Published:Updated:

தஞ்சை தொகுதி: டி.ஆர்.பாலுவை எதிர்த்து வைத்தியலிங்கம் போட்டியா?

தஞ்சை தொகுதி: டி.ஆர்.பாலுவை எதிர்த்து வைத்தியலிங்கம் போட்டியா?
தஞ்சை தொகுதி: டி.ஆர்.பாலுவை எதிர்த்து வைத்தியலிங்கம் போட்டியா?
தஞ்சை தொகுதி: டி.ஆர்.பாலுவை எதிர்த்து வைத்தியலிங்கம் போட்டியா?

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில்,  தஞ்சை தொகுதியில், டி.ஆர்.பாலுவை எதிர்த்து அமைச்சர் வைத்தியலிங்கம் போட்டியிடப்போவதாக வெளியாகி உள்ள தகவலால் பரபரப்பு பற்றிக்கொண்டுள்ளது உடன்பிறப்புகளிடம்.

தஞ்சாவூர் என்றாலே அரசியல் தடாலடிக்கு பஞ்சமிருக்காது. அதிலும் தி.மு.க. என்றால் கேட்கவே வேண்டாம். இதுவரை உட்கட்சி போட்டியை மட்டுமே சந்தித்து வந்த தி.மு.க., இப்போது ஆளும் அ.தி.மு.க.வையும் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. காரணம் அமைச்சர் வைத்திலிங்கத்தின் அதிரடி அரசியல்.

கடந்த மூன்று முறையாக தி.மு.க. வசம் இருந்த தஞ்சை பாராளுமன்ற தொகுதியை இந்த முறை கைப்பற்றியே தீரவேண்டும் என நினைக்கிறார் அமைச்சர் வைத்திலிங்கம். அதனால்தான் இந்த போட்டி. மூன்று முறையாக தி.மு.க. சார்பில் ஜெயித்து வந்த பழனிமாணிக்கத்திற்கு இந்த முறை உட்கட்சியிலேயே டி.ஆர்.பாலு போட்டிக்கு வந்தார். தலைமையும் அதற்கு ஒத்து ஊதியது. இதனால் பழனிமாணிக்கம் தரப்பினரும் பாலு ஆதரவாளர்களும் அடிதடி வரை கூட போனார்கள். இருந்தும் தலைமை கண்டுகொள்ளவே இல்லை.

தஞ்சை தொகுதி: டி.ஆர்.பாலுவை எதிர்த்து வைத்தியலிங்கம் போட்டியா?

சமீப காலமாக டி.ஆர்.பாலு தி.மு.க. தலைமையாலேயே கட்டம் கட்டப்படுகிறார் எனும் தகவல்தான் இப்போது மாவட்டம் முழுவதும் றெக்கை கட்டுகிறது. காரணம் முரசொலி மாறன் இருந்தவரை தி.மு.க. விற்கான டெல்லி லாபிகளை அவர் கவனித்துக்கொள்வார். அவருக்குப்பிறகு டி.ஆர்.பாலுதான் அந்த பணியை செய்து வந்தார்.

அதன் பலனாகத்தான் கனிமொழியும் இப்போது ராஜ்யசபா உறுப்பினரானார். இனி கனிமொழியே டெல்லி லாபிகளை கவனித்துக்கொள்ளட்டும் என்கிற முடிவிற்கு கலைஞர் வந்து விட்டதாக அந்த கட்சியை சேர்ந்தவர்களே சொல்கிறார்கள். அத்துடன் டி.ஆர்.பாலுவிற்கு கட்சியில் ஒரு பொறுப்பை தந்துவிட தலைமை நினைக்கிறது. அதனால்தான் பழனிமாணிக்கம் தரப்பு சந்தோஷத்தில் இருக்கிறது என்கிறார்கள்.

அதோடு வரும் தேர்தலில் பழனிமாணிக்கம் போட்டியிட்டால் அவரை எதிர் கொள்வது அவ்வளவு எளிதல்ல என்பது அ.தி.மு.க விற்கு தெரியும் அதனாலேயே அமைச்சர் வைத்திலிங்கம் தனது அதிரடி அரசியலை துவக்கி விட்டார் என்றும் சொல்கிறார்கள்.அரசு பணிகள் முடிந்த நேரம் போக முழுக்க முழுக்க தஞ்சை பாராளுமன்ற தேர்தல் பணிகளையே செய்யத்தொடங்கி விட்டார் என்றும் சொல்கிறார்கள்.

வாரம் ஒருமுறை சட்டமன்ற தொகுதி வாரியாக நிர்வாகிகளை அழைத்து அந்த பகுதிகளில் அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பற்றி விலாவாரியாக மக்களிடத்தில் சொல்லுங்கள் என கட்டாயப்படுத்தும் வைத்திலிங்கம், எந்த ஏரியாவில் எது நடந்தாலும் தவறாமல் ஆஜராகி விடுகிறார்.

தஞ்சை தொகுதி: டி.ஆர்.பாலுவை எதிர்த்து வைத்தியலிங்கம் போட்டியா?

கடந்த இருபது நாட்களுக்கு முன்பு பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிராம்பட்டிணத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தகவலை தி.மு.க.வினர் பழனிமாணிக்கத்திடம் சொல்லியிருக்கிறார்கள். விபத்து நடந்த மூன்றாவது நாளே அங்கு ஆஜராகி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு சொல்லிவிட்டுப்போனார் பழனிமாணிக்கம்.

ஆனால், அ.தி.மு.க. தரப்பில் யாரும் வரவில்லை. இந்த தகவல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் அமைச்சரின் காதுக்கு போயிருக்கிறது. உடனே அந்த பகுதியை சேர்ந்த கட்சி நிர்வாகிகளை அழைத்து செம டோஸ் விட்டிருக்கிறார் அமைச்சர். அதன்பின் நேற்று 14 ஆம் தேதி தனி ஆளாக புறப்பட்டு பட்டுக்கோட்டை வந்து, பிறகு கட்சியினருடன் அதிராம்பட்டிணம் சென்றிருக்கிறார். அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கியிருக்கிறார்.

இதுவரை அமைச்சர் வருகிறார் என்றாலே அந்தந்த பகுதி நிர்வாகிகள் ஆளாளுக்கு கார் அணிவகுப்பு நடத்துவார்கள். அதுவும் பட்டுக்கோட்டைக்கு ஐந்து கிலோமீட்டர் தொலைவிலிருந்து இவர்களது ஆர்ப்பாட்டம் தொடங்கிவிடும். ஆனால் இந்த முறை ஒரு கார் கூட அமைச்சரின் கார் பின்னால் வரவில்லை.

அமைச்சரின் தேர்தல் வேலை குறித்து வேறு விதமாகவும் சொல்கிறார்கள். முதல்வர் ஜெயலலிதாவை பிரதமர் பதவியில் உட்கார வைக்க வேண்டும் என அ.தி.மு.க.வினர் நினைக்கிறார்கள். இதைத்தான் எந்த அமைச்சர் எந்த விழாவில் பேசினாலும் பேசுகிறார்கள். எனவே தனக்கான பணிகளை டெல்லியில் செய்வதற்கு நம்பிக்கையான நபர்கள் தேவை என ஜெயலலிதா நினைக்கிறார்.

##~~##
எனவே வரும் பாராளுமன்ற தேர்தலில் தஞ்சை தொகுதியில் வைத்திலிங்கத்தை போட்டியிட வைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. காரணம் வைத்திலிங்கத்தின் மகன் திருமணத்தில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் எனது நம்பிக்கைக்குறியவர் என வைத்திலிங்கத்தை குறிப்பிட்டார். அதனால்தான் அமைச்சரும் வரிந்து கட்டி வேலை செய்கிறார் என்றும் பேசுகிறார்கள்.
இது இப்படியிருக்க, தி.மு.க.விலிருந்து இன்னொரு பேச்சும் கிளம்புகிறது. தஞ்சை தொகுதியில் டி.ஆர்.பாலுதான் போட்டியிட போகிறார். அதற்கான வேலைகளை சைலன்டாக பார்க்கும்படி தலைமையில் இருந்து பாலுவிற்கு தகவல் போய்விட்டது. அதனால் கண்டும் காணாமல் இருப்பது போல் பாலு இருக்கிறார்.
விரைவிலேயே பாலுவின் ஆதரவாளர்கள் தஞ்சை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் முகாமிட போகிறார்கள். இதற்கு முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியும் ஆதரவு தெரிவித்து விட்டார் என்கிறார்கள்.

எது எப்படியோ, இப்போதே பாராளுமன்ற தேர்தல் களைகட்டி விட்டது தஞ்சை தொகுதியில்.

வீ.மாணிக்கவாசகம்