Published:Updated:

`அவர் செய்தது... அவருக்கே நடந்தது' - சரத்பவாரின் 40 வருட ஃபிளாஷ்பேக்!

சரத்பவார்
சரத்பவார்

நாளுக்கு நாள் இரு காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே நடந்த சச்சரவுகள் வெடித்தசமயத்தில் மனஸ்தாபத்தில் இருந்த சரத்பவார் தனது அரசியல் தந்திரத்தைச் செயல்படுத்தினார்.

நம்பிக்கைத் துரோகம் செய்து துணை முதல்வராகியுள்ளார் அஜித் பவார். ஒரு இரவில் தேசியவாத காங்கிரஸின் துரோகியாக மாறியுள்ளார். இப்படி நேற்று காலை முதல் பழிச்சொல்லுக்கு ஆளாகியுள்ள அஜித் பவாரின் செயலால் மகாராஷ்ட்ரா அரசியல் தகித்துக்கொண்டிருக்கிறது. எல்லா மாநில அரசியலிலும் துரோக அரசியல் நடக்காமல் இருந்தது இல்லை. உறவினர்களால், நண்பர்களால் ஏன் தாங்கள் வளர்த்த அரசியல் வாரிசுகளின் சூழ்ச்சியால் பதவியை இழந்தவர்கள் இந்திய தேசிய அரசியலில் ஏராளம். ஆனால், இந்தச் சூழ்நிலை மகாராஷ்ட்ரா அரசியலில் சற்று வித்தியசாமாக இரண்டாம் முறையாக அரங்கேறியுள்ளது.

அஜித் பவார்
அஜித் பவார்

சரத்பவாருக்குத் தெரியாமலேயே மகாராஷ்ட்ராவின் முதல்வராக பா.ஜ.க-வின் பட்னாவிஸ் பதவியேற்க ஆதரவு கொடுத்துள்ளார் சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார். இந்த நம்பிக்கைத் துரோகத்தின் பலனாக மகராஷ்ட்ராவின் துணை முதல்வர் பதவியை அடைந்திருக்கும் அஜித் பவார், சித்தப்பா சரத்பவார் தொடங்கிய கட்சியையும் உடைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார் எனக் கூறப்படுகிறது. தனது 60 வயதில் அஜித் பவார் செய்ததை சரத்பவார் தனது 38 வயதிலேயே செய்துவிட்டார்.

`குடும்ப அரசியல்; ஃபிளாஷ் பேக்!' - பா.ஜ.க வலையில் வீழ்ந்தாரா அஜித் `தாதா' பவார்?

1978 பிப்ரவரி மாதம். எமெர்ஜென்சிக்குப் பிறகு, காங்கிரஸ் பிரிந்தது. அப்போது நடந்த மகாராஷ்ட்ரா சட்டசபைத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ், இந்திய தேசிய காங்கிரஸ் (சோஷியலிஸ்ட்) பார்ட்டி என இரண்டாகப் பிரிந்து தேர்தலைச் சந்தித்தது காங்கிரஸ். அப்போது சரத்பவார் சோஷியலிஸ்ட் பார்ட்டியிலிருந்து போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாகத் தேர்வானார். அன்றைக்கு காங்கிரஸ் (சோஷியலிஸ்ட்) 69 இடங்களும் இந்திரா காங்கிரஸ் 62 இடங்களும், ஜனதா கட்சி 99 இடங்களும் வென்று யாருக்கும் பெரும்பான்மை இல்லாமல் இருந்தது.

சரத்பவார்
சரத்பவார்

பின்னர் இரண்டு காங்கிரஸ் கட்சிகளும் சுயேச்சை மற்றும் சிறிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சிக் கட்டிலைக் கைப்பற்றியது. காங்கிரஸின் வசந்த்தாதா பாட்டில் தலைமையில் நடந்த ஆட்சியில் சரத்பவார் அப்போது தொழிலாளர் துறை அமைச்சராக இருந்தார். பெரும்பான்மை இல்லாத அரசாங்கம் என்பதால் தினமும் கத்தி மேல் தொங்குவது போலவே அவரது அரசு சென்றுகொண்டிருந்தது. தினம் தினம் எழுந்த பதவிச் சண்டையால் சுமுகமான அரசாங்கம் நடக்கவில்லை. நாளுக்கு நாள் இரு காங்கிரஸ் கட்சிகளுக்குமிடையே நடந்த சச்சரவுகள் வெடித்தசமயத்தில் மனஸ்தாபத்தில் இருந்த சரத்பவார் தனது அரசியல் தந்திரத்தைச் செயல்படுத்தினார்.

`பட்னாவிஸின் ரகசிய சந்திப்பு; ஸ்விட்ச் ஆஃப் ஆன அஜித் பவார் போன்!- மகாராஷ்டிரா அரசியல் மாறிய பின்னணி

ஜனதா கட்சித்தலைவர் சந்திரசேகருடன் கைகோத்த அவர், காங்கிரஸ் கூட்டணியை உடைத்தார். தனது சகாக்களான 38 எம்.எல்.ஏ-க்களை தன்னுடன் சேர்த்துக்கொண்டு தான் போட்டியிட்டு வென்ற காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறினார். இதனால் அப்போதைய வசந்த்தாதா பாட்டில் அரசு கவிழ்ந்தது. அரசை கவிழ்த்ததன் பயனாக ஜனதா கட்சி மற்றும் சிறிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அரசை உருவாக்கிய சரத்பவார் மகாராஷ்ட்ரா அரசு வரலாற்றில் இளம் முதல்வராகத் தனது 38 வயதில் பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது நம்பிக்கை துரோகியாக காங்கிரஸ் கட்சியால் பேசப்பட்டவர்தான் சரத்பவார்.

சரத்பவார் மற்றும் அஜித் பவார்
சரத்பவார் மற்றும் அஜித் பவார்

ஆனால் `இரு காங்கிரஸ் கட்சிகளுக்கிடையேயான சங்கடமான கூட்டணியே நான் பிரிந்து சென்றதும் காரணம்' என்று பின்னாளில் எழுதிய சுயசரிதையில் தனது நடவடிக்கையை நியாயப்படுத்தினார் சரத்பவார். 38 வயதில் சரத்பவார் செய்த அதே துரோகச் செயல் தற்போது அவருக்கே நடந்துள்ளது. இதையே மற்ற அரசியல் கட்சியினரும், ``1978-ல் 38 எம்.எல்.ஏ-க்களுடன் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி சரத்பவார் ஜனசங்கம் உள்ளிட்ட ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து முதல்வரானார். அன்று சரத்பவார் செய்தது தவறில்லையென்றால் இன்று அஜித் பவார் செய்ததும் தவறில்லை. அஜித் பவாரை சரத்பவார் எப்படிக் குறைகூற முடியும்" எனப் பேசி வருகின்றனர்.

`அந்த 2 கடிதங்கள் எங்கே?’ - மகாராஷ்டிரா வழக்கில் நடந்த காரசார விவாதம்!
அடுத்த கட்டுரைக்கு