் விஷயம் இப்போதுதான் அழகிரிக்குப் புரிகிறது. 'மதுரை மா.செ. தளபதி, ஸ்டாலினுக்கு நெருக்கமான ஆள்’ எனக் குடும்ப உறவுகள் சொன்னதை அழகிரி நம்ப மறுத்தார். ஆனால், இன்றைக்கு அந்தத் துரோக அத்தியாயத்தை அழகிரியே புரிந்துகொண்டார். பொட்டு சுரேஷை ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் சொன்னதையும் பொட்டு அவருடைய காலைத் தொட்டுப் புலம்பிய தையும் குடும்ப உறவுகள் சொன்னபோது, அதிர்ச்சியோடு கேட்டுக்கொண்டார் அழகிரி. ஆனால், என்னவோ தெரியவில்லை... பொட்டு வெளியே வந்த சில நாட்களிலேயே பரிவு காட்டத் தொடங்கினார். மதுரையில் இளைஞர் அணி கலந்தாய்வுக் கூட்டக் களேபரங்கள் நடந்தபோது, அழ கிரிக்கு ஆதரவான எத்தனையோ நிர்வாகிகள் அவரை போனில் பிடிக்கப் போராடினார்கள். ஆனால், அவர் சீனாவில் இருந்தபடி பேசியது சுரேஷிடம் மட்டும்தான். அதனை பொட்டு சுரேஷ் மதுரை முழுக்கத் தம்பட்டம் அடித்து, 'அண்ணன் என்னை மட்டும்தான் நம்புறார். சீனாவில் இருந்து என்கிட்டதான் அண்ணன் அப்டேட் கேட்டார்’ எனப் புளகாங்கிதம் பரப்பினார். இதுதான் அழகிரியின் மகள்களை இன்னமும் ஆவேசமாக்கிவிட்டது. 'அப்பாவின் முடிவை அடுத்தவர்கள் அறிவிக்கும் வரை இப்படித்தான் நடக்கும். அப்பாவை உசுப்பிவிட்டே அவருக்குத் தீங்கு செய்யப் பார்க்கிறார்கள். அவர் சாதாரணமாகச் சொல்லும் வார்த்தைகளை சித்தப்பாவிடம் (ஸ்டாலின்) ஒன்றுக்குப் பத்தாகப் போட்டுக் கொடுப்பதும் அவர்கள்தான். சித்தப்பா குடும்பத்தினரும் அதனை அப்படியே நம்பி நம் மீது கோபமாக இருக்கிறார் கள்.

குடும்பரீதியாகவும் கட்சிரீதியாகவும் அப்பாவைத் தனிமைப்படுத்த பெரிய சதியே நடக்கிறது. பாட்டி (தயாளு அம்மாள்) மட்டும்தான் அப்பாவுக்காகப் போராடுகிறார். அப்பா, எங்களை எத்தனை வருடத்துக்கு

மகள்களுடன் மெளனப் போராட்டம்!

வேண்டுமானாலும் ஒதுக்கிவைக்கட்டும். எங்கள் குழந்தைகளைக்கூட அவருக்குப் பார்க்கத் தோன்றவில்லையே’ என காந்தி அழகிரியிடம் வருத்தப்பட்டு இருக்கிறார்கள் இரு மகள்களும். இந்த வார்த்தைகள் அழகிரியின் மனதை அசைக்கிறதா எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!'' என்றவர்கள், தங்களின் நியாயமான கேள்வியை இப்படி வைக்கிறார்கள்.

''சொந்த மகள்களையே அழகிரியிடம் இருந்து சாதுர்யமாகப் பிரித்தவர்கள், தம்பி ஸ்டாலினுக்கு எதிராக அவரை உசுப்பிவிட எவ்வளவு நேரமாகிவிடப் போகிறது?''

தயா பார்க் விவகாரத்தில் மதுரை ஆட்சியர் சகாயம் காட்டும் கிடுக்கிப்பிடி, ஸ்டாலின் உடனான மோதல், கட்சிக்குள் தனது ஆதரவாளர்களுக்கான நெருக்கடி எனச் சொல்லிக்கொள்ள முடியாத பிரச்னைகளில் தவிக்கும் அழகிரிக்கு குடும்பரீதியான சங்கடங்களும் கூடுதல் சுமை. மொத்த நெருக்கடிகளையும் தவிடுபொடியாக்கி அவர் மீண்டால்... நிச்சயம் அவர் அஞ்சாநெஞ்சன்தான்!