சமீபநாள்களில், சாதாரணமாகக் கடந்து சென்றிருக்கவேண்டிய விஷயங்களில் தலையிட்டு பின்பு சர்ச்சையானதும் அதிலிருந்து பின்வாங்கிய சம்பவங்கள் தமிழக அரசின் தடுமாற்றத்தை காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் விவாதமாகியுள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSதமிழக அரசின் ஓராண்டு ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களைக் கூட்டணிக் கட்சியினர் ஆதரித்தும், மின்வெட்டு, லாக்கப் டெத் போன்ற சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் விமர்சித்தும் வரும் நிலையில், அதையும் கடந்து ஓராண்டு வெற்றியைக் கொண்டாட நினைத்த தி.மு.க-வினரின் உற்சாகத்தைக் குறைக்கும் வகையில் தமிழக அரசின் உத்தரவுகள் அமைந்துள்ளன.

தருமபுர ஆதீனத்தின் பட்டினப்பிரவேச நிகழ்வில் ஆதீனத்தைப் பல்லக்கில் தூக்கிச் செல்வதை அனுமதிக்கக் கூடாது, அது மனித உரிமையை மீறும் செயல், மீறி அனுமதி அளித்தால் போராட்டம் நடத்துவோம் என்று திராவிடர் கழகத்தினர் மயிலாடுதுறை கலெக்டரிடம் மனு அளிக்க, அந்த மனுவின் அடிப்படையில் பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்து நோட்டீஸ் அனுப்பியது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்தத் தடை உத்தரவால் அதிர்ச்சியடைந்த பல்வேறு ஆதீன மடங்களின் மடாதிபதிகள், இந்து அமைப்புகள், தருமபுர ஆதீன மடத்தைச் சுற்றியுள்ள கிராம மக்கள், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, 'நானே முன்னின்று தருமபுர ஆதீனத்தைப் பல்லக்கில் தூக்குவேன்' என்றார்.
"பாரம்பர்யமாக நடந்துவரும் பட்டினப்பிரவேச நிகழ்ச்சியை அரசு தடுக்கக் கூடாது. தடையை நீக்கவில்லையென்றால் உயிரைக் கொடுத்தாவது பட்டினப்பிரவேச நிகழ்ச்சியை நடத்துவோம்" என்று மதுரை ஆதீனம் அறிவித்தார். தமிழக அரசுக்கு எதிராக மன்னார்குடி ஜீயர் பேசியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்து மத நம்பிக்கையில் மட்டும் தி.மு.க அரசு தலையிடுவதாக பா.ஜ.க., இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் அரசுக்கு எதிராகத் தொடர்ந்து பேசிவந்தனர்.

இந்த நிலையில் நேற்று மயிலம் பொம்மாபுரம் ஆதீனம், கோவை பேரூர் ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், தருமபுரம் ஆதீனம் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார்கள். அதைத் தொடர்ந்து பட்டினப்பிரவேச நிகழ்ச்சி வழக்கம்போல் சிறப்பாக நடைபெறும் என்று ஆதீனங்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு விதித்த தடையைத் திரும்பப் பெற்றுக்கொண்டதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவைக் கேள்விப்பட்டு ஆதீன பக்தர்களும் பா.ஜ.க உள்ளிட்ட இந்து அமைப்பினரும் கொண்டாடிவருகிறார்கள்.

இதைப்போலத்தான் சில நாள்களுக்கு முன்பு மதுரை மருத்துவக் கல்லூரி புதுமுக மாணவர்கள் சம்ஸ்கிருதத்தில் உறுதி மொழி ஏற்றதாக எழுந்த புகாரில் எந்த விசாரணையும் நடத்தாமல் டீன் ரத்தினவேல் மீது ஏப்ரல் 1-ம் தேதி நடவடிக்கை எடுத்தது தமிழக அரசு.
"தேசிய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்த உறுதிமொழியைத்தான் வாசித்தார்கள். அப்படியே அது தவறு என்று கருதினாலும் அதில் டீனின் பங்களிப்பு எதுவும் இல்லை, மிகவும் சிறப்பான மருத்துவ அதிகாரி" என்று அரசு மருத்துவர் சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள், மருத்துவ மாணவர்கள் கூறினார்கள். இங்கு மட்டுமல்ல... ஏற்கெனவே தமிழகத்திலுள்ள பல மருத்துவக் கல்லூரிகளில் சம்ஸ்கிருத உறுதி மொழி ஆங்கிலத்தில் வாசிக்கப்பட்ட தகவலும் வெளியில் வந்தது.
அரசின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சியினர், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் எதிர்த்தனர்.
இதைத் தொடர்ந்து ஓரிரு நாள்கள் கழித்து தமிழக அரசு, டீன் ரத்தினவேலுக்கு அனைத்துத் தரப்பிலும் ஆதரவு இருப்பதும், அவர்மீது எந்தக் குற்றச்சாட்டையும் வைக்க முடியாத நிலையில், மீண்டும் அவரை மதுரை மருத்துவக் கல்லூரி டீனாக நியமித்து உத்தரவிட்டது.
கடந்த 10 நாள்களில் தமிழகத்தைப் பரபரப்பாக்கிய இந்த இரண்டு சம்பவங்களும் தமிழக அரசின் அவசரத்தைக் காட்டுவதாகவும், மக்கள் மத்தியில் கவனம் பெறாத, நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் தலையிட்டு அது சர்ச்சையானதும் பின்வாங்குவதாக விமர்சிக்கப்படுகிறது.