Published:Updated:

சட்டமன்றத் தேர்தலும் கூட்டணிக் கணக்குகளும் - ஓர் அலசல்! #TNElection2021

தேர்தல்
தேர்தல்

2021 சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு மவுசு அதிகம், எந்தக் கட்சிகளை மையமாகவைத்து கூட்டணிக் காய்நகர்த்தல்கள் இருக்கும் என்பதை அலசி ஆராய்கிறது இந்தக் கட்டுரை.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள், அவை தொடர்பான செய்திகள், விவாதங்களைப் பின்னுக்குத் தள்ளி 2021 தேர்தல் குறித்த விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. ஒருபுறம் மத்திய அரசின் திட்டங்கள், புதிய சட்டங்கள் குறித்து கட்சிகள் மிகக் கடுமையாக மோதிக்கொண்டாலும், மறுபுறமும் தேர்தல் வேலைகளையும், கூட்டணி குறித்த காய் நகர்த்தல்களையும் தொடங்கிவிட்டன.

தமிழகத் தேர்தல் அரசியல் களத்தில் கூட்டணிக்கென்று மிக முக்கியப் பாத்திரம் இருக்கிறது. பெரும்பாலான தேர்தல்களில் கூட்டணிதான் வெற்றி, தோல்வியைத் தீர்மானித்திருக்கறது. அந்தவகையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கூட்டணி அல்லது எந்தக் கட்சிகளைத் தங்கள் கூட்டணியில் தக்கவைப்பது அல்லது தங்களின் கட்சிக்கு இழுப்பது என்ற வேலையை இப்போதே தொடங்கிவிட்டன இரு பெரும் திராவிடக் கட்சிகளும்.

விஜயகாந்த்
விஜயகாந்த்

ஆரம்பகாலங்களில் காங்கிரஸ், அதற்கடுத்து மூப்பனார் தனியாகச் சென்று கட்சி ஆரம்பித்த காலத்தில் த.மா.கா, பாட்டாளி மக்கள் கட்சி உருவாகி, தங்கள் வாக்குவங்கியை நிரூபித்த பிறகு அந்தக் கட்சிக்கு என தமிழக அரசியல் களத்தில் ஒரு மவுசு இருந்தது. 2006-ம் ஆண்டில் விஜயகாந்த் தனியாகக் கட்சி ஆரம்பித்து முதல் தேர்தலிலேயே எட்டு சதவிகிதத்துக்கும் அதிகமாக வாக்குகளைப் பெறவும், அந்தக் காற்று விஜயகாந்த் பக்கம் அடிக்க ஆரம்பித்தது. அது 2016 சட்டமன்றத் தேர்தல் வரைக்கும்கூட நீடித்தது.

அந்தவகையில் வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில், எந்தக் கட்சிக்கு மவுசு அதிகம், எந்தக் கட்சிகளை மையமாகவைத்து கூட்டணிக் காய்நகர்த்தல்கள் இருக்கும் என்பதை அலசி ஆராய்கிறது இந்தக் கட்டுரை.

வரும் தேர்தலில் எந்தக் கட்சிகளை நோக்கித் தேர்தல் கூட்டணி அரசியல் களம் சுழலும் என்பதற்கான சமிக்ஞைகள் சமீபமாகத் தெரியத் தொடங்கியிருக்கின்றன. பா.ம.க - தி.மு.கவுடன் கூட்டணி அமைக்கவிருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகிக்கொண்டேயிருக்கின்றன. மறுபுறம் விடுதலைச் சிறுத்தைகள் தரப்பு தி.மு.க தலைமையிடம் இது குறித்துப் பேசி தெளிவு பெற்றுக்கொள்ளும் செய்திகளையும் காண முடிகிறது. தவிர, ``பா.ஜ.க மற்றும் பா.ம.க-வுடன் கூட்டணி இல்லை என அறிவித்திருக்கிறார்'' அந்தக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.

பா.ம.க நிறுவனர் ராமதாஸ்
பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

2019 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க மாபெரும் வெற்றியைப் பெற்ற போதிலும், 22 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் மொத்தமுள்ள 13 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அதிலும் அ.தி.மு.க வெற்றி பெற்ற தொகுதிகளில் பா.ம.க-வுக்கு முக்கியப் பங்கு இருந்தது. அதன் பொருட்டு, வரும் தேர்தலில் எந்த வகையிலும் வெற்றியை நழுவ விட்டுவிடக் கூடாது என நினைக்கும் தி.மு.க எப்படியாவது பா.ம.க-வைத் தங்களின் கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என நினைக்கிறது. அதற்கான பேச்சுவார்த்தைகளையும் தொடங்கிவிட்டது. அதேவேளையில், தங்களது கூட்டணியிலிருந்து வி.சி.க விலகுவதையும் அந்தக் கட்சி விரும்பவில்லை. காரணம், வி.சி.க விலகி, அந்தக் கட்சி அ.தி.மு.க-வுடன் கூட்டணிவைத்தாலும் தங்களின் வெற்றியை அது பாதிக்கும் என்று கருதுகிறது தி.மு.க.

அதற்கேற்றாற்போல, பா.ம.க நிறுவனர் ராமதாஸும் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ``கடந்த 2016 தேர்தலில், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகளுடன் கூட்டணி சேர வாய்ப்பில்லை எனச் சில கட்சிகளைப் பட்டியலிட்டிருந்தீர்கள். இப்போதும் அந்தக் கொள்கையைக் கடைப்பிடிக்கிறீர்களா?" என நெறியாளர் கேட்டபோது, ''எந்தக் கட்சியும் ஒதுக்கப்பட வேண்டிய கட்சியல்ல'' என்றுபதிலளித்தார். மீண்டும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைக் குறிப்பிட்டுக் கேட்க, 'விடுதலைச் சிறுத்தைகளோடு எனக்கு எப்போதும், எந்தப் பகையும் இருந்ததில்லை' என்று பதிலளித்திருந்தார் மருத்துவர் ராமதாஸ்.

திருமாவளவன்
திருமாவளவன்

ராமதாஸின் இந்தப் பதில், தி.மு.க அந்தக் கட்சியை அணுகுவதற்கு கூடுதல் கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிறது. மேலும், பா.ம.க-வுக்காக வி.சி.க-வை கூட்டணியில் இருந்து கழற்றி விடுவது வாக்குரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் தி.மு.க மீதான விமர்சனங்களுக்கு வழி வகுத்துவிடும் என யோசிக்கிறது தி.மு.க தலைமை. அந்தவகையில், கூட்டணியில் ஏற்கெனவே இருக்கும் வி.சி.க-வைத் தக்க வைத்துக்கொண்டே, பா.ம.க-வையும் உள்ளிழுத்து விடவேண்டும் என்பதில் தீவிர வேகம் காட்டிவருகிறது. வி.சி.க தரப்பில் இது குறித்துக் கேள்வியெழுப்பினால், ''பா.ம.கவை கூட்டணியில் சேர்த்துக்கொள்வதில்லை'' என தற்போது உறுதியளித்துவிட்டு, தேர்தல் நேரத்தில் சமாதானம் செய்துகொள்ளலாம் எனத் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன.

எந்தக் கட்சிக்கு எவ்வளவு சீட்டு... தி.மு.க, அ.தி.மு.கவின் கூட்டணிக் கணக்கு! #TNElection2021

மறுபுறம், அ.தி.மு.கவைப் பொறுத்தவரை, இந்தத் தேர்தலில் பா.ஜ.க-வை எப்படியும் கழற்றிவிட்டுவிட வேண்டும் என்கிற தீவிர முனைப்பில் இருக்கிறது, அந்தக் கட்சி. பா.ஜ.க விலகும்போது தே.மு.தி.க-வும், புதிய தமிழகம் போன்ற கட்சிகளும் தானாக விலகிவிடும். அப்படி விலகாதபட்சத்தில், தாங்கள் கொடுக்கிற இடங்களைப் பெற்றுக்கொண்டால் மட்டுமே தே.மு.தி.கவை கூட்டணியில் வைத்துக்கொள்ள திட்டமிட்டிருக்கிறது அ.தி.முக. ஆரம்பத்தில், பா.ம.க-வையும் முரண்டு பிடித்தால் கூட்டணியில் வைத்துக்கொள்வது குறித்து பரிசீலிக்கலாம் என நினைத்திருந்தது அ.தி.மு.க தலைமை. ஆனால், மருத்துவர் ராமதாஸின் சமீபத்திய பாஸிட்டிவ் அப்ரோச்சும், தி.மு.க தங்கள் கூட்டணியில் பா.ம.க-வை சேர்த்துக் கொள்ளக் காட்டிவரும் வேகத்தையும் பார்த்த அ.தி.மு.க தலைமை, அந்த முடிவில் சற்று பின்வாங்கியிருப்பதாகவே தெரிகிறது. பா.ம.க-வுடன் சில சமரசங்கள் செய்துகொள்ளலாம் என்கிற முடிவுக்கு வந்திருப்பதாகவும் தெரிகிறது. ஒருவேளை பா.ம.க - தி.முக கூட்டணிக்குச் சென்றுவிட்டால், வி.சி.க-வை எப்படியாவது தங்களது கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும். பா.ம.க-வால் ஏற்படும் வாக்கு இழப்பை வி.சி.கவை வைத்துச் சரிக்கட்டிவிடவேண்டும் என நினைக்கிறது அ.தி.மு.க தலைமை.

அ.தி.மு.க தலைமை நிர்வாகிகள்
அ.தி.மு.க தலைமை நிர்வாகிகள்

தவிர, தேர்தல் அரசியலில் குறைவான வாக்கு வங்கியைக்கொண்ட கட்சியாக இருந்தாலும்கூட, தங்கள் கூட்டணியில் இருந்தால் தங்களுக்கு பலம்தான் என்றே இரண்டு திராவிடக் கட்சிகளுமே நினைக்கும். அந்தவகையில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் சிறிய கட்சிகளுக்கான தேவை, எதிர்பார்ப்பு இருக்கிறது. கூடுதலாக, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கொங்குப் பகுதியில் தங்களின் வாக்குவங்கி அதிகரித்திருந்தாலும், மாநிலத்தில் அ.தி.மு.க, மத்தியில் பா.ஜ.க ஆகிய கட்சிகளுக்கான எதிர்வாக்குகள் அப்படியே தி.மு.க-வுக்குத் திரண்டதாலேயே அது சாத்தியமானது. தவிர நாடாளுமன்றத் தேர்தலும், சட்டமன்றத் தேர்தலும் ஒரே மாதிரியானவை அல்ல. ஒருவேளை, அ.தி.மு.க, பா.ஜ.க ஆகிய இரண்டு கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டால், அது தங்களுக்குச் சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம்., அதனால், கொங்குப் பகுதியில் கணிசமான கவுண்டர், அருந்ததியர் வாக்குகளை வைத்திருக்கும் தே.மு.தி.க-வை கூட்டணிக்குக் கொண்டு வந்து அதைச் சமாளிக்கலாம் எனவும் தி.மு.க திட்டமிடுவதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணிக்கான காய்நகர்த்தல்கள், பேச்சுவார்த்தைகள், வியூகங்கள், மக்கள்நலனுக்கான அறிவிப்புகள் ஆகியவற்றைப் பொறுத்து வாக்குவங்கியில் மாற்றம் ஏற்படலாம்.

பொறுத்திருந்து பார்ப்போம்.

அடுத்த கட்டுரைக்கு