Published:Updated:

ஜெ. சொத்து குவிப்பு வழக்கில் விசாரணை அதிகாரியே சாட்சி சொன்ன அதிசயம்: கருணாநிதி குற்றச்சாட்டு

விகடன் விமர்சனக்குழு
ஜெ. சொத்து குவிப்பு வழக்கில்  விசாரணை அதிகாரியே சாட்சி சொன்ன அதிசயம்: கருணாநிதி குற்றச்சாட்டு
ஜெ. சொத்து குவிப்பு வழக்கில் விசாரணை அதிகாரியே சாட்சி சொன்ன அதிசயம்: கருணாநிதி குற்றச்சாட்டு
ஜெ. சொத்து குவிப்பு வழக்கில்  விசாரணை அதிகாரியே சாட்சி சொன்ன அதிசயம்: கருணாநிதி குற்றச்சாட்டு

சென்னை: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் புலன் விசாரணை அதிகாரியே குற்றவாளிக்காக சாட்சியம் சொன்ன அதிசயத்தைப் பார்த்திருக்கிறீர்களா? என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு கொலை வழக்கிலோ வேறு குற்ற வழக்கிலோ புலன் விசாரணைப் பொறுப்பிலிருக்கும் காவல் துறை அதிகாரி ஒருவர், அந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு வழக்கை எதிர்த்து வழக்காடும் ஒருவருக்கு, அனுசரணையாக தானே ஒரு எதிர் தரப்பு சாட்சியாக கூண்டிலேறுவாரா?

அப்படி ஒரு காவல் துறை அதிகாரி தான் தொடுத்த வழக்கில் எதிர்தரப்புக்கு ஆதரவாக சாட்சி சொல்லி, தன்னிடம் உள்ள ஆவணங்களையும் எதிர் தரப்பிற்கு சாதகமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்வாரா? அப்படி அவர் எதிர்தரப்பு சாட்சியாகவே கூண்டிலேறினால் காவல்துறையும் அரசும் அவரது நடவடிக்கையைக் கண்டு கொள்ளாமல் இருந்து விடுமா?

இந்த அதிசயங்கள் எல்லாம் நடந்து தான் இருக்கின்றன! எங்கே? பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கினை தொடுத்து நடத்துவது தமிழக அரசின் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புத் துறை. அத்துறையைச் சார்ந்த துணை கண்காணிப்பாளரான சம்பந்தம் என்பவர் பெங்களூரு நீதிமன்றத்தில் அவ்வழக்கில் தான் புலன் விசாரணை பொறுப்பு அதிகாரியென்றும், அவ்வழக்கில் மேலும் கூடுதலான விசாரணையைத்தான் மேற்கொள்ள வேண்டும் என்றும் 15.6.2011 அன்று (தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன்) ஒரு மனுவினை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அவரது வேண்டுகோளை ஏற்கக் கூடாது என்று தி.மு.க. சார்பில், பொதுச் செயலாளர் பேராசிரியர் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் "ரிட்" மனு தாக்கல் செய்து, விசாரணைக்குப் பின் சம்பந்தத்தின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டு அவரும் கண்டனத்திற்குள்ளானார்.

இந்த நிலையில் 15.7.2013 அன்று அதே சம்பந்தம் என்ற துணை கண்காணிப்பாளர், குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்காக D.W. 99 ஆக சாட்சியம் அளித்து அவர்களுக்கு சாதகமான ஆவணங்களையும் தாக்கல் செய்துள்ளார்.

எதிர் தரப்பினருக்குச் சாட்சியாக ஒரு காவல்துறை அதிகாரி, அவர் சார்ந்துள்ள துறையினாலேயே தொடரப்பட்டும், நடத்தப்பட்டும் வருகிற ஒரு வழக்கில் யாருடைய உத்தரவின் பேரில் சாட்சி சொல்லியுள்ளார்? அவர் சார்ந்துள்ள விழிப்புணர்வு மற்றும் ஊழல் தடுப்பு காவல்துறை அவரை எதிர் தரப்பிற்குச் சாட்சி சொல்ல உத்தரவிட்டதா? காவல்துறைத் தலைவர் முன் அனுமதி கொடுத்துள்ளாரா? அல்லது உள்துறை செயலாளரோ அல்லது தலைமைச் செயலாளரோ உத்தரவிட்டுள்ளார்களா?

##~~##
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் முதலமைச்சர் ஜெயலலிதா! தமிழக அரசின் விழிப்புணர்வு மற்றும் ஊழல் தடுப்புக் காவல் பிரிவு யாருடைய பொறுப்பிலே உள்ளது? சாட்சாத் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையின்கீழ் தான் தமிழக அரசின் அனைத்துத் துறைகளும் இயங்குகின்றன. அப்படிப்பட்ட முதலமைச்சரின் கீழ் பணியாற்றும் அதிகாரி சம்பந்தம் என்பவர்தான், சிறப்பு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட முதலமைச்சருக்கு ஆதரவாக சாட்சியம் அளித்த அதிசயம் நடந்துள்ளது!
அரசு இயந்திரத்தைத் தவறாக ஒரு வழக்கில் பயன்படுத்தி நீதிமன்றத்தில் சட்டத்துக்குப் புறம்பாகவும், நீதி பரிபாலனத்தை வளைக்கவும் செய்வது யார்? யார்?" அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.