Published:Updated:

மிஸ்டர் கழுகு: ஒரு டி.ஜி.பி. ரெண்டு தளபதிகள்!

மிஸ்டர் கழுகு: ஒரு டி.ஜி.பி. ரெண்டு தளபதிகள்!

##~##

''முதலில் ஒரு ஃபாலோ-அப் சொல்லி​விடுகிறேன்'' என்று, வந்ததும் வராதது​மாக முந்திக்கொண்டார் கழுகார். 

''கருணாநிதியை, பரிதி இளம்வழுதி 'தற்​செயலாக’ச் சந்தித்தது பற்றி கிடைத்த கடைசித் தகவலை, கடந்த முறை ஒரு வரித் தகவலாகச் சொல்லிச் சென்றேன் அல்லவா?''

''அதில் கூடுதல் தகவல் உண்டா?''

''அப்போது கருணாநிதியிடம், 'உங்களைப் பார்க்க 10 நிமிஷம் நேரம் ஒதுக்குங்க’ என்று கேட்டாராம் பரிதி இளம்வழுதி. 'நாளைக்குக் காலையில வாய்யா’ என்று அழைத்தாராம் கருணாநிதி. 'நம்ம ரெண்டு பேரும் தனியாப் பேசணும். வேற யாரும் கூட இருக்கக் கூடாது’ என்றாராம் பரிதி. சொன்ன மாதிரியே மறு நாள் காலையில் கோபாலபுரம் வீட்டுக்குச் சென்றுள்ளார் பரிதி.''

''அங்கே 'நந்திகள்’ யாரும் இருந்தார்களா?''

''பரிதியின் நல்ல நேரம் யாரும் இல்லை. கருணாநிதியிடம் நிறைய விஷயங்களைக் கொட்டினாராம். தனது அரசியல் எதிரிகளைத் தனக்குத் தெரியாமல் ஸ்டாலின் கட்சிக்குள் சேர்த்துக்கொண்டது பற்றித்தான் பரிதி புகார் வாசித்தாராம். இதைச் சொல்வதற்குக்கூட ஸ்டாலின் நேரம் ஒதுக்கவில்லை

மிஸ்டர் கழுகு: ஒரு டி.ஜி.பி. ரெண்டு தளபதிகள்!

என்றும் சொன்னாராம். 'ஸ்டாலினை இப்பப் பார்த்து விளக்கம் சொல்லு’ என்றாராம் கருணாநிதி. தன்னிடம் இருந்த துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பை மீண்டும் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்​தாராம் பரிதி.''

''ஸ்டாலினைச் சந்திக்கச் சென்றாரா?''

''வழக்கம்போல் சந்திக்க முடியவில்லை. ஏற்​கெனவே முதுகு வலி, தலைவலி காரணமாக ஓய்வு எடுத்து வருகிறார் ஸ்டாலின். பரிதி சந்திக்கச் சென்ற அன்று, 'தளபதி ரெஸ்ட்ல இருக்கார்’ என்று சொல்லி திருப்பி அனுப்பி விட்டார்களாம். பேராசிரியர் அன்பழகனைச் சென்று பார்த்தாராம். 'என்னய்யா திடீர்னு காணாமப்போயிட்ட?’ என்று கிண்டல் அடித்த அன்பழகன், 'நீ சொல்றது எதுவுமே எனக்குத் தெரியாதேய்யா’ என்றாராம். 'பேராசிரியர் உண்மையைச் சொல்கிறாரா? ஒப்புக்குச் சொல்கிறாரா?’ என்று தெரியாமல் கழன்று வந்துள்ளார் பரிதி.''

''பார்ப்போம்... பதவி கிடைக்க விடுவார்களா என்று. ஸ்டாலின் உடல் நிலை எப்படி உள்ளது?''

''கூட்டங்களில் கலந்துகொள்ளும் அளவுக்கு மீண்டும் உற்சாகம் அடைந்து விட்டார் ஸ்டாலின். கடந்த 6-ம் தேதி தி.மு.க. இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டம்  சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் நடந்தது. மாலை 5 மணிக்கு என்று அறிவிக்கப்பட்ட கூட்டம், மாலை 6 மணிக்குத்தான் தொடங்கியது. கூட்டத்துக்குப் பிறகு, வாயிலில் நின்றிருந்த செய்தியாளர்களைப் பார்த்ததும் அதிர்ச்சியான மு.க.ஸ்டாலின், ஏனோ மிக வேகமாக அவர்களைத் தவிர்த்து விட்டு வண்டியில் ஏறிப் போய்விட்டார். கூட்டத்தில் பேசியவர்கள், 'தமிழ்​நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியைப் பலப்படுத்திய ஸ்டாலினை கட்சியின் தலைவராக்க வேண்டும்’ என்று, அழுத்தமாகச் சொன்னார்களாம். அப்போது, எந்த ரியாக்ஷனையும் காட்டாத ஸ்டாலின், 'மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்களின் வயது வரம்பை 40-ல் இருந்து 45 என்று அதிகரிக்க வேண்டும்’ என்ற கோரிக்கைக்கு மட்டும், 'தலைவரிடம் கேட்டு நல்ல முடிவைச் சொல்கிறேன்’ என்று பட்டும் படாமலும் அறிவித்தாராம். ஆனாலும், இளசுகளின் அணியில் உள்ள பெரிசுகளின் முகத்தில் திருப்தி வரவே இல்லை!''

''வயது வரம்புதானே பலருக்குச் சிக்கல்!''

''ஸ்டாலினுக்கு நெருக்கமான  வடமாவட்டத்துப் பிரமுகர் அவர்.   அவருக்கும் ஸ்டாலினுக்கும் சமீப காலமாக ஒட்டுதல் குறைவாக இருக்கிறது. அவரது மாவட்டத்தில் கடந்த வாரத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது. தன்னுடைய எதிர்கோஷ்டியை விமர்சிக்​கிறேன் என்ற அர்த்தத்தில், ஸ்டாலின் மனதில் கூர் பாய்ச்சுவது மாதிரி சில வார்த்தைகளை அவர் உதிர்த்தா​ராம்!''

''என்ன சொன்னாராம்?''

''அந்த ஆபாசப் பேச்சின் சில வார்த்தைகளை மட்டும் உமக்குச் சொல்​கிறேன். 'தி.மு.க-வில் எல்லாமே தலைவர் கலைஞர்தான். அவர் வீட்டுக்குப் போய் வாசல்ல நிற்கிறது, இவர் வீட்டுக்குப் போய் வாசல்ல நிற்கிறதுன்னு யாரு அலைஞ்சாலும் ஒண்ணும் ஆட்ட முடியாது. என்னை மீறி இந்த மாவட்டத்தில் ஏதாவது நடந்துடுமா?’ என்ற ரீதியில் போனதாம் அந்தப் பேச்சு. 'நல்லாத்தானே போயிட்டு இருந்தது’ என்று நொந்து கலைந்துள்ளார்கள் உடன்பிறப்புகள்'' என்று சொல்லிவிட்டு  சப்ஜெக்ட் மாறினார் கழுகார்.

''ஜெயலலிதா, சசிகலா நட்பில் பிளவு ஏற்பட்டதும் அடுத்தடுத்து  மன்னார்குடி உறவினர்கள் மேல் பல்வேறு வழக்குகள் போடப்பட்டன. திவாகரன், நடராஜன், ராவணன் உள்பட பலர் சிறையில் அடைக்கப்​பட்டனர். மீண்டும் இருவரும் ஒன்றுபட்ட பிறகும்கூட வழக்குகள் அப்படியே இருந்தன. இந்தநிலையில், திவாகரன் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்திலும் ஒவ்வொன்றாக ஜாமீன் கிடைத்து விட்டது. சுமார் 90 நாட்கள் சிறைவாசம் முடிந்து வீடு திரும்பி உள்ளார் திவாகரன். டெல்டா மாவட்ட அ.தி.மு.க-வில் ஆதிக்க சக்தியாக இருந்தவர் திவாகரன். 'ஜெயலலிதாவுக்கு பெங்களூரு வழக்கில் சிக்கல் வருமானால், திவாகரன்தான் அடுத்த முதல்வர்’ என்று அவரது சகாக்கள் சொன்னதை நம்பி, கைதுப் பட்டியலில் திவாகரன் சேர்க்கப்​பட்டார். எந்தக் காரணம்​கொண்டும் திவாகரன் வெளியே வரக்கூடாது என்று, அடுக்கடுக்காக வழக்குகள் போலீஸாரால் பதிவு செய்யப்​பட்டன. மொத்தம் ஏழு வழக்குகள். முதலிலேயே ஐந்து வழக்குகளில் ஜாமீன் வாங்கி​ விட்டார்.

பாபநாசம் அருகே உள்ள வீரமாங்​குடி கொள்ளிடம் ஆற்றில், ஒப்பந்தக் காலம் முடிந்த பிறகும், அனுமதிக்கப்படாத இடத்தில் மணல் அள்ளினார் என்று தஞ்சை பொதுப்பணித் துறை அதிகாரி சௌந்தர்ராஜ் கொடுத்த புகார் மற்றும் கும்பகோணம் அருகே உள்ள முள்ளங்குடி கொள்ளிடம் ஆற்றில் அனுமதி இன்றி மணல் அள்ளியதாக பொதுப்பணித் துறை அதிகாரி முத்துமணி கொடுத்த புகார் ஆகிய இரண்டு வழக்குகளில் மட்டும் திவாகரனுக்கு ஜாமீன் கிடைக்காமல் இருந்தது. இந்த இரண்டு வழக்குக்கும் ஜாமீன் கேட்டு தஞ்சை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் திவாகரன் மனுத் தாக்கல் செய்து இருந்தார். கடந்த 3-ம் தேதி கோடைக் கால அமர்வு நீதிபதி இளங்கோவன் முன், விசாரணைக்கு வந்தது. 'போலீஸார் விசாரணைக்கு அழைக்கும்போது தவறாமல் ஆஜராக வேண்டும்’ என்ற நிபந்தனையோடு திவாகரனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதனை அடுத்து 4-ம் தேதி மாலை திருச்சி சிறைச்சாலையில் இருந்து, மூன்று மாதங்களுக்குப் பிறகு திவாகரன் விடுதலை ஆகி விட்டார்.''

''ம்...''

''சிறையில் இருந்து வந்தாலும் திவாகரன் இன்னும் காவல்துறை​யின் கண்காணிப்பில் வீட்டுச் சிறையில்தான் இருக்கிறார் என்று மன்னார்குடி புள்ளிகள் சொல்கிறார்கள். 'வீட்டுக்கு வந்து தன்னை யாரும் சந்திக்க வேண்டாம்’ என்று தன்னுடைய ஆதரவாளர்களுக்குச் சொல்லி விட்டாராம். அவர் வீட்டைச் சுற்றி போலீ​ஸார் மஃப்டியில் சுற்றி வருகின்றனர். அவரைச் சந்திக்க வருபவர்களின் பெயர்களைக் குறித்துக் கொள்கின்றனர்.''

''ராமஜெயம் வழக்கில் ஏதாவது முன்னேற்றம் உண்டா?''

''இதுவரை உருப்படியாக எதுவும் இல்லை. திருச்சி போலீஸ் கமிஷனர் 'மயில் இறகு' விசாரணை பாணியில் நடந்து கொள்கிறாராம்!''

''அதென்ன மயில் இறகு?''

''கடுமையான டார்ச்சரோ, மிரட்டலோ இல்லாமல் சந்தேகப் புள்ளிகளை போலீஸார் மயில் இறகால் வீசியபடி விசாரிக்கிறார்களாம். அதைத்தான் கிண்டலாக இப்படி போலீஸ் வட்டாரத்தில் சொல்கிறார்கள். ஒரு கட்டத்தில் நொந்துபோன போலீஸ் அதிகாரிகள், 'ராமஜெயத்துடன் நிழலாக இருந்த நான்கு நபர்களுக்கு நிச்சயமாக கொலைப்  பின்னணி தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. அவர்களை நார்கோ டெஸ்ட்டுக்கு உட்படுத்தினால்தான் துப்பு கிடைக்கும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்களாம்.''

''மிகக் கடுமையாக இருக்குமோ?''

''நரம்பில் ஊசிமூலம் மருந்தைச் செலுத்தி, அரை நினைவில் இருக்கும்போது கேள்விகளைக் கேட்பார்கள். இப்போது இந்தச் சோதனைக்கு உச்ச நீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சம்பந்தப்பட்ட நபரிடம் முன்அனுமதி பெற வேண்டும். அந்த டெஸ்ட்டில் கிடைத்த விஷயத்தை கோர்ட் ஏற்றுக்கொள்ளாது. ஆனால், ஒரு மாஜிஸ்திரேட் முன்னிலையில் போலீஸ் அதிகாரி கேட்கும் கேள்விகளுக்குக் கிடைக்கும் பதிலை வேண்டுமானால் 'லீட்' எடுத்து விசாரிக்கலாம் என்றெல்லாம் கட்டுப்பாடுகள். இவற்றை நிகழ்த்தும்  ஆய்வுக்கூடம் அகமதாபாத்தில் இருக்கிறதாம். அங்கே உள்ளவர்களுடன் திருச்சி போலீஸார் தொடர்பு கொண்டு வருகிறார்கள். பார்க்கலாம் என்ன நடக்கும் என்பதை!'' என்ற கழுகார், உளவுத்துறை தகவலைத் தொடங்கினார்.!

மிஸ்டர் கழுகு: ஒரு டி.ஜி.பி. ரெண்டு தளபதிகள்!

''உளவுத் துறைக்கு புதியதாக டேவிட்சன் தேவ ஆசிர்வாதம் டி.ஐ.ஜி ஆக நியமிக்கப்பட்டு இருக்கிறார். கடந்த ஒரு வருடமாகவே உளவுத்துறை டி.ஜி.பி மற்றும் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. (பொறுப்பு) என்று இரட்டைக் குதிரை சவாரி செய்து வருகிறார் ராமானுஜம். மிக விரைவில் உளவுத்துறை பொறுப்பில் இருந்து விலகி, ரெகுலர் டி.ஜி.பி-யாகவே ஆகப்போகிறார் என்றும் தகவல்.''

''ராமானுஜத்துக்கு இன்னும் ஆறு மாதங்கள்தானே பதவிக் காலம் உள்ளது?''

''அது தெரிந்த கதைதானே..? ரெகுலர் டி.ஜி.பி-யாக அவர் உட்கார்ந்தாலும், அவரது கைக்கு அடக்கமாகத்​தான் உளவுத்துறை செயல்படும். லகான், ராமானுஜம் கையில்தான் எப்போதும் இருக்கும். அதனால்தான், முதலில் ஐ.ஜி. அந்தஸ்தில் அம்ரேஷ் பூஜாரியையும், இப்போது டி.ஐ.ஜி. அந்தஸ்தில் டேவிட்சனையும் நியமித்து இருக்கிறார் ராமானுஜம். பொதுவாகவே உளவுத்துறைக்கு வந்துவிட்டாலே, முழு அதிகாரக் கிரீடம் தங்கள் தலையில் வைக்கப்பட்டது போல நினைத்துக்கொண்டு சிலர் போட்ட ஆட்டங்களைக் கடந்த காலத்தில் யாரும் மறக்க முடியாது. அவர்களில் இருந்து இப்போதைய இருவரும் வேறுபட்டவர்கள். 'உளவுப்பிரிவில் பணிபுரிய சரியான நபர்கள் இவர்கள்தான். ராமானுஜம் சாய்ஸ் பெஸ்ட்' என்று போலீஸ் துறையினரே பாராட்டுகிறார்கள். இந்தப் பிரிவுக்கு வருவதற்குப் பலரும் பகீரத முயற்சிகள் எடுத்தார்கள். ஆனால், சரியான ஆட்களையே முதல்வர் டிக் அடித்துள்ளார் என்கிறார்கள்'' என்றபடி பறந்தார் கழுகார்!

ஜெயா டி.வி-யில் ஜெ. அதிரடி!

கடந்த வாரம் ஜெயா டி.வி-யின்  மூன்று முக்கிய நிர்வாகிகளை திடீரென அழைத்தார், ஜெயலலிதா. புதுப்புது சேனல்கள் வந்துள்ள நிலையில், ஆளும் கட்சியின் சேனலைத் தூக்கி நிறுத்த வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்தாராம். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராகவேந்திர ராவ் என்பவரைத் தலைமை அதிகாரி என்ற புதிய பதவிக்கு அப்போதே நியமனம் செய்திருக்கிறார். அதோடு, மார்க்கெட்டிங் விஷயங்களைக் கவனித்துக்கொண்டு இருந்தவரை, 'நீங்கள் வீட்டுக்குப் போகலாம்’ என்று அனுப்பி விட்டாராம். 'அம்மா, டி.வி-யை சுத்தப்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க’ என்று  சந்தோஷத்தில் இருக்கிறார்கள் ஜெயா டி.வி. ஆட்கள்!

 லாபியில் நடந்த காரசாரம்!

ஆதி திராவிட நலத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் கலந்து கொள்வதற்காக அந்தத் துறையின் செயலாளர் ஜீவரத்தினம் ஐ.ஏ.எஸ்., தாட்கோ எம்.டி. சுகந்தி ஐ.ஏ.எஸ். போன்ற உயர் அதிகாரிகள் எல்லாம் சட்டசபைக்கு வந்திருந்தார்கள். அவை முடிந்து எல்லோரும் கிளம்பிய சமயத்தில், அதிகாரிகள் இருந்த லாபி பக்கம் வந்த கைத்தறித் துறை அமைச்சர் சுந்தர்ராஜ், ராமநாதபுரத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக செய்ய வேண்டிய ஒரு பணியைப் பற்றிச் செயலாளர் ஜீவரத்தினத்திடம் சொல்லிக்கொண்டு இருந்தார். ஜீவரத்தினமோ, ''கலெக்டர் பதில் சொல்லவில்லை. அவர் சொன்னால் செய்து தருகிறோம்'' என்றார். உடனே அமைச்சர் சுந்தர்ராஜ் கோபத்தோடு, ''கலெக்டர் சொன்னாத்தான் செய்வீங்களா? முன்பு இருந்த கலெக்டர் அருண்ராய் செய்ய வேண்டாம் என்று சொன்னார். இப்போது இருப்பவரும் அப்படித்தான் சொல்கிறாரா? அதிகாரிகள்தான் ஆதிதிராவிட நலத் துறையைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி வைத்திருக்கிறீர்கள்'' என்று கோபத்தோடு சண்டை போட்டுவிட்டுப் போனார். சட்டசபை லாபில் நடந்த விவகாரத்தைப் பார்த்து பலரும் அதிர்ந்து போனார்கள்!

 வெளியே வந்த லாட்டரி மார்ட்டின்!

கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்திலேயே மார்ட்டின் மீது, வெளி மாநில லாட்டரிகளை முறைகேடாக விற்பனை செய்கிறார் என்று அடுக்கடுக்காகப் புகார்கள் கிளம்பின. ஆனால், தி.மு.க. தலைமைக்கு நெருக்கமாக இருந்ததன் காரணமாக போலீஸாரின் பார்வையில் இருந்து தப்பினார்.

மிஸ்டர் கழுகு: ஒரு டி.ஜி.பி. ரெண்டு தளபதிகள்!

ஆட்சி மாறிய பின்னர் காட்சிகள் மாறின. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், மார்ட்டின் மீது நில மோசடி வழக்கு உட்பட 14 வழக்குகள் பாய்ந்தன. கொடுமுடியில் 10 ருபாய்க்கு போலி லாட்டரி விற்று மோசடி செய்ததாகக்கூட வழக்கு பதியப்பட்டது. ஜாமீன் கிடைப்பதில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருந்தன. அதனால், மீடியாக்களை சந்தித்த மார்ட்டினின் மனைவி லீமாரோஸ், 'போலீஸ் அதிகாரிகள் என்னிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார்கள். கொடுக்கா விட்டால் என் கணவர் மீது பொய் வழக்குப் போடுவதாகச் சொல்கிறார்கள். இதுகுறித்து முதல்வரிடம் முறையிட இருக்கிறேன்’ என்று சீறினார். இந்தநிலையில், கடந்த 7-ம் தேதி, கடைசியாக போடப்பட்ட கொடுமுடி வழக்கிலும் மார்ட்டினுக்கு ஜாமீன் கிடைத்து விட்டது. கோவை மத்தியச் சிறையில் இருந்து திங்கள் மாலையே நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து விட்டார். லீமாரோஸின் குமுறல்கள் முதல்வர் ஜெயலலிதாவை எட்டியதாகவும், அதனாலேயே ஜாமீன் மனு மீது காவல்துறை அதிகாரிகள் எதிர்ப்பு காட்டவில்லை என்றும் சொல்கிறார்கள்.

படம்: தி.விஜய் 

சோறு கிடைக்காத எம்.எல்.ஏ-க்கள்!

சட்டசபையில் ஒவ்வொரு துறை மானியக் கோரிக்கையின் போதும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உணவு ஏற்பாடுகளை அந்தந்தத் துறைதான் செய்வது வழக்கம். கடந்த வாரம், ஆதி திராவிடர் நலத்துறை மானியக் கோரிக்கையின் போது, எம்.எல்.ஏ.க்களுக்கு உணவு கிடைக்கவில்லை. உணவுப் பொட்டலங்களை மொத்தமாக எடுத்துச் சென்று எம்.எல்.ஏ. விடுதியில் வைத்து விட்டார்கள். அதற்குப்பிறகு, விடுதியில் இருந்து மீண்டும் சட்டசபைக்கு உணவு எடுத்து வருவதற்குள் அவையே முடிந்து எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் பட்டினியோடு கிளம்பிப் போய் விட்டார்கள்.

மிஸ்டர் கழுகு: ஒரு டி.ஜி.பி. ரெண்டு தளபதிகள்!