என் விகடன் - திருச்சி
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
Published:Updated:

தட்டிவிடு... அடிச்சுவிடு... தாளிச்சிடு!

அரசியல் கொலை அகராதிவிகடன் டீம்

##~##

கொலைத் தொழில்... தமிழகத்தில் ஆட்சி - காட்சி மாறினாலும் எப்போதும் கொடி கட்டிப் பறக்கும்  தொழில். கொலைகளைத் தடுப்பதும், கொலையாளிகளைக் கண்டுபிடிப்பதும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு போலீஸாருக்குத் தலைவலியாக மாறியிருக்கிறது. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொல்லப்பட்டது மார்ச் மாதம் 29-ம் தேதி. சிட்டி கமிஷனர் தொடங்கி, சிறப்புப் பிரிவு வரை 60-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தினமும் 70 பேர் வரை கடுமையாக விசாரித்தும், உளவுத் துறையையும் பொறுப்பில் வைத்திருக்கும் தமிழக டி.ஜி.பி. ராமானுஜம் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இவர்களை வறுத்தெடுத்தும் விசாரணை வளையத்தில் இதுவரை உண்மையான குற்றவாளி சிக்க வில்லை. இந்த அரசியல் படுகொலைகள் எப்படி அரங்கேறுகின்றன? அதன் நெட்வொர்க் பின்னணி என்ன?

 'தட்டிவுடு’, 'அடிச்சுவுடு’, 'தாளிச்சிடு’!

ஒரு கொலைக்கான அசைன்மென்ட் எங்கே இருந்து வந்தது, அதை நிறைவேற்ற யாரெல்லாம் திட்டமிட்டார்கள், நிறைவேற்றிய கூலிப் படை எது என்பதையெல்லாம் ஒரே கோட்டில் வைத்து ஆராய்ந்தால்தான் கொலைக்கான பின்னணியைக் கண்டுபிடிக்க முடியும். ஆனால், சமீப அரசியல் கொலைகளில் உத்தரவிட்ட வருக்கும் கூலிப் படைக்கும் எந்தச் சம்பந்தமும் இருக்காது. விதவிதமானஸ்டைல் களில் 'போட்டுத் தள்ளும்’ கூலிப் படை களைக் கையில் வைத்திருக்கும் குத்தகை தாதாக்களிடம் பணத்தையும் சம்பந்தப்பட்ட ஆளின் புகைப்படத்தையும் கொடுத்து 'தட்டிவுடு’, 'அடிச்சுவுடு’, 'தாளிச்சிடு’, 'கைமா’ என ஏதேனும் ஒரு கோட்வேர்ட் கொடுத்தால் போதும். சொன்ன காரியம் சொன்ன வண்ணம் நிறைவேறும்.

தட்டிவிடு... அடிச்சுவிடு... தாளிச்சிடு!

'தட்டிவுடு’ என்றால், எச்சரிக்கும் விதமாக லேசுபாசான காயங்களை ஏற்படுத்துதல். 'அடிச்சுவுடு’ என்றால், ஆளைச் சட்டெனக் காலி செய்தல், 'தாளிச்சிடு’ என்றால், தலையை வெட்டி, உடல் உறுப்புகளை நசுக்கி, முகத்தைப் பிளந்து, யாரும் அஞ்சலி செலுத்தக்கூட அஞ்சும் அளவுக்குச் சித்ரவதை செய்து உயிர்ப் பலி எடுப்பது, 'கைமா’ என்றால், கை, அல்லது காலை எடுத்து நிரந்தர ஊனமாக்குதல். சம்பவத்துக்கான தேதி யைக் குறித்ததும் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே அசைன்மென்ட் கொடுப்பவர் வெளி நாட்டுக்கோ, வெளி மாநிலத்துக்கோ அல்லது இருப்பிட விவரத்தை ஆதாரபூர்வமாகத் தெரிவிக்கக்கூடிய அரசு அலுவலகங்களுக்கோபோய் விடுவார். 'சம்பவம்’ சிறப்பாகச் செய்து முடிக்கப்படும். போலீஸ் விசாரணை தீவிரமாகும் சமயம், அவர்களை மேற் கொண்டு பயணிக்கவிடாமல், 'நாங்கள் தான் கொலை செய்தோம்’ எனச் சொல்லி ஆஜராகும் வேறு ஒரு கும்பல். கொலை செய்த நபர்களுக்கும் ஆஜரான கும்ப லுக்கும் எந்தச் சம்பந்தமும் இருக்காது. நீதிமன்றத்தில்

தட்டிவிடு... அடிச்சுவிடு... தாளிச்சிடு!

அவர்கள் என்ன சொல்ல வேண்டும் என்பது அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்படும். கொலைப் பழியை ஏற்றுக்கொள்ளத் தனியாகப் பேரம் நடக்கும். கடந்த வருடம் சென்னை யில் காலை 11 மணிக்கு ஓர் அரசியல் பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்டார். சென்னையையே உலுக்கிய அந்தக் கொலை விவகாரம், போலீஸுக்குப் பெரிதாக வேலை வைக்கவில்லை. காரணம், மதியம் 2 மணிக்கே 'அந்தக் கொலையைநாங்கள் தான் செய்தோம்’ என்றுசொல்லி, ஒரு கும்பல் மதுரை நீதிமன்றத்தில் சரண்டர் ஆனது. 11 மணிக்கு சென்னையில் கொலை செய்த கும்பல் மதியம் 2 மணிக்குள் எப்படி மதுரைக்குப் போயிருக்க முடியும்? விமானத்தில் எக்கானமி க்ளாஸ் முன்பதிவில் பயணித்துச் சென்றிருப்பார்களோ?

விடலை வேகத்துடன் இருக்கும் சிறுவர்களை, 20 வயதைத் தாண்டாத இளைஞர்களைத் தொழிலுக்குப் பழக்கி வைத்திருப்பார்கள். லம்ப்பான தொகை கிடைக்கும் அசைன்மென்ட்டுகளை யாராவது ஒற்றை இளைஞனை அனுப்பிக் காரியம் முடிப்பார்கள். சம்பவம் பற்றிய பரபரப்பு அடங்கியதும் அந்தப் பையனைக் கழுத்தைத் திருகிக் கால்வாய்க்குள் வீசி விட்டு எஸ்கேப் ஆகிவிடுவார்கள் சீனியர்கள். 'எவிடென்ஸே இல்லாத ரிஸ்க்’ இது.

ஒரு தாதாவின் வாக்குமூலம்!

சென்னை எண்ணூரைச் சேர்ந்த பிரபல முன்னாள் தாதா நமக்காக அளித்த ரகசிய வாக்குமூலம் இது...

''ஆளைப் போடுறது ஒண்ணும் அவ்வளவு சுலபம் இல்லை. அதுக்கு ஸ்கெட்ச் முக்கியம். நாங்க ஜெயிச்ச சம்பவத்தையே சொல்றேன்பா...

'பாக்ஸர்’ வடிவேலோட மச்சான் குமார், ஹார்பர்ல நம்ம தலைவனுக்கு வேண்டப்பட்ட பொண்ணு விஷயத்துல விளையா டிட்டான். அந்தப் பொண்ணைத்தான் எலீக்ஷன்ல நிப்பாட்டி, ஜெயிச்சுரலாம்னு தலைவன் மலைபோல நம்பியிருந்தான். தலைவன் நம்மகிட்ட வாய்விட்டு அழுதுட்டான். எங்களுக்கு மனசு கேட்கலை. குமாருக்கு ஸ்கெட்ச் போட்டோம். பீச் கோர்ட்டுல அவனுக்குக் கடைசி வாய்தா. வந்தே ஆகணும் அவன். மொத்தம் 24 பேர் கிளம்பினோம். கோர்ட்டு, பஜார், மார்க்கெட் இது மாதிரி சனம் புழங்குற ஏரியாவில் சம்பவம் பண்ண நாலஞ்சு பேர் மட்டும் போகக் கூடாது. வேவு பார்க்க நாலு பேர், சிக்னல் கொடுக்க நாலு பேர், எதிரிக்காரன் கும்பல்ல நாலு பேர்னு பெரிய கும்பலாப் போய் நிக்கணும். எதிரிக்காரன் கோஷ்டியில நாலு பேரைப் பெரிய அமவுன்ட்டு கொடுத்து வளைக்கணும்.

குமார் எப்பவும் தொடையில பொருள் வெச்சிருப்பான். கோர்ட்டு வாசல்ல அவனும் அவன் ஆளுங்களும் பொருளைக் கொடுத்துட்டு உள்ளே போனானுங்க. அந்தப் பொருளை வாங்குனது அவன் கும்பல்லயே இருந்த நம்ம ஆளுங்க. வாய்தா முடிஞ்சு, வெளியே வந்து படிக் கட்டுல இறங்குனான் குமார். நாங்க பத்து பேர் பொருளோட திபுதிபுனு படி ஏறவும், தபால்னு சுதாரிச்சு குதிச்சு வெளியேறி பர்மா பஜார் சைடு ஓடுறான். குமார் எங்க ஓடுவான்னு தெரிஞ்சு, அங்க நாலு பேர் பொருளோட ரோட்டுல குத்தவெச்சு உக்கார்ந்து இருந்தானுங்க.

தட்டிவிடு... அடிச்சுவிடு... தாளிச்சிடு!

வேகமா ஓடுறவனை முதல்ல பின்னங் குதிகால் நரம்புல வெட்டணும். அதுக்கு மேல அவனால ஓட முடியாது. அதுக்குத் தான் நாலு பேர் குத்தவெச்சு உக்கார்ந்து, எதிரி கடந்து ஓடுறப்ப வரிசையாபொருளை வீசுவானுங்க. ஒருத்தனுக்கு மிஸ்ஸானாலும், ஒருத்தன்கிட்ட வெட்டு வாங்கிடுவான். அப்படித்தான் குமார் கால்ல வெட்டினான் விஜி. மடார்னு விழுந்தவன் மார்ல நான் ஏறி உட்கார்ந்தேன். தொடையில் ரெண்டு பேர் உட்கார்ந்து சாமானத்தை அறுத்தானுங்க. நான் கழுத்தை அறுத்து, ரத்தத்தை பிளாஸ்டிக் டப்பாவுல பிடிச்சேன். பின்னே... தலைவன் அதைக் காமிச்சாதானே நம்புவான். அது சரண்டர் ஆக முடிவெடுத்து செஞ்ச சம்பவம்ங்கிறதால வேவு பார்த்தவனுங்க, சிக்னல் கொடுத்தவனுங்க, கால்ல வெட்டுனவனுங்களை எஸ்ஸாக்கிட்டோம். சம்பவம் பண்ண மூணு பேர் மட்டும் சரண்டர். அப்புறம் எல்லாம் தலைவன் பார்த்துக்குவான்.

சரண்டர் ஆகக் கூடாதுனு பண்ற சம்பவங்களை வேற மாதிரி பண்ணணும். இதுவும் எலெக்ஷன் கொலைதான். வியாசர்பாடி வெள்ளை ரவி கோஷ்டியில நாகேந்திரன், பிலிப், சோமு, விஜி... இவனுங்க நாலு பேரும் செம கைகாரனுங்க. யாரு கொடுத்த அசைன்மென்ட்டுனு எங்களுக்குத் தெரியாது. இவனுங்க இருந்தா, அந்த எலெக்ஷன்ல கெலிக்க முடியாது போலிருக்கு. பணம் மட்டும் கைக்கு வந்துச்சு. பெரிய அமவுன்ட்டு.

உடனே, ஸ்கெட்ச் போட்டோம். சாராயக் கடை, நிலக்கரி குடோனு இதைவிட்டு இந்த நாலு பேரும் வெளியே வர மாட்டானுங்க. ஏரியா தாண்டி புது ஆளும் உள்ள போக முடியாது. இவனுங்களுக்கு கோர்ட்தான் சரியான இடம். நாலு பேரும் எக்மோர் கோர்ட்டுக்கு வந்தானுங்க. நாலு பேரும் ஒரே கோர்ட் ஹாலுக்குள்ள இருக்கானுங்கனு நினைச்சு, 10 பேரை வெளியே நிக்கவெச்சுட்டு, ஆறு பேர் உள்ள போனோம். எல்லார் தலையிலயும் ஹெல்மெட். ஆனா, அங்கே விஜி மட்டும்தான் இருந்தான். ஜட்ஜ் அய்யா கண் முன்னாடியே அவனைக் குரல்வளையில் ஒரு இழுப்பு, இடது மார்ல திருப்புலியை விட்டு ரெண்டு சொருகு, முள்ளுக்கத்தியை வயித்துல விட்டு நாலு திருப்பு.  

போலீஸ் இருக்கிற இடத்துல குறைஞ்ச நேரத்துல சம்பவத்தை முடிக்கணும்னா, இப்படித்தான் மெத்தடா குத்தணும். அப்பதான் ஆளு பொழைக்க மாட்டான். அஞ்சே நிமிஷம்தான். வெளியே வந்ததும் நாலு காயைப் (நாட்டு வெடிகுண்டு) போட்டுட்டு எஸ்கேப். ஆனா, 'பங்க்’ ரவி எங்களை போலீஸ்கிட்ட போட்டுவிட்டுட்டான். அந்த டென்ஷன்லதான் ஆசைத்தம்பி, மனோ, கோபாலை லயோலா காலேஜ் வாசல்லயும், கபிலனை அடையாறு மலர் ஆஸ்பத்திரியாண்டயும் போலீஸ் போட்டுத் தள்ளுச்சு. நான் ஆறு மாசம் வட நாட்டுக்குப் போயிட்டேன்.

இப்போ கடைசியா எங்க பசங்க பண்ண பெரிய அசைன்மென்ட் வெல்டிங் குமாரைப் போட்டதுதான். அவனைப் புழல் ஜெயில்ல வெச்சே முடிச்சானுங்க. போட்டது எண்ணூர் பசங்க. எண்ணூர்னா யார் சொல்லிப் போட்டு இருப்பாங்கனு எல்லாத்துக்கும் தெரியும். இதுவும்அரசியல் கொலைதான். ஆனா, சிகரெட் தகராறுல கொலைனு கேஸை முடிச்சிட்டாங்க!'' என்றவர், சற்றே கண்களை மூடி சின்ன இடைவெளிவிட்டுத் தொடர்ந்தார்.

''நான் எல்லாத்தையும் விட்டு ஒதுங்கிட்டாலும் இப்ப உங்களைப் பார்க்கக்கூட பதுங்கிப் பதுங்கித்தான் வர முடியுது. என் சாவு நல்ல சாவு இல்லைனு எனக்கு நல்லாத் தெரியும். எங்கயாச்சும் நான் வெச்ச மிச்சம் ஒருநாள் என்னைக் கட்டாயம் போட்டுத் தள்ளிடும். எல்லாம் நான் செஞ்ச பாவம்!'' என்று சின்ன சிரிப்போடு முடித்தார்.

நில், கவனி, கொல்!

தட்டிவிடு... அடிச்சுவிடு... தாளிச்சிடு!

தமிழகத்தின் தற்போதைய பகீர் புள்ளிகளாக சேலம் சிறையில் இருக்கும் கபிரியேல், சுபாஷ் பண்ணையார், தாத்தா செந்தில், நேர் எதிர் அரசியல் சக்தியோடு இருக்கும் சாதியப் புள்ளிகள் இருவர் ஆகியோரைத்தான் போலீஸ் மார்க் செய்துவைத்திருக்கிறது. ஆனால், இவர்களையும் கடந்து தமிழகத்தில் காலே வைக்காமல், நினைக்கிற நேரத்தில் காரியத்தை நடத்திக்காட்டும் ரிமோட் தாதாக்களின் பகீர் பட்டியலும் நீளம். ராமஜெயம் கொலை வழக்கில் அத்தனை ரூட்டி லும் விசாரணை நடத்தித் தளர்ந்துபோயி ருக்கும் போலீஸ், எட்டு வருடங்களாகப் போக்குக் காட்டும் முக்கியப் புள்ளி ஒருவனை வளைக்க மும்முரமாகி இருக்கிறது. அவன் 'பாம்புக் குட்டி’ நாகராஜ். திருச்சியின் ஆரம்ப காலத் தாதாவான பிச்சமுத்து பட்டறையில் தயாரானவன். இவனைப் பற்றிய விவரங்களைக் கேட்கையில் அழுவதா, அதிர்வதா என்றே தெரியவில்லை.

''ஏழு கொலை வழக்குகளில் தேடப்படும் இவனை போலீஸால் நெருங்கவே முடியவில்லை. தனக்கென எந்த வாகனமும் வைத்துக்கொள்ள மாட்டான். கொலைச் சம்பவத்தை முடித்த இரண்டு மாதங்களுக்குத் தொடர்ந்து பஸ்ஸில் பயணித்தே நாட்களை ஓட்டுவான். லாட்ஜ், ஹோட்டல் என எங்கும் தங்க மாட்டான். இரண்டு மாதங்களுக்குப் பின்பு எங்கேயாவது தங்கி, விவசாயக் கூலி வேலை பார்க்க ஆரம்பித்துவிடுவான். விவசாயத்தின் மீது அவனுக்கு அவ்வளவு ஆர்வம். பணத்துக்காக எவ்வளவு பெரிய ஆளின் மீதும் கை வைக்கத் தயங்காத இவனுக்கு, நிச்சயம் ராமஜெயம் கொலையில் தொடர்பு இருக்கலாம். ஆனால், இவனைக் கண்டுபிடிப்பதுதான் குதிரைக்கொம்பு!'' என்கிறார்கள் தனிப் படை அதிகாரிகள் சிலர்.

உணர்ச்சிவசப்பட்டு யாரும் கொலை கூடச் செய்யலாம். ஆனால், அதன் பிறகு, சாமர்த்தியமாக ஆதாரங்களை மறைத்துத் தப்பிப்பதில் இருக்கிறது புரொஃபஷனலிஸம். அசைன்மென்ட்டுகளில் ஈடுபடும் கூலிப் படையினர் இடையே தடை செய்யப்பட்ட வஸ்து செல்போன். வேலையைத் தொடங் கும் ஒரு மாதத்துக்கு முன்பு இருந்தே யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது. அனைத்துத் தகவல்களையும் நேரில்தான் பரிமாறிக்கொள்ள வேண்டும். மிகவும் அவசரம் என்றால், காயின் பூத்தில் இருந்து இன்னொரு காயின் பூத்துக்குத் தகவல் பரிமாறலாம். சம்பவத்தை முடித்தவுடன் உடனே ஊரைவிட்டு வெளியேறக் கூடாது. கும்பலைக் கலைத்துத் தனித் தனியாகப் பிரிந்து ஆங்காங்கே உலவிக்கொண்டு இருப்பார்கள். தேடுதல் வேட்டை கொஞ்சம் சுணங்கிய பிறகு, டிப்-டாப் உடை, கழுத்தில் ஐ.டி. கார்டு சகிதம் தனித் தனியாக வெவ்வேறு ஊர்களுக்குச் சென்று செட்டில் ஆகிவிட வேண்டும். அடுத்த ஒரு மாதத்துக்கும் செல்போன் பயன்படுத்தக் கூடாது!

அரசியல் என்பது ரத்தம் சிந்தாத யுத்தம்; யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் -  இது  கூலிப்  படைக்கும் பொருந்தும்.

சமீப அரசியல் கொலை வழக்குகளின் ஸ்டேட்டஸ்!

முருகன், தி.மு.க-வின் சிவகங்கை நகராட்சித் தலைவர் - 2007 ஜூனில் காரில் பொருத்திய ரிமோட் வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார். தி.மு.க. மாவட்டத் துணைச் செயலாளர், கவுன்சிலர் உட்பட 11 பேர் கைதாகி ஜாமீனில் வெளிவந்துவிட்டார்கள். வழக்கு ஆன் தி வே.    

இனியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருவாரூர் மாவட்டச் செயலாளர் - 2006 ஜனவரியில் மனைவி கண் முன்பு வெட்டிக் கொல்லப்பட்டார். வழக்கு ஆன் தி வே.    

பூண்டி கலைச்செல்வன், திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் - 2007 நவம்பரில் வீட்டுக்குள்ளேயே வெட்டிக் கொல்லப்பட்டார். இதில் தொடர்புடைய 'குரங்கு’ செந்தில் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். வழக்கு ஆன் தி வே.

வேலுச்சாமி, பள்ளிப்பாளையம் சி.பி.எம். பிரமுகர் - 2010 மார்ச்சில் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கு இப்போது சி.பி.சி.ஐ.டி. வசம். வழக்கு ஆன் தி வே.    

நாவலன், பேரளம் சி.பி.எம். பிரமுகர் - 2011 ஜனவரியில் வெட்டிக் கொல்லப்பட்டார். ஐந்து பேர் கைது. வழக்கு ஆன் தி வே.

ராமஜெயம், திருச்சி தி.மு.க. பிரமுகர் - 2012 மார்ச்சில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகள் இதுவரை பிடிபடவில்லை.

இவர்கள் தவிர, ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருந்த அண்ணா நகர் ரமேஷ், ஆ.ராசாவுக்கு நெருக்கமாக இருந்த சாதிக் பாட்ஷா இவர்களின் தற்கொலை மர்மங்கள் இதுவரை அவிழ்க்கப்படவே இல்லை.

துன்னூறு போட்ரலாமா?

தட்டிவிடு... அடிச்சுவிடு... தாளிச்சிடு!

உருட்டுக்கட்டை தொடங்கி கையடக்க பிஸ்டல் வரை தாதாக்கள் பயன்படுத்தும் ஆயுதங்களுக்குப் பஞ்சம் இல்லை என்றாலும், அவற்றில் சில ஆயுதங்கள்பற்றிக் கேட்டாலே குலை நடுங்கவைக்கும்.

இளம் மரத்துப் பனையில் கருக்கு மட்டையை வெட்டி இரண்டு நாட்கள் எண்ணெயில் ஊறப்போட்டு, இளம் தீயில் வாட்டி அரிவாள் போல் தயாரிப்பார்கள். எதிராளியின் கழுத்தில் ஒரு வீறு வீறினால், கருக்குப் பற்கள் கடகட வேகத்தில் அறுத்து, அவற்றில் பாதி உடலிலேயே தங்கிவிடும். கருக்கில் அரளிச் சாறு தடவி வெட்டினால், ஆள் நிச்சயம் ஸ்பாட் அவுட். 'உருக்குக்குத் தப்பினாலும் கருக்குக்குத் தப்பாது’ என்பது பரம்பரைத் தாதாக்களின் நம்பிக்கை.

சமீப காலங்களில் அதிகமான கொலைகள் நிகழ்த்தப்பட்டு இருப்பது கொடுக்கு அருவாளைப் பயன்படுத்தித்தான். இவை 'மேட் இன் திருநெல்வேலி’. முழுக்கைச் சட்டையின் உள்ளங்கையில் இருந்து மணிக்கட்டுப் பகுதிக்குள் மறைத்துக்கொண்டு போய்விடலாம். சிறிய அரிவாளாக இருந்தாலும், செம கனமாக இருக்கும். அறுக்கவும், வெட்டவும் வாகாக இருக்கும். சமீபத்திய உதாரணம், பசுபதி பாண்டியன் கொலை!

கட்டையடிக் கொலைகள் எப்போதாவது நடக்கும். அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தாமல், வலுவான வைரம் பாய்ந்த கட்டைகளைப் பயன்படுத்துவார்கள். ஆளை உட்காரவைத்து கட்டையின் அடிப் பகுதியால் ஓங்கிக் குத்துவார்கள். துளி ரத்தம்கூட வராமல் மண்டை கலங்கி சம்பந்தப்பட்ட ஆள் கண்ணை மூடுவார். டெல்டா மாவட்டக் கூலிப் படைகள் இன்றும் மிரட்டல் கொலைகளுக்கு கடப்பாரையைப் பயன்படுத்துகிறார் கள். ஆளைத் தூக்கிச் சென்று குழி தோண்டி நெஞ்சு வரை புதைத்துவிட்டுப் பேரம் நடத்துவார்கள். பேரம் படியாவிட்டால், கடப்பாரை பாய்ச்சி முழுதாகப் புதைத்துவிடுவார்கள்!

'ஹேண்ட் மேட்’ நாட்டு வெடிகுண்டுகள்தான் இவர்களின் ஸ்பெஷல். கந்தக மருந்து, வெடி உப்பு, மனோசீலை ஆகியவற்றை 1:2:3 என்கிற விகிதாசாரத்தில் கலந்து சில மணி நேரங்களிலேயே வெடிகுண்டு கட்டிவிடுவார்கள். கண்ணாடித் தூள், ஆணி, பிளேடு, பால்ரஸ் உள்ளிட்டவை உள்ளே வைத்துக் கட்டப்படும். அடித்த கணத்தில் அந்த ஏரியாவே புகை மண்டலமாகிவிடும். அதனால், சம்பவத்தைச் செய்தது யார் என்பதையும் அவ்வளவு சுலபத்தில் கண்டுபிடித்துவிட முடியாது.

துப்பாக்கிகளின் புழக்கமும் தமிழகத்தில் சரள மாகிவிட்டது. பீகார், ஆந்திரா மாநிலங்களில் 60 ஆயிரம் ரூபாய்க்கு நவீன துப்பாக்கிகள் கிடைக்கின்றன. தேனி மாவட்டப் பகுதிகளில் ஒரு குண்டு மட்டும் பயன்படுத்தக் கூடிய நாட்டுத் துப்பாக்கிகளை 5,000 ரூபாய்க்குக் கொடுக்கிறார்கள். மறைத்து எடுத்துச் செல்லக் கூடிய அளவுக்குச் சிறிய வடிவில் இருக்கும். துப்பாக்கிக் கொலைகள் சட்டம்-ஒழுங்குப்

தட்டிவிடு... அடிச்சுவிடு... தாளிச்சிடு!

பிரச்னயைக் கிளப்பிவிடுமென்ப தால், மிரட்டலுக்கும் தற்காப்புக்கும் மட்டுமே பயன்படுத்துவார்கள்.

கொலையானவரின் தோள்பட்டையில் வலுவான வெட்டு இருந்தால், அதற்கு 'வல்லம்படுகை வெட்டு’ என்று அர்த்தம். வல்லம்படுகை ஏரியாவைச் சேர்ந்தவர்கள் கொலைச் சம்பவங்களைத் தாங்கள்தான் செய்தோம் எனச் சிலருக்கு உணர்த்துவதற்காக இப்படி தோள்பட்டையில் அரிவாள் எழுத்துப் போட்டுப் போவார்கள். கொலை செய்யப்பட்டவரின் தலையில் காயம் இருந்தால், திருச்சி ஏரியா தாதாக்களை போலீஸ் குறிவைக்கும். யாரைத் தூக்கினாலும் முதலில் தலையில் தட்டி (அரிவாளால்) மூர்ச்சையாக்குவது திருச்சி புள்ளிகளின் வழக்கம். தலையை வெட்டித் தனியே எடுப்பது தென் மாவட்ட தாதாக்களின் வழக்கம். ஒரே வெட்டில் தலையை எடுப்பதைப் பெருமையாகக் கொண்டாடுவார்கள். சாமான், பொருள், மட்டை உள்ளிட்ட பெயர்களில் ஆயுதங்களை எடுத்து வருவார்கள். 'காரம் போட்டாச்சா?’ என்றால், ஆயுதங்கள் பட்டை தீட்டப்பட்டுள்ளதா என அர்த்தம். தலையைத் தனியே எடுக்க 'துன்னூறு போட்ரலாமா’ என்பது கோட்வேர்ட்!