Published:Updated:

தலையங்கம் - சபாஷ், சதுரங்க ராஜா!

தலையங்கம் - சபாஷ், சதுரங்க ராஜா!

தலையங்கம் - சபாஷ், சதுரங்க ராஜா!

தலையங்கம் - சபாஷ், சதுரங்க ராஜா!

Published:Updated:
தலையங்கம் - சபாஷ், சதுரங்க ராஜா!
தலையங்கம் - சபாஷ், சதுரங்க ராஜா!

மீண்டும் ஒரு முறை தன் திறமையை உலகத்துக்கு உணர்த்தி இருக்கிறது தமிழகம். கல்வி, இசை போன்ற துறைகளைப் போல அறிவாயுதம் ஏந்தி எதிரியை வெல்லும் சதுரங்க விளையாட்டில் மீண்டும் உலக சாம்பியனாக முடி சூடி இருக்கிறார் விஸ்வநாதன் ஆனந்த்.

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு சிறப்புக் குணம் உண்டு. உடல் வலுவுக்கு, வியாபார உத்திக்கு, விவசாய மேன்மைக்கு என்று நீளும் அந்த வரிசையில், அறிவுச் சிறப்பில் தொடர்ந்து முதல் இடம் வகிப்பது தமிழ்நாடு. தெளிவான திட்டம், எதிரியின் பலம் பலவீனத்தைத் துல்லியமாக மதிப்பிடுதல், துளிக் கவனம் சிதறாத கூர்மை, பத்துப் பதினைந்து படிகள் தாண்டி வரக்கூடிய சூழலை முன்கூட்டியே மனத்திரையில் கணித்துக் காய் நகர்த்தும் தொலைநோக்கு... இப்படி நடைமுறை வாழ்க்கைக்கு நேரடியாகத் தேவைப்படும் பல திறன்களை வளர்த்தெடுப்பது சதுரங்க விளையாட்டு.

விஸ்வநாதன் ஆனந்தைக் கௌரவிக்கும் வகையில் அவருக்கு இரண்டு கோடி ரூபாய் நிதியைப் பரிசாக அறிவித்திருக்கிறது தமிழக அரசு. நல்லது. ஆனால், இதோடு நின்றுவிடக் கூடாது. வெற்றி வீரராகத் தாய் மண்ணில் கால் பதித்ததுமே தன்னை வரவேற்கக் காத்திருந்த பள்ளிக் குழந்தைகளின் மத்தியில் நின்று ஆனந்த் விடுத்திருக்கும் அறைகூவலுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும். ''பள்ளிகளில் சதுரங்க விளையாட்டை மேலும் மேலும் அரசு ஊக்குவிக்க வேண்டும்'' என்று ஆனந்த் கூறி இருக்கிறார்.

தமிழகப் பள்ளிகளில் சதுரங்கத்தை முறையாகப் பயிற்றுவிக்கத் தேவையான முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இந்த விளையாட்டுக்குத் தேவையான ஆர்வத்தையும் தகுதியையும் வளர்த்துக் கொள்ளும்போதே, கல்வி மீதான கவனத்தையும் ஒருமுகப்படுத்திக்கொள்ளும் தகுதி மாணவர்களுக்கு இயல்பாகவே வரும் என்பதையும் அரசு கவனத்தில்கொள்ள வேண்டும்.

விளையாட்டு நல்ல வினையாற்றட்டுமே!