Published:Updated:

மாவோயிஸ்ட் பூமியில் 7 நாட்கள்!

மாவோயிஸ்ட் பூமியில் 7 நாட்கள்!

மாவோயிஸ்ட் பூமியில் 7 நாட்கள்!

மாவோயிஸ்ட் பூமியில் 7 நாட்கள்!

Published:Updated:
மாவோயிஸ்ட் பூமியில் 7 நாட்கள்!
##~##

ந்த வெளிச்சம் சி.ஆர்.பி.எஃப்-காரர்களின் சர்ச் லைட்டில் இருந்து வந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ''யாரு உள்ளே?'' அதட்டல் குரல்.  

''நாங்க பத்திரிகைக்காரங்க. சர்ஜூ கிராமத் துக்குப் போறோம்'' என்ற நம்மை ஏற இறங்கப் பார்த்தார்கள். ''ஏதோ தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்பது மாதிரி சொல்கிறீர்கள். இது மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் உள்ள காட்டு வழிப் பாதை. இந்தப் பகுதியில் எங்கே எல்லாம் கண்ணிவெடி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அதனால் உடனே திரும்பிப் போய்விடுங்கள்'' என்று எச்சரித்துவிட்டு, வயர்லெஸ் மைக்கில் அவர்களின் கன்ட்ரோல் ரூமுக்குத் தகவல் கொடுத்தனர். இந்த நேரத்தில், நாம் சர்ஜூ கிராமத்தில் இருந்த நமது சோர்ஸுக்குத் தொடர்புகொண்டு விஷயத்தைச் சொன்னோம்.

''அட, நீங்க வேற! கிராமமே உங்களுக்காக சந்தைப் பகுதியில் காத்திருக்கோம். அதெல்லாம் பயப்

மாவோயிஸ்ட் பூமியில் 7 நாட்கள்!

படாதீங்க. சாதாரண வாகனத்தில் வந்தால், மாவோயிஸ்ட்கள் எதுவும் செய்ய மாட்டார்கள்'' என்று தைரியம் சொன்னார்கள்.

அந்தத் தைரியத்தில், 'எங்கள் சொந்த ரிஸ்க்கில் செல்கிறோம்' என்று சொன்னோம். யாரையோ தொடர்புகொண்டு பேசினார்கள். ''சரி, பார்த்துச் செல்லுங்கள்...'' என்றார்கள். இருளைக் கிழித்துக் கொண்டு நம்முடைய கார் புறப்பட்டது.

சர்ஜூ... மலையும் வனமும் சூழ்ந்த கிராமம். மாவட்டத் தலைநகர் லத்தேகரில் இருந்து சுமார் 15 கி.மீ. கொஞ்சதூரம்தான் ரோடு. அதைத்தாண்டி சர்ஜூ போய்ச்சேரும் வரையில், கரடுமுரடான மண் சாலை. சுற்றிலும் உள்ள மலை முகடுகளிலும் அடர்ந்த காடுகளிலும் மாவோயிஸ்ட்களின் ராணுவப் பிரிவைச் சேர்ந்தவர்கள் பதுங்கி இருப்பார்களாம். கிராமப்புறச் சாலை ஓரங்களில் சி.ஆர்.பி.எஃப்-காரர்கள் முகாம் அமைத்து இருக் கிறார்கள். இருவருக்கும் நடுவே வறட்சியையும் வறுமையையும் சுமந்துகொண்டு மக்கள்.

மாவோயிஸ்ட் பூமியில் 7 நாட்கள்!

சர்ஜூ போன்ற முக்கியக் கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளை 'கோயல் - சங்க்’ நதியோர மண்டலம் என்கிறார்கள் மாவோயிஸ்ட்கள். அதாவது, இந்திய அரசாங்கத்திடம் இருந்து விடுதலை அடைந்த பிராந்தியம் என்று பிரகடனப் படுத்தி இருந்தார்களாம். இந்த இயக்கத்தின் ராணுவப் பிரிவின் மண்டலத் தலைமையகம் சர்ஜூ சுற்று வட்டாரத்தில்தான் ஆறு மாதங்கள் முன்பு வரை செயல்பட்டு வந்தது. சுதர்சன்ஜி, பரத்ஜி போன்ற கமாண்டர்கள் இங்குதான் முகாம் அமைத்திருந்தனராம். காட்டு வழிப் பாதையில் போலீஸார் வந்தால் தாக்குதல் நடத்தி விரட்டியடிப்பது வழக்கம். அதனால், அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸ் பல ஆண்டுகளாக இங்கே போனது இல்லை. இந்த நிலையில்தான், விஜயகுமார் பொறுப்பேற்ற பிறகு, சி.ஆர்.பி.எஃப். இங்கு அதிரடி ஆபரேஷனை நடத்தி இருக்கிறது. காமாண்டர் சஞ்சய்குமார் மற்றும் பாலகிருஷ்ணா, விகாஷ் சின்கா, கியூம் ராஜுவ் சிங் ஆகியோர்தான் இந்த ஆபரேஷனின் முக்கியத் தளபதிகள். இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்ததாம். இருதரப்பிலும் பலர் இறந்தனர். திடீரென, மாவோயிஸ்ட்கள் அந்த ஏரியாவை விட்டு இடம் பெயர்ந்து விட்டனர். இப்போது, மலை முகடுகளில் பதுங்கி இருக்கும் அவர்கள், எந்நேரமும் போலீஸார் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்ற சூழ்நிலை நிலவுகிறது. அவர்களுக்குப் பதிலடி கொடுக்க, கோனே, ஒரியா, சர்ஜூ என்கிற மூன்று இடங்களில் சி.ஆர்.பி.எஃப்-காரர்கள் கான்கிரீட் முகாம்களை அமைத்து தாக்குதலுக்குத் தயாராக இருக்கிறார்கள்.

சர்ஜூவை நாம் அடைந்தபோது, நீலாம்பர்- பீதாம்பர் என்ற இரண்டு வீரர்களின் சிலை நம்மை வரவேற்றது. 1857-ல் ஆங்கிலேயர்களை வில், அம்பு சகிதம் கலங்கடித்த வீரர்களாம். கிராமத்தினரைத் திரட்டி சண்டை போட்டிருக்கிறார்கள். ஆங்கிலேய ரால் பிடிக்கப்பட்டு கெமு என்ற கிராமத்தில் இருவரும் தூக்கில் இடப்பட்டு இருக்கிறார்கள். அது முதல் அந்த ஏரியாவில் உள்ள பெரும்பாலான கிராமங்களுக்கு இந்த இருவரும்தான் எல்லை தெய்வங்கள். சிலை பீடத்தின் அருகே கிராம மக்கள் நமக்காகக் காத்திருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் ஆதிவாசிகள்.

நம்மிடம், சிலைகளை வணங்கச் சொன்னார்கள். நாம் வணங்கிய பிறகு, இயல்பாகப் பேச ஆரம்பித்தார்கள்.

''வாங்க, எங்கள் கிராமத் தில் இருந்து சுமார் 20, 30 பேர் தமிழ்நாட்டில், திருச்சி பகு தியில் போய் கட்டட வேலை செய்கிறார்கள். அவர்களுக்குக் கொஞ்சம் தமிழும் பேச வரும்'' என்று சந்தோஷத்துடன் சொன்னார்கள். ஊருக்குள் நுழைந்தோம். மின்ஒளியில் கிராமம் பிரகாசித்தது. ஆச்சர்யத்துடன் விசாரித் தோம். அண்மையில், 100-க்கும் மேற்பட்ட சோலார் லைட்டுகளை சி.ஆர்.பி.எஃப்-காரர்கள்  கொடுத்திருக் கிறார்கள். நம் ஊரை விடவும் மின்வெட்டு அதிகமாம். சுமார் 2,000 வீடுகள். கேபிள் டி.வி. கிடை யாது. ஓரிரு வீடுகளில் டிஷ் ஆன்டெ னாவைப் பார்க்கமுடிந்தது.  

''மலை, மரம், மண் என்று எல்லாவற்றிலும் எங்கள் பெண் தெய்வம் ஷாலாவைப் பார்க்கிறோம். வருடத்துக்கு ஒரு நாள் ஷாலாவுக்கு விழா எடுப்போம். வாராவாரம்  வியாழக்கிழமைகளில் வெல்லம், பூஜைப் பொருட்களை வைச்சு ஷாலாவைக் கும்பிடுவோம். ஷாலா தான் எங்களுக்கு எல்லாமும்'' என்றார்கள். காடுகளில் மரங்கள் வெட்டப்படுவதும் பாறைகள் தகர்க்கப்படுவதும் ஏன் அவர்களைக் கோபமுறச் செய்கிறது என்பது நமக்குப் புரிந்தது.

''இங்கே யாருக்கும் வேலை இல்லீங்க. இளவட்டங்க மட்டும் 500 பேர் வேலை இல்லாம இருக்காங்க. பி.ஏ., எம்.ஏ., நர்ஸிங் முடிச்சுட்டு வேலை இல்லாமல் கிராமத்தில் முடங்கிக்கிடக்கும் பெண்களுக்கு இந்த அரசாங்கம் எந்த வேலையும் தரலை. இத்தனைக்கும் பக்கத்தில் இருக்கும் அரசுப் பள்ளிக்கூடத்தில் 500 பேர் படிக்கிறாங்க. அங்கே 16, 17 வாத்தியாருங்க வேலை செய்யணும். ஆனால், நாலு பேர்தான் இருக்காங்க' என்றார் ஒரு பெரியவர்.

இங்கே கணவன்-மனைவிக்குள் பிரச்னை வந்தால், பெருசுகள் கூடி கிராமத்துப் பொதுஇடத்தில் உட்கார்ந்து இரு தரப்பு நியாயங்களைக் கேட்டுத் தீர்த்து வைப்பார்களாம்.

''மாவோயிஸ்ட்கள் இங்கே இருந்தப்ப, மக்கள் நீதிமன்றம் நடத்துவாங்க. பொதுப் பிரச்னையை அங்கே பேசுவோம். சி.ஆர்.பி.எஃப்-காரங்க வந்ததுக்கு அப்புறம் அவர்கள் வருவது இல்லை'' என்று மாவோயிஸ்ட்களை ஆதரிக்கிறாரா, எதிர்க்கிறாரா என்பது நமக்குப் புரியாத மாதிரி பேசினார் இன்னொரு பெரியவர்.  

''எங்களில் சிலர் போலீஸுக்குத் துப்பு கொடுக்கி றோமானு மாவோயிஸ்ட்டும் மாவோயிஸ்ட்களுக்கு உளவு சொல்றோம்னு போலீஸும் சந்தேகப்பட்டு துன்புறுத்துனாங்க. ஆனால் இப்ப இல்லை'' என்றார் இளைஞர் ஒருவர்.

கிராமத்து மக்கள் அதிகம் நம்மிடம் அதிகம் கவலைப்பட்டது, சரியான மருத்துவச் சிகிச்சை இல்லாமல் இறந்துபோகிற கிராமவாசிகளைப் பற்றித் தான். அவசரம், ஆபத்து என்றால் ஷேர் ஆட்டோ, ஜீப் பிடித்துக்கொண்டு மருத்துவமனை போவதற்குள் உயிர் போய்விடுகிறதாம். வருடத்தில் 10 கர்ப்பிணிகளாவது இறந்து விடுவதாகச் சொன்னார்கள்.

''சார்... மறக்காம அரசாங்கத்துக்குத் தெரியப் படுத்துங்க. எங்க கிராமத்தை ஒட்டிப் போற ஆத்துல வெள்ளக் காலத்துல எப்படியும் வருஷத்துக்குப் 15 பேர் செத்துப்போறாங்க. ஒரு பாலம் கட்டித் தந்தால் ரொம்பப் புண்ணியமா போகும்'' என்றார் ஒரு மூதாட்டி. நாம் அவர்களிடம் பேசிவிட்டுக் கிளம்பிய போது, பொழுது பொலபொலவென விடிந்திருந்தது.

மறுநாள்...

சர்ஜூ கிராமத்தில் நாம் பார்த்த அவலங்கள் தொடர்பாகப் பேச,  ஜார்கண்ட் மாநில முதல்வர் அர்ஜூன் முண்டாவைச் சந்திக்க முயன்றோம். அவர், ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருந்ததால், அப்போது அவரை நாம் சந்திக்க முடியவில்லை. அதனால், துணை முதல்வரை சந்திக்க முடிவு செய்தோம். இங்கே, இரண்டு துணை முதல்வர்கள் இருக்கிறார்கள். ஒருவர் பா.ஜ.க.காரர். இன்னொருவர் ஜார்கண்ட் முக்தி மோர்சா கட்சியைச் சேர்ந்தவர். நாம், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த ஹோமந்த் சோரனை சந்தித்தோம். இவர் முன்னாள் முதல்வர் சிபு சோரனின் மகன். 34 வயது இளைஞர்.

மாநில அரசின் நிதி, சுரங்கம், நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்ட முக்கியத் துறைகளைக் கவனிக்கும் அவரிடம், ''இங்குள்ள மனித உரிமை ஆர்வலர்கள், மாவோயிஸ்ட்கள் ஒரே விஷயத்தைத்தான் திரும்பத் திரும்பக் கூறுகிறார்கள். இங்குள்ள அரசாங்கம் தொழில் அதிபர்களுக்கு ஆதரவாக நடக்கின்றன. கனிம வளங்களைச் சுரண்டும் தொழில் அதிபர்களுக்குத் தாரை வார்ப்பதற்காக, காட்டிலும் கிராமங்களிலும் உள்ள மக்களை வலுக்கட்டாயமாகக் காலி செய்து அப்புறப்படுத்தும் வேலை நடக்கின்றன என் கிறார்களே'' என்று கேட்டோம்.

அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?

 ஓபியம் போடு!

மாவோயிஸ்ட் பூமியில் 7 நாட்கள்!

லத்தேகர் வட்டார கிராமங் களில் ஓபியம் பயிரிடப்படுகிறது.  போலீஸார் சமீபத்தில் அழித்த ஓபியம் செடிகளின் மதிப்பு சுமார் 180 கோடி ரூபாய். ''மாவோ யிஸ்ட்டுகள் ஆசியுடன்தான் இந்த வேலை நடக்கிறது. இந்தப் பணத்தை வைத்துதான் வடகிழக்கு மாநிலங்களில உள்ள தீவிரவாத இயக்கங்கள், வெளிநாட்டு ஆயுத புரோக்கர்களிடம் நவீன ரகத் துப்பாக்கிகளையும் வெடிமருந்து களையும் வாங்குகிறார்கள்'’ என்கிறது போலீஸ். ஆனால், 'எங்களிடம் உள்ள ஆயுதங்களில் கணிசமானவை போலீஸாரிடம் இருந்து கைப்பற்றப்பட்டவைதான்’ என்று சொல்லிச் சிரிக்கிறார்கள் மாவோயிஸ்ட்கள்!

 இரு தரப்பும் சளைக்கவில்லை!

ஒரு வருடத்துக்கு முன், லத்தேகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஜெயந்தி தேவி(வயது 30) என்பவரை, அவரது குடும்பத்தினர் முன்னிலையில் போலீஸார் சுட்டுக் கொன்றனர். மாவோயிஸ்ட்களின் ஆதரவாளர் என்ற சந்தேகத்தில் போலீஸார் இப்படி நடந்து கொண்டது, மக்களிடையே பெரும் அதிருப்தியை உண்டாக்கியது. அதேபோல், மாடு மேய்க்கும் லூகாஸ் மிஞ்ச் என்ற நபர் பிறவியில் காது கேட்காதவர். அவர் போலீஸைப் பார்த்து மிரண்டு ஒட, 'மாவோயிஸ்ட் ஆதரவாளராக இருப்பாரோ?' என்ற சந்தேகத்தில்   காட்டுவழிப் பாதையில் விரட்டிச் சென்று விசாரிக்காமலேயே சுட்டுக் கொன்றது போலீஸ்.

மாவோயிஸ்ட்களுக்கு எதிராக, லத்தேகர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல சமூக ஆர்வலர் நியாமத் அன்சாரி கொலை விவகாரம் பேசப்படுகிறது. இவர், வனப்பகுதிகளில் உள்ள  மக்களின் உரிமைகளுக்காகப் போராடியவர். அவர் மீது ஏதோ கோபம். திடீரென ஒருநாள் நியாமத் அன்சாரியை மாவோயிஸ்ட்டுகள் கொன்று விட்டார்களாம். இந்தக் கொலைக்கு பலத்த எதிர்ப்பு கிளப்பவே, இந்த விவகாரம் குறித்து அந்த இயக்கத்தின் மேலிடம் சீரியஸாக விசாரித்து இருக்கிறது. 'நடந்த சம்பவத்துக்காக மாவோயிஸ்ட் இயக்கத்தின் மேலிடம் வருத்தம் தெரிவித்தது’ என்று ராஞ்சியைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் கோபிநாத் கோஷ் நம்மிடம் கூறினார்.

அதிர்ச்சி தொடரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism