Published:Updated:

மாவோயிஸ்ட் பூமியில் 7 நாட்கள்!

மாவோயிஸ்ட் பூமியில் 7 நாட்கள்!

மாவோயிஸ்ட் பூமியில் 7 நாட்கள்!

மாவோயிஸ்ட் பூமியில் 7 நாட்கள்!

Published:Updated:
மாவோயிஸ்ட் பூமியில் 7 நாட்கள்!
##~##

''இது வித்தியாசமான யுத்தக்களம். எதிரி​களுக்குச் சீருடை கிடையாது. பொதுமக்கள் போலத்தான் வேஷம் போட்டுக்கொண்டு அவர்கள் வருவார்கள். நாலா புறங்களில் இருந்தும் அவர்கள் வீசும் குண்டுகள் பறந்து வரலாம். ஆனால், எங்களுடைய ஒரு துப்பாக்கி ரவை கூட பொதுமக்கள் மீது பாய்ந்துவிடக் கூடாது. நடுக்காட்டில், கும்மிருட்டில், கண்ணைக் கட்டிக்கொண்டு குறிதவறாமல் சுடுவதுபோல என்று வைத்துக்கொள்ளுங்களேன். அப்படித்தான் போரிட்டுக்கொண்டு இருக்கிறோம். நீங்கள் இப்போது நிற்கும் இடத்தில் 49-வது நாளாக சண்டை நடக்கிறது. இதுவரை, மாவோயிஸ்ட் தரப்பில் இரண்டு பேர் கொல்லப்பட்டு உள்ளனர். மூவருக்குப் படுகாயம். எங்கள் தரப்பில் ஒருவரை இழந்து விட்டோம். ஆறு பேருக்குப் பலத்த காயங்கள். எதுவுமே சுலபம் இல்லை.'' 

- நம்மிடம் நிதானமாகத்தான் பேசுகிறார் விஜய​குமார். ஆனால், அவருடைய கண்கள் சுற்றிலும் கண்காணித்துக்கொண்டே இருக்கின்றன.

''மூன்று லட்சம் வீரர்களை வழிநடத்தும் அனு​பவம் எப்படி இருக்கிறது?''  

''நாம் சரியாக இருந்தால், நமக்குப் பின்னால் இருப்பவர்களும் சரியாக இருப்பார்கள். என்னை  என் வீரர்கள் கவனித்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களை என் நடவடிக்கைகளால்தான் வழிநடத்து​கிறேன். சவாலான நேரம் என்றால், எனக்குக் கீழே இருப்பவர்கள் ஏதாவது தப்பு செய்துவிட்டு, என் முன்பு அவர்கள் நிற்கும் நேரம். கண்ணியமான, தைரியசாலியான அதிகாரி ஒருவர் தவறு செய்கிறார் என்றால், நான் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும். அதற்கு முந்தைய காலங்களில் அவர் எந்த ஒழுங்கு நடவடிக்கைக்கும் ஆளாகாமல் மிகச்சிறப்பாகப் பணி செய்திருப்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவும் வேண்டும். அந்த மாதிரி தருணங்கள்தான் சவாலாக இருக்கும். மற்றபடி, எனக்குக் கீழே இருப்பவர்களின் எண்ணிக்கையை நான் தனித்தனியாகப் பார்ப்பது இல்லை. எனக்குக் கீழே ஒரு வீரர் இருக்கிறார். அவரோடு நானும் ஓடிக்கொண்டு இருக்கிறேன். அப்படித்தான் எப்போதும் நினைப்பேன்.''

மாவோயிஸ்ட் பூமியில் 7 நாட்கள்!

''ஜார்கண்டில் இதுவரை எத்தனை ஆபரேஷன்களை நீங்கள் நடத்தி இருக்கிறீர்கள்? எல்லா​வற்றிலும் வெற்றி கிடைத்ததா?''

''ஜார்கண்ட்டில் இப்போது நாங்கள் நடத்திக்​கொண்டிருக்கும் ஆபரேஷனின் பெயர்... 'ஆபரேஷன் ஆக்டோபஸ்’. முதல் தாக்குதலை சரண்டாவில் நடத்தினோம். அடுத்து சர்ஜூவில். மூன்றாவதாக புர்ஹா பகட்டில் தாக்குதல் நடத்தினோம். இவை திட்டமிட்டு நடத்தப்பட்ட ஆபரேஷன்கள். ஆனால், சத்தீஸ்கரிலோ, ஜார்கண்​டிலோ எல்லைப் பகுதிகளில் அடிக்கடி துப்பாக்கிச் சண்டைகள் நடப்பது சகஜம். திடீரென்று நாம் இப்போது நிற்கும் இடங்களை எதிரிகள் சூழ்ந்துகொண்டால், என்ன செய்வோம்? போன வாரம் நவீன்மாஞ்சி (மாவோயிஸ்ட் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர்) அவருடைய மூன்றாவது மனைவியின் வீட்டுக்கு வந்திருப்பதாகத் தகவல் கிடைத்தது. சுற்றி வளைத்துப் போலீஸார் பிடித்தார்கள். இதற்கெல்லாம் கணக்கே கிடையாது. ஆனால், மாவோயிஸ்ட்களைத் துரத்துவதோடு விட்டுவிடுவது இல்லை. அவர்களுடைய முகாம்களை எங்கெல்லாம் அழித்து, அவர்களைத் துரத்துகிறோமோ, அங்கெல்லாம் எங்கள் படையின் நிரந்தர முகாம்களை அமைத்து விடுகிறோம்.  இதை எல்லாம் வெற்றி என்று சொல்வதைவிட, இது தொடர்ச்சியான ஒரு போர் நடவடிக்கை என்றுதான் சொல்ல வேண்டும்.''

''வீரப்பன் ஆபரேஷன், உளவுத் தகவலை அடிப்​படையாக வைத்துத்தான் வெற்றி பெற்றதாக முன்பு சொல்லி இருந்தீர்கள். தொழில்நுட்ப உளவு - மனித உளவு இரண்டையும் சேர்த்து பயன்படுத்தி வெற்றி பெற்​றோம் என்று சொன்னீர்கள். இங்கேயும் அதே பாணிதானா?''  

''ஆமாம். படை வேறு... உளவுப் பிரிவு வேறு. இவர்கள் கொடுக்கும் துல்லியத் தகவல் அடிப்படையில்தான் படையினரால் அதிரடித் தாக்குதல் நடத்த முடியும். இதையெல்லாம் மனதில் வைத்துத்தான், புதிய உளவுப்பிரிவு ஒன்றை சமீபத்தில் மத்திய அமைச்சர் சிதம்பரம் ஆரம்பித்து வைத்தார். மேலும், 3,500 பேர்கொண்ட உளவுப்பிரிவை நாடு முழுவதும் தயார் செய்து இருக்கிறோம். அதிரடிகளைப் பொறுத்திருந்து பாருங்கள்!''

''இந்தத் தாக்குதல் யுக்தியில் உங்களின் குரு யார்?''

மாவோயிஸ்ட் பூமியில் 7 நாட்கள்!

''பிரிட்டிஷ் படையின் ஃபீல்டு மார்ஷல் பெர்னார்டு மன்ட்கோமெரி. இரண்டாம் உலகப்போரில் மிகச்சிறந்த ராணுவத் தளபதியாக விளங்கியவர். அவரது போர் யுக்திகள் எனக்குப் பிடிக்கும். ராணுவ, போலீஸ் பணியில் இருக்கும் ஒவ்வொருவரும் அவரைப் பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். இங்கிலாந்து ராணுவம் மிகவும் வலுவுடையதாக மாறியது அவருடைய சாதனையால்தான். ஒரு சில மாதங்களில் 10 லட்சம் வீரர்களுக்கு முறைப்படி பயிற்சி கொடுத்து போருக்குத் தயார் செய்தவர். அவரது பெயரை கூகுளில் தட்டிப்பாருங்கள். அவரது சாதனை நுணுக்கங்​களைப் படித்துப் பிரமித்துப்போவீர்கள்.''

''சரி, மாவோயிஸ்ட் பிரச்னையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''ஓர் அரசு ஊழியனாக இருக்கும் நான் இதுபற்றி கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. அரசு எனக்குக் கொடுத்துள்ள வேலையை நான் செய்கிறேன். அவ்வளவுதான். ஆனால், மக்கள் பாதிப்படையாமல் வேலை செய்கிறோம் என்பதும் இங்கு மோசமான சூழலில் இருக்கும் மக்களின் வாழ்க்கைச் சூழலை மேம்படுத்தத் தேவையானவற்றை கவனிக்கிறோம். அரசாங்கமும் மக்களுடைய நிலையை மாற்ற முயற்சி எடுக்கிறார்கள்.''

''அப்பாவி மக்களைப் படையினர் கைதுசெய்து துன்புறுத்துவதாகவும் சுட்டுக்கொல்வதாகவும் மனித உரிமை ஆர்வலர்கள் சொல்கிறார்களே? அரசியல்​வாதிகளேகூட குற்றம் சாட்டுகிறார்களே?''

''மனித உரிமை மீறல் தொடர்பான புகார்கள் வரவே கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். அதையும் மீறி வந்தால், அதைக் கண்டுகொள்ளாமல் விடுவது இல்லை. ஐ.ஜி. லெவல் அதிகாரியை அனுப்பி விசாரித்து, சம்பந்தப்பட்டவர் தவறு செய்திருந்தால் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கிறோம். ஆனால், இன்னொன்றையும் புரிந்துகொள்ளுங்கள். இங்கே நிஜமாக என்ன நடக்கிறது என்பது மனித உரிமை ஆர்வலர்களுக்குத் தெரியாது. மாவோயிஸ்ட்களிடம் இருந்து வரும் பிரஷர் காரணமாக, அவர்கள் விரும்புகிற மாதிரி அறிக்கை விடும் ஒருசில அரசியல்வாதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தெற்கு ஒடிசாவில் நடந்த பஞ்சாயத்து தேர்தல்களில் 30 சதவிகித தேர்தலில் மாவோ​யிஸ்ட்கள் போட்டி இல்லாமல் ஜெயித்து இருக்கிறார்கள். 'பரவாயில்லையே. ஜனநாயகப் பாதைக்கு அவர்கள் வந்து விட்டார்களே' என்று சந்தோஷப்படலாம். ஆனால், 'அரசியல்வாதிகள் அந்தப் பதவிகளுக்கு வந்துவிடவே கூடாது' என்று மாவோயிஸ்ட்கள் தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள். அதனால் அதிருப்தி அடைந்த அரசியல்வாதிகள் பலர், தங்கள் அரசியலில் பாதையைவிட்டே விலகிவிட்டனர். இது மிகவும் மோசமான அணுகுமுறை. ஏற்கெனவே இருக்கிற அரசியல் அமைப்பை மாவோயிஸ்ட்கள் மொத்தமாக அழிக்கப் பார்க்கிறார்கள். நமது ஜனநாயக அமைப்பில் சில தவறுகள், குறைகள் இருக்கலாம். ஆனால், இதைவிட சிறந்ததை மாவோயிஸ்ட்களால் தர முடியாது!''

''மத்திய அரசுக்கும், சில மாநில அரசுகளுக்கும் மாவோயிஸ்ட் ஒழிப்பு விஷயத்தில் கருத்து வேறு பாடு நிலவும் சூழல், படையினரைப் பாதிக்​கிறதா?''

''மாவோயிஸ்ட்கள் விவகாரத்தில் மத்தியஅரசு எங்களுக்கு என்ன சொல்கிறதோ, அதை மாநில அரசின்  உதவியுடன் செய்கிறோம். இந்த விவகாரத்தை, இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இப்போது நாலைந்து மாநிலங்களில் பரவிஇருக்கும் மாவோயிஸ்ட்கள், நாடு முழுவதும் பரவாமல் தடுக்க வேண்டும். சின்னச் சின்ன பிரச்னைகள் வந்தாலும் பொதுநலன், தேச நலன் கருதி மாவோயிஸ்ட் ஒழிப்பு நடவடிக்கையில் அனைவரது ஒத்துழைப்பும் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பு.''

''பெருநிறுவனங்கள் இங்குள்ள கனிமவளங் களைச் சுரண்டுவதற்காக மக்களை விரட்​டப் பார்க்கின்றன. அவர்களுக்குஎதிராக மாவோ யிஸ்ட்கள் போராடுகிறார்கள். ஆதி​வாசி​களிடமும் கிராமப்புற மக்களிடமும் மாவோயிஸ்ட்​களுக்கு நல்ல செல்வாக்கு இருப்பது வெளிப்​படையாகவே தெரிகிறது. இத்தகைய சூழலில் உங்களது நடவடிக்கைகள் எப்படி வெற்றி​பெறும்?''

''எனக்கும் தெரியும். இங்கே பல வருடங்களாக சில மின் உற்பத்தி நிலையங்கள் இயங்கிவருகின்றன. ஆனால், அதற்குப் பக்கத்துக் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு மின்சாரம் என்றாலே என்ன வென்று தெரியாது. நிறைய வளர்ச்சிப் பணிகள் செய்ய வேண்டி இருப்பதும், அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டியதும் உண்மைதான். இவை எல்லாம் ஒருபுறம் இருந்தாலும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பார்வையில்தான் நான் பேச முடியும். பொதுவாகச் சொன்னால், எங்கள் கூட்டுமுயற்சி நிச்சயமாக பயன் அளிக்கும். இந்தியப் பிரதமர் சொன்னதுபோல, மாவோயிஸ்ட் ஒழிப்பு நடவடிக்கையில் முதல் படி - உள்துறை தொடர்புடையது. இரண்டாவது - மனிதவளத் துறை தொடர்பான வளர்ச்சித் திட்டங்கள். இந்தப்பாதையில்தான் நாங்கள் பயணிக்கிறோம்'' என்று சொல்லிக் கொண்டு இருந்த போது, விஜய குமாரின் கைக்கு ஒரு துண்டுச்சீட்டு வருகிறது.

''நாம் திரும்பவும் இன்னொரு தருணத்தில் சந்திக்கலாமே'' என்றபடி அவசரமாகக் கிளம்புகிறார். ஒரு ஜீப்பில் அவர் ஏற அவரைப் பின்தொடர்ந்து வீரர்கள் சரசரவெனக் கிளம்ப, என்ன விஷயமாக இருக்கும் என்ற நினைப்புடனேயே நாம் புறப்படு கிறோம். தூரத்தில் மனித நடமாட்டம் தெரிந்தது...