Published:Updated:

மிஸ்டர் கழுகு: சோனியா கேட்ட ஜெயலலிதா ஃபைல்!

மிஸ்டர் கழுகு: சோனியா கேட்ட ஜெயலலிதா ஃபைல்!

மிஸ்டர் கழுகு: சோனியா கேட்ட ஜெயலலிதா ஃபைல்!

மிஸ்டர் கழுகு: சோனியா கேட்ட ஜெயலலிதா ஃபைல்!

Published:Updated:
மிஸ்டர் கழுகு: சோனியா கேட்ட ஜெயலலிதா ஃபைல்!
##~##

ழுகார் வந்ததும் விஷமமாகச் சிரித்தார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''கடந்த இதழைக் காட்டும்'' என்றார். கொடுத்தோம். அதன் அட்டைப் படத்தை மட்டும் சில நிமிடங் கள் பார்த்துச் சிரித்தவர் நிமிர்ந்தார். ''பிறகு கோபப்படாமல் என்ன செய்வார்கள்?'' என்று சொல்லிக் கொண்டார்!

இதழை நம்மிடம் கொடுத்து விட்டுச் சொல்ல ஆரம்பித்தார் செய்திகளை!

''பட்டு வேட்டி, பட்டுச் சட்டை சலசலக்க தஞ்சைத் திருமண விழாக் களில் நடராஜன் வலம் வந்தது போயஸ் வட்டாரத்தை அப்படியே அனலாய் கொதிக்கவைத்துள்ளது. அந்தக் காட்சிகள் புகைப்படங்களாக வலம் வந்ததைப் பார்த்ததும் கோபம் இன்னும் அதிகம் ஆனது. 'இவ்வளவுக்குப் பிறகும் திருந்தலையா? அடக்கம் வரலையா? என்னோட எதிரிகளோட சேர்ந்துதான் கூத்தடிப்பாங்களா?’ என்று கேள்விகளின் கொந்தளிப்பாகப் போனதாம்.

ஸாரி... முதலில் ஒரு திருத்தம்! போயஸ் கார்டன் என்று சொன்னேன். முதல்வர் இப்போது இருப்பது சிறுதாவூரில். அக்னி நட்சத்திர வெயிலைச் சமாளிக்க முடியாமல் சிறுதாவூர் பங்களாவில் ரெஸ்ட் எடுக்கப் போய்விட்டார் ஜெய லலிதா. அங்கு இருந்தபடிதான் அரசாட்சி செய்கிறார். அவருக்கு தஞ்சை சம்பவங்கள் உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டாலும் புகைப்படங்களாகப் பார்க்க முடியாமல் இருந்ததாம். அதுவும் கைக்கு வந்ததும் சீறிய படியே இருந்தாராம்!''

''இருக்கத்தானே செய்யும்?''

''தஞ்சையில் திருமணம் நடந்தாலும், வீடியோ காட்சிகளை எடுப்பதற்கான ஆட்களை சென்னையில் இருந்து அழைத்துச் சென்றுள்ளார்கள். அந்தக் கடைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் ஆஜானுபாகுவான மனிதர்கள் இருவர் வந்து, 'நாங்க ஒரு கல்யாணம் நடத்தப்போறோம். நீங்கதான் வந்து வீடியோ எடுக்கணும்’ என்று கேஷூவலாக ஆரம்பித்து... அப்புறமாக நாங்கள் 'இன்னார்’ தான் என்று சொல்லி தஞ்சைக் காட்சிகளை அப்படியே ஹார்டுடிஸ்க்காகவே வாங்கிச் சென்றார்களாம். இரண்டு மணி நேரத்தில் அப்படியே கொண்டுவந்தும் கொடுத்து விட்டார்களாம். ஹார்டுடிஸ்க் பயங்கர சூடாக இருந்துள்ளது!''

''ஏனாம்?''

''காப்பி எடுத்துக்கொண்டால் சூடாகத்தானே இருக்கும். திருமணத்துக்கு யாரெல்லாம் வந்தார்கள் என்பதை  அறிந்துகொள்ள இது உதவியதாம். இதற்காகவே நமது எம்.ஜி.ஆரை உன்னிப்பாகப் பார்த்தேன். இரண்டு பெயர்கள் சிக்கின. தஞ்சாவூர் நகராட்சியின் 26-வது வார்டு கவுன்சிலர் ராஜேஸ்வரன் மற்றும் தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் ஊராட்சி மன்றத் தலைவர் தனசேகர் ஆகியோரை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பு களில் இருந்தும் நீக்குவதாக ஜெயலலிதா அறிவித்து இருந்தார்.''

''இவர்கள் திருமணத்தில் பங்கேற்றவர்களா?''

''தஞ்சை அ.தி.மு.க.புள்ளிகளைக் கேட்டேன். 'சிறையில் இருந்து வெளியே வந்த மற்ற அனைவரும் அமைதியாக இருக்க, ம.நடராஜன் மட்டும் போலீஸை எதிர்த்து வழக்குப் போடுவதும், அறிக்கை கொடுப்பதுமாக இருப்பதால், கட்சிக்காரர்களும் அதிகாரிகளும் திருமண மண்டபத்தின் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. ஆனால், ராஜேஸ்வரனும் தனசேகரனும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் விழாவில் கலந்து கொண்டார்கள், அதற்கான விளைவை அனுபவிக்கிறார்கள். இந்த நடவடிக்கையைக் கண்டு இன்னும் சிலர் பயத்தில் இருக்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் கட்சிக்கரை வேட்டி இல்லாமல் கலந்துகொண்டார்கள். இன்னும் சிலர் மண்டபத்துக்கு வராமல் வீட்டுக்குச் சென்று வாழ்த்தினார்கள். அவர்கள் மீதும் விரைவில் நடவடிக்கை பாயலாம்’ என்று சொன்னார்கள். ஆனால்...?''

''என்ன ஆனால்?''

''நடராஜன் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார். அந்தத் திருமண விழாவில் கலந்துகொண்ட குடும்பப் பெரியவர்கள் பலரும், 'ஒட்டுமொத்தக் குடும்பத்துக்கும் ஆணி வேரே நீதான். இந்தக் குடும்ப ஒற்றுமை குலையாம நீதான் பார்த்துக்கணும்பா...’ என்று நடராஜனின் கையைப் பிடித்துச் சொன்னதில் உருகிப் போய் இருக் கிறாராம்!'' என்ற கழுகார், சிறிது இடைவெளிவிட்டு தொடர்ந்தார்...

''டெல்லியில் இருந்து கடந்த சில நாட்க ளாக சில அதிகாரிகள் வந்து சென்னையில் டேரா போட்டு இருந்தார்கள். அவர்களது வருகை ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தன. இவர்களது நோக்கம் முழுமையாக முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகள், செயல்பாடுகள் ஆகியவற்றை நோட்டம் விடுவதாகவே இருந்ததாம். குறிப்பாக ஜெயலலிதா மீதான வழக்குகளின் நிலைமை, அதற்கான ஆதாரங்கள், ஜெயலலிதாவுக்கு எதிரான சாட்சிகளின் தன்மை ஆகியவற்றை மொத்தமாக இந்த அதிகாரிகள் சேகரித்துள்ளார்கள்.''

''அப்படியா?''

''பெங்களூரு வழக்கு விசாரணையின்போது ஜெயலலிதா கொடுத்த வாக்குமூலங்கள், அதுதொடர்பான ஆவணங்களையும் இந்த அதிகாரிகள் சேகரித்துள்ளனர். தி.மு.க. ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்த வழக்கின் குற்றப் பத்திரிகைகளும் இதில் அடக்கம். அதேபோல், அமலாக்கத் துறை போட்ட வழக்குகள், பிறந்த நாளுக்கு செக் வந்த வழக்கு, சி.பி.ஐ. தாக்கல் செய்து நடத்தி வரும் வழக்குகள்... ஆகியவை தொடர்பான தரவுகளும் இதில் உள்ளன.''

''ஏன் இந்த திடீர் அதிரடி?''

மிஸ்டர் கழுகு: சோனியா கேட்ட ஜெயலலிதா ஃபைல்!

''ஒரு மாநில முதலமைச்சர் குறித்தத் தகவல்களைத் திரட்டுவது சாதாரணமான நடைமுறைதான். ஆனால், பிரத்யேகமாகத் தனிஅதிகாரிகளை அனுப்பி திடீரென அலசி ஆராய்ந்து விமானத்தில் எடுத்துச் செல்லும் அளவுக்கு இப்போது என்ன அவசர நிலைமை என்பது பலருக்கும் அதிர்ச்சி. முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனிக்கிறது மத்திய அரசு. குறிப்பாக, சோனியாவின் பகையாளியாக இருந்த சங்மாவை வழிமொழிந்ததன் மூலமாக ஜெயலலிதா மீதான கோபம் அதிகம்ஆகி உள்ளது. இதற்கு டெல்லி செக் வைக்க நினைக்கிறது. அதற்காகத்தான் இந்தத் தகவல்களாம்!''

''இதைக் கேள்விப்பட்டால் ஜெயலலிதா இன்னும் வேகம் ஆவாரே?''

''பார்க்கலாம்! டாக்டர் ராமதாஸை வளைக்கும் வழக்கு ஒன்று பரபரப்பு காட்டி அடங்கியது அல்லவா? அந்த வழக்கு மறுபடியும் அவரைச் சீண்டிப் பார்க்கும் என்று சொல்கிறார்கள். விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது தாக்குதல் நடத்த வந்தவர்கள், அவரது ஆதரவாளர் முருகானந்தம் என்பவரைப் போட்டுத் தாக்கிவிட்டுப் பறந்தார்கள் அல்லவா? அந்த வழக்கில் ராமதாஸின் தம்பி சீனுவாசன் உள்ளிட்ட பலரும் கைதாகி ஜாமீனில் வந்து விட்டனர். சி.பி.ஐ. விசாரிக்கும் இந்த வழக்கில் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் ஆகிவிட்டது. இரண்டாவது குற்றப்பத்திரிகையை விரைவில் தாக்கல் செய்வோம் என்று சி.பி.ஐ. சொன்னது. இந்தநிலையில், இரண்டு நாட்களுக்கு முன், ராமதாஸை சி.பி.ஐ. அதிகாரிகள் மறுபடியும் ஒரு முறை விசாரணை செய்து அனுப்பியதாகத் தகவல் பரவி உள்ளது''

''அபாயம் நீங்கவில்லை என்று சொல்லும்!''

''தமிழக மந்திரிகள் பலரும் அபாயத்தில் இருப்பதாக நினைக்கிறார்கள். அமைச்சர்கள் சிலருக்கு விரைவில் கல்தா கொடுக்கப்படலாம் என்ற செய்தி கோட்டை வட்டாரத்தில் பரபரப்பாக அடிபடும் நிலையில், கடந்த 24 மற்றும் 25-ம் தேதியில் எட்டு அமைச்சர்கள் குரு பகவானின் ஸ்தலமான ஆலங்குடிக்கு திடீர் விசிட் அடித்தனர். 'குரு பெயர்ச்சி’ தங்கள் பதவிக்கு வேட்டுவைத்து விடக் கூடாது என்று சிறப்பு பூஜைகள் செய்துவிட்டு போனார்களாம்.''

''கிரகங்கள் என்ன நினைத்தாலும் அம்மா என்ன நினைக்கிறார் என்பதுதானே முக்கியம்!''

''தென் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல சாதிச் சங்கத் தலைவர் சமீபத்தில் கொடூரமாக வெட்டிச் சாய்க்கப்பட்டார். அந்தக் கொலையில் தொடர் புடைய முக்கிய ரவுடியை கடந்த 27-ம் தேதி சுரண்டை அருகே பயங்கர ஆயுதங்களுடன் துரத்தியதாம் ஒரு கும்பல். உயிருக்குப் பயந்து ஓடிய அந்தப் புள்ளி, அருகில் இருந்த காவல் நிலையத்தில் அடைக்கலமாக... சாதிக்கலவரம் ஏற்பட்டு விடுமோ என்று  தவித்த போலீஸார், இறுதியில் இரு தரப்பு மீதும் வெவ்வேறு பொய்வழக்குகளைப் போட்டு உள்ளே வைத்து விட்டார்களாம். விரைவில், வெட்டுக் குத்துகள் நடக்கும் என்று அதிர வைக்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். தென்மாவட்டம் உஷார்!'' என்று பீதியைக் கிளப்பிவிட்டுக் கிளம்பினார் கழுகார்!

போனவர் எதிரி... வந்தவர் நண்பரா?

கலெக்டர்  சகாயத்தின் இடமாற்றத்தைக் கண்டித்து மதுரையில் தொடர்ந்து போராட்டங்கள் நடக்கின்றன. மக்கள் முன்னேற்றக் கட்சித் தலைவர் முத்துராஜ் காந்தி சிலை முன் அமர்ந்து மொட்டை போட்டு தன் எதிர்ப்பைப் பதிவு செய்ததுடன், 'சகாயம் இடமாற்றத்துக்குக் காரணம் நித்தியானந்தாதான்’ என்றொரு குண்டையும் போட்டிருக்கிறார். ''நித்தியானந்தாவால் மதுரை ஆதீனம் களங்கப்பட்டு இருப்பதுடன், சட்டம் ஒழுங்கும் பாதிக்கப்பட்டுள்ளது. அவரை உடனே மதுரையில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சகாயத்திடம் கோரிக்கை மனு கொடுத்தேன். 'இதை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறேன்’ என்று அதற்கான முயற்சியில் இறங்கினார் சகாயம். அதனால்தான் தனது பண பலத்தாலும் செல்வாக்காலும் கலெக்டர் சகாயத்தையே மாற்றி விட்டார் நித்தியானந்தா'' என்றார். திருவண்ணாமலை கலெக்டராக இருந்த அன்சுல் மிஸ்ரா, இப்போது மதுரைக்கு வந்துள்ளார். இவர், நித்தியானந்தாவின் நண்பர் என்றும் தகவல் சொல்லப்படுகிறது.

'சொக்கநாதர் சாட்சியாக, சந்நிதானம் சாட்சியாகச் சொல்கிறேன். கலெக்டர் மாற்றத்தில் எல்லாம் என்னுடைய தலையீடு இல்லை. அந்த அளவுக்கு நான் பவர்ஃபுல்லான ஆளும் இல்லை. மதுரையில யார் தும்மினாலும் நானாங்கய்யா பொறுப்பு?' என்று கேட்கிறார் நித்தி.  'திருவண்ணாமலை கலெக்டர் தியான பீடத்தோடு நட்பு முறையில் இருந்தது உண்மை. ஆனால் அவரை நான் நேரில் பார்த்ததோ, பழகியதோ கிடையாது. ஏதோ ஒரு நாள் தியான பீடத்துக்கு வந்திருக்கார். அந்தப் பழைய போட்டோஸ் எல்லாத்தையும் எடுத்துப்போட்டு, நான்தான் அவரை மதுரைக்குக் கொண்டுவந்தேங்கிறது மாதிரி செய்தி, இன்டர்நெட்டிலும் பரவுகிறது. அவர் ரொம்ப நல்லவர். நாங்க செய்ற சமூக சேவைக்கு உறுதுணையா இருந்தார். அவ்வளவுதான். வேறு எந்த சம்பந்தமும் இல்லை' என்றார்.  ஆனால் மிஸ்ரா, 'எனக்கும் நித்தியானந்தா ஆசிரமத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அந்த ஆசிரமத்துக்கு நான் சென்றதும் இல்லை’ என்று பதவி ஏற்ற முதல் நாளே போட்டு உடைத்திருக்கிறார்.

 இலங்கையில் அருண்பாண்டியன்!

மிஸ்டர் கழுகு: சோனியா கேட்ட ஜெயலலிதா ஃபைல்!

தே.மு.தி.க-வின் எம்.எல்.ஏ-வும் நடிகருமான அருண் பாண்டியன், கடந்த சில மாதங்களாகவே கட்சியில் இருந்து ஒதுக்கப்படுவதாகவும் விரைவில் அ.தி.மு.க-வில் ஐக்கியமாகி விடுவார் என்றும் பேசப்பட்டது. இந்த நிலையில் திடீரென அவர் இலங்கைக்கு விசிட் செய்த விவகாரம் வெளியே வந்து, பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது.

பொதுவாக இலங்கைக்குப் பயணம் செய்யும் தமிழக அரசியல் தலைவர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசின் அனுமதி பெற்றுச் செல்வதுதான் வழக்கம்.  அருண்பாண்டியன் ஒரு மாத சுற்றுலா விசாவில் இலங்கை போய் வந்துள்ளார். தமிழர்கள் பகுதிகளுக்குச் சென்று, அங்கேயே தங்கியிருந்து, உண்மை நிலவரத்தைப் படம் பிடித்து வந்துள்ளாராம். அருண் பாண்டியனுக்கு விசா ஏற்பாடு செய்ததில் இருந்து, இலங்கையில் தனது சொந்த ஊரான இணுவில் கிராமத்தில் தங்க வைத்து, தமிழர்களை சந்திக்கவும் உதவியவர் ஐங்கரன் கருணாமூர்த்தி. இவரும் அருண் பாண்டியனும் ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிர்வாகிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கைப் பிரச்னையைத் தீவிரமாக கையில் எடுக்க நினைத்த விஜயகாந்த்தான், அருண் பாண்டியனை இலங்கைக்கு அனுப்பி வைத்ததாகச் சொல்கிறார்கள்.

'இது அவருடைய தனிப்பட்ட பயணம்’ என்று கட்சிக்காரர்கள் சொல் கிறார்கள்.

 'பிறந்த நாள்’ ஆபத்து!

தமிழக அமைச்சர் ஒருவரின் பி.ஏ-வின் பேரனுக்கு நடந்த பிறந்த நாள் விழா கொண்டாட்டம்தான், இப்போது கோட்டையின் ஹாட் டாபிக். சென்னையின் மையத்தில் இருக்கும் ஸ்டார் ஓட்டலில் கடந்த வாரம் விழா களை கட்டியது. புதுக்கோட்டை இடைத்தேர்தல் களத்தில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் களத்தில் நிற்க... சம்பந்தப் பட்ட அமைச்சரின் ஆசியோடு பிறந்த நாள் விழா அமர்க் களப்பட்டதாம். துறையின் உயர்அதிகாரிகள் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்து கலந்து கொண்டு பரிசுப் பொருட்களை வாரிவழங்கி இருக்கிறார்களாம். இந்த வசூல்  வேட்டையை கார்டன் வட்டாரம் மோப்பம் பிடித்து விட்டது. அதனால், புதுக்கோட்டை இடைத்தேர்தலுக்குப் பிறகு அமைச்சரின் தலை உருளலாம் என்கிறார்கள்.

மிஸ்டர் கழுகு: சோனியா கேட்ட ஜெயலலிதா ஃபைல்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism