Published:Updated:

மிஸ்டர் கழுகு: ஆறு மணி நேரம் அழுத சசிகலா!

மிஸ்டர் கழுகு: ஆறு மணி நேரம் அழுத சசிகலா!

பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: ஆறு மணி நேரம் அழுத சசிகலா!
##~##

''அனல் வெயிலும் அடிக்கிறது. சிலுசிலு மழையும் பொழிகிறது. இயற்கையைத்தான் நம்பவே முடியவில்லை'' -  நம் முன் ஆஜர் ஆனார் கழுகார்! 

அர்த்தம் பொதிந்த வார்த்தைகளுக்கு விளக்கம் சொல்வதன் மூலமாகவே தனது செய்திகளை ஆரம்பித்தார்...

''தஞ்சையில் நடராஜன் குடும்பத்தினர் மகிழ்ச்சி மழையில் திளைத்துக்​கொண்டிருக்க... இங்கே போயஸ் கார்டனுக்குள் அழுதுகொண்டு இருந்தார் சசிகலா. அதுவும் திருமணம் நடந்த காலை நேரம் முழுவதும் சுமார் ஆறு மணி நேரம் கலங்கியபடி அமர்ந்து இருந்ததாகச் சொல்கிறார்கள் தோட்டத்தின் உள் விவகாரங்களை அறிந்தவர்கள்!''

''ஜெயலலிதா 'உன் இஷ்டம்’ என்று சொன்னதாகத்தானே நீர் சொல்லி இருந்தீர்?''

''கடைசி நேரத்தில் கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்க அக்கா அனுமதி வழங்குவார் என்று உறுதியாக நம்பினாராம் சசிகலா. கடந்த புதன்கிழமை அன்று திருமணம். செவ்வாய்க்கிழமை மாலையில் இறுக்கமான முகத்தில் இருந்த ஜெயலலிதாவிடம் இருந்து மனப்பூர்வமான சம்மதம் கிடைக்காது என்பதை அறிந்துகொண்ட சசிகலா சோர்ந்து போனாராம். புதனன்று காலையில் மனம் உடைந்தே போனாராம். கண்களில் நீர் மூட்டிக்கொள்ள தனிமையில் அந்த நேரங்களைக் கழித்தாராம் சசிகலா!''

மிஸ்டர் கழுகு: ஆறு மணி நேரம் அழுத சசிகலா!

''இங்கிருந்தே வாழ்த்தினாராக்கும்?''

''அது தெரியவில்லை. ஆனால், சசிகலா வருவார் என்று நடராஜன் குடும்பத்தினர் எவருமே நம்பவும் இல்லை. 'அவங்களை மறந்துட்டு வேலையைப் பாருங்க’ என்று நடராஜனும் சொல்லி விட்டாராம். 'நமக்கு இனிமே நம்ம குடும்பம்தான் முக்கியம். நம்முடைய குடும்பத்தை சந்தோஷமா வெச்சுப்போம்’ என்று சொல்லிக்கொண்டார்களாம்.''

''தஞ்சைக் காட்சிகளுக்கு வாரும்!''

''நடராஜனைப் போலவே அவரது தம்பி ராமச்சந்திரனும் கட்சியைவிட்டு நீக்கப்பட்டவர்தான். அவரது மகன் ராஜூவுக்கும் பட்டுகோட்டையைச் சேர்ந்த பெண் மகாலெட்சுமிக்கும்தான் திருமணம். தஞ்சாவூர் ராஜராஜன் மணிமண்டபம் எதிரே புதிதாகக் கட்டப்பட்டு வரும் தமிழரசி திருமண மண்டபத்தில் இது நடந்தது. இந்த மண்டபமும் இவர்களுடையதுதான். வழக்கமாக நடராஜன்விழாக்​களில் இருக்கும் மதுரை ஆதீனம் இந்த முறை மிஸ்ஸிங். அதற்குப் பதிலாக திண்டுக்​கல் அய்யப்ப சுவாமிகள் கலந்து கொண்டார். பழ.நெடு​மாறன் வழக்கமாக இருப்பார். ஆனால், இம்முறை முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசருக்கு அதிக அளவில் முக்கியத்துவம் தரப்பட்டது. அ.தி.மு.க.வைச் சேர்ந்த உறவினர்கள் கூட மண்​டபம் பக்கம் எட்டிபார்க்க​வில்லை.''

மிஸ்டர் கழுகு: ஆறு மணி நேரம் அழுத சசிகலா!

''சசிகலா குடும்பத்தில் வேறு யாரெல்லாம் வந்தார்கள்?''

''ஜாமீனில் வந்துள்ள திவாகரன், ராவணன், தினகரன், சுதாகரன் மற்றும்  மகாதேவன் ஆகியோர் இந்த திருமண விழாவில் கலந்து​கொள்ளாதது உறவினர்கள் இடையே ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அளித்தது. டாக்டர் வெங்கடேஷ் மட்டும் கலந்து​ கொண்டார். வழக்கு​கள் போடப்பட்ட அனைவரும் அமைதியாக இருக்கையில் நடராஜன் மட்டும் 'தன் மேல் போடப்​பட்ட வழக்கு​களுக்கு ஆதாரம் இருக்​கிறதா? என்னைக் கொல்ல சதி நடக்கிறது’ என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். 'இப்படி வாயைக் கொடுக்கத் தைரியம் இல்லாதவர்கள் வரவில்லை’ என்று மண்டபத்துக்குள் பேச்சு வந்தது.''

''உளவுத்துறை ஆட்கள் நிச்சயம் வந்திருப்பார்களே?''

''அவர்கள் இல்லாமல் நடராஜன் வீட்டில் விசேஷம் நடக்குமா? 'நடராஜனுக்கு பாதுகாப்பே உளவுத் துறைதானே’ என்று சொல்​பவர்களும் உண்டு. திருமண மண்டபம் உள்ளேயும் வெளி​யே​யும் மஃப்டி உடையில் போலீஸார் நின்றனர். வந்து செல்லும் அ.தி.மு.க பிர​முகர்கள், அதிகாரிகள் யார் என அவ்வப்போது தகவல் கொடுத்துக்கொண்டே  இருந்​தனர். சமீபத்தில்கூட சென்னை எழும்பூர் கோர்ட்டில் நடராஜன் ஒரு மனு தாக்கல் செய்தார்!''

''பயத்துடன், 'என்னை என்கவுன்டர் செய்யச் சதி’ என்றும் சொன்னாரே அவர்?''

''திருச்சி சிறையில் இருந்து வெளியே வந்த நடராஜன் அங்கிருந்து பெங்களூரு சென்றார். தனியார் மருத்துவமனையில் தங்கி மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டார். பிறகு, சென்னை வந்தார். வழக்கமாக அதிகாலை 5 மணிக்கு தன்னுடைய வீடு இருக்கும் பெசன்ட் நகர் வளாகத்தில் வாக்கிங் சென்றார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அவரைப் பின்தொடர்ந்து வந்துள்ளார்கள். 'வழக்கமான உளவுத்துறையாக இருக்கும்’ என்று கண்டுகொள்ளாமல் நடராஜனும் நடந்து போனாராம். மறுநாளும் இதுமாதிரி அதிகாலையில் பின்தொடர்ந்தவர்களின் செயல்பாடுகள் சந்தேகத்துக்கு உரியதாக இருந்ததாம். ரகசியமாய் ஏதோ 'பொருள்’ வைத்திருப்பதுபோல நடந்து கொண்டார்களாம். இதைப் பார்த்துப் பயந்துபோன நடராஜன், 'நம்மை என்கவுன்டர் செய்துவிட்டுப் பழியை யார் மீதோ போடப்போகிறார்கள்’ என்று சொல்ல ஆரம்பித்தாராம். எனவேதான் இதனை பப்ளிக் மேட்டராக மாற்றி விட்டால் 'எதிரிகளின்’ செயல்பாடு கன்ட்ரோல் ஆகும் என்று நினைத்துத்தான் அப்படி ஒரு மனுவைத் தாக்கல் செய்தாராம். ஆனாலும், அவர் பயத்தில் இருந்து இன்னும் மீளவில்லையாம்!'' என்ற கழுகார், சிறகுகளுக்குள் இருந்து பதநீர் பாக்கெட் எடுத்து உறிஞ்சியபடி ஆரம்பித்தார்.

''சட்ட விரோதச் செயல்பாட்டாளர்களை ஒடுக்கும் சாட்டையாய் இருந்த மதுரை கலெக்டர் சகாயத்தை, கோ-ஆஃப்டெக்ஸ் நிர்வாக இயக்குநராக பணி மாற்றம் செய்து இருக்கிறது அ.தி.மு.க. அரசு!'' என்று சீரியஸாக  ஆரம்பித்தார் கழுகார்!

கலெக்டர் சகாயம், கமிஷனர் கண்ணப்பன், எஸ்.பி. ஆஸ்ரா கர்க் ஆகிய மூவரும் அழகிரி வட்டாரத்துக்கு சிம்ம சொப்பனமாகவும் மதுரை மக்கள் மனம் குளிரவும் நடந்து கொள்ளும் அதிகாரிகளாக இருந்தனர். கண்ணப்பன், கேட்டு வாங்கிக்கொண்டு சென்னை வந்து விட்டார். விருப்பமே இல்லாமல் கனத்த இதயத்தோடு மதுரையில் இருந்து விடைபெறுகிறார் சகாயம்.''

''நல்லாத்தானே போயிட்டு இருந்தது?''

மிஸ்டர் கழுகு: ஆறு மணி நேரம் அழுத சசிகலா!

''சகாயத்தின் திடீர் மாறுதலுக்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் கிரானைட் குவாரிகளை இறுக்கிப் பிடித்ததுதான் முக்கியக் காரணம் என்கிறார்கள். மேலூர் பகுதியில் உள்ள சட்ட விரோதக் குவாரிகள் குறித்து சகாயத்துக்குப் புகார் அனுப்பியவர்கள், கண்மாய், குளங்களையும் கிரானைட் முதலாளிகள் ஆக்கிரமித்துப் போட்டிருப்பதாக ஆதாரங்களைக் காட்டினார்கள். அதில் பிரபல மூன்றெழுத்து கிரானைட் கம்பெனி மீதான புகார்கள்தான் அதிகம். 'சசி அண்ட் கோவிடம் நல்ல டீலிங் வைத்திருக்கும் அவர்களைத் தொட்டால் சிக்கல் வரும்’ என்று, மூன்று மாதங்களுக்கு முன்பே சிலர் அட்வைஸ் செய்தார்கள். ஆனாலும், கிரானைட் குவாரிகளைக் கிண்டிக் கிழங்கெடுக்க ஆரம்பித்தவர், தன்னிடம் புகார் கொடுத்தவர்களிடம், 'என்னை ரொம்ப நாளைக்கு இங்கே இருக்கவிட மாட்டாங்கப்பா’ என்று சொல்லிவிட்டுதான் மளமளவெனக் காரியத்தில் இறங்கினார். கடந்த 15 நாட்களுக்கு முன் அந்த மூன்றெழுத்து கிரானைட் கம்பெனியின் குவாரிக்கு விசிட் அடித்தவர், 'கண்மாய், குளங்களைத் தூர்த்து விவசாயிகளோட வாழ்வாதாரத்தையே பாழாக்கீட்டீங்களே... இது சுதந்திர நாடுதானா?’ என அங்கே இருந்தவர்களை எகிறினார். அதே வேகத்துடன், அந்த மூன்றெழுத்து குவாரி நிர்வாகம், சட்ட விரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்து அரசுக்கு வரவேண்டிய பணத்தை எப்படி எல்லாம் சுருட்டி இருக்கிறது என்பதைப் புள்ளி விவரங்களுடன் அறிக்கை தயாரித்தார். இதுதான் திடீர் மாறுதலுக்கு காரணம் என்கிறார்கள்.''

''அப்படியா?''

''கடந்த 24-ம் தேதி சென்னைக்கு வரவழைத்துப் பேசினாராம் தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி. 'நீங்கள்தான் ஒன் மேன் ஆர்மியாச்சே சகாயம். எங்கே இருந்தாலும் தனி ஆளாப் போராடி சைன் பண்ணுவீங்க... ஆல் தி பெஸ்ட்’ என்று சொல்லி வழியனுப்பி வைத்தாராம். சகாயம் அங்கே இருந்து சென்னை ஏர்போர்ட்டுக்கு வருவதற்குள் டிரான்ஸ்ஃபர் உத்தரவு வெளிவந்து விட்டது.''

''இதனால் அவர் பார்த்த பல்வேறு சீர்திருத்த வேலைகள் அப்படியே முடங்கி விடுமா?''

''ஜெயலலிதா என்ன செய்கிறார் என்று பார்ப்​போம்!'' என்ற கழுகார்,

''திடீரென, கருணாநிதியைச் சந்தித்தார் அழகிரி. மதுரைக்கு ஸ்டாலின் வந்ததால் ஏற்பட்ட சச்சரவுக்குப் பிறகு, இப்போதுதான் இருவரும் மனம்விட்டுப் பேசினார்களாம். 'கட்சி இப்போது இருக்கிற நிலைமையில் மதுரையில் எனது ஆட்கள் மீது நடவடிக்கை எடுப்பது தவறான முடிவு’ என்று கறாராகச் சொன்னாராம் அழகிரி. 'எனக்கும் அதுல இஷ்டம் இல்லப்பா’ என்ற தொனியில் கருணாநிதியும் சொன்னாராம். அழகிரியிடம் பேசிய பாதிப்பில்தான், அன்றைய 'கலைஞர் கடிதம்’ கருணாநிதி எழுதினார். 'குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை’ என்ற அண்ணாவின் சொல்லை மேற்கோள் காட்டி திடீரென்று கருணாநிதி கடிதம் எழுத வேண்டிய அவசியத்தை அழகிரிதான் ஏற்படுத்தி விட்டார் என்கிறார்கள்!''

''அப்படியா?''

''அந்தக் கடிதத்தைப் படித்தாலே அழகிரியின் நிலை 'ஹை ஜம்ப்’ ஆனது தெரியும். 'புகாருக்கு உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறபோது, அந்தப் புகார்களைக் கொடுத்தவர்கள் மீதும் புகார் இருப்பதை நாங்கள் அறியாமல் இல்லை’ என்று கருணாநிதி எழுதுகிறார். 'அண்ணனை நம்பினோர் கைவிடப்படார்’ என்று மதுரை ஆட்கள் சொல்ல ஆரம்பித்து உள்ளார்கள்!''

''இதற்கு ஸ்டாலின் ரியாக்ஷன் என்ன?''

''பொறுத்திருந்து தானே பார்க்கவேண்டும்?'' என்றபடி சிறகை விரித்தார் கழுகார்.

படங்கள்: சு.குமரேசன், கே.குணசீலன், என்.ஜி.மணிகண்டன்

 தலைவர் ஆக கலவரம்!

மிஸ்டர் கழுகு: ஆறு மணி நேரம் அழுத சசிகலா!

கடந்த 23-ம் தேதி, பெரும்பிடுகு முத்தரையரின் 1,337-ம் பிறந்த நாள். இதைத் தொடர்ந்து தான் இந்தக் கலவரம். ''திருச்சியில் உள்ள இந்த சமூக சாதிச் சங்கத் தலைவர் ஒருவருக்கு, அரசியல் கட்சி ஆரம்பித்து முக்கியக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சட்டமன்றம் செல்ல வேண்டும் என்ற ஆசை சமீப காலமாகத் துளிர்த்துள்ளது. தமிழகத்தில் முன்பு, சாதிச் சங்கங்களாக இருந்து கலவரங்கள் மூலம் பிரபலம் அடைந்து, பிறகு அரசியல் கட்சிகளாக வடதமிழகத்தில் உருவெடுத்த இரண்டு கட்சிகளை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு செயல்பட ஆரம்பித்திருக்கிறார் அந்த சாதிச்சங்கத் தலைவர். அதன் ஒரு கட்டம்தான் இப்போதைய கலவரம்'' என்கிறார்கள் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள்!

மிஸ்டர் கழுகு: ஆறு மணி நேரம் அழுத சசிகலா!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு