Published:Updated:

மாவோயிஸ்ட் பூமியில் 7 நாட்கள்!

மாவோயிஸ்ட் பூமியில் 7 நாட்கள்!

பிரீமியம் ஸ்டோரி
மாவோயிஸ்ட் பூமியில் 7 நாட்கள்!
##~##

'யார் அந்த நேத்ரா?' 

நேத்ராவின் முழுப் பெயர்... 'யுஏவி நேத்ரா'. ஆளில்லாமல் உளவு வேலை பார்க்கும் கருவி.

'நண்பன்’ படத்தில், நடிகர் விஜய் ஒரு சின்ன கருவியை ரிமோட் உதவியுடன் பறக்க விடுவார். அதன் வயிற்றுப் பகுதியில் இணைக்கப்பட்டு இருக்கும் ரகசிய கேமரா, நாலாபுறங்களிலும் சுழற்றிச் சுழற்றி காட்சிகளைப் பதிவு செய்யும். அந்தக் காட்சிகளை தரையில் உள்ள லேப்-டாப்பில் பார்த்து ரசிப்பார்கள். கிட்டத்தட்ட அதே மாதிரிதான் நேத்ராவும் செயல்படுகிறது.  

அடர்ந்த காடுகள், மலை முகடுகள், படை முகாம்களின் சுற்றுப்புறம்... எதுவுமே நேத்ராவின் கழுகுக் கண்களில் இருந்து தப்பவே முடியாது. சந்தேகப்படுகிற மாதிரி நடமாட்டம் இருந்தால், அவர்களை துல் லியமாக ஜூம் செய்து படமெடுக்கும். அப்படித்தான், நாமும் நேத்ராவிடம் சிக்கிக்கொண்டோம். பேஸ் ஸ்டேஷனில் இருந்து வந்த உத்தரவின் பேரில், நம் தலைக்கு மிகஅருகில் பறந்து குளோஸ் அப்-பில்  'கிளிக்' செய்துவிட்டு விண்ணில் மறைந்து விட்டது நேத்ரா.    

''ஏன் எங்களைப் படம் எடுத்தீர்கள்?'’ என்று, சி.ஆர்.பி.எஃப்-காரர்களிடம் கேட் டோம்!

'நீங்கள் யார்? இந்த இருட்டு நேரத்தில் எதற்காக வந்தீர்கள்?' என்று கேள்விகளால் துளைத்தெடுத்தனர். அவர்களிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு, மேலும் விவரங்களைக் கேட்டு தெரிந்து கொண்டோம்.

மாவோயிஸ்ட் பூமியில் 7 நாட்கள்!

நேத்ரா 200 மீ. உயரம் வரை பறக்கும். 1.5 கிலோ எடை கொண்டது. இரவு, பகல் எந்த நேரமானாலும் ரிமோட்டில் அதிகாரிகள் அனுப்பும் உத்தரவுகளுக்கு ஏற்ப படம் எடுத்து அதிகாரிகளின் கணினிக்கு மின்னல் வேகத்தில் அனுப்பும். சுமார் அரை மணி நேரம் வரை பேட்டரியில் இயங்கக்கூடியது. பேட்டரி பவர் குறைந்தால், கிளம்பிய இடத்துக்குத் தானாகவே வந்து சேரும். கீழ்நோக்கி தாழ்வாக இறங்கி வரும்போது, 'படபட’வென நேத்ரா ஒசை எழுப்புவதுதான் இதன் மைனஸ். எதிரிகள் உஷாராகிவிட வாய்ப்பு உண்டு என்கிறார்கள்  போலீஸார். ஆனால், உயரப் பறந்தால், இந்தப் பிரச்னைக்கே இடம் இல்லை!

சரி, மாவோயிஸ்ட் பிரச்னைக்கான அடிப்படைக் காரணம் என்ன? அரசையும் இந்த மண்ணின் பூர்வக் குடிகளையும் எது பிரிக்கிறது?

மாவோயிஸ்ட் பூமியில் 7 நாட்கள்!

இங்கே நிலத்துக்குக் கீழே பல கோடி டன் கனிம வளங்கள் புதைந்திருக்கின்றன. ஆனால், அவற்றுக்கு மேலே வாழும் மக்களோ பஞ்சத்தில் அல்லாடும் பரம ஏழைகளாக இருக்கிறார்கள். இந்தியாவில் கிடைக்கும் முக்கியக் கனிமப் பொருட்களில் 40 சதவிகிதம் ஜார்கண்ட்டில்தான் கிடைக்கின்றன. நிலக்கரி, மைக்கா,  தாமிரம் போன்ற பல கனிமங்களை நாட்டுக்குக் கொடுப்பதில் ஜார்கண்ட்டுக்குத்தான் முதல் இடம். இந்தக் கனிமங்களை அள்ளிச் செல்ல காத்திருக்கும் பன்னாட்டு பெருநிறுவனங்களும் அவர்களுக்கு சர்வ பலமாக இருக்கும் மத்திய, மாநில அரசுகளின் தாராளமயக் கொள்கைகளும்தான் அரசுக்கு எதிராக இந்த மக்களைத் திருப்பி இருக் கின்றன.

தலைநகர் ராஞ்சியில் இருந்து 108 கி.மீ. தொலை வில் உள்ள லத்தேகார் மாவட்டத்துக்கு காரில் கிளம்பினோம். கரடுமுரடான பாதை. மூன்று மணி நேரத்துக்கு மேல் பயணம். ஆனால், இவ்வளவு தூரம் பயணித்தபோது, இடையில் நம் கண்ணுக்குப் பட்டது, ஒரேயரு தனியார் பொறியியல் கல்லூரி மட்டும்தான்.

கார் டிரைவரிடம் விசாரித்தோம். ''இன்னும் 40 கி.மீ. தூரத்துக்கு பெரிய கல்லூரி எதுவுமே கிடையாது. பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி இருக்கு. ஆனால், நிறைய இடங்களில் வாத்தியார்களோ, மருத்துவர்களோ வருவதே கிடையாது. அதனால், மக்களும் அங்கே போவது குறைவு'' என்றார்.

மாவோயிஸ்ட் பூமியில் 7 நாட்கள்!

வெயில் 105 டிகிரியை எட்டிக்கொண்டு இருந்தது. சைக்கிள், டூ வீலர்களில் போகும் ஆண்கள் தங்கள் முகத்தையும் தலையையும் துண்டால் மறைத்துக் கட்டி இருந்தனர். ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்குச் செல்ல மக்கள் படும் பாடு... பரிதாபம். ஷேர் ஆட்டோக்கள்தான் அதிகம். அரசு பஸ்களைப் பார்ப்பதே அரிது. தென்பட்ட ஒன்றிரண்டு பஸ்களும் தனியார் பஸ்கள்தான். சில இடங்களில் மினி பஸ் களையும் அவற்றின் கூரை மீது உட்கார்ந்தபடி செல்லும் பயணிகளையும் காண முடிந்தது. நெடுஞ்சாலைகளில் ரோடு போடுகிறார்கள். அங்கே பயன் படுத்தப்படும் இயந்திரங்கள் படு லேட்டஸ்ட். ஆம், கான்ட்ராக்டர்கள் பணக்காரர்கள். ஆனால், வேகாத வெயிலில் வேலை பார்க்கும் கூலி ஆட்கள் நிலைதான் மிகவும் மோசம். சட்டை கூட அணியாமல் ரோடு வேலை செய்கின்றனர். மின்சாரம் இன்னும் பல இடங்களுக்கு எட்டாக்கனிதான்! அழுது வடியும் குறைந்த அழுத்த மின்சாரம் அல்லது முழு மின்வெட்டு என்பதுதான் நிலைமை. நாடு முழுவதுக்கும் அதிகபட்ச நிலக்கரி அனுப்பும் ஒரு மாநிலம், இந்த நிலையில் இருந்தால் மக்கள் வேறு எப்படித்தான் இருப்பார்கள்?

மாவோயிஸ்ட் பூமியில் 7 நாட்கள்!

செல்லும் வழியில் பல இடங்களில் ஊருக்குள் சுற்றினோம். நகரம், கிராமம் என்ற வேறுபாடு இல்லாமல், பெரும்பாலான வீடுகள் ஓட்டு வீடுக ளாகவே இருக்கின்றன. பெரும்பாலான மக்கள் வேலை செய்தபடியே இருக்கிறார்கள். பீடி சுற்றும் இலைகளை நிறுவனங்களிடம் வாங்கி வருகிறார்கள். சின்னக் குழந்தை முதல் வயதான பெண்கள் வரை எல்லோரும் காலி இடங்களில் இலைகளைப் பரப்புகிறார்கள். அது காய்ந்து சருகானதும், வீட்டு ஆண்கள் அவற்றை எடுத்துப்போய், இலைகளைக் கொடுத்த நிறுவனத்திடம் கொடுக்கிறார்கள். குடும்பத்தில் எல்லோரும் வேலை பார்த்தால் 150 ரூபாய் வரை கிடைக்குமாம். நெல், கோதுமை, உருளை, சுரைக்காய், பூசணி என்று விவசாயம் ஒரு பக்கம் நடந்தாலும், பலருக்கு மாடு மேய்ப்பதுதான் முக்கியத் தொழில். தவிர, வேறு ஒரு முக்கியத் தொழிலும் இருக்கிறது என்று காதைக் கடித்தார் எங்கள் காரோட்டி.

அது... போதைத் தொழில்!

மாவோயிஸ்ட் பூமியில் 7 நாட்கள்!

சாலையில் கூவிக்கூவி அழைத்த சிறுவர்களைப் பார்த்து வண்டியை நிறுத்தினோம். ''வாங்க சார்... 'மவ்வா’ ரெடியா இருக்கு'' என்று நம்மை அழைத்துச் சென்றான் ஒரு சிறுவன். மரத்தடியில் சின்னச் சின்ன குடிசைகள். குடிசைகளுக்குள் பானைகள், டம்ளர்கள், ஊறுகாய்.

''சாரே... இது பயங்கரமான போதைச் சமாச்சாரம். மரத்துல இருந்து விழுகிற பூ, பழங்களை எடுத்து வந்து ஊற வைத்துத் தயார் செய்கிறார்கள். ஒரு டம்ளர் 20 ரூபாய்தான். ஆனால், குடித்தால் சீமைச் சரக்குகளைவிட கிக் ஏறும். ஆனால், இதை விற்க தடை இருக்கிறது'' என்று முன்னுரை கொடுத்தார் நம்முடைய காரோட்டி. பழச்சாறு போல இருக்கிறது பானைக்குள் இருந்த சமாச்சாரம். இதே பகுதியில் கள்ளும் விற்கப்படுகிறது. மரத்தடியில் சின்ன கேஸ் சிலிண்டர் வைத்து ஆம்லேட் போட்டுத் தருகிறார்கள். டபுள் ஆம்லேட்டின் விலை 15 ரூபாய்.

மவ்வா விற்றுக்கொண்டிருந்த சிறுவனிடம் பேசினோம்.

''உன் பேரு என்னப்பா?''

''பாபுலால்.''

''நீ ஏன் பள்ளிக்கூடம் போகலை?''

''வீட்டுல படிப்பை நிறுத்திட்டாங்க. பள்ளிக் கூடத்துக்கு வாத்தியார் வர்றதில்லை. காட்டு வழிப் பாதையில போகணும். கண்ணிவெடி புதைச்சு வச்சிருக்காங்களாம். அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. லத்தேகர் டவுனுக்குப் போக காசு வேணும். எங்களுக்கு வேற வேலை தெரியாது. நாளைக்கு இங்கே நான் விற்க வர மாட்டேன். அப்பாவைக் கூட்டிக்கிட்டு ஆஸ்பத் திரிக்குப் போவேன்...'' என்று என்னென்னவோ பேசினான்.

சின்னப் பசங்களில் தொடங்கி பல் போன கிழங்கட்டைகள் வரை ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் மவ்வாவை வாங்கி மடக்மடக்கெனக் குடித்துவிட்டு தள்ளாடியபடி நடந்து போகிறார்கள். நம்மூரில் சர்பத் குடிப்பது போல, அங்கே ஹாடியா என்கிற பெயரில் வெள்ளை நிறக் கஞ்சி குடிக்கிறார்கள். இது கிட்டத்தட்ட நம்ம ஊர் சுண்டக்கஞ்சி ரகம்.  இரவு நெருங்கியது. மாவோயிஸ்ட் மற்றும் சி.ஆர்.பி.எஃப்- காரர்கள் நடமாட்டம் உள்ள ஒரு கிராமத்தை நோக்கிச் சென்றோம். இருட்டில் நம் கார் கண்ணாடியைத் துளைத்துக் கொண்டு வந்தது பளீச் வெளிச்சம்.

 யானையை எறும்புகள் விரட்டி அடித்தன!

மாவோயிஸ்ட் பூமியில் 7 நாட்கள்!

 ராஞ்சியில் உள்ள மனித உரிமை ஆர்வலர், ஆய்வாளர், எழுத்தாளர் ஸ்டான் சுவாமியின் பூர்வீகம் தமிழகம். கடந்த 22 வருடங்களாகப் பழங்குடி மக்கள் உரிமைகளுக்காகப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருபவர்.

''பொதுக்காரியம் என்ற பெயரில் 17 லட்சம் ஏக்கர் நிலத்தை ஆதிவாசிகளிடம் இருந்து அரசு பறித்து விட்டது. இதனால், 15 லட்சம் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். மிகச்சிறிய தொகையை நஷ்டஈடாகக் கொடுத்து வலுக்கட்டாயமாக மக்களை அவர்களுடைய இடங்களில் இருந்து விரட்டி விட்டனர். மறுவாழ்வு விஷயங்களை முறைப்படி செய்துதரவும் இல்லை. மக்களை விரட்டியும் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்தும் தொழிற்சாலைகள் முளைத்தன. அதனால் போராட்டம் நடந்தது. 2000-ம் ஆண்டு தனி மாநிலமாக ஜார்க்கண்ட் உதயமானது. 'இனி நம் மாநில ஆட்கள் ஆட்சி செய்ய வருவார்கள். புறக்கணிக்கப்பட்ட மக்களை முன்னுக்குக் கொண்டு வருவார்கள்' என்று நம்பினோம். ஆனால், நடந்ததோ அதற்கு நேர் எதிர்.

கனிம வளங்களைச் சுரண்டும் சுரங்கத் தொழிலில் உள்ள பெருநிறுவனங்களை அவர்கள் இங்கு கொண்டு வந்தனர். கடந்த 12 வருடங்களில், கடகடவென 104 புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டார்கள். மின்னல் வேகத்தில், ஆதிவாசிகளின் கனிம வளங்களை அள்ளிப்போகவே இந்த ஒப்பந் தங்கள் போடப்பட்டன. இது, மக்களுக்கு ஆத் திரத்தை ஏற்படுத்தியது. 'எல்லாவற்றையும் இழந்து விட்டோம். இனி இழப்பதற்கு ஏதுமில்லை. இருப்பதையாவது காப்பாற்ற வேண்டும்' என்று, நிலம் தர மறுக்கும் போராட்டங்களை 2005-ல் தொடங்கினர்.

பிரபல ஸ்டீல் தொழில் அதிபர் மிட்டல் இங்கே 12 ஆயிரம் ஏக்கர் நிலம் கேட்டார். மக்கள் ஒன்று சேர்ந்து விரட்டி அடித்தனர். 'யானையை எறும்புகள் விரட்டி அடித்தன' என்று பத்திரிகையாளர்கள் வர்ணித்தார்கள். இந்த நேரத்தில்தான், அரசாங்கத்துக்கு கௌரவப் பிரச்னை தலைதூக்கியது. பரம ஏழைகளுக்கு எங்கிருந்து இவ்வளவு வீரம் வந்தது என்று உற்றுக் கவனித்தார்கள். இவர்களை ஒழிக்க மாவோயிஸ்ட்டுகள் என்ற முத்திரை குத்தினர். கடந்த 10 ஆண்டுகளில், ஜார்கண்ட் மாநில ஜெயில்களில் ஆதிவாசிகள், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் சுமார் 6,000 பேர் வாடுகின்றனர். என்ன நடந்தாலும் மக்கள் போராட்டம் இனி அடங்கவே அடங்காது'' என்றார்.

அதிர்ச்சி தொடரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு