Published:Updated:

மாவோயிஸ்ட் பூமியில் 7 நாட்கள்!

மாவோயிஸ்ட் பூமியில் 7 நாட்கள்!

மாவோயிஸ்ட் பூமியில் 7 நாட்கள்!
##~##

ஜார்கண்ட் மாநிலத் துணை முதல்வர் ஹேமந்த் சோரனிடம், ''காட்டிலும் கிராமங்களிலும் உள்ள மக்களை வலுக்கட்டாயமாகக் காலி செய்து, தொழில் அதிபர்களுக்குத் தாரை வார்க்கும் செயலைத்தான் அரசு செய்கிறதா'' என்று கேட்டதும் தயக்கம் இல்லாமல் பதில் சொல்லத் தொடங்கினார். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''உண்மைதான்! யாரும் எங்கள் மக்களை ஏறெடுத் தும் பார்ப்பது இல்லை. இங்கு உள்ள கனிம வளங்களை அள்ளுவது பற்றியும் எப்படி குறுக்கு வழிகளில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க லாம் என்பதுபற்றியும்தான் தொழில் அதிபர்கள் யோசிக்கிறார்கள். உங்களுக்குத் தெரியுமா, இந்தியாவின் பிரபலத் தொழில் நிறுவனம் ஒன்று,  தனக்கு நிலம் கொடுத்த மக்களுக்குத் தான் கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல் இன்னும் இழுத்தடிக்கிறது. தொழிற்சாலைகளுக்காக இடம் பெயர்ந்த மக்களின் தீர்க்கப்படாத பிரச்னைகள் இங்கே ஏராளம். மாவோயிஸ்ட்கள் தலையெடுக்கக் காரணமே இதுபோன்ற நிலைதான். அவர்கள் கிராமங்களில் வசிக்கும் ஏழைகளைத் தங்கள் வசப்படுத்திக்கொள்கிறார்கள். அங்கெல்லாம் அவர்கள் ராஜ்ஜியம் நடத்துகிறார்கள். அரசாங் கத்திடம் இருந்து மக்களுக்கு விடுதலை என்கிறார் கள். அந்தப் பகுதிகளில் மாநில அரசின் நிர்வாகத் தையே செயல்பட விடுவது இல்லை. அரசு ஊழியர்களால் தங்கள் கடமைகளைச் செய்ய முடிவதும் இல்லை. பல வருடங்களாக நிலவும் இந்தப் பிரச்னையின் பின்னணியையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

மாவோயிஸ்ட் பூமியில் 7 நாட்கள்!

சுரங்கத் தொழிலில் மத்திய அரசின் கொள்கைகள், சட்டங்கள் மாநில அரசுகளுக்கு சாதகமாக இல்லை. மாநிலத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத சூழலும் இந்தப் பிரச்னைக்கு இன்னொரு முக்கிய மான காரணம். அதனால், ஒரு தெளிவான முடிவை எடுக்க முடிவது இல்லை. மாவோயிஸ்ட் பிரச்னை என்பது அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளுடன் தொடர்புடையது'' என்றவர் நம்மைப் பார்த்து,

''நீங்கள் எந்தெந்தப் பகுதிகளுக்குச் சென்றீர்கள்?'' என்று கேட்டார்.

''லத்தேகர், சர்ஜூ, சைபாஸா, பெட்லா'' என்று வரிசையாக நாம் சொல்ல ஆரம்பிக்க இடைமறித்த அவர், ''நீங்கள் போன பகுதிகள் எல்லாம் மாவோயிஸ்ட்களால் பெரும் பாதிப்புக்கு உள்ளான பகுதிகள். ஆனால், இப்போது நிறைய சாலைப் பணிகள், சிறுபாலங்கள், கட்டுமானப் பணிகள் ஆகியவற்றை வழிநெடுகிலும் பார்த்திருப்பீர்களே. ஏதோ எங்களால் முடிந்ததைச் செய்கிறோம்'' என்றார்.

அடுத்து, மாவோயிஸ்ட் பற்றி அவரது பேச்சு திரும்பியது!

''மாவோயிஸ்ட்கள் ஒன்றும் புனிதர்கள் அல்ல. அவர்கள் ஆரம்பித்த இடத்தில் இருந்து எங்கேயோ போய்விட்டார்கள். பணம்தான் அவர்களுக்கு முக்கியம். அதற்காகவே, உள்ளூரில் பிரச்னைகளை உருவாக்குகிறார்கள். அரசின் வளர்ச்சித் திட்டங்களை கிராமங்களில் நிறைவேற்றப் போனால், அதற்கு மாவோயிஸ்டுகள் முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள். வளர்ச்சி என்ற சொல்லையே அவர்களால் சகித்துக்கொள்ள முடியாது. எங்கள் மாநிலத்தில் பெரும்பான்மையான கிராமங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றன. வேலையில்லாத் திண்டாட்டம், சுகாதாரச் சீர்கேடு, கல்வியின்மை, மின்சார வசதி என்று செய்ய வேண்டிய பணிகள் எவ்வளவோ கிடக்கின்றன. காடு, மலைகளை ஒட்டியுள்ள கிராமத்து மக்களின் நிலைமை ரொம்பவும் பரிதாபம். கிராமங்களை ஆக்கிரமித்துள்ள மாவோயிஸ்ட்களிடம் இருந்து மீட்க போலீஸார் சண்டை போட்டு வருகிறார்கள். மாவோயிஸ்ட் ஒழிப்புத் திட்டத்தைப் பொறுத் தவரை, மத்திய அரசுக்குத் தேவையான ஒத்துழைப்பு தருகிறோம். மாநில முதல்வர் அர்ஜுன் முண்டா, நடப்பதை அமைதியாகக் கவனித்து வருகிறார். வளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்'' என்றார்.

''சுரங்கத் தொழிலில் மத்திய அரசின் கொள்கையும் சட்டதிட்டமும்தான் இவ்வளவு குளறுபடிகளுக்கும் காரணம் என்கிறீர்களா?'' என்று கேட்டோம்.

மாவோயிஸ்ட் பூமியில் 7 நாட்கள்!

''நிச்சயமாக. பெரும்பாலான சுரங்கங்களை நடத்துவது மத்திய அரசுதான். அவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம் அளப்பரியது. அதில் மாநில அரசாங்கத்துக்குக் கிடைக்கும், 'ராயல்டி' தொகை மிகவும் சொற்பம்தான். கனிம வளங்களுக்குத் தரும் 'ராயல்டி’ தொகையை உயர்த்திக் கொடுத்தால், வளர்ச்சிப் பணிகளுக்கு அவை உதவியாக இருக்கும். மத்திய அரசுடன் எவ்வளவோ போராடிப் பார்த்து விட்டோம். ஆனால், அவர்கள் செவி சாய்க்கவே இல்லை. சுரங்கத் தொழிலில் உள்ள பழைய கொள்கைகள், சட்டத் திட்டங்களை மாற்றத் தயங்குகிறார்கள். ஆனால், பூமியில் புதைந்து கிடக்கும் கனிம வளங்களை எடுப்பதற்கு மட்டும் புதிது புதிதாகத் திட்டங்களைப் போடுகிறார்கள். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் எங்கள் மாநிலத்துக்கு வந்து, அவராகவே சில திட்டங்களை அறிவிக்கிறார். மாவோயிஸ்ட் ஒழிப்பு நடவடிக்கைக்கு உள்ளான கிராமங்களில் வசிக்கும் மக்களின் அடிப்படைத் தேவைகளை கேட்டுத் தெரிந்துகொண்டு, அதற்கான திட்டங்களை அறிவிக்கிறார். இதனால் ஒரு கையில் துப்பாக்கியும் மறு கையால் மருத்துவ உதவியும் செய்ய வேண்டிய நிலையில் போலீஸார் இருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கைக் கவனிக்க துப்பாக்கி பிடிக்கலாம். ஆனால், அவர்களை சமூகப் பணிகளில் எப்படி ஈடுபடுத்த முடியும்? அவர் எதிர்பார்ப்பு நிறைவேற நிறையக் காலம் பிடிக்கும். எப்படியோ மக்களுக்கு நல்லது நடந்தால் சரி என்று நாங்களும் போகிறோம். ஆனால், ஒரு மாநில மக்களின் உணர் வையும் தேவைகளையும் அந்த மாநில அரசுதான் நன்கு உணர்ந்து இருக்கும் என்பதை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும். வளர்ச்சிப் பணிகளில் எங்களையும் முழுவதுமாக இணைத்துக் கொள்ள வேண்டும்'' என்கிறார்.

''உங்கள் அப்பா சிபுசோரனுக்குச் செல்வாக்கு உள்ள பகுதிகளில் மட்டும் மாவோயிஸ்ட்கள் இல்லை யாமே? இது எப்படிச் சாத்தியம்? மாவோயிஸ்ட் டுகளால் உங்களுக்கு ஆபத்து இல்லையா?'' என்றோம்.

''எங்கள் பகுதிகளில் மாவோயிஸ்ட் பாதிப்பு கொஞ்சம் உண்டு. அவர்கள் அங்கே தங்களை நிலைநிறுத்திக்கொள்ள முயற்சித்து வருகிறார்கள். மற்றபடி, எங்கள் கட்சிக்கு அவர்களிடம் இருந்து எந்த ஒரு மிரட்டலும் வந்தது இல்லை. மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். எங்கள் மாநில மக்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உண்மையாக இருப்பதும்கூட காரணமாக இருக்கலாம். ஏனென் றால், இந்த விஷயங்களுக்காகத்தானே அவர்களும் போராடுகிறார்கள். என்ன, நாங்கள் அரசியல் வழியில் போராடுகிறோம்; அவர்கள் துப்பாக்கி வழியில் போராடுகிறார்கள். அப்படியிருக்க, அவர்கள் ஏன் எங்களை எதிரிகளாகப் பார்க்கப் போகிறார்கள்? என் அப்பா சிபுசோரன் கடந்த 30 ஆண்டுகளாக காடுகள், மலைகள், கிராமங்கள் என்று அடித்தட்டு மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். இரவு, பகல் எந்தநேரத்திலும் மக்களைச் சந்திக்கிறார். நானும் அவர் வழியில்தான் செல்கிறேன். எங்களுக்கு மாவோயிஸ்ட்டுகள் எந்த மிரட்டலும் விடுத்தது இல்லை'' என்றார்.

''அப்படியானால் நீங்கள் மாவோயிஸ்ட்களை அழைத்துப் பேசி சுமுகமாக ஒரு தீர்வை ஏற்படுத் தலாமே?''

''பேசத் தயார். அவர்கள் முன்வந்தால், பேசுவோம். ஆனால், இதுவரை அதற்கான முயற்சி எடுக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. எனக்கு மாநில அரசியலில் எதிர்காலம் இருக்கிறது. நான் துணை முதல்வர் பதவிக்கு வந்து 16 மாதங்கள்தான் ஆகின்றன. நிறையச் செய்ய வேண்டும் என்றே நினைக்கிறேன். நல்ல வாய்ப்பு வரும்போது, அவர்களை அழைத்துப் பேசுவேன். பின்தங்கிய கிராமப்புற மக்களுக்கு எது நல்லதோ, அதைச் செய்வேன்'' என்றவரிடம் இருந்து விடைபெற்றுக் கிளம்பினோம்.

பெட்லா வனப் பகுதி. ஜார்கண்ட் - சத்தீஸ்கர் இரண்டு மாநிலங்களில் எல்லையை வருடும் அடர்ந்த காட்டுப் பகுதி. நாம் அங்கு சென்றபோது, மாவோயிஸ்ட்களுக்கும் சி.ஆர்.பி.எஃப். போலீஸாருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்துகொண்டு இருந்தது. சண்டை தொடங்கி இது 49-வது நாள் (11.05.2012) என்றார்கள். பெட்லா வனப் பகுதி வழியாகத்தான், மாவோயிஸ்ட்கள் முகாம் அமைத்துள்ள பகுதிக்குப் போலீஸார் போக முடியும் என்பதால், அங்கே பரபரப்புக்கு பஞ்சம் இல்லை!

வானத்தில் விர்விர் என்று இறக்கையைச் சுழற்றியபடி வட்டமடிக்கிறது விமானப் படையின் ஹெலிகாப்டர். வனத்தின் இடையே மோட்டார் சைக்கிள்களில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் அங்குமிங்கும் பறந்தபடி இருக்கிறார்கள். சி.ஆர்.பி.எஃப். தலைவர் விஜயகுமார், பெட்லா கெஸ்ட் ஹவுஸில் முகாம் இட்டிருப்பதாகச் சொன்னார்கள். அங்கே சென்றோம். வனப் பகுதியின் வரைபடம் சகிதம் சக அதிகாரிகளுடன் ஆலோசனையை முடித்துவிட்டு, வெளியே வந்தார் விஜயகுமார். யூனிபார்ம், கூலிங்கிளாஸ் சகிதம் கம்பீரமாக நடந்து வந்த அவர் தோளில் ஏகே 47 ரக துப்பாக்கி. அதை சரிசெய்தபடி, நம்முடன் பேச ஆரம்பித்தார் விஜயகுமார்...

 - அதிர்ச்சி தொடரும்.. 

பெட்லாவின் விசேஷங்கள்...

ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து 170 கி.மீ. தொலைவில் இருக்கிறது பெட்லா. வனத்துறைக்குச்

மாவோயிஸ்ட் பூமியில் 7 நாட்கள்!

சொந்தமான புலிகள் சரணாலயம் இங்கே இருக்கிறது. காட்டுப் பகுதியில் ஏராளமான புலிகள் நடமாட்டம் உண்டு. யானை உள்ளிட்ட நிறைய காட்டு மிருகங்கள் மற்றும் அரிய வகை பறவைகள் காணப்படுவதால், அவற்றை  பார்க்கவும்,  நீர்வீழ்ச்சி மற்றும் ஆற்றில் குளிக்கவும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதும்.  இங்குள்ள அரண்மனை சரித்திரப் புகழ் வாய்ந்தது.  சேரோ மன்னன் 16-ம் நூற்றாண்டில் ஆட்சி நடத்திய அரண்மனை, சிதைந்த நிலையில் இருக்கிறது. இதற்கு அருகில் மன்னனின் வாரிசு ஓர் அரண்மனையைக் கட்டத் தொடங்கி, அது கட்டி முடிக்கப்படாமல் பாதியில் நிற்கிறது. ஒரு காலத்தில் ஏராள மான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்தவை இந்த இடங்கள். போலீஸ் ரோந்து போன்ற பிரச்னைகள் இப்போது நிலவுவதால், சுற்றுலா பயணிகள் அதிகம் வருவது இல்லை. நாம் போனபோது, வனக் கண்காட்சி மையம் வெறிச்சோடிக்கிடந்தது. சரணால யத்திலும் பார்வையாளர்கள் யாரும் கண்ணில் தென்படவில்லை. பெட்லா வனப் பகுதியை ஒட்டியுள்ள கிராமத்திலும் ஆட்களைக் காணோம்.

அருகில் தென்பட்ட ஒரு டீக்கடையில் பேச்சு கொடுத்தோம். ஆனால், அவர்களும் பேச மறுத்தார்கள். பெட்லாவை ஒட்டி ஆதிவாசிகள் வசிக்கும் கிராமத்துப் பக்கம் நடை போட்டோம். ஒரு வீட்டில் கும்பல் கூடி இருந்தது. அங்கே தென்பட்ட ஒரு சிவப்புத் துணி பேனரில் மாவோ கம்பீரமாகத் தெரிகிறார். நக்ஸல்பாரி இயக்கத்தின் நிறுவனரான சாரு மஜூம்தார், மார்க்ஸ் படங்களில் தெரிகிறார்கள். நம்மைப் பார்த்ததும், அருகில் வந்து இன்முகத்தோடு வரவேற்றார்கள். ஆனால், போலீஸ், மாவோயிஸ்ட் என்று நாம்  பேசத் தொடங்கியதும், ஒரு கணத்தில் விலகிப் போய்விட்டார்கள்.

அவர்கள் அனைவர் முகத்திலும் ஒருவித பதற்றத்தை மட்டுமே பார்க்க முடிந்தது!