
மு.அருணாச்சலம், தூத்துக்குடி.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சச்சின் டெண்டுல்கருக்கு 'பாரத ரத்னா’ பட்டம் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் நீதிபதியும் இப்போதைய 'பிரஸ் கவுன்சில்’ தலைவருமான மார்கண்டேய கட்ஜு, பாரதிக்கு அந்த விருது தரப்பட வேண்டும் என்கிறாரே?
பாரதி அதைவிடப் பெரிய விருது பெற்றவன். 'மக்கள் கவிஞன்’ என்ற மகத்தான விருதுக்குப் பிறகு மற்றது எதற்கு?

பாப்லோ நெருடா சொன்னது பாரதிக்கும் பொருந்தும். ''நான் கத்தையாக இலக்கியப் பரிசுகளை அள்ளிக் குவித்திருக்கிறேன். வண்ணத்துப் பூச்சிகளைப் போல அற்பாயுசுப் பரிசுகள் அவை. ஆனால், நானே ஈட்டிய பரிசுகள் மகத்தானவை. பலர் அதைக் குறை கூறினாலும் எவருக்கும் எட்டாத ஒன்று. கலோபாசனையாலும், சுய தேடலாலும் எழுத்துக் கோர்வைகளால் மாய்மாலம் செய்வதற்கு மாறாக, நான் மக்கள் கவிஞனானேன். அதுதான் எனக்குக் கிடைத்த மகத்தான விருது'' என்றான் நெருடா. இது, மகா கவி பாரதிக்கும் பொருந்தும்.
'பாரத ரத்னா’ பட்டத்தைவிட பாரதிக்கு அவசரமாய்ச் செய்ய வேண்டிய ஒன்று உண்டு. புதுச்சேரியில் அவர் வாழ்ந்த வீட்டை மராமத்து செய்கிறோம் என்று, இரண்டு ஆண்டுகளாக அந்த வீட்டைப் பூட்டி வைத்து இருக்கிறது ரங்கசாமியின் அரசு. அந்தப் பூட்டை உடைக்க பாரதி பக்தர்கள் புறப்படட்டும். புண்ணியம் வாய்க்கும்!
மு.கதிரவன், காரைக்கால்.

நாடாளுமன்றம் 60 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளதே?
##~## |
கடந்த 10-ம் தேதி, மாநிலங்கள் அவையில் காலை 11 மணிக்கு ஒரு எம்.பி. எழுந்தாராம். ''ஏதோ நாற்றம் வீசுகிறது'' என்றாராம். சபைத் தலைவராக துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி இருந்துள்ளார். அவர் உடனே, அனைவரையும் அமைதியாக இருக்கச் சொல்லி இருக்கிறார். அப்போது, அதே அவையில்தான் பிரதமரும் இருந்துள்ளார். அனைவருமே அந்த கெட்ட நாற்றத்தை உணர்ந்துள்ளார்கள். சபை, அரை மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. ஏ.சி. இயந்திரத்தில் பழுது ஏற்பட்டு கேஸ் கசிந்ததால் ஏற்பட்ட நாற்றம் என்று கண்டுபிடித்துச் சரிசெய்துள்ளார்கள்.
நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் 'ஊழல்’ என்ற துர்நாற்றம், அதிகமாக விவாதப் பொருளாகி வீசுகிறது. இதைக் கட்டுப்படுத்துவது பற்றி நம்முடைய தலைவர்கள் யோசிக்க வேண்டும். ஆண்டொன்று போனால் வயதொன்று போகும். ஆனால், நாம் அந்த ஓர் ஆண்டில் எவ்வளவு பக்குவப்பட்டுள்ளோம் என்பதே மரியாதையைத் தரும்!
ஆ.ராஜ முருகன், விருத்தாசலம்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஆ.ராசா ஜாமீன் கேட்டு விட்டாரே?
இப்படி ஒரு ஆள் உள்ளே இருக்கிறார் என்பதே தி.மு.க. தலைமைக்கு மறக்க ஆரம்பித்து விட்டது. எனவே, அவர் வெளியே வந்துதானே ஆக வேண்டும். கடந்த மே 10-ம் தேதி, தனது 49-வது பிறந்த நாளை ஆ.ராசா, திஹாரில் கொண்டாடினார். பொன்விழா நேரத்திலாவது வெளியில் இருக்க அவர் நினைக் கலாம்தானே? ஆனால், 'நான் நிரபராதி என்று தீர்ப்பு பெற்ற பிறகுதான் வெளியில் வருவேன்’ என்று, அவர் செய்த அறிவிப்பு இன்னும் அப்படியேதான் இருக்கிறது!
மகேஸ்வரன், சிவகங்கை.

புதுக்கோட்டையில் பரபரப்பையே காணோமே?
காற்றில் கத்தியைச் சுழற்றினால் எப்படிச் சத்தம் வரும்? எதிரிகளே இல்லாத களம், ஆளும் கட்சிக்குத்தான் அவமானம்!
வீரதுரை, நந்தம்பாக்கம்.

2ஜி விவகாரத்தில் 122 உரிமங்களை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். இதை, மறுஆய்வு செய்ய வேண்டும் என்று முதலில் மனு போட்ட மத்திய அரசு, திடீரென வாபஸ் வாங்கிக் கொண்டது ஏன்?
உச்சி மண்டையில் மீண்டும் உச்ச நீதிமன்றம் கொட்டிவிட்டால் என்ன செய்வது என்ற பயம்தான் மறுஆய்வு மனுவை வாபஸ் பெற வைத்துள்ளது.
122 உரிமங்கள் முறையாகத்தான் வழங்கப்பட்டன என்று வாதிடத் துப்பு இருக்குமானால், ஏன் மனுவை வாபஸ் பெற வேண்டும்? இதில், தன்பலம் இல்லாததால், குடியரசுத் தலைவர் மூலமாக நெருக்கடி கொடுக்கும் காரியத்தையும் காங்கிரஸ் அரசு பார்த்தது. மொத்தத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதையே அப்பட்டமாக உணர்த்துகின்றன இந்தக் காட்சிகள்!
கே.ஆர் முத்துராஜ், தஞ்சாவூர்.

மூவருக்கும் ஜாமீன் கிடைத்து விட்டதே?
உள்ளே ஒழுங்காக இருந்தார்கள். வெளியில்தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கொம்பு சீவி விடுபவர்கள், கொள்ளை நோக்கம் கொண்டவர்கள், கொடுக்கல் - வாங்கல் பேர்வழிகள் ஆகிய மூன்று தரப்பிடம் இருந்தும் இவர்கள் விலகி இருந்தால் எதிர்காலமாவது நிம்மதியாய் அமையும்!
பா.வசந்தகுமார், ஸ்ரீவைகுண்டம்.

கூடங்குளம், இடிந்தகரையில் மீண்டும் போராட்டம் தொடங்கி விட்டதே?
அணுஉலை குறித்த அச்சம் அந்தப் பகுதி மக்களுக்கு அப்படியே இருக்கிறது. இந்த அச்சத்தை நீக்க வேண்டிய பொறுப்பு, தமிழக முதல்வருக்கு இருக்கிறது. கூடங்குளம், இடிந்தகரை பகுதிக்குச் சென்று அந்த மக்களிடம் முதல்வர் நேரடியாகப் பேசினால் மட்டுமே, அரசு எதிர்பார்க்கும் முடிவை எட்ட முடியும்!
அந்தப் பகுதி மக்களின் உண்மையான எதிர்பார்ப்புகளை, முதல்வரிடம் அதி காரிகள் சொல்லவில்லை. பத்து மாதங்களைக் கடந்து நடக்கும் ஒரு போராட்டப் பகுதிக்கு ஒரு மாநிலத்தின் தலைமைச் செயலாளரும், டி.ஜி.பி.-யுமே இதுவரை போகவில்லை என்பது நிர்வாகக் கோளாறு. அக்கறை இன்மையின் வெளிப்பாடு!
சுரேஷ், திருமயம்.

'ஜெயேந்திரருக்கு இது தேவையில்லாத வேலை’ என்கிறாரே மதுரை ஆதீனம்?
தேவையில்லாத 'வேலைகள்’ பார்ப்பதுதானே பல மடாதிபதிகளின் முழு நேர வேலையாக ஆகிவிட்டது.
'என்றும், எப்போதும் தூங்காத கண் ஒன்று நமது இதயங்களைப் படித்துக்கொண்டு இருக்கிறது. நமது எண்ணங்களைப் பதிவு செய்துகொண்டு இருக்கிறது’ என்பார்கள். இதை, சாமான்ய மக்கள் உணர்ந்து திருந்தி வருகிறார்கள். ஆனால், சில மடாதிபதிகள் உணரத் தவறுகிறார்கள்!
கணேஷ்குமார், ஸ்ரீவில்லிபுத்தூர்.

லோக் பால் மசோதா அவ்வளவுதானா?
இந்தக் கூட்டத் தொடரில் நிறைவேறுவதற்கு சாத்தியம் இருப்பதாகத் தெரியவில்லை. கூட்டத் தொடர் முடிவதற்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கிறது. கிடப்பில் போட்டுவிடுவார்கள் என்றே நினைக்கிறேன்.
