Published:Updated:

முடியாவிட்டால் நாம் தனியாகப் பிரிந்து...

ஏதோ சொல்லவந்து எதையோ சொன்ன கருணாநிதி!

##~##

பெட்ரோல் விலை உயர்த்தப் பட்டதற்குக் காங்கிரஸ் கட்சி யைத் தவிர அனைத்துக் கட்சிகளுமே ஏதாவது ஒரு வகையில் போராட்டம் நடத்தி, வரலாற்றில்(?) தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து விட்டன. இதில், அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் நடத்திய போராட்டங்கள், உச்சபட்சக் காமெடி. 

பட்ஜெட் போடுவதற்கு முன்பே மறைமுக வரிகளை விதித்து பால், பஸ், மின்சாரக் கட்டணங்களை உயர்த்திய ஜெயலலிதா, பெட்ரோல் விலை உயர்வுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தது ஆச்சர்யம். 'பெட்ரோல் விலை உயர்வைத் திரும்பப் பெறாவிட்டால் மக்களுடைய கண்ணீர், ஆளும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை விரைவில் வீழ்ச்சி அடையச் செய்யும் ஆயுதமாக மாறும்’ என்று ஜெயலலிதா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
முடியாவிட்டால் நாம் தனியாகப் பிரிந்து...

வெளியிட்ட வார்த்தைகள், அப்படியே அட்சரசுத்தமாக அ.தி.மு.க. ஆட்சிக்கும் பொருந்தும் என்பதை ஏனோ மறந்துபோனார். அதனால்தானோ என்னவோ, மத்திய அரசைக் குறை கூறிய ஜெயலலிதாவை யாருமே சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.

இதே நிலைதான் தி.மு.க-வுக்கும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க நினைத்தார்கள். பெட்ரோல் விலை உயர்வைக் குறைக்க மத்திய அரசை வலியுறுத்தியும் பஸ், மின்சாரக் கட்டணங்களை குறைக்காத அ.தி.மு.க. அரசை கண்டித்தும் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.

தென்சென்னை தி.மு.க. சார்பில், சேப்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி கலந்து கொண்டார். முதலில் மைக் பிடித்த மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ., ''ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கொடுப்பதில் அரசு பாரபட்சம் காட்டியது. உளவுத்துறையில் இப்போது இணை கமிஷனராக இருக்கும் நல்லசிவம், தலைவர் கலைஞர் முதல்வராக இருந்த போது, அவரிடம் பணியாற்றியவர். நல்லசிவம்தான் சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துங்கள் என்று அனுமதி கொடுத்தார். அவருக்கு முதலில் நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறோம்.'' என்று எடுத்த எடுப்பிலேயே நல்லசிவத்துக்கு ஆப்பு வைத்தார்.

அதன் பிறகு மைக் பிடித்த கருணாநிதி, ''வெயிலின் கொடுமையை விட கொடுமையான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது'' என்று டைமிங்காக பேச்சை ஆரம்பித்தார்.

''ஓராண்டு காலத்தில் நூறாண்டு சாதனை செய்ததாக பத்திரிகைகளில் பலகோடி ரூபாய்க்கு விளம்பரங்களைத் தருகிறார்கள். விளம்பரங்கள் பெற்றதற்கு நன்றிக் கடனாக பத்திரிகைகளும், 'ஆலவட்டம்’ சுற்றுகின்றன. இங்கே நடப்பது ஆட்சியா... இல்லை அம்மையாரின் காட்சியா என்று சொல்லும் அளவுக்கு தன்னை 'அம்மா’ என்றே அழைக்க வேண்டும் என்று ஆணை போட்டு, அதைச் செயல்படுத்தி வருகிறார்கள்.

முடியாவிட்டால் நாம் தனியாகப் பிரிந்து...

தி.மு.க. மத்தியில் கூட்டணியிலே இருந் தாலும் மக்கள் விரோதக் காரியங்கள் நடைபெறும்போது அதைத் தடுக்கும். அடிப் படைக் கொள்கைகளுக்கு மாசு ஏற்படும் போது மத்தியஅரசு தனது பொறுப்பை நிறைவேற்றாவிட்டால், எதிர்ப்புக் குரலை உயர்த்தி, அவர்களோடு இருக்கிற வரையிலே இருந்து... முடியாவிட்டால் நாம் தனியாகப் பிரிந்து... '' என்று சொல்லி முடிக்கும் முன்  கூட்டம் ஆர்ப்பரித்தது. மக்கள்  அமைதியாகும் வரை தனது பேச்சை நிறுத்திய கருணாநிதி, ''நம்முடைய கொள்கைகளைத்தான் நாம் வலியுறுத்தி வந்திருக்கிறோம். அதற்கு இடம் தராத வகையில் மத்திய அரசும், மாநில அரசும் நடந்து கொள்ள வேண்டும்'' என்று வேறுமாதிரியாக  முடித்தார்.

'நாம் தனியாகப் பிரிந்து’ என்று ஏதோ சொல்ல வந்த கருணாநிதி, பின்னர் உஷார் ஆகி வேறு டிராக் மாறினார். 'நாம் தனியாகப் பிரிந்து...’ என்று அவர் சொன்னதை வைத்து, 'கூட்டணியில் இருந்து விலகத் தயங்க மாட்டோம்’ என்று மீடியாவில் செய்திகள் வந்தன. இதை கருணாநிதி எதிர்பார்க்கவில்லை. சேப்பாக்கத்தில் இருந்து அறிவாலயம் போனவர்  உடனே மீடியாவைச் சந்தித்தார். ''நான் எங்கே அப்படிச் சொன்னேன். மத்திய அரசை விட்டு வெளியேறுவோம் என்று என்னுடைய பேச்சில் எங்கேயாவது இருக்கிறதா? முன்பு பி.ஜே.பி-யோடு கூட்டணியிலே இருந்த போது எங்களுடைய கொள்கைக்கு ஒத்துவராத சூழ்நிலையில் நாங்கள் வெளியேற நேர்ந்தது என்று கடந்த காலத்தைத்தான் சொல்லி இருக்கிறேன். இப்போது வெளியேறுவோம் என்று சொல்லவே இல்லை'' என்று பூசி மெழுகினார். இது, கருணாநிதியின் தடுமாற்றத்தையே காட்டியது!

திடீரென்று கருணாநிதி பல்டி அடிக்கக் காரணம் என்னவாம்?

''ராசா விவகாரம் தொடங்கி கடந்த சட்ட சபைத் தேர்தலில் ஸீட்டுகளை விடாப்பிடியாக வாங்கிய விவகாரம் வரையில் காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருக்கும் தி.மு.க. நிர்வாகிகளும் தொண்டர்களும், 'கூட்டணியை விட்டு விலக வேண்டும்’ என்ற கோரிக்கையை வைத்து வருகிறார்கள். தி.மு.க. பொதுக்குழுவிலும் இது எதிரொலித்தது. ஆனாலும், காங்கிரஸ் கூட்டணியை விட்டு விலக கருணாநிதிக்கு விருப்பம் இல்லை. வெளியேறினால் அ.தி.மு.க-வை காங்கிரஸ் அரவணைத்துக் கொள்ளும். அதற்கு வாய்ப்பு தந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். 1996-ம் ஆண்டு முதல் (இடையில் வாஜ்பாயின் 13 மாத ஆட்சியைத் தவிர) இப்போது வரையில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியில் தி.மு.க. அங்கம் வகித்து வருகிறது. மாநிலத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் ஆட்சி. ஆனால் மத்தியில் தொடர்ந்து நமது கை ஓங்கி வருகிறது. 2014-ல் நாடாளுமன்றத் தேர்தல் வரும் போது அ.தி.மு.க. அரசின் மீதான மக்கள் எதிர்ப்பு தங்களுக்குச் சாதமாக அமையும், அதன் மூலம் தொடர்ந்து மத்தியில் அங்கம் வகிக்கலாம் என்று நினைக்கிறார் தலைவர். அதற்காகத்தான் இப்படி பல்டி அடித்தார்'' என்கிறார்கள் பெயர் தெரிவிக்க விரும்பாத தி.மு.க. நிர்வாகிகள்.

இவர்களுக்கு ஒரு நாள் கூத்து. மக்களுக்கு..?

- எம்.பரக்கத் அலி,

படங்கள்: வீ.நாகமணி