Published:Updated:

மிஸ்டர் கழுகு: அந்தக் கடிதம்!

மிஸ்டர் கழுகு: அந்தக் கடிதம்!

##~##

முன்கூட்டியே வந்த கழுகார், ஃபார்ம் லிஸ்ட் டைப் பார்த்தார். ''தி.மு.க. விவகாரங்கள் பலமாக இருப்பதுபோல் தெரிகிறதே!'' என்று சொல்லியபடி தி.மு.க. மேட்டர்களை அவிழ்க்க ஆரம்பித்தார். 

''தி.மு.க. வட்டாரத்தில் பீதியைக் கிளப்பிக்கொண்டு இருக்கிறது ஒரு கடிதம். 'அஞ்சாத சிங்கம்’ என்று கட்சிக்காரர்களால் அழைக்கப்படும் வீரபாண்டி ஆறுமுகத்தை நிலைகுலைய வைத்துள்ளதாம் அந்தக் கடிதம். அந்தக் கடிதத்தின் முக்கியமான வாசகங் களைச் சொல்கிறேன் கேளும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'சேலத்தில் அறிஞர் அண்ணாவுக்கு அமைதி ஊர்வலம் அறிக்கை விடாத நாய்கள்! முரசொலி மாறனுக்கும், பன்னீர்செல்வம், அன்புக்கரசு, தந்தை பெரியார்... ஏன் கழக முன்னோடிகளுக்கு இழவுக் குக்கூட வராதவர்கள், கட்சியை வைத்து எஸ்.ஆர்.எஸ்.ஸுக்கு (வீரபாண்டி ஆறுமுகத்தின் மூத்த மகன் செழியனின் நினைவு தினத்தைச் சொல்கிறது இந்தக் கடிதம்!) அறிக்கை விடுவதா?

மிஸ்டர் கழுகு: அந்தக் கடிதம்!

மறைந்த மகனுக்காக ஓட்டுப் பெட்டியில் மாவட்ட ஊராட்சிக்குக் குத்திப்போட்டது நாம் அல்லவா? வீரபாண்டி ஆறுமுகம், அவர் மகன் ராஜா, பிரபு மட்டும்தான் தி.மு.க-வா? தியாக ரத்தம் உருவாக்கிய கழகத்தில் சமூக விரோதிகளையும், அடிவருடிகளையும், கொத்தடிமைகளையும் வைத்துக்கொண்டு கழகத்தைக் கேவலப்படுத்தாதே!’ என்று தொடர்கிறது!''

மிஸ்டர் கழுகு: அந்தக் கடிதம்!

''வீரபாண்டி ஆறுமுகத்தை விமர்சிக்கும் கடிதம். அவ்வளவுதானே?''

''அவசரப்படாதீர். இதில் ஒரு நர்ஸ் கதை வருகிறது. வீரபாண்டி ஆறுமுகத்தைவிட அவரது மகன் ராஜா அதிகமாக விமர்சிக்கப்படுகிறார். இந்தக் கடிதம் முழுக்க முழுக்க டைப்ரைட்டிங் மெஷினில் அடிக்கப்பட்டுள்ளது. இடையிடையே பேனாவால் எழுதப்பட்டுள்ளது. பேனாவால் எழுதப்பட்ட பகுதிகள்தான் வில்லங்கமாக இருக்கின்றன. அதையும் சொல்லிவிடுகிறேன்.

'இட்லர், முசோலினி முதல் சதாம் உசேன் வரை சர்வாதிகாரமும் ஆணவமும் சுயநலமும் ஜெயித்தது இல்லை...’ என்று டைப் செய்யப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து எழுத்தில், 'ராமஜெயம் போல் ஆலடி அருணா போல் இவனும் வரலாறு காண்பான்’ என்று எழுதப்பட்டுள்ளது!''

''ஐயோ!''

மிஸ்டர் கழுகு: அந்தக் கடிதம்!

''அதனால்தான் சேலம் வட்டாரத்தை மட்டும் அல்ல, தி.மு.க. முக்கியப் புள்ளிகள் பலரும் இந்தக் கடிதம் பற்றிக் கேள்விப்பட்டதும் கதி கலங்கியதாகச் சொன்னேன். சேலத்தில், மாவ ட்ட தி.மு.க. செயலாளர் வீர பாண்டி ஆறுமுகத்துக்கும் மாநில இளைஞர் அணிச் செயலாளர் பனமரத்துப்பட்டி ராஜேந்திரனுக்கும் இலைமறை காயாக இருந்த மோதல் சில நாட்களாக உச்சக்கட்டத்தை அடைந்து உள்ளது. இதை யார் எழுதியது எனத் தெரியவில்லை. 'இதேபோன்ற கடிதம் 2004-ல் வந்தது. அந்தக் கடிதத்தில்தான் இப்போது பேனாவால் திருத்தி மீண்டும் விட்டுள்ளார்கள்’ என்று விவரம் அறிந்த சிலர் சொல்கிறார்கள். 'முடித்து வைப்போம் இவர்களின் கழகப் போர்வை போட்ட கொள்ளைகளை... வீழ்த்துவோம் தருமப்படி’ என்ற வார்த்தைகளை வைத்து போலீஸும் பரபரப்பு அடைந்துள்ளது. பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், 'இந்த மாதிரியான ஈனச் செயல்களை நானோ, என் ஆதரவாளர்களோ ஒருபோதும் செய்ய மாட்டோம்’ என்று சொல்கிறார். இப்போது வீரபாண்டி ஆறுமுகத்துக்கான பாதுகாப்பை அதிகப்படுத்தி இருக்கிறார்களாம்!'' என்ற கழுகார் அடுத்த சப்ஜெக்ட்டுக்கு மாறினார்.

''நடராஜன் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்டதால், தஞ்சாவூர் 26-வது வார்டு கவுன்சிலர் ராஜேஸ்வரன் மற்றும் தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் தனசேகர் ஆகியோரை கட்சியைவிட்டு நீக்குவதாக ஜெயலலிதா அறிவித்ததை கடந்த இதழில் சொல்லி இருந்தேன் அல்லவா? உடனே தனசேகர் மற்றும் ராஜேஸ்வரன் ஆகியோர் தனித்தனியே ஒரு விளக்கக் கடிதத்தை ஜெயலலிதாவுக்கு அனுப்பி இருக்கிறார்கள். அதில், 'அ.தி.மு.க-விலேயே தொடர்ந்து அம்மாவின் ஆணைக்கு இணங்க வாழ்ந்து வருகிறேன். அன்று நடந்த திருமண வீட்டார் எங்களின் நெருங்கிய உறவுமுறை. ஏற்கெனவே எங்களுக்கு 'செய்முறைகள்’ செய்து இருந்தனர். அதைத் திருப்பிச் செலுத்தவே சென்றோம். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களிடம் பேசவில்லை. பார்க்கவும் இல்லை. கனவிலும் அம்மாவின் ஆணைக்கு எதிராகச் செயல்பட நினைத்ததே இல்லை. அறியாமல் செய்த இந்தத் தவறை மன்னித்து விடுமாறு வேண்டுகிறோம்’ என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சமாதானத்தை ஜெயலலிதா ஏற்கிறாரா இல்லையா என்பது போகப்போகத் தெரியும்!''

''சிறுதாவூரில்தானே இருக்கிறார் முதல்வர்?''

''ம். ஜெயலலிதா சிறுதாவூரில் தங்கச் செல்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன், பிரபல நிறுவனத்தின்  சார்பில் மிகப்பெரிய டி.வி அங்கு பொருத்தப்பட்டதாம். சுமார் 160 இஞ்ச் அளவு உள்ளது என்கின்றனர். கிட்டத்தட்ட மினிதியேட்டர். டி.வி இருக்கும் அறையில் இரண்டு பேர் அமரக்கூடிய அளவு சோபா மட்டும் போடப்பட்டுள்ளதாம். அதேபோல், 14 டன் ஏஸி மெஷினும் ரெடி!''

''அவ்வளவு வெயில். அப்பப்பா! சின்னம்மா எப்படி இருக்கிறார்?

''முதலில் அந்த வார்த்தைக்குத் தடை போட்டு விட்டார்கள். சின்னம்மா என்று யாரும் உச்சரிக்கக் கூடாதாம். சசிகலா, ஜூன் 6-ம் தேதி பெங்களூரு கோர்ட்டில் ஆஜராக வேண்டும். அவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு கடந்த 29-ம் தேதி தள்ளுபடி ஆகிவிட்டது. ஆவணங்களின் நகல்களைப் பார்ப்பதற்குத் தனக்கு அனுமதி தர வேண்டும் என்று கோரி இந்த மனுவை சசிகலா தாக்கல் செய்திருந்தார். அதை, நீதிபதி ஏற்கவில்லை. எனவே, நிச்சயம் ஆஜராக வேண்டும். இது வரை சசிகலாவின் பாதுகாவலரைப் போல வந்த ராஜராஜன்... அதாவது இளவரசியின் மருமகனை இனி வரக்கூடாது என்று கார்டன் கண்டிப்பான உத்தரவைப் போட்டுவிட்டதாம். எனவே, புதிதாக ஈரோட்டில் இருந்து ஓர் இளைஞரை நியமித்துள்ளார்கள். அவர்தான் சசிகலாவின் உதவியாளராக வருவாராம். சசிகலாவின் உறவினர்கள் யாராவது பெங்களூரு வந்து சந்திக்கிறார்களா என்றும் கவனிக்கச் சொல்லி இருக்கிறார்கள்!''

''கல்யாணத்துக்குச் செல்லாததால் சசிகலா மீது சொந்தங்கள் கோபமாக இருப்பதாகச் சொல்லி இருந்தீரே?''

''சசிகலாவிடம் இருந்து திடீர் அறிக்கை ஒன்று வரலாம் என்றும் சொல்கிறார்கள். 'என்னுடைய பெயரைச் சொல்லி குடும்பத்தினர் பல காரியங்களைச் செய்து விட்டார்கள். இது எதுவும் எனக்குத் தெரியாது. எனவே, அவர்களது தொடர்புகள் அனைத்தையும் நான் துண்டித்துக்கொண்டேன்’ என்ற அர்த்தத்தில் சசிகலாவின் கடிதம் இருக்க வேண்டுமென சில அழுத்தங்கள் இப்போதே தரப்பட்டு வருகிறதாம்!''

''அப்படி அறிக்கை விடுவாரா சசிகலா?''

''என்ன நிர்பந்தமோ... பார்ப்போம்

இதுவும் ஒரு கல்யாண சர்ச்சைதான்... கும்பகோணம் ராமநாதனை ஞாபகம் இருக்கிறதா? நீண்ட காலமாக கல்யாணம் செய்து கொள்ளாமல் இருப்பவர் அவர். அவருக்குத் திருமணம் நடக்க இருப்பதாகவும்  ஜெயலலிதாதான் நடத்தி வைக்கிறார் என்றும் திடீர் தகவல் பரவியது. பலரும் அவருக்கு வாழ்த்துச் சொல்ல ஆரம்பித்தார்கள். ஆனால் மனிதர், 'இல்லைங்க.. இல்லைங்க...’ என்று பதில் சொல்லி வருகிறார். 'அம்மா ஆட்சிக்கு வந்து நானும் எம்.எல்.ஏ. ஆனால்தான் கல்யாணம் என்று சொன்னேன். ஒண்ணுதான் நடந்துள்ளது. நான் எம்.எல்.ஏ. ஆகவில்லையே’ என்று காரணம் சொல்கிறாராம்!'' என்றபடி கழுகார் ஜூட்.

 சிங்கிள் டீ படுத்திய பாடு!

கோட்டையில் உயர் அதிகாரி ஒருவரின் அறையில் நடந்த கூத்து இது!

செயலாளர் அந்தஸ்தில் இருக்கும் அதிகாரி அவர். அவரது அறைக்கு இன்னும் இரண்டு அதிகாரிகள் சென்றார்கள். உதவியாளர் இல்லாததைப் பார்த்த அதிகாரிகளில் ஒருவர் அங்கு இருந்த டீ கிளாஸ்களைக் கழுவி ஊற்றிக் கொடுத்துள்ளார். அந்த நேரம் பார்த்து உதவியாளர் வந்துவிட்டார். யார் கிளாஸைக் கழுவினார்கள் என்று குழம்பிப்போன உதவியாளர், செயலாளர் அந்தஸ்து உள்ள அதிகாரியிடம், ''நீங்க ஏன் சார் கிளாஸைக் கழுவுனீங்க'' என்று செல்லமாகக் கேட்கப் போக... அந்த அதிகாரிக்கு கோபம் வந்து கொட்டித் தீர்த்துவிட்டார். 'கிளாஸையும் கழுவாம... என்னிடமே வந்து கேட்கிறியா?’ என்று சொல்லி அவரை சஸ்பெண்ட் செய்துவிட்டார். உதவியாளர் சங்கத்துக்கு பஞ்சாயத்து போனது. கோட்டை உதவியாளர்கள் மொத்தமும் திரண்டு வந்துவிட்டார்கள். வேறு வழி இல்லை. சஸ்பெண்ட் ரத்தானது. ஆனால் வேறு அதிகாரி அறைக்கு டிரான்ஸ்பர் செய்துவிட்டார்கள்.

ஒரு சிங்கிள் டீ கிளாஸுக்கு இவ்வளவு பெரிய பஞ்சாயத்தா?

 ஷீலாவுக்கு சிக்கலா?

 முதலமைச்சரின் செயலாளர்களுக்கு குறிப்பிட்ட துறைகளை ஒதுக்கி அதனைக் கவனிக்கச் சொல்வார்கள். முதல்வரின் முதலாவது செயலாளராக இருந்த ஷீலா ப்ரியா, இது வரை உள்துறை போலீஸைக் கவனித்து வந்தார். திடீரென அதை மூன்றாவது செயலாளரான வெங்கடரமணனிடம் ஒப்படைத்து விட்டார்களாம்!

மிஸ்டர் கழுகு: அந்தக் கடிதம்!