Published:Updated:

மாநிலத்துக்கு ஒரு நிலையை நாங்கள் எடுப்பதில்லை! பிரகாஷ் காரத்

கவின் மலர்படம் : பொன். காசிராஜன்

மாநிலத்துக்கு ஒரு நிலையை நாங்கள் எடுப்பதில்லை! பிரகாஷ் காரத்

கவின் மலர்படம் : பொன். காசிராஜன்

Published:Updated:
##~##

''தாம்பரம் கிறிஸ்டியன் காலேஜ்லதான் நான் படிச்சேன்... தெரியுமா?'' என்று மூக்குக் கண்ணாடியை ஏற்றிவிட்டுக்கொண்டு புன்னகைக்கிறார் பிரகாஷ் காரத். மறைந்த தோழர் என்.வரதராஜனின் படத் திறப்பு விழாவுக்காக சென்னை வந்திருந்தார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்.  

 ''34 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட்டுகள் கட்டுப்பாட்டில் இருந்த மேற்கு வங்கத்தில் இப்போது மம்தா பானர்ஜியின் ஆட்சி எப்படி இருக்கிறது?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மார்க்சிஸ்ட் கட்சியைக் குறிவைத்துத் தாக்குகிறது திரிணாமூல் காங்கிரஸ். கடந்த 10 மாதங்களில் 60 மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் கொல்லப் பட்டு இருக்கிறார்கள். இது விரிவடைந்து, இன்றைக்கு அரசோடு முரண்படும் யாரையும் தாக்க முடியும் என்ற சூழல் உருவாகி இருக்கிறது. கார்ட்டூன் வரைந்ததற்காக ஒரு பேராசிரியரைக் கைதுசெய்யும் அளவுக்குத்தான் அங்கு கருத்துச் சுதந்திரம் இருக்கிறது. ஊடகங்கள் மீதும் தனிநபர்கள் மீதும் சிறிதும் ஜனநாயகம் இல்லாமல், அதிகார மனோ பாவத்துடன் நடந்துகொள்கிறார் மம்தா.''

''முன்பு மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆதரவு அளித்த மம்தா, இப்போது அவர்களுடன் இணக்கமாக இல்லையே?''

மாநிலத்துக்கு ஒரு நிலையை நாங்கள் எடுப்பதில்லை! பிரகாஷ் காரத்

''அது ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டு. மார்க்சிஸ்ட் கட்சியைத் தாக்குவதற்காகவே தேர்தலுக்கு முன்னால் மாவோயிஸ்ட்டுகளை ஆதரித்தார் மம்தா. ஜார்கண்டை ஒட்டிய மூன்று  மாவட்டங்களில் எங்கள் கட்சி உறுப்பினர்கள் 200 பேரை மாவோயிஸ்ட்டுகள் கொன்றார்கள். அப்போது அவர்களை மம்தா ஊக்குவித்தார். மாவோயிஸ்ட்டுகளும் மம்தாவை முதல்வராக்குவதற்காகத் தாங்கள் வேலை செய்வதாக வெளிப்படையாகவே அறிவித்தனர். இப்போது தேர்தலில் வென்ற பின், கதை தலைகீழாக மாறிவிட்டது. மாவோயிஸ்ட்டுகளின் வன்முறையை அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டார் மம்தா. நேற்றைய நண்பர்கள் இன்றைக்கு அவருக்கு எதிரிகள் ஆகிவிட்டார்கள்.''

''கூடங்குளம் பிரச்னையில் கேரளத்தின் அச்சுதானந்தன் ஒரு நிலைப்பாட்டையும் தமிழகத்தில் உங்கள் கட்சி வேறு ஒரு நிலைப்பாட்டையும் எடுப்பது ஏன்?''

''கோழிக்கோட்டில் நடந்த எங்கள் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் கட்சியின் முடிவைத் தெளிவாக அறிவித்திருக்கிறோம். அணு சக்திக் கழகத்தின் அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், கூடங்குளம் திட்டமே அவர்களுடையது. அரசு வேறு ஒரு தனிக் குழுவை உருவாக்கி, கூடங் குளம் அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அந்தக் குழு சுதந்திரமானதாக இருக்க வேண்டும். ஏனெனில், உள்ளூர் மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டிய சந்தேகங்கள் நிறைய உள்ளன. ஃபுகுஷிமாவுக்குப் பின் சுற்றுச்சூழல் குறித்தும் பாதுகாப்பு குறித்தும் நியாயமானதொரு சந்தேகம் எழுந்துள்ளது. ஆகவே, பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டுதான் அணு உலையின் செயல்பாடுகளைத் தொடங்க வேண்டும். அணு மின் நிலையத்தை மூடிவிட வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. இதுதான் அகில இந்திய அளவிலும், தமிழக அளவிலும் கட்சியின் நிலைப்பாடு. இதுதான் அச்சுதானந்தன் நிலையும். அதனால் வேறுபட்ட கருத்து இருக்கிறது என்கிற பேச்சுக்கே இடம் இல்லை.''

''முல்லைப் பெரியாறு விஷயத்திலும் கேரளத்தில் ஒரு நிலை, தமிழகத்தில் ஒரு நிலை என்று கட்சியின் நிலைப்பாடு முரண்பட்டு இருக்கிறதே?''

''முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீரை எதிர்பார்க்கிறது தமிழகம். நூற்றாண்டுப் பழமையானதால் அணையின் பாதுகாப்பு குறித்து கேரள மக்கள் கவலைப் படுகிறார்கள். இரண்டும் பரீசலிக்கப்பட வேண்டும். இரு தரப்புக்கும் பொதுவான, சமாதான மான தீர்வு காணப்பட வேண்டும். நாங்கள் தமிழகத்துக்கு, கேரளத்துக்கு, அகில இந்திய அளவுக்கு என்று வெவ்வேறு நிலைகள் எடுப்பது இல்லை. மத்திய அரசு இரு தரப்பையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஒரு சுமுகத் தீர்வு காண வேண்டும் என்பதே எங்கள் நிலை.''

''தனி ஈழம் குறித்து உங்கள் நிலைப்பாடு மாறுமா?''

''தனி ஈழத்துக்குச் சாத்தியம் இல்லை என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இலங்கையின் எல்லைக்குள் தமிழர்களின் பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும். தமிழ் பேசும் மக்களுக்கான சுயாட்சி வழங்கப்பட வேண்டும். அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும். இலங்கை அரசின் திட்டங்கள் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளுக்குப் போய்ச் சேர்ந்து, தமிழர்கள் சம உரிமையுடனும் கண்ணியத்துடனும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ வேண்டும். ஆனால், துரதிஷ்டவசமாக தமிழர்கள் வாழும் வடக்கு - கிழக்குப் பகுதி மக்களுக்கான சுயாட்சியை வழங்குவதற்கு இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.''

''தேசிய அளவில் மூன்றாவது அணி சாத்தியமா?''

''இப்போதைய நிலையில் தேசிய அளவில் மூன்றாவது அணி ஒன்றை உருவாக்குவது குறித்து தேவை இருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை. மார்க்சிஸ்ட் கட்சியையும் மற்ற இடதுசாரி அமைப்புகளையும் வலுப்படுத்த வேண்டும் என்பதே இப்போதைய முதல் தேவை. அதன் மூலம் ஓர் இடதுசாரி ஜனநாயகக் கூட்டணியை உருவாக்க முடியும். அப்படியானதொரு கூட்டணி மட்டுமே இப்போதைய காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகளுக்கு மாற்றாக அமைய முடியும்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism