Published:Updated:

கோபாலபுரத்தில் ராஜாத்தி அம்மாள்!

கருணாநிதி பிறந்த நாள் டெலிகாஸ்ட்

கோபாலபுரத்தில் ராஜாத்தி அம்மாள்!

கருணாநிதி பிறந்த நாள் டெலிகாஸ்ட்

Published:Updated:
##~##

ழ விவகாரத்தை வைத்தே, தனது பிறந்த நாளில் அரசியல் சதுரங்கக் காய் நகர்த்தி இருக்கிறார் கருணாநிதி. கோபாலபுரம், சி.ஐ.டி. காலனி, அறிவாலயம், விருகம்பாக்கம் என்று களை கட்டிய கருணாநிதியின் 89-வது பிறந்த நாள் ஹைலைட்ஸ். 

சி.ஐ.டி. காலனி: கருணாநிதி படத்துக்குக் கீழே 89 என்ற எண்ணும், சச்சின் படத்துக்குக் கீழே 100 என்ற எண்ணையும் எழுதி, 'சதம் அடிக்கக் காத்திருக்கும் சரித்திரத் தலைவரே’ என்று போஸ்டர்கள் பளிச்சிட்டன. இன்னொரு போஸ்டரில் கோயில் கோபுரத்தின் படத்தைப் போட்டு, 'தி.மு.க.வின் கோ(பால)​புரமே’ என்று எழுதி நாத்திகர் கருணாநிதியை ஆராதித்து இருந்தனர்.

அதிகாலை விடிந்தபோது கருணா​நிதியின் பிறந்த நாள் கொண்டாட்டம் சி.ஐ.டி. காலனியில்தான் ஆரம்பமானது. ராஜாத்தி அம்மாள், கனிமொழி சகிதமாக மரக்கன்று ஒன்றை நட்டுவிட்டுக் கிளம்பினார். மாலையில் மீண்டும் சி.ஐ.டி. காலனி​யில் கருணாநிதி ஆஜர். சி.ஐ.டி. காலனிக்கு நெருக்கமான வி.ஐ.பி-கள் மட்டும் வாழ்த்துச் சொல்ல வந்து போனார்கள்.  

கோபாலபுரத்தில் ராஜாத்தி அம்மாள்!

கோபாலபுரம்: மனைவி தயாளு அம்மாள், அழகிரி, ஸ்டா​​லின், தமிழரசு, செல்வி, மாறன் குடும்பத்தினர் புடைசூழ கேக் வெட்டினார் கருணாநிதி. பக்கத்தில் இருந்த செல்விவீட்டுக்கு உறவுகள் எல்லாம் ஒரு எட்டுப் பார்த்துவிட்டு போக, அழகிரி குடும்பம் மட்டும் அங்கே போக​வில்லை. அரசியல் வி.ஐ.பி-களின் வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டு, பெரியார், அண்ணா சமாதிகளில் அஞ்சலி செலுத்தப் புறப்பட்டார். அந்த நேரம் கோபாலபுரம் வந்தார் குஷ்பு. ரொம்ப நேரம் காத்திருந்துவிட்டு, கடைசியில் சந்திக்காமலேயே கிளம்பிப் போனார்.

அறிவாலயம்: அறிவாலயத்தில், தலைவர்களையும் தொண்டர்களையும் சந்தித்தார். கடந்த ஆண்டைப் போல   இந்த ஆண்டு  கூட்டம் இல்லை. வழக்கமாக அண்ணா சாலையில் இருந்து கலைஞர் அரங்கம் வரையில் வரிசையில் காத்துக் கிடப்பார்கள் தொண்டர்கள். எக்கச்சக்கக் கூட்டத்தை எதிர்பார்த்து சவுக்குக் கட்டைகளை எல்லாம் கட்டிவைத்தும், ஏனோ கூட்டமே இல்லை. 'கடந்த 10 ஆண்டுகளாக கருணாநிதியின் பிறந்தநாள் விழாவைக் கவர் செய்து வருகிறோம். இன்றுபோல் கூட்டம் இல்லாமல் எப்போதும் இருந்தது இல்லை'' என்று வருத்தப்பட்டார்கள் சீனியர் பத்திரிகையாளர்கள்.

கோபாலபுரத்தில் ராஜாத்தி அம்மாள்!

கலைஞர் அரங்கத்தில் இருந்த சொற்பத் தொண்டர்களின் வாழ்த்துகளைப் பெற்றார் கருணாநிதி. திடீரென அவர் பின்னால் இருந்த பேனர் சரிந்து விழவே, உடனே, பக்கத்து அறைக்கு அழைத்துப் போனார்கள். ஸ்டாலின்கூட மிக தாமதமாகத்தான் வந்தார். மீண்டும் மேடைக்கு வந்த கருணாநிதி, கொஞ்ச நேரம் இருந்துவிட்டு அப்செட் ஆகி, மதியம் 12 மணிக்கே கிளம்பிப் போனார். கருணாநிதிக்கு வந்த சால்வைகள், பரிசுப் பொருட்களை கோபாலபுரம், சி.ஐ.டி. காலனிக்கு வழங்குவதற்காக இரண்டு பங்குகளாகப் பிரிக்கும் வேலையை கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரி கணேசன் கண்ணும் கருத்துமாகச் செய்து, அனுப்பி வைத்தார்.

விருகம்பாக்கம்: அறிவாலயத்தில் கூட்டம் இல்லாததால் நிர்வாகிகளுக்கு விழுந்த டோஸ்.... விருகம்​பாக்கத்தில் கூட்டம் முட்டி மோதியது. அதிலும் பெண்கள் ஏராளம். கோபாலபுர வீட்டின் வரவேற்பறையை அப்படியே மேடை ஆக செட் அமைத்து இருந்தனர்.. ஆளுயுரக் கடிகாரம், அலமாரியில் புத்தகங்கள், கண்ணாடிப் பெட்டியில் இருக்கும் அஞ்சுகத்தின் சிலை, டீபாய், அண்ணா புகைப்படம், திரைச்சீலை, சோபா என்று கருணாநிதி அறையில் இருந்த அத்தனை விஷயங்களும் அப்படியே. கருணாநிதி அறையின் டீபாயில் இருக்கும் காலிங் பெல் உட்படக் கச்சிதம்.

அலமாரியில் இருந்த புத்தங்களை நோட்டம் விட்ட போது ஐ.டி., கம்ப்யூட்டர், மேனேஜ்மென்ட், கம்பெனி லா, கமர்சியல் லா என்று சம்பந்தமே இல்லாத புத்தகங்கள் இருந்தன. கருணாநிதியின் வலதுபுறத்தில் இருந்த சோபாவில் ராஜாத்தி அம்மாள், விஜயா தாயன்பன், சற்குணபாண்டியன், துரைமுருகன் ஆகியோர் அமர்ந்திருந்தார்கள். இடது புறத்தில் ஸ்டாலின், ஆற்காட்டார் போன்றவர்கள் அமர்ந்திருந்தார்கள். கோபாலபுரம் வீட்டில் ராஜாத்தி அம்மாள் கால் எடுத்து வைத்தது இல்லை. அந்தக் குறையையும் இந்த கோபாலபுரம் செட் போக்கிவிட்டது. ''கோபாலபுரம் வீட்டில் ராஜாத்தி அம்மாள் இருக்கிறாரே...'' என்று கலகலப்பானார்கள் கட்சிப் பிரமுகர்கள்.  மேடை செட்டில் இடம் இல்லாத காரணத்தால், தயாநிதி மாறன், பொன்முடி, வீரபாண்டி ஆறுமுகம்  ஆகியோர் மேடைக்குப் போகும் பாதையில் உட்கார்ந்து இருந்தார்கள். விருகம்பாக்கத்தில் 1967 தேர்தலில், வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அண்ணா ஆட்சியைப் பிடித்தார். அதே இடத்தில்தான் இப்போது பொதுக் கூட்டம்.  

காலையில் தலைவரைப் பார்க்க முடியாமல் போனதால், கூட்டத்துக்கு ஆஜர் ஆனார் குஷ்பு. அவருடன் கவிஞர் சல்மாவும் வந்திருந்தார். நாற்காலிகள் கிடைக்காததால் மேடையின் கீழே குஷ்பு நின்று கொண்டு இருக்க, கொஞ்ச நேரத்துக்குப் பிறகு ஸீட் கிடைத்தது. முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் வந்தபோது, ஸீட் இல்லாததால் குஷ்பு எழுந்து இடம் கொடுத்தார். பிறகு ஒரு நாற்காலி கிடைக்கவும் குஷ்பு அதில் அமர்ந்தார். அடுத்து மைதீன்கான், ஆவுடையப்பன் வந்த போதும் எழுந்து இடம் கொடுத்தார். வசந்தி ஸ்டான்லி வந்தபோதும் அதே நிலைதான். பெரிய தலைகள் வரும்போதெல்லாம் குஷ்பு தன் நாற்காலியைப் பெருந்தன்மையோடு விட்டுக்கொடுத்துக்கொண்டே இருந்தார். கூட்டத்தில் இருந்த ஒருவர் குஷ்புவைச் சீண்ட... அவர் கன்னத்தை பளீர் பளீர் எனப் பதமும் பார்த்தார்!

''போலீஸும் மீடியாவும் சேர்ந்துகொண்டு ஜெயலலிதா ஆட்சியைத் தூக்கிப் பிடிக்கிறார்கள். கோபாலபுரத்தில் வைக்கப்பட்ட கலைஞர் போஸ்டர்களை ஜெயலலிதாவின் பார்வையில் படும் என்பதற்காக அகற்றி இருக்கிறார்கள், சில சூரப்புலி போலீஸ்காரர்கள். 1967-ல் அண்ணா இங்கே நடத்திய கூட்டத்தைப் போன்ற எழுச்சி இப்போது திரும்பி இருக்கிறது. அந்தத் திருப்பு முனை மீண்டும் ஏற்படப்போகிறது, வரலாறு திரும்பும். 40 தொகுதிகளையும் கைப்பற்றுவோம். அந்த மகத்துவம் இந்த இடத்துக்கு உண்டு'' என்று துரைமுருகன் சொன்னபோது கூட்டம் ஆர்ப்பரித்தது.

அடுத்துப் பேசிய ஸ்டாலின், ''தேர்தலில் தி.மு.க-வைப் போன்று வென்ற கட்சிகள் வேறு எதுவும் இல்லை. எங்களைப் போன்று தோற்ற கட்சிகளும் கிடையாது. தேர்தலில் தோற்றதால் நம்மை அடக்க நினைக்கிறது ஆளும்கட்சி. தி.மு.க. பனங்காட்டு நரி, சலசலப்புகளுக்கு அஞ்சாது. இந்த இடத்தில்தான் அண்ணா தேர்தல் மாநாடு நடத்தினார்.  தேர்தல் நிதியாக 11 லட்ச ரூபாயைத் தலைவர் கலைஞர் திரட்டிக் கொடுத்தார். அண்ணாவின் கட்டளையை தலைவர் ஏற்றார். தேர்தலில் வெற்றியும் பெற்றார். அதேபோல் நாங்களும் காத்திருக்கிறோம். கட்டளை இடுங்கள்'' என முடித்தார்.

பலத்த கரகோஷங்களுக்கு இடையே பேசிய கருணாநிதி, ''ஈழத் தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்கக் கூடாது என்று சொல்லும் யதேச்​சதிகாரத்தை வீழ்த்த, இலங்கையில் தனித்தமிழ் ஈழம் உருவாக, விழுப்புரத்தில் டெசோ மாநாடு நடைபெறும்'' என்று பிறந்த நாள் செய்தி சொல்லிப் பேச்சை முடித்தார் சிம்பிளாக!  

- எம். பரக்கத் அலி

படங்கள்: சு.குமரேசன்,

சொ.பாலசுப்ரமணியன் 

ஸ்டாலினை வழி மொழிந்த கனிமொழி!

கோபாலபுரத்தில் ராஜாத்தி அம்மாள்!

தி.மு.க மகளிர் அணி சார்பில் அறிவாலயத்தில் நடந்த பிறந்த நாள் விழாவில் ஸ்டாலின், கனிமொழி, ராசாத்தி அம்மாள் உள்ளிட்ட வி.ஐ.பி-க்கள் ஆஜர்.  

நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி, ''கலைஞரைப் போற்றியும் தூற்றியும்தான் தமிழகத்தில் அரசியல் நடந்தாக வேண்டும். இந்த இடத்துக்கு அவர் சாதாரணமாக வந்துவிடவில்லை. இன்று இந்திய அரசியலையே நிர்ணயிக்கும் சக்தியாக மாறி இருக்கிறார். 1969-ல் இருந்து  குடியரசுத் தலைவர் யார் என்பதைத் தீர்மானிப்பதில், முக்கியப் பங்கு வகிக்கிறார். இப்போதுகூட ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை முதலில் கலைஞரிடம்தான் ஆலோசனை கேட்டது காங்கிரஸ். பெட்ரோல் விலை உயர்வைக் கண்டிக்கும் போராட்டத்தில் நாம் தனியாகப் பிரிந்து... என்று சின்ன மௌனம்தான் காத்தார். எந்த முடிவையும் சொல்லவில்லை. ஆனால், அடுத்த சில நிமிடங்களில் நாடு முழுவதும் சேனல்கள் பரபரப்புச் செய்தி வெளியிட்டன. தலைவரின் மௌனமும், ஒற்றைச் சொல்லும்கூட இந்த நாட்டின் அரசியலைத் தீர்மானிக்கும். எண்ணற்ற இளைஞர்களின் நாளைய நம்பிக்கை நட்சத்திரம் என்று ஸ்டாலினைச் சொல்கிறார்கள். அப்படி இல்லை'' என்று கொஞ்சம் பிரேக் விட்டவர், ''அவர் நாளைய நம்பிக்கை நட்சத்திரம் இல்லை. இன்றைய நம்பிக்கை நட்சத்திரம்'' என்று சொல்லி தூள் கிளப்பினார்.!

- தி.கோபிவிஜய்