Published:Updated:

2,000 ரூபாய் விவகாரம்: இது பாஜக அரசின் தோல்வியா? - குற்றச்சாட்டும் விளக்கமும்!

“கறுப்புப் பணத்தை பதுக்குகிறார்கள் என்று ரூ.2,000 நோட்டை அறிமுகம் செய்தது இமாலயப் பிழை. பிழையை ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு திருத்திக்கொள்கிறார்கள் என்பது மகிழ்ச்சியளிக்கிறது."- ப.சிதம்பரம்

Published:Updated:

2,000 ரூபாய் விவகாரம்: இது பாஜக அரசின் தோல்வியா? - குற்றச்சாட்டும் விளக்கமும்!

“கறுப்புப் பணத்தை பதுக்குகிறார்கள் என்று ரூ.2,000 நோட்டை அறிமுகம் செய்தது இமாலயப் பிழை. பிழையை ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு திருத்திக்கொள்கிறார்கள் என்பது மகிழ்ச்சியளிக்கிறது."- ப.சிதம்பரம்

2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், அவற்றை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. இதற்கான கடைசி நாள் செப்டம்பர் 30 என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. `ரூ.2,000 நோட்டுகளை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இனி விநியோகிக்கக் கூடாது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது. பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை இந்த மாதம் 23-ம் தேதி முதல் வங்கிகளில் கொடுத்து கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம் அல்லது வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம். ஒரேநேரத்தில் அதிகபட்சம் 20,000 ரூபாய் வரை வங்கிகளில் இவ்வாறு வரவுவைக்க முடியும் அல்லது மாற்ற முடியும்’ என்று ரிசர்வ் வங்கி தனது அறிவிப்பில் தெரிவித்திருக்கிறது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை
பண மதிப்பிழப்பு நடவடிக்கை
vikatan

இந்தியா முழுவதும் இதற்கு முன்பு அனைத்து ரூ.500 மற்றும் ரூ.1,000 ரூபாய் நோட்டுகளின் சட்டபூர்வ வழங்கல் நிலையை ரிசர்வ் வங்கி கடந்த 2016-ம் ஆண்டில் திரும்பப் பெற்றது. இதன் பிறகு இந்திய பொருளாதாரத்தின் நாணய தேவையை விரைவாகப் பூர்த்தி செய்வதற்காக 1934-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி சட்டத்தின் 24(1) பிரிவின்கீழ் 2016-ம் ஆண்டு, நவம்பர் மாதம், ரூ.2,000 மதிப்புள்ள ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நடைமுறையை கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் ஒரு செய்திக்குறிப்பு மூலம் விவரித்திருக்கும் ரிசர்வ் வங்கி, `மற்ற ரூபாய் மதிப்பு நோட்டுகள் போதுமான அளவில் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதால், ரூ.2,000 நோட்டுகளை அறிமுகப்படுத்தும் நோக்கம் நிறைவேறியது. முன்னதாக, 2018-19-ல் ரூபாய் இரண்டாயிரம் அச்சடிப்பது நிறுத்தப்பட்டிருக்கிறது’ எனத் தெரிவித்திருக்கிறது.

மேலும், அந்தச் செய்திக்குறிப்பில் சுமார் 89% 2,000 ரூபாய் நோட்டுகள் மார்ச் 2017-க்கு முன்பு வெளியிடப்பட்டன. அவற்றின் ஆயுட்காலம் நான்கைந்து ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டது. புழக்கத்திலுள்ள இந்த ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு, மார்ச் 31, 2018 அன்று உச்சத்தில் இருந்த ரூ.6.73 லட்சம் கோடியிலிருந்து (புழக்கத்திலுள்ள நோட்டுகளில் 37.3%) ரூ.3.62 லட்சம் கோடியாகக் குறைந்தது. சதவிகித அளவில் இது 10.8 மட்டுமே.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

இந்த நிலையில், மார்ச் 31, 2023 அன்று புழக்கத்திலுள்ள 2,000 ரூபாய் நோட்டுகள், பரிவர்த்தனைகளுக்குப் பொதுவாகப் பயன்படுத்துவதில்லை என்பது கவனிக்கப்பட்டது. அந்த வகையில், பொதுமக்களின் கரன்சி தேவையைப் பூர்த்தி செய்ய மற்ற வகை ரூபாய் நோட்டுகளின் இருப்பே போதுமானதாக இருக்கிறது என்பது தெரியவந்தது. மேற்கூறியவற்றைக் கருத்தில்கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கியின் `கிளீன் நோட் பாலிசியின்படி’, ரூ.2,000 மதிப்புடைய நோட்டுகளைப் புழக்கத்திலிருந்து திரும்பப் பெற முடிவுசெய்யப்பட்டிருக்கிறது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.

இவ்வாறாக ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கும் அறிவிப்புக்கு பல்வேறு தரப்பிடமிருந்து எதிர்ப்பு, ஆதரவு என கருத்துகள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றன. அதன்படி முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், “கறுப்புப் பணத்தை பதுக்குகிறார்கள் என்று ரூ.2,000 நோட்டை அறிமுகம் செய்தது இமாலயப் பிழை. பிழையை ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு திருத்திக்கொள்கிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

பணம்
பணம்

சந்தை கொடுக்கல், வாங்கல் உள்ளிட்ட நிகழ்வுகளில் ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் கிடையாது. ரூ.2,000 நோட்டுகள் அனைத்தும் மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்கள், மொத்த வியாபாரிகள் கைகளில் மட்டுமே இருக்கின்றன” எனக் குற்றம்சாட்டியவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ரூ.2000 நோட்டுகளை மாற்ற எந்த அடையாளமும், படிவங்களும், சான்றுகளும் தேவையில்லை என்று வங்கிகள் தெளிவுபடுத்தியிருக்கின்றன. கறுப்புப் பணத்தை வெளிக்கொணரவே ரூ.2,000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுகின்றன என்ற பாஜக-வின் வாதம் முறியடிக்கப்பட்டது.

சாதாரண மக்களிடம் ரூ.2,000 நோட்டுகள் இல்லை. 2016-ல் அறிமுகப்படுத்தப்பட்டவுடனேயே அவர்கள் அதைத் தவிர்த்துவிட்டனர், தினசரி சில்லறைப் பரிமாற்றத்துக்கு அவை பயனற்றவை. அப்படியென்றால், 72,000 நோட்டுகளை பயன்படுத்தியது யார் என்பது உங்களுக்கே தெரியும். கறுப்புப் பணத்தைப் பதுக்குவோருக்கு ரூ.2,000 நோட்டு எளிதாக உதவியது. ரூ.2,000 நோட்டுகளை வைத்திருப்பவர்கள் தங்கள் நோட்டுகளை மாற்ற சிவப்புக் கம்பள வரவேற்பு அளிப்பதுபோல இருக்கிறது. கறுப்புப் பணத்தை வேரறுக்கும் அரசாங்கத்தின் நோக்கம் இவ்வளவுதான். 2016-ல் ரூ.2,000 நோட்டு அறிமுகம் ஒரு முட்டாள்தனமான நடவடிக்கை. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நடவடிக்கை வாபஸ் பெறப்படுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று காட்டமான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்
ட்விட்டர்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலோ, “முதலில் ரூ.2,000 ரூபாய் நோட்டுகளை கொண்டு வந்தால் ஊழல் ஒழியும் என்றார்கள். இப்போது 2,000 நோட்டுகளைத் தடை செய்தால் ஊழல் ஒழிந்துவிடும் என்கிறார்கள். அதனால்தான் நாங்கள் சொல்கிறோம், பிரதமர் படித்தவராக இருக்க வேண்டும். படிக்காத பிரதமரிடம் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அவருக்கு எதுவும் புரியாது. பொதுமக்கள்தான் அவதிப்பட வேண்டும்” என்று தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

 ஸ்டாலின்
ஸ்டாலின்
ம.அரவிந்த்

கர்நாடகப் படுதோல்வியை மறைக்கவே மத்திய பாஜக அரசு ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கையை எடுத்திருப்பதாக திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார்.

பா.ஜ.க தரப்பில் அந்தக் கட்சியின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, “பண மதிப்பிழப்பு வந்தபோது ரூ.1,000 நோட்டை வெளியே தள்ளினார்கள். ரூ.500 நோட்டை மாற்றினார்கள். மக்களிடம் இருக்கும் பண மதிப்புக்கு தகுந்தாற்போல் அதே மாதிரி கரன்சி கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ரூ 2,000 நோட்டு அச்சடிக்கப்பட்டது. பொதுவாக ரூபாய் நோட்டுகளின் ஆயுட்காலம் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள். இந்த ரூ.2,000 நோட்டைப் பதுக்கிவைத்திருக்கும் கறுப்புப் பண முதலைகள்தான் அச்சப்பட வேண்டும். நாம் அதற்கு அச்சப்படத் தேவையில்லை. கடந்த நான்கைந்து ஆண்டுகளாக பொருள்கள் வாங்குவதற்கு ஜிபே, போன்பே என்று மக்கள் மாறியதால் ரூ.2,000 நோட்டுக்கான தேவையின் அவசியம் இல்லவே இல்லை என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். யார் அதிகமாக ரூ.2,000 நோட்டைப் பதுக்கிவைத்திருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் பிரச்சனை” என்கிறார்.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

இவ்வாறாக வாத, பிரதிவாதங்கள் முன்வைத்துவரும் நிலையில், ‘இதற்கான தீர்ப்பு வரும் தேர்தல்களில்தான் பிரதபலிக்கும்’ என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். மேலும், ``இந்தியாவில் பண மதிப்பிழப்பு வந்தபோது கடுமையாக மக்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும், அதன் எதிர்வினை தேர்தல் காலங்களில் தெரியவில்லை. ஒருவேளை ரூ.2,000 நோட்டுகள் மூலம் பெரும் பாதிப்பை மக்கள் சந்திக்க வாய்ப்பிருக்குமேயானால், அது வரும் காலங்களில் பிரதிபலிக்கும். ஆனாலும் அதற்கான வாய்ப்புகள் குறைவுதான்” என்கிறார்கள்.