உங்கள் எம்.எல்.ஏ. எப்பூடி?
Published:Updated:

மிஸ்டர் கழுகு: ஆறு மந்திரிக்கு கல்தா?

மிஸ்டர் கழுகு: ஆறு மந்திரிக்கு கல்தா?

மிஸ்டர் கழுகு: ஆறு மந்திரிக்கு கல்தா?

லைபேசியில் அந்தப் பக்கம் செம பட்டாசுச் சத்தம்!

சில நிமிடங்களில் நேரில் வந்தார் கழுகார்.

''என்ன, ஓர் ஆண்டுச் சாதனைக் கொண் டாட்டங்களைப் பார்க்கப் போயிருந்தீரா? பட்டாசுச் சத்தம் பட்டையைக் கிளப்பியதே!'' என்றோம்.

''கோட்டையே கொண்டாட்டமாக இருந்தது. ஆனால், முதல்வர்தான் அத்தனை சந்தோஷமாக இல்லை!'' -  ஆரம்பித்தார் கழுகார்.

''ஆட்சிப் பொறுப்புக்கு வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. ஏராளமான திட்டங்களைக் கொண்டுவந்த சந்தோஷம் முதல்வருக்கு இருந்தாலும், இன்னொரு பக்கத்தில் வருத்த ரேகைகள் படர்வதற்கு அமைச்சர்கள் சிலரே காரணம் ஆகிவிட்டார்கள். ஒவ்வொருவரைப் பற்றியும் வந்து குவியும் தகவல்கள் அந்த ரகம்.  அதிரடி நடவடிக்கை எடுக்கத்தான் முதல்வர் நினைக்கிறார். ஆனால், அடிக்கடி மந்திரி சபையை மாற்றுகிறார் என்ற குற்றச்சாட்டு வருவதால் தயக்கம் காட்டுகிறார். சட்டசபைக் கூட்டத் தொடர் முடியட்டும் என்று காத்திருந்தாராம். சில  தலைகளுக்குச் சிக்கல் சீக்கிரம் வரலாம்.''

''யார் யாராம்?''

''யாருடன் தொடர்புகொள்ளக் கூடாது என்று வெளிப்படையாக ஜெயலலிதாவே அறிக்கை மூலமாக வெளிப்படுத்தினாரோ, அவர்களுடன் தொடர்புகொண்ட இரண்டு அமைச்சர்கள் உருட்டப்படலாம் என்கிறார்கள். இந்த இருவரில் ஒருவர், முன்பு கோலோச்சிய மூன்றெழுத்துப் பிரமுகருடன் தொடர்பில் இருந்த விஷயங்களும் முதல்வரின் கவனத்துக்கு வந்துள்ளன. இன்னோர் அமைச்சர், சிறை மீண்டு வந்த ராவணனுக்கு சில தகவல்களைச் சொல்லும் தூதராகவே இருந்தாராம். இவர்கள் இருவரையும் முன்னதாகவே நீக்குவதற்கு முடிவு எடுத்தார் என்றாலும், கொஞ்சம் அவகாசம் கொடுத்துப் பார்த்தார். ஆனாலும் அவர்கள் மாறவில்லை என்பதால், நடவடிக்கை நிச்சயமாம்!''

''அடுத்துச் சொல்லப்படுபவர்கள்..?''

''இரண்டு அமைச்சர்கள் மீது கிரிமினல் புகார்கள் வந்துள்ளன. அவர்கள் இருவரும் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட சொந்த விவகாரத்தை சட்டம் - ஒழுங்குப் பிரச்னையாக மாற்றி, கரையோர ஊரில் பாட்டில் குண்டு வீசும் அளவுக்குச் சென்றவர் ஒருவர். இன்னொரு கரையோர ஊரில் நடந்த கொலையில் அமைச்சருக்கு நெருக்கமானவரே கைது செய்யப்பட்ட கொடுமையும் நடந்தது. இவர்கள் இருவரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள்.''

''அடுத்து...?''

''மிகவும் படித்த அமைச்சர் அவர். அவர் தன்னுடைய துறையில் செய்யும் கோக்குமாக்குக் காரியங்களைப் பார்த்து துறைச் செயலாளரே மலைத்துப்போய் உட்கார்ந்து விட்டாராம். புண்ணியம் சேர்க்கும் அந்தத் துறையின் முக்கியமான அதிகாரி, சில நாட்களில் ஓய்வு பெற வேண்டும். அவரிடம் 'நீங்க நிம்மதியா ரிடையர்டு ஆகணும்னா, 10 லட்சம் கொடுங்க’ என்று கேட்டாராம். அவர் மறுக்கவே, ஏதோ ஒரு பொருளை 120 ரூபாய் அதிக விலை கொடுத்து வாங்கியதாக புகார் சொல்லி சஸ்பெண்ட் செய்யும் அளவுக்கு 'வழிப்பறி’ மந்திரி யாக இருக்கிறாராம். இதில், முதல்வருக்குத் தெரிந்தது கொஞ்சம்... தெரியாதது நிறைய!

இதேபோல் தென் மாவட்டத்தில் ஒரு பிரச்னை குறித்து, சில வாரங்களுக்கு முன்பு சட்டசபை வளாகத்தில் வைத்தே முதல்வர் விசா ரணை செய்ததாக நான் சொல்லி இருந்தேன். இந்த ஆறு பேருக்கும் சிக்கல் தான் என்று அடித்துச் சொல்கிறார்கள் கோட் டையில்!''

''கொஞ்ச நாள் அமைதியாக இருந்த மந்திரி சபை மாறுதல்கள் மீண்டும் சூடு பிடிக்கிறதாக்கும்!'' என்றோம். தலை அசைத்த கழுகார் அடுத்த மேட்டருக்குத் தாவினார்!

''திருச்சி ராமஜெயம் கொலை விவகாரத் தில் இறக்கை கட்டிப் பறக்கும் வதந்திகள் இன்னமும் நின்றபாடில்லை. 'அவர் நள்ளிரவிலேயே கொலை செய்யப்பட் டார். முதல் நாள் இரவே வீட்டைவிட்டுக் கிளம்பிச் சென்றுவிட்டார். அவரது குடும்பத்தினர் உண்மையான தகவல்களைச் சொல்லாமல் மறைப்பதால்தான், விசா ரணை நீண்டுகொண்டே போகிறது’ என்ற செய்தி சில தினங்களாக உலவுகிறது!'' என்றார் கழுகார்.

''திருச்சியில் நர்ஸை ஒருவரை போலீ ஸார் வளைத்திருப்பதாகத் தகவல் வந்ததே?''

''அவர் இறந்துபோன நேரம் பற்றிய சர்ச்சைகளை முதலில் சொல்லி விடுகிறேன். 'ராமஜெயம் போஸ்ட்மார்ட்டம் அறிக்கை யில் அவர் இறந்துபோனதற்கான காரணம் மட்டுமே தெரிவிக்கப்பட்டு இருந்தது. அவர் உயிர் பிரிந்த நேரத்தை உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்கள் குறிப்பிடவில்லை. இதனால், இரண்டாவது முறையாக போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டதில், அவர் மார்ச் 29-ம் தேதி நள்ளிரவு 2.30 மணிக்கு முன்பே கொலை செய்யப் பட்டு இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது’ என்று சிலர் இப்போது சொல்கிறார்கள். ஆனால் உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்கள், தடயவியல் நிபுணர்கள் இதனை மறுக்கிறார்கள். 'இது முழுக்க முழுக்கப் பொய்யான தகவல். ராமஜெயம் உடல் ஒரு முறைதான் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் இறந்த நேரத்தைக் குறிப்பிடவில்லை என்பது உண்மைதான். அப்படி நேரத்தைக் குறிப்பிட வேண்டும் என்று அவசியம் கிடையாது. இந்த விவரத்தை போஸ்ட்மார்ட்டம் செய்யும் மருத்துவர் ஒரு குறிப்பேட்டில் பதிவு செய்வார். காவல் துறை அதிகாரிகள் பிறகு உயிர் பிரிந்த நேரம் பற்றி தெரிவிக் கும்படி கேட்டனர். அதன் பிறகுதான், இறப்பு நிகழ்ந்து இருக்கலாம் எனக் கருதப்படும் நேரத்தைக் குறிப்பிட்டு அறிக்கை வழங்கப்பட்டது. இறந்த நேரத்தை உடலின் வெப்பத்தை வைத்தும் உடல் தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்களை வைத்தும் கணிப்பார்கள். அதன்படி போஸ்ட்மார்ட்டம் செய்த மாலை 3 மணி நிலவரப்படி, ராமஜெயம் மரணித்து எட்டு முதல் 10 மணி நேரம் ஆகியிருக்கலாம் என மருத்துவர்கள் கணித்துள்ளனர். இறப்பு நிகழ்ந்த நேரத்தைத் தோராயமாகவே தெரிவிக்க முடியும். துல்லியமாகத் தெரிவிக்க முடியாது. அப்படித் தெரிவித்தால், அந்த மருத்துவரின் திறமை சந்தேகத்துக்கு உரியது’ என்று சொல்கிறார்கள்''

''ம்!''

''இந்தக் குழப்பமே இன்னமும் முடிவுக்கு வராத நிலையில் தான், இந்த நர்ஸ் மேட்டர் கிளம்பி உள்ளது. 'ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் வசிக்கும் நர்ஸ் ஒருவருடன் ராமஜெயத்துக்குப் பழக்கம் உண்டு. அந்தப் பெண்ணை சந்திக்கப் போன நேரத்தில்தான் ராமஜெயம் கடத்தப்பட்டார்’ என்று கிளம்பிய செய்தியைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணை முன்பே போலீஸ் விசாரித்து அனுப்பி விட்டது. அவரைத்தான் மறுபடியும் விசாரணைக்கு அழைத்தார்கள்’ என்று சொல்கிறார்கள். ஆனால், இந்த வதந்தி கிளம்பிய இரண்டு மணி நேரங்களில் போலீஸார் இந்தத் தகவலை மறுக்க ஆரம்பித்து விட்டார்கள்!''

''என்னவாம்?''

''இந்தப் பெண்ணின் உறவினர் ஒரு பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். அதில் ஒரு திருட்டு நடந்துள்ளது. அது சம்பந்தமான விசாரணையாம் அது. இதைச் சொன்னதும் அனைவருக்கும் சப்பென்று ஆகிவிட்டது!''

''உண்மையில் யார்தான் சம்பந்தப்பட்டு இருப்பார்கள்?''

''என்னுடைய சோர்ஸ் ஒரு சந்தேகத்தை கிளப்புகிறார். 'போலீஸ் உயர் அதிகாரி ஒருவரை அளவுக்கு அதிகமாக ராமஜெயம் பகைத்துக்கொண்டார். அவருக்கு இதில் பங்கு இருக்கலாம்’ என்கிறார்!''

''எந்த போலீஸ் அதிகாரியாம்?''

''போலீஸ்தான் கண்டுபிடிக்க வேண்டும்'' என்றபடி கழுகார் பறந்தார்!

அணு உலையை மிரட்டும் கடிதங்கள்!

கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டத்தை எப்படியாவது முடிவுக்குக் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் முயற்சிக்கின்றன. ஆனால், எப்படி என்றுதான் தெரியவில்லை. சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படும் அளவுக்கு அடிதடிப் பிரயோகம் செய்தால், ஆட்சிக்குக் கெட்ட பெயர் வரும் என்பதால், வேறு மாதிரியான வழிகளை யோசிக்கிறார்களாம்!

சமீபத்தில், கூடங்குளம் அணு உலை முகவரிக்கு வந்திருந்த சில கடிதங்களில், 'திட்டமிட்டபடி அணு உலைக்கு வெடி வைக்க வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்தக் கடிதங்கள், போராட்டம் நடக்கும் இடிந்தகரை கிராமத்தைச் சேர்ந்த ஒரு கான்ட்ராக்டர், இரு ஊழியர்கள் பெயர்களில் வந்திருக்கிறது. போராட்டக்காரர்களை எப்படியாவது கைது செய்யத்தான் இப்படிப்பட்ட கடிதங்களை வெளியிடுகிறார்கள் என்றும் பேச்சு உள்ளது.

மிஸ்டர் கழுகு: ஆறு மந்திரிக்கு கல்தா?

ரொம்பவும் லேட்டா வந்திருக்கீங்க..!

வேளாண்மைத் துறை முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் வீடு, அலுவலகம், உறவினர்கள் வீடு என 16 இடங்களில் கடந்த வியாழனன்று, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அதிரடி ரெய்டு நடத்தினர். 'நாங்க விஜிலென்ஸ்ல இருந்து வந்திருக்கோம்...’ என்று, ரெய்டுக்குப் போன போலீஸார் தங்களது அடையாள அட்டையைக் காட்டி இருக்கிறார்கள். 'வாங்க வாங்க.. போன மாசமே வருவீங்கன்னு எதிர்பார்த்தேன். ரொம்பவும் லேட்டா வந்திருக்கீங்க..’ என்று கூலாகச் சொன்னாராம் ஆறுமுகம். கடந்த ஆட்சியின்போது, வீரபாண்டி ஆறுமுகத்தின் உதவியாளராக இருந்தவர் முருகேச பூபதி. இப்போது, கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருக்கிறார். முருகேச பூபதி வீட்டில் கடந்த வாரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் ரெய்டு நடத்தினார்கள். அவர் வீட்டில் கிடைத்த சில ஆவணங்களின் அடிப்படையில்தான், ஆறுமுகம் வீட்டுக்கும் ரெய்டுக்குச் சென்றதாகப் போலீஸ் வட்டாரம் சொல்கிறது!

மிஸ்டர் கழுகு: ஆறு மந்திரிக்கு கல்தா?