Published:Updated:

எதிர்ப்புகளை உடைக்க காளி பூஜை...

ஆதரவு திரட்ட அம்பானிகள்!பிரணாபின் ஜனாதிபதி ரேஸ்

எதிர்ப்புகளை உடைக்க காளி பூஜை...

ஆதரவு திரட்ட அம்பானிகள்!பிரணாபின் ஜனாதிபதி ரேஸ்

Published:Updated:
##~##

த்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு 77 வயது. ஓடி ஆடி அரசியல் செய்தது போதும், ஜனாதிபதி ஆகிவிட்டால், நிம்மதியாக இருக்கலாம் என்று திட்டம் போடுகிறார். 'வதந்தி​களை நம்பாதீர்கள், நான் இருட்டில் இருக்கி​றேன். எனக்கு ஒன்றும் தெரியாது’ என்று அவர் சொன்னாலும், ஜனாதிபதி தேர்தல் களத்தில் அவர் முழுமூச்சில் இறங்கி வேலை பார்க்கிறார்! 

கிட்டத்தட்ட 50-வது வயதில், 'நான் ஏன் பிரதமர் ஆகக்கூடாது?’ என்று ஓர் ஆசை அவருக்கு வந்தது. 1984-ல் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட சமயம், பிரணாபும் ராஜீவ் காந்தியும் ஒடிசாவில் இருந்தனர். இந்த சோகத் தகவல் கிடைத்து உடனடியாக இருவரும் டெல்லி திரும்பினர். அந்த விமானப் பயணத்தின்போதே பிரணாப், ''மேடத்துக்குப் பிறகு நான்தான் பிரதமராகப் பதவி ஏற்கவேண்டும். மேடம், வெளிநாடுகளுக்குப் போகும்போதெல்லாம் அவருக்குப் பதில் நான்தான் அமைச்சரவைக் கூட்டங்களுக்குத் தலைமை ஏற்றுள்ளேன்'' என்று அச்சாரம் போட்டார். அந்த நேரத்தில், இது ராஜீவ் காந்திக்கு கோபத்தை ஏற்படுத்தியது. டெல்லி வந்து இறங்கியவுடன் காட்சிகள் மாறி, ராஜீவ் காந்தி பிரதமர் ஆனார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எதிர்ப்புகளை உடைக்க காளி பூஜை...

பிரணாபின் ஆசை, இந்திரா குடும்பத்தாரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கவே... மனவருத்தங்கள், பிரச்னைகள் பெருகின. அதனால், காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி, ராஷ்ட்ரிய சமாஜ்வாதி காங்கிரஸ் என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார். அந்தக் கட்சிக்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு இல்லை. மீண்டும், காங்கிர​ஸுக்குத் திரும்பினார் பிரணாப். ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட நேரத்திலும் பிரதமர் பதவிக்கான ரேஸில் இருந்தார். ஆனால், நரசிம்மராவுக்கு அந்தப் பதவி கிடைத்தது. இதனால், வருத்தம் அடைந்த  பிரணாப் முகர்ஜியை, திட்டக் குழுத் துணைத் தலை​வராக நியமித்தார் ராவ். அன்று முதல் இன்று வரை பிரணாப்புக்கு இரண்டாவது இடம்தான்!

திறமையை அடிப்படையாக வைத்து ஜனாதிபதியைத் தேர்வு செய்யாமல், விசுவாசத்தைப் பார்த்துத் தேர்வு செய்வதுதான் காங்கிரஸ் ஸ்டைல். அதனால், ஜனாதிபதி வேட்பாளருக்காக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைத் திரட்டிவரும் சோனியா, இன்னமும் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கவே இல்லை. இருந்தாலும் பிரணாப் முகர்ஜிதான் காங்கிரஸ் வேட்பாளர் என்று வேகவேகமாகப் பரவுகிறது.

பிரணாபை வேட்பாளராக முன்னிறுத்துவதில் ஒமிட்டா பாலுக்கு முக்கியப் பங்கு இருப்பதாகச் சொல்​கிறார்கள். இவர், நிதி அமைச்சகத்தில் பிரணாபின் ஆலோசகராக இருக்கும் பெண்மணி. பாதுகாப்புத் துறை, வெளியுறவுத் துறை மற்றும் நிதி அமைச்சகம் என்று பிரணாப், வெவ்வேறு துறைகள் மாறிய நேரங்​களிலும் ஆலோசகராகவே தொடர்ந்தவர் ஒமிட்டா.

பஞ்சாபியான ஒமிட்டா பால், இப்போது யு.பி.எஸ்.சி. உறுப்பினராக இருக்கும் கே.கே.பால் என்ற ஐ.பி.எஸ். அதிகாரியின் மனைவி. கணவன், மனைவி இருவரும் ஜோதிடத்தில் ஈடுபாடு உள்ளவர்களாம். இவர்கள்தான் பிரணாபின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்து, ஜனாதிபதி யோகத்தை உறுதி செய்து, பிரணாபுக்குப் பின்புலமாகச் செயல்படுகிறார்கள். 'பிரதமர் ஆகப்போகிறோம்’ என்று பிரணாப் நம்பிக்கையுடன் இருந்தபோது, ' உங்களுக்கு அந்தப் பதவி  கிடைக்காது’ என்று ஜோதிடம் சொன்​னவர்களாம் இவர்கள். அது அப்படியே நடக்க, 'இப்போது ஜனாதிபதி பதவி கிடைக்கும்’ என்று ஜோதிடம் சொல்வதை முழுமூச்சாக பிரணாப் நம்புகிறார்.

'பிரணாபுக்கு என்ன தகுதிக் குறைச்சல்?’ என்று அவரது ஆதரவாளர்கள் கேட்கிறார்கள். அவர், மத்திய அரசின் 30-க்கும் மேற்பட்ட அமைச்​சரவைக் குழுக்களுக்குத் தலைவராக இருக்கிறார். அரசாங்கத்துக்கு எந்தப் பிரச்னை வந்தாலும், அதைத் தீர்த்து வைக்கக்கூடிய திறமைசாலி. எந்த விவகா​ரத்தையும் திறமையாகக் கையாளுபவர் என்பதோடு, அதை ஆதாரங்களோடும் சாட்சியத்தோடும் வைத்து எதிர்க்கட்சிகளைச் சமாளிக்கும் ஆற்றல் உண்டு. இத்தனை திறமை வாய்ந்த அரசியல்வாதியான பிரணாபின் மறுபக்கம் விமர்சனத்துக்கு உரியது.

எதிர்ப்புகளை உடைக்க காளி பூஜை...

சமீபத்திய பட்ஜெட்டில், 'வரியை விதித்து, வருமானத்தைப் பெருக்கி, வளர்ச்சியைக் காட்டுவேன்’ என்று சாதுர்யமாகப் பேசினார் பிரணாப். ஆனால், பட்ஜெட்டில் விதிக்கப்பட்ட மூன்று வரிகளை கடைசி நேரத்தில் ரத்து செய்துவிட்டார். ஏன், எதற்கு, யாருக்காக என்று பல்வேறு கேள்விகள் உண்டு. சாதாரணத் தொழில்அதிபராக இருந்த அம்பானி குரூப்பை, முன்னுக்குக் கொண்டுவந்த பெருமை பிரணாப் முகர்ஜியையே சேரும். அதனால் அம்பானி சகோதரர்கள், பிரணாபைப் பதவிக்குக் கொண்டுவர கடும் முயற்சி எடுப்பதாகச் சொல்லப்படுகிறது. உதிரிக் கட்சிகளை வளைக்கும் பணியில் இவர்கள் தீவிரமாக இருக்கிறார்களாம்.

முலாயமுக்கும் மம்தாவுக்கும் முஸ்லிம் ஓட்டுகள்​தான் முக்கியம் என்பதால், அப்துல் கலாம், அன்சாரி என்று பேச்சு எடுத்தனர். இடதுசாரிகளும் துணை ஜனாதிபதி அன்சாரியை வேட்பாளராக அறிவித்தால், ஆதரிக்கத் தயார் என்றனர்.

ஆனால், 'ஜனாதிபதி ஆகும் அளவுக்கு முகமது அன்சாரிக்குத் தகுதி கிடையாது’ என்று பி.ஜே.பி-யின் சுஷ்மா அடித்துச் சொன்னார். சுஷ்மாவின் கருத்துக்கு அவரது கட்சிக்குள்ளேயே பலத்த எதிர்ப்பு கிளம்பி​யது என்றாலும், அவர் சொன்னதன் அர்த்தம், அந்தத் தகுதி பிரணாபுக்கு உண்டு என்பதுதான். பிரணாப் முகர்ஜிக்கு பி.ஜே.பி. வட்டாரத்தில் ஆதரவு பெருக, அருண் ஜெட்லியும் ஒரு காரணம் என்கிறார்கள். ஏனென்றால், ஒமிட்டா பால் தம்பதியினருக்கு அருண் ஜெட்லி தூரத்து உறவு. அதனால், அவர் மூலமும் காரியங்கள் நடக்கின்றனவாம்.

பிரணாபுக்கும் பி.ஜே.பி-க்கும் நல்ல உறவு இருக்கத்தான் செய்கிறது. முன்பு, நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடந்த ஒரு நினைவு நிகழ்ச்சியில், பிரதமர் மற்றும் சோனியா முன்னிலையில் பிரணாபின் சட்டையைப் பிடித்து இழுத்து நெருக்கமாக நிற்க வைத்தார் சுஷ்மா சுவராஜ். பிரணாப் உதவியாளர்கள் அறையிலும் அவரது ஆலோசகர் ஒமிட்டா பால் அறையிலும் ரகசிய மைக் வைத்திருந்தது குறித்து தகவல் வர, முதலில் கண்டனம் தெரிவித்தவர் சுஷ்மா சுவராஜ்தான். அதனால், வேட்பாளர் பிரணாப் என்றால், பி.ஜே.பி-க்கு சம்மதமாகத்தான் இருக்கும். மேலும், இடது சாரிகளும் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸும், வங்காளியான பிரணாப் முகர்ஜியை எதிர்த்து வாக்களிக்க முடியாத சூழ்நிலைதான் இருக்கும். நிதி நெருக்கடியைத் தீர்ப்பதற்காகச் சில வருடங்களுக்கு முன் பஞ்சாப் மாநிலத்துக்குக் கொடுக்கப்பட்ட கடன் சலுகையைப் போன்று, மேற்கு வங்காளத்துக்கும் கேட்டு வருகிறார் மம்தா. ஆனால், பிரணாப் இன்னமும் தலையாட்டவில்லை என்பதில் மம்தாவுக்குக் கோபம். அதனால், பிரணாப் முகர்ஜியை வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்து விட்டால், மம்தாவுக்குப் பெரிய தர்மசங்கடம்தான். பிரதிபா பாட்டீல் களத்தில் இருந்த நேரத்தில், எப்படிப்பட்ட எதிர்ப்பு​கள் கிளப்பப்பட்டனவோ, அதே போன்று பிரணாப்​புக்கும் எதிர்ப்புகள் கிளம்பி விட்டன. அதனால், இப்போது ஜோதிடருடன் சேர்த்து மகா காளியையும் நம்பத் தொடங்கி விட்டார் பிரணாப். எதிர்ப்புகளை நசுக்குவதற்காக தன்னுடைய வீட்டிலேயே காளி பூஜையைத் தொடர்ந்து நடத்தி வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது. நடுஇரவில் தொடங்கி அதிகாலை நாலு மணி வரை நடக்கும் இந்தக் காளிபூஜை... எதிர்ப்புகளை எல்லாம் உடைத்துத் தள்ளுமாம்.

ஜோதிடம், அம்பானிகள், எதிர்க்கட்சிகள், காளி பூஜை என்றெல்லாம் நம்பிக்கொண்டு இருக்காமல், சோனியா காந்தி மீது மட்டும் முழு நம்பிக்கை வைத்து சுற்றிவந்தால், பிரணாப் ஜனாதிபதி ஆகலாம்!

- சரோஜ் கண்பத்

படங்கள்: சுபாஷ் பரோலியா  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism