Published:Updated:

தலையங்கம் - அமளியே போ... அமைதியே வா!

தலையங்கம் - அமளியே போ... அமைதியே வா!

பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம் - அமளியே போ... அமைதியே வா!
தலையங்கம் - அமளியே போ... அமைதியே வா!

60 ஆண்டுகளை நிறைவுசெய்யும் இந்திய நாடாளுமன்றத்தில் அமைதி இல்லாமல் போய்விட்டதே என்று ஆதங்கப்பட்டு இருக்கிறார்கள் பிரதமரும் மூத்த உறுப்பினர்களும். அவையின் கண்ணியத்தையும் புனிதத் தன்மையையும் கட்டிக்காத்து, இந்த தேசத்து மக்களுக்கு மேலும் சீரிய சேவை ஆற்றுவதாக உறுதிமொழி எடுத்திருக்கிறார்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

 அவை நடவடிக்கைகள் பல சமயங்களில் அமளியில் முடிவதும் தகிக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வே இல்லாமல் அவையை முடக்க நேர்வதும் எத்தனை பெரிய சாபம்? அதேசமயம், நியாயமான குற்றச்சாட்டுகளை அவைக்குள் எழுப்ப எதிர்க் கட்சிகளுக்கு உரிய வாய்ப்பு தராமல் வாயடைப்பு செய்வதால்தானே பெரும்பாலும் அமளிகள் அரங்கேறுகின்றன?

அலைக்கற்றை முறைகேடு போன்ற தலை போகிற பல பிரச்னைகளை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுப்பவிடாமல், எதிர்க் கட்சிகளைத் தடுப்பதற்கு ஆளும் கட்சி மேற்கொண்ட பகீரத முயற்சிகளையும் அதையும் மீறி அந்தப் பிரச்னைகளை அம்பலத்துக்குக் கொண்டுவருவதற்கு எதிர்க் கட்சிகள் அரங்கேற்றிய 'அமளி துமளி'களையும் நாம் அறிவோம். ஆக, 'கலகம் பிறந்தால்தான், நியாயம் பிறக்கும்' என்ற வேண்டாத வில்லங்க சூழல் ஏற்படக் காரணமே ஒருவகையில் ஆளும் கட்சியின் சாமர்த்தியமான சர்வாதிகார ஜனநாயகம்தானே?

இங்கிலாந்தின் மதிப்புக்குரிய பிரதமரான வின்ஸ்டன் சர்ச்சில், ஒருமுறை வேதனை கலந்த வேடிக்கையோடு சொன்னது இந்திய நாடாளுமன்றத்துக்கு என்னமாய் பொருந்துகிறது. ''நாடாளுமன்ற உறுப்பினர் ஆக விரும்பும் இளைஞர்களே... முதலில் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன தெரியுமா? சிசு மரணம்பற்றி நான் ஒரு புள்ளிவிவரம் தாக்கல் செய்யச் சொன்னால், நான் பிரதமராக இருக்கும் காலகட்டத்தைவிட, வேறு ஒருவர் ஆட்சியில் இருந்த காலத்தில்தான் அதிக சிசு மரணங்கள் நிகழ்ந்தன என்று காட்டுவதற்கு வசதியாக ஆதாரங்களைத் தர வேண்டும். அதற்குப் பெயர்தான் அரசியல் புள்ளிவிவரம்!''

மணி விழாவை எட்டிவிட்ட முதிர்ச்சிக்குப் பிறகாவது, அவரவர் வசதிக்குத் தோதாகத் தொடரக் கூடாது இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு