
போபால்: காங்கிரஸ் கட்சியின் பிடியிலிருந்து தமது கட்சி நாட்டை விடுவிக்கும் என்று பா.ஜனதா பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதலமைச்சருமான நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் இன்று நடைபெற்ற பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மோடி," சுதந்திரத்திற்கு பின்னர் காங்கிரஸ் கட்சியை கலைத்துவிட வேண்டும் என மகாத்மா காந்தி விரும்பினார். ஆனால் அவரது விருப்பத்தை காங்கிரஸ் கட்சி மதிக்கவில்லை.
ஆனால் மகாத்மா காந்தியின் கனவை நனவாக்க நாங்கள் (பா.ஜனதா) பாடுபடுவோம். காங்கிரஸ் கட்சியின் பிடியிலிருந்து இந்த நாட்டை விடுவிப்போம்.
உங்களது குழந்தை தொடர்ந்து ஏழையாகவே இருக்க விரும்புகிறீர்களா...?அவனுக்கு உரிய கல்வி அளிக்கப்படவில்லையா...? இல்லையெனில் புத்திசாலித்தனமாக வாக்களியுங்கள்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பா.ஜனதாவுக்கு ஆதரவாக மாபெரும் அலை வீசுகிறது. மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், டெல்லி மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் மட்டுமல்லாது, நாடாளுமன்ற தேர்தலில் கூட காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை நிறுத்தாது. ஏனெனில் அக்கட்சி தேர்தலை சிபிஐ மூலமாக எதிர்கொள்கிறது.
மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருந்தபோது எந்த ஒரு மாநில அரசும் புகார் கூறியதில்லை. ஆனால் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, தனது கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு பிரச்னைகளை உருவாக்கி வருகிறது.
கடந்த 10 ஆண்டு காலமாகவே காங்கிரஸ் கட்சி பசியுடன் இருக்கிறது. அப்படி இருக்கும்போது அவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்பது குறித்து கற்பனை செய்து பாருங்கள்.
##~~## |
டெல்லியில் இருந்து கேரளாவுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், மத்தியப் பிரதேசத்துக்குக் கொடுக்கப்படுவதில்லை. ஏனெனில், மத்தியப் பிரதேசம் பா.ஜனதா ஆளும் மாநிலம். அதனாலேயே மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு உதவ டெல்லி தயாராக இல்லை.
மத்தியப் பிரதேசத்தில் ஷிவ்ராஜ் சௌஹான் அரசுக்கு மத்திய அரசு தொடர்ந்து நெருக்கடிகளைத் தருகிறது. பா.ஜனதா ஆளும் மாநிலங்களின் முன்னேற்றத்தை தடுக்க மத்திய அரசு முயல்வது இதன் மூலம் உறுதியாகிறது" என்றார்.
அத்வானி பாதங்களை வணங்கிய மோடி
முன்னதாக பொதுக் கூட்டத்தில் பேச எழுந்த நரேந்திர மோடி, அங்கிருந்த மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் பாதங்களில் விழுந்து வணங்கினார். அதே சமயம் மேடையில் இருந்த மற்ற பா.ஜனதா தலைவர்கள் அத்வானியை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை.
மோடி எனது சகோதரர்: அத்வானி
இதனிடையே இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அத்வானி, மோடி என்னுடைய சகோதரர் என்றார்.