உங்கள் எம்.எல்.ஏ. எப்பூடி?
Published:Updated:

மிஸ்டர் கழுகு: ஜெ. மூவ்... கருணாநிதி செக்...

மிஸ்டர் கழுகு: ஜெ. மூவ்... கருணாநிதி செக்...

மிஸ்டர் கழுகு: ஜெ. மூவ்... கருணாநிதி செக்...
##~##

வெயில் சூடு பிடிக்கும் முன்னதாகவே அலுவலக வளாகத்துக்குள் வந்து விட்டார் கழுகார்.

 ''இளநீர் ப்ளீஸ்...'' என்று, ஆர்வமாய்க் கேட்டவர், ''முதலில் ஜனாதிபதி தேர்தல் மூவ்களைச் சொல்லி விடுகிறேன்'' என்றார்.

''டெல்லித் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றனவா?'' என்று கேட்டோம்.

''ஜனாதிபதித் தேர்தலே சென்னையை மையம்கொண்டுதான் இருக்கிறது. எனவே, தேர்தல் முடியும் வரைக்கும் அதுவும் லோக்கல் செய்திதான்'' என்று சிரித்தபடி தொடர்ந்தார்.

''ஜனாதிபதித் தேர்தலில் மக்களவை முன்னாள் சபாநாயகர் சங்மாவை வேட்பாளர் என்று ஜெயலலிதா அறிவித்ததை டெல்லித் தலைவர்கள் ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள். 'டெல்லியில் இருந்தபடி நாம்தான் காய் நகர்த்துகிறோம்’ என்ற கோதாவில் பல தலைவர்கள் ஏராளமான சந்திப்புகளைச் 'சும்மா’வாவது செய்துகொண்டு இருக்க... எதிர்பாராத திருப்பமாக சென்னையில் இருந்துகொண்டு வேட்பாளரை அறிவித்தார் ஜெயலலிதா. அதற்கு வெளிப்படையான ஆதரவை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மட்டுமே இதுவரைக்கும் கொடுத்துள்ளார் என்றாலும் 'ஏன் சங்மா வரக்கூடாது?’ என்ற யோசனையை விதைத்து விட்டது ஜெயலலிதாவின் அறிவிப்பு. ஆனால், இதைப் பலரும் ரசிக்கவில்லை!''

''குறிப்பாக..?''

''காங்கிரஸ் தரப்புதான் கொந்தளிப்பில் இருக்கிறது. 'ஜெயலலிதா என்ன பெரிய நேஷனல் லீடரா?’ என்று கொந்தளிப்புடன் சொன்னாராம் ஒரு முக்கிய அமைச்சர்.  'இது வெறும் ஸ்டன்ட்’ என்பது அவருடைய கணிப்பு. 'டெல்லியில் தன்னுடைய செல்வாக்கை அதிகப்படுத்திக்கொள்வதற்கான தந்திரம்’ என்று காங்கிரஸ் கட்சியின் மத்திய அமைச் சர்களில் ஒருவர் சூடாகச் சொன்னாராம். சோனியாவைக் கோபப்படுத்த வேண்டும் என்பதற்காகவே சங்மா பெயர் அறிவிக்கப்பட்டதாக காங்கிரஸ் மேலிடத் துக்கும் செய்தி சொல்லப்பட்டது. சோனி யாவை அந்நிய நாட்டவர் என்று பிரச்னை கிளப்பியவர் என்ற ஒரே தகுதியின் அடிப் படையில்தான் சங்மாவை ஜெயலலிதா தேர்வு செய்துள்ளார் என்பதே டெல்லி காங்கிரஸ் வட்டாரத்தின் பேச்சு.''

''அப்படியா?''

''சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார் சங்மா. இதனால் அவர்கள் இருவருக்குமே பிரச்னை ஏற்பட்டு விட்டது. 'சங்மாவுக்கு முக்கியத்துவம் பெருகுவதை பவார் விரும்பவில்லை’ என்றும் சொல்லப்படுகிறது. அதேபோன்று, ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி தேசிய அளவில் ஜெயலலிதா கவனிப்புப் பெறுவதை கருணாநிதியும் விரும்பவில்லை. 'சரத்பவாரை தி.மு.க. தரப்பு தொடர்புகொண்டு பேசியது. இதனால்தான் பவார், சங்மாவை ஆதரிக்க மறுக்கிறார்’ என்று சொல்கிறார்கள். மேலும், பவாரின் மகளும் கருணாநிதியின் மகளும் தோழிகள். 'சங்மாவை எந்தக் காலகட்டத்திலும் தேசியவாத காங்கிரஸ் ஆதரிக்கக் கூடாது. சங்மா ஜனாதிபதியானால், எதிர்காலத்தில் நிறையவே சிக்கல் உண்டாகும். அவர் ஜெயலலிதா சொல்வதைத்தான் அனைத்து விஷயங்களிலும் கேட்பார். அதற்கு இடம் கொடுத்துவிடக் கூடாது’ என்று தி.மு.க. தரப்பில் இருந்து கொந்தளிப்பான வேண்டுகோள்கள் வைக்கப்பட்டனவாம்!''

''இப்படி நடக்கும் என்பது ஜெயலலிதாவுக்கும் தெரியும்தானே?''

''ஜெயலலிதாவின் ஒரே லட்சியம், கடந்த முறை ஜனாதிபதியாக பிரதீபா பாட்டீலைத் தேர்வு செய்வதில் கருணாநிதி முன்னிலை வகித்தார். அந்த அந்தஸ்தை இந்த முறை தான் பெற்றுவிட வேண்டும் என்பதுதான். அதற்கான ஓட்டப் பந்தயத்தில் பயம் இல்லாமல் பங்கேற்று விட்டார் ஜெயலலிதா. அதற்காக அத்வானி, பிரகாஷ் காரத் ஆகிய தலைவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் இறங்கி விட்டார். மோடியுடன் மிக நீண்ட நேரம் பேசியதாகச் சொல்கிறார்கள். 'அத்வானி ஆதரிக்கத் தயங்கினாலும், பி.ஜே.பி-யின் மற்ற தலைவர்களை மனமாற்றம் செய்ய ஜெயலலிதா முயற்சிக்கிறார்’ என்றும் சொல்கிறார்கள்'' என்று, கழுகார் ஏறிட்டுப் பார்க்க... இளநீர் கொடுத்தோம். குடித்து முடித்தவர் தொடர்ந்தார்...

மிஸ்டர் கழுகு: ஜெ. மூவ்... கருணாநிதி செக்...

''மே 21-ம் தேதி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மறைந்த நாள். இந்தத் தினத்தை கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளாக அரசு கடைப்பிடித்து வருகிறது. அன்றைய தினம் வழக்கமாக முதல்வர் மற்றும் அமைச்சரவை சகாக்கள் அனைவரும் வந்து அஞ்சலி செலுத்துவார்கள். கொடுஞ்செயல் உறுதிமொழியை எடுத்துக்கொண்டு கலைந்து செல்வார்கள். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்தாலும் இல்லை என்றாலும் முதல்வராக இருந்த கருணாநிதியும் ஜெயலலிதாவும் இதில் கலந்துகொள்ளத் தவறியது இல்லை. ஆனால், இம்முறை ஜெயலலிதா ஆப்சென்ட்!''

''ஏனாம்?''

''காங்கிரஸ் மீதான கோபம்தானோ? சபாநாயகர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் சாரங்கி ஆகிய இருவர் மட்டுமே கலந்துகொண்டார்கள். அமைச்சர்கள்கூட யாரும் வரவில்லை. காங்கிரஸ் கட்சி மீது முதல்வர் எந்த அளவுக்குக் கோபமாக இருக்கிறார் என்பதன் அடையாளம் இது!''

''அது இருக்கட்டும்! தஞ்சையில் நடக்கப்போகும் தனது இல்லத் திருமணத்துக்கு சசிகலா செல்வாரா? என்ன டெவலப்மென்ட்?''

''இந்த இதழை வாசகர்கள் படித்துக்கொண்டு இருக்கும் நேரத்தில் சசிகலா, தஞ்சைக்குப் போனாரா இல்லையா என்பது தெரிந்துவிடும். ஆனால், முன்னதாக நடக்கும் சம்பவங்கள் சிலதை நான் சொல்கிறேன். சசிகலா கைக்கு அந்தக் கல்யாணப் பத்திரிகை வந்து சேர்ந்ததா, யார் கொடுத்தார்கள்? என்பது பலராலும் உறுதிப்படுத்த முடியாத விஷயமாகவே இருக்கிறது. 'சசிகலாவுக்கு, இளவரசி மூலமாகக் கொடுத்து அனுப்பினார்கள்’ என்கிறது ஒரு குரூப். ஹேண்ட் பேக் மற்றும் செல்போன்கூட கார்டனுக்குள் வரும்போது எடுத்து வரக்கூடாது என்று இளவரசிக்குக் கட்டுப்பாடு இருக்கிறதாம். அதனால் அவர் கொண்டுவந்திருக்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள். கூரியரில்தான் கல்யாணப் பத்திரிகையை அனுப்பினார்கள் என்கிறது இன்னொரு தரப்பு. கார்டனுக்குள் வரும் கடிதங்களைப் பிரித்து சோதனை செய்வதற்காகப் பணிக்கப்பட்டு இருக்கும் இளைஞர் அதை எடுத்து ஜெயலலிதாவிடம் கொடுத்ததாகவும், அவரே அதை சசிகலாவிடம் கொடுக்கச் சொன்னதாகவும் சொல்லப்படுகிறது!''

''போகச் சொன்னாரா... இல்லையா?''

''ஒரே வார்த்தையாக 'உன் இஷ்டம்’ என்று சொன்னாராம். இதனால் பெரும் குழப்பம் சசிகலாவுக்குத்தான். 'போ என்று சொன்னால் போகலாம். வேண்டாம் என்றால் இருக்கலாம். உன் இஷ்டம் என்று சொன்னது, சசிகலா என்ன நினைக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள ஜெயலலிதா செய்யும் தந்திரம் என்றே உள்விவரங்கள் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.''

மிஸ்டர் கழுகு: ஜெ. மூவ்... கருணாநிதி செக்...

''உள்ளே வந்தாலும் சிறையில்தான் இருக்கிறாரோ?'' என்று கேட்டோம். பதில் சொல்லாத கழுகார், ''அடுத்த மேட்டருக்கு வருகிறேன். திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணை, கிணற்றில் போட்ட கல்லாகக் கிடக்கிறது!''

''அதான், திடீரென்று திருச்சி போலீஸ் கமிஷனரை நேரு போய் சந்தித்தாரே..?''

''இருவரும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக்கொண்டதுதான் நடந்துள்ளது. 'இதுவரை ஏழு போலீஸ் படைகளை அமைத்துள்ளீர்கள். உருப்படியாய் எதையும் கண்டு பிடிக்கவில்லை. ஆனால், ராமஜெயத்தைக் கொச்சைப் படுத்துவது மாதிரியான செய்திகளை மட்டும் மீடியாக்களுக்கு போலீஸ்காரர்கள் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். இது நியாயமா?’ என்று கேட்டாராம் நேரு. இதை முழுமையாக மறுத்தாரம் திருச்சி கமிஷனர். 'உங்கள் குடும்பத்தினர்தான் எங்களுக்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறீர்கள். நீங்களே உண்மையைச் சொல்லாவிட்டால், எங்கள் விசாரணையில் எப்படி முன்னேற்றம் ஏற்படும்?’ என்று கேட்டாராம் கமிஷனர்'

''நேரு குடும்பத்தினர் ஒத்துழைக்கவில்லையா?''

''மார்ச் 29-ம் தேதி, ராமஜெயம் கொல்லப்பட்டு 50 நாட் களைக் கடந்த பின்னரும், எத்தனை மணிக்கு ராமஜெயம் வீட்டைவிட்டுக் கிளம்பினார் என்ற முதல் குழப்பத்துக்கே இன்னும் முழுமையான விடை கிடைக்கவில்லை. வீட்டின் வாட்ச் மேன் ஆறுமுகத்திடம் நடத்திய முதல்கட்ட  விசாரணையில் 'காலை 5 மணிக்குத்தான் வீட்டை விட்டு ராமஜெயம் கிளம்பினார்’ என்று சொன்னார். போலீஸ் தீவிரமாக விசாரித்தபோது, 'இரவு 11 மணிவாக்கில் வீட்டை விட்டுப் போனார்’ என்று சொன்னாராம். இது மாதிரியான குழப்பம் இன்னும் தொடர்கிறது. இது உண்மையாக இருந்தால், 'காலையில் பார்த்தேன்’ என்று சொல்லும் முன்னாள் நீதிபதியின் சாட்சியும் நீர்த்துப்போகும்.''

''அடுத்த குழப்பங்களையும் சொல்லும்!''

''ராமஜெயத்தின் சகலை மகனான வினோத்துக்குத் தெரியாமல் இம்மியளவு விஷயமும் நடந்திருக்க வாய்ப்பு இல்லை என்று நினைக்கும் போலீஸ், அவரை அடிக்கடி அழைத்து விசாரிக்கிறதாம். ராமஜெயம் வாக்கிங் செல்லும் பாதை குறித்த தகவல்களை வினோத் சொன்னாராம். அந்தப் பாதையில் பயணித்த காவல் துறையினர், ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியின் விசிட்டிங் கார்டு முதல் நாள் ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸில் ராமஜெயம் பயணம் செய்த டிக்கெட், கட்டுக் கம்பி, செலோடேப்பின் மிச்சம் ஆகியவற்றை எடுத்தனராம்.

இது, காவல் துறையினருக்கு நெருடலை ஏற்படுத்தியிருக்கிறதாம்.  டிக்கெட் முதற்கொண்டு ராமஜெயம் அங்கே தவறவிட்டிருப்பாரா என்ற சந்தேகம் உள்ளது. சென்னை வந்தது முதல் உடையை மாற்றவே இல்லையா? அந்த டிக்கெட் எப்படி அங்கே வந்தது? செலோ டேப்பும், கட்டுக் கம்பியும் முழுவதுமாக கொலை செய்யப்பட்ட உடலைச் சுற்றியிருக்க... இங்கே கிடந்த டேப்புக்கள் மற்றும் மிச்சம் இருந்த கம்பிகள் எப்படி வந்தன? அங்குதான் திட்டம் போடப்பட்டதாக போலீஸ் நினைக்கிறது.  ராம ஜெயம் கொலையான அன்று, ஸ்ரீரங்கம் புஷ்பக் நகரில் ராமஜெயத்தின் சடலம் கிடக்கிறது என்று காலை 8.45-க்கு ஒரு வழக்கறிஞருக்கு நேருவின் அலுவலகத்தில் இருந்து போன் போனதாகச் சொல்கிறார்கள். அந்த வழக்கறிஞரை விசாரணை செய்த போலீஸார், 'உங்களுக்கு எப்படித் தகவல் தெரியும்,  புஷ்பக் நகருக்கு ஏன் போனீர்கள்?’ என்று விசாரணை செய்ததாகவும் கூறுகின்றனர்.''

''மொத்தத்தில் போலீஸ் குழப்புகிறதா... குழம்புகிறதா?'' என்று நாம் கேட்க...  பதில் சொல்லாமல் பறந்தார் கழுகார்!

படங்கள்: சு.குமரேசன், 'ப்ரீத்தி’ கார்த்திக்

மருத்துவமனையிலும் எழுத்துப்பணி!

மிஸ்டர் கழுகு: ஜெ. மூவ்... கருணாநிதி செக்...

பத்திரிகையாளர் சோவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன், திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. ஆனால், அது குறையவே இல்லையாம். இதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்ட போது லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே, அப்போலோவில் சேர்க்கப்பட்டார். ஒரு வாரமாவது தங்கி இருந்து சிகிச்சை பெறுவது நல்லது என்று டாக்டர்கள் சொல்லி இருக்கிறார்கள். 'வீட்டுல இருந்தே ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிறேன்’ என்று, கிளம்பினார் துடிப்பு அடங்காதவராக. ஆனால், ஓரிரு நாட்கள் கடந்த பிறகும் குணம் அடையவில்லை. எனவே, மறுபடியும் அப்போலோவுக்கு வரவேண்டியது ஆகிவிட்டது. இதைக் கேள்விப்பட்டு முதல்வர் உடனடியாக அவரை வந்து சந்தித்தார்.

இவ்வளவு உடல் உபாதை நேரத்திலும் தன்னுடைய பத்திரிகைக்கு எழுதுவதையும் கட்டுரைகள் படிப்பதையும் சோ நிறுத்தவில்லையாம். அப்போலோ மருத்துவமனையை துக்ளக் ஆபீஸ் போல ஆக்கிவிட்டார் சோ!

மிஸ்டர் கழுகு: ஜெ. மூவ்... கருணாநிதி செக்...