Published:Updated:

மீனவர் பிரச்னைக்கு தமிழக அரசே காரணம்: நாராயணசாமி குற்றச்சாட்டு!

மீனவர் பிரச்னைக்கு தமிழக அரசே காரணம்: நாராயணசாமி குற்றச்சாட்டு!
மீனவர் பிரச்னைக்கு தமிழக அரசே காரணம்: நாராயணசாமி குற்றச்சாட்டு!
மீனவர் பிரச்னைக்கு தமிழக அரசே காரணம்: நாராயணசாமி குற்றச்சாட்டு!

ராமேஸ்வரம்: மீனவர் பிரச்னை நீடிப்பதற்கு தமிழக அரசே காரணம் என மத்திய அமைச்சர் நாராணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அமைச்சர் நாராயணசாமி தனது குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் வந்திருந்தார். ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் நீராடி பின்னர் ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘‘இலங்கை கடற்படையினரால் நமது மீனவர்கள் சுடப்படுவதும், தாக்கப்படுவதும், சிறைபிடித்து செல்வதும் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

தற்போதும் அது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் நம் மீனவர்கள் எல்லை தாண்டி செல்வதுதான் என இலங்கை அரசு குற்றம் சுமத்துகிறது. ஆனால் நம் மீனவர்களோ இதனை மறுக்கின்றனர்.

சமீபத்தில் இலங்கை சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், இலங்கை அதிபர் ராஜபக்ஷே, அமைச்சர் பெரீஷ் ஆகியோரை சந்தித்து தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகளை தடுக்குமாறு வலியுறுத்தினார்.

இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண இருநாட்டு மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதில் இருநாட்டு மீனவர்களும் எந்தந்த காலங்களில் எந்தந்த பகுதிகளில் மீன்பிடிப்பது என்பது குறித்து முடிவெடுத்து அதனை ஒப்பந்தமாக உருவாக்கவேண்டும்.

கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசு இதனை வலியுறுத்தி வருகிறது. முதலில் இதனை ஏற்க மறுத்த இலங்கை அரசு, தற்போது சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இருநாட்டு மீனவ அமைப்புகளுடனான பேச்சுவார்த்தை பற்றி தமிழக அரசுக்கு இருமுறை கடிதம் எழுதியும், பதில் இல்லை.

கடந்த மாதம் பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஜெயலலிதா வரும் டிசம்பர் மாதம் இருதரப்பு மீனவர்களின் பேச்சுவார்த்தையை நடத்தலாம் என கூறியிருக்கிறார். ஆனால் இடைபட்ட காலத்தில் நம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் தொல்லையின்றி மீன்பிடிக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.

எனவே இலங்கை கடற்படையினரின் தொல்லைகளில் இருந்து நம் மீனவர்கள் மீள்வதற்கு ஒரே வழி இருநாட்டு மீனவர்களுடனான பேச்சுவார்த்தையினை உடனே நடத்துவதுதான். இதுபற்றி பிரதமரிடம் எடுத்து கூறி விரைவில் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி மேற்கொள்வேன்.

மேலும் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் குறித்து பிரதமரிடம் விவரித்தி, டில்லியில் உள்ள இலங்கை அரசின் உயரதிகாரியை அழைத்து நமது அரசின் கண்டனத்தை தெரிவிக்கவும் வலியுறுத்துவேன்’’ என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த நாராயணசாமி ‘‘தூத்துக்குடியில் பிடிபட்ட அமெரிக்க கப்பல் குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது. நமது நாட்டின் மீதான ஊடுருவல்கள் பி.ஜே.பி ஆட்சி காலத்தைவிட குறைந்து உள்ளது. பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளின் ஊடுருவல்களை எதிர்கொள்ளும் வகையில் நமது ராணுவம் வலுவாக உள்ளது.

நரேந்திர மோடி பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் அதற்கு தகுதி அற்றவர். குஜராத்தில் உள்ள அகமதாபாத், பரோடா போன்ற நகரங்களில் உள்ள வளர்சியை மட்டும் காட்டி வெற்றி பெற நினைக்கின்றனர். உண்மையில் குஜராத்தில் வாழும் கிராமப்புற மக்கள் எந்த முன்னேற்றமும் காணவில்லை. அவர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் நிலையில்தான் இன்றும் உள்ளனர். எனவே மோடி ஆட்சிக்கு வந்தால் நாடு வளர்ச்சி அடையும் என சொல்வது மாயை’’ என்றார்.

மீனவர் பிரச்னைக்கு தமிழக அரசே காரணம்: நாராயணசாமி குற்றச்சாட்டு!

மீனவர்கள் கோரிக்கை

##~~##
இதனிடையே ராமேஸ்வரம் வந்திருந்த மத்திய அமைச்சர் நாராயணசாமியை, மீனவர் சங்க தலைவர்கள் என்.ஜே.போஸ், என்.தேவதாஸ், சேசுராஜ், எமரிட், அருளானந்தம், மகத்துவம் உள்ளிட்ட ஏராளமான மீனவர்கள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில், ''இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை சென்று அந்நாட்டு அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்பும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் ராமேஸ்வரம் துவங்கி காரைக்கால் வரையில் உள்ள லட்சக்கணக்கான மீனவர்கள் தங்கள் தொழில் ஆதாரத்தை இழந்து வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசால் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.
எனவே மத்திய அரசு உடனடியாக தலையிட்டு மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல் நமது நாட்டு சிறைகளில் உள்ள இலங்கை மீனவர்களையும் அவர்களது படகுகளையும் நிர்பந்தம் ஏதும் இல்லாமல் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி இது போன்ற நிகழ்வுகள் இருதரப்பிலும் நிகழாமல் இருக்க இருநாட்டு மீனவ அமைப்புகளிடையே ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையினை மத்திய அரசு விரைவாக மேற்கொள்ள வேண்டும்'' எனக் கூறியுள்ளனர்.
இரா.மோகன்

படங்கள்: உ.பாண்டி