என் விகடன் - திருச்சி
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
Published:Updated:

தலையங்கம் - விளம்பர சாமரங்கள்!

தலையங்கம் - விளம்பர சாமரங்கள்!

தலையங்கம் - விளம்பர சாமரங்கள்!
தலையங்கம் - விளம்பர சாமரங்கள்!

.தி.மு.க. அரசின் ஓர் ஆண்டுச் சாதனைகளாக வெளியான விளம்பரங்கள் மற்றும் நடந்தேறிய கொண்டாட்டங்களுக்குச் செலவிடப்பட்ட தொகையே ஒரு தனி சாதனைதான்! அதிலும், 'நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை'யின் ஓர் அங்கமாக, மின் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் என்று எரிசக்தித் துறை அளித்திருக்கும் விளம்பரத்தைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

 அதில் பட்டியலிடப்பட்டு உள்ள புள்ளிவிவரங்களைப் பார்த்தால், 'மிக விரைவிலேயே தமிழகத்தின் ஒட்டுமொத்த மின் தேவையையும் பூர்த்திசெய்து, உபரி மின்சாரத்தைப் பக்கத்து மாநிலங்களுக்கு எல்லாம்கூட பகிர்ந்தளிக்கப்போகிறோம்' என்று தனக்குத்தானே அரசாங்கம் திருப்திப்பட்டுக்கொள்வதுபோல் இருக்கிறது.

கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் தினமும் மின்வெட்டில் புழுங்கித் தவிக்கும் குடிமகன் இந்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டு, எத்தகைய கொதிப்புக்கு ஆளாவான் என்பதைப் புரிந்துகொள்ளாமல், முதல்வரைக் குளிர்விக்கும் போட்டியில் முதல் பரிசு வாங்கிவிட வேண்டும் என்ற ஆர்வக்கோளாறை அநியாயத்துக்கு வெளிப்படுத்தி இருக்கிறது எரிசக்தித் துறை!

ஒரு நல்ல அமைச்சரும் சரி... சிறந்த அதிகாரியும் சரி... உள்ளதை உள்ளபடி தயங்காமல் இடித்துச் சொல்லி, அரசாள்பவரை உஷார்படுத்தும்போதுதான் நல்ல நிர்வாகம் வெளிப்படும். உண்மை எவ்வளவு கசப்பானதாக இருந்தாலும், அதை ஒளிக்காமல் தன்னிடம் எடுத்துச் சொல்லும் சுதந்திரத்தை ஆள்பவர்கள் அளிப்பதும் மிக முக்கியம். மாறாக, 'புகழ் மயக்கம் மட்டுமே எனக்குப் பிடிக்கும்' என்று சிறியதொரு சமிக்ஞை காட்டிவிட்டாலும் போதும்... அண்டி இருப்பவர்கள் அசுர கதியில் சாமரம் வீசியே ஆள்வோரைச் சரியவைத்துவிடுவார்கள்.

அரசு விளம்பரங்கள் ஆள்வோரை வேண்டுமானால் அகமகிழச் செய்யலாம். ஆனால், முள் படுக்கையில் நெளிந்து துடிப்பவனைப் பார்த்து, 'நீ மலர் மஞ்சத்தில் சுகமாக இருக்கிறாய்' என்று திரும்பத் திரும்பச் சொல்லி நம்பவைக்கும் 'ஹிப்னாடிஸ' சக்தி ஒருபோதும் அவற்றுக்குக் கிடையாது. நொந்துகிடக்கும் மக்களை அவை மேலும் நோகடிக்கும்!

முதல் ஆண்டு நிறைவில், முதல்வர் முக்கியமாகப் புரிந்துகொள்ள வேண்டியது இதைத்தான்!