Published:Updated:

சறுக்கல் சிங்!

ப.திருமாவேலன்ஓவியம் : ஹாசிப்கான்

சறுக்கல் சிங்!

ப.திருமாவேலன்ஓவியம் : ஹாசிப்கான்

Published:Updated:
##~##

'என்னைப் பார்... என் சாதனையைப் பார்!’ என்று தனது கூட்டணிக் கட்சித் தலைவர்களை உடன் வைத்துக்கொண்டு மன்மோகன் சிங் ஓர் அறிக்கை வெளியிட்ட ஒரு வாரத்துக்குள், 'இதைப் பார்... இந்த அசிங்கத்தைப் பார்!’ என்று அவரது கூட்டுச் சகாக்கள் செய்த ஊழல் பட்டியலை அண்ணா ஹஜாரே குழு வெளியிட்டது. இதன் உச்சமாக, கடந்த 4-ம் தேதி பிரதமர் உள்ளிட்ட 15 மத்திய அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை சோனியாவின் நம்பர் 10, ஜன்பத் இல்ல அலுவலகத்துக்கே நேரில் சென்று ஹஜாரே ஆட்கள் கொடுத்துவிட்டு வந்துவிட்டார்கள்.

நிதானமானவர் என்று இதுவரை நினைக்கப்பட்ட மன்மோகன் சிங், கடந்த திங்கள்கிழமை நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பெரும்புலம்பல் புலம்பிவிட்டார். ''என்ன செய்வது என்று தெரியாமல் திக்கு முக்காடும் ஒரு கும்பல், இந்த அரசுக்கு எதிராகப் பொய்யையும் புரளியையும் பரப்பிவருகிறது. இதற்குக் கட்சிக்காரர்கள் பதிலடி கொடுக்க வேண்டும்’ என்பது சிங் கட்டளை. 'திக்குமுக்காடும் கும்பல்’ என்று குற்றம்சாட்டுவது அண்ணா ஹஜாரேவை. இத்தகைய மமதையான வார்த்தைகள் திக்விஜய் சிங், சல்மான் குர்ஷித், கபில்சிபல் போன்றவர்களுக்குச் சொந்தமானவை. அந்த வழியில் மன்மோகன் பேச ஆரம்பித்திருப்பது, தனது திறமையின்மையை மறைக்க முடியாத ஆத்திரத்தின் வெளிப்பாடு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மன்மோகனின் மெகா பெரிய தப்புகளைப் பட்டியலிட்டால்..?

சறுக்கல் சிங்!

எங்கும் ஊழல்மயம்!

''எம்.பி-யாக இருந்தபோதும், அமைச்சராக இருந்தபோதும், பிரதமராக இருக்கும்போதும் நான் திறந்த புத்தகமாகவே இருந்துள்ளேன். என் மீது கூறியுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபித்தால், பொது வாழ்வில் இருந்து விலகத் தயார்'' என்று உணர்ச்சிவசப்பட்டு அறிவித்து இருக்கிறார் மன்மோகன். ஆனால், இவர் மீதும் இவருக்குக் கீழே இருக்கும் அமைச்சர்கள் 15 பேர் மீதும் புகார் பட்டியல் மலை அளவுக்குக் குவிந்துள்ளதாக ஹஜாரே அணி அறிவித்துள்ளது. பிரதமர் நேரடியாக முறைகேடுகளில் இறங்கி, தனது வீட்டுக்குப் பணத்தை நகர்த்திச் சென்றார் என்று சொல்லாவிட்டாலும் அவரது ஆட்சியில் நடந்த முறைகேடுகள் பல லட்சம் கோடிகளைத் தாண்டுகிறது.

அரசாங்க கஜானாவுக்கு வர வேண்டிய 1.76 லட்சம் கோடி ரூபாய் பணத்தைத் தனியாருக்குத் தாரை வார்த்த அலைக்கற்றை முறைகேட்டை முதன்முதலாக அம்பலப்படுத்திய பா.ஜ.க. எம்.பி-யான பிரகாஷ் ஜவடேக்கர்தான், பிரதமரைக் குறை சொல்லும் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டை கடந்த வாரத்தில் கிளப்பி இருக்கிறார். அலைக்கற்றை ஒதுக்கீடுபற்றி ஜவடேக்கர் சொல்லும்போது மௌனம் சாதித்தவர்கள்தான் இப்போது நிலக்கரி விவகாரத்தையும் அமுக்கப் பார்க்கிறார்கள். 'நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பான ஏல முறையில் இரண்டு ஆண்டுகள் தாமதம் செய்யப்பட்டது. ஒதுக்கீடு பெற்ற 156 நிறுவ னங்கள் தங்களது உற்பத்தியைத் தொடங்கா மல், மற்றவர்களிடம் ஒப்படைத்தன. 2006-2009 காலகட்ட நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு மூலமாக பல லட்சம் கோடி ரூபாய் அரசாங்கத்துக்கு இழப்பாகி உள்ளது'' என்பது இவர்களின் குற்றச்சாட்டு. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் கண்டறிந்துள்ள இந்த முறைகேட்டை விசாரிக்கும் பொறுப்பு சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 'இந்த முறைகேடு பிரதமருக்குத் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பு இல்லை. அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் சி.பி.ஐ. விசாரணை நடத்தினால், முழு உண்மை எப்படி வெளிச்சத்துக்கு வரும்?’ என்று அண்ணா அணி கேட்கிறது. இதைத் தாங்கிக்கொள்ள முடியாத மன்மோகன், 'கும்பல்’ வார்த்தைகளைப் பயன்படுத்தும் அளவுக்குத் தரம் இறங்கியதுதான் நிலைமை.

ஏற்கெனவே, அலைக்கற்றை வழக்கு ஆ.ராசாவுடன் நின்றுவிட்டது. எப்போது ப.சிதம்பரத்தையும் சோனியாவையும் பிரத மரையும் சுப்பிரமணியன் சுவாமி வழக்குக் குள் வளைக்கப் பார்த்தாரோ... அப்போதே அலைக்கற்றை வழக்கு செத்துவிட்டது. அரசியல்வாதிகள் விடுவிக்கப்பட்டார்கள். நிறுவனங்கள் வெளிநாடு போய்விட்டன. இனி, சிறப்பு நீதிமன்றத்தின் வேலை, 'தேதி குறிப்பதாக’ மட்டுமே இருக்கப்போகிறது. அதேபோல், காமன்வெல்த் போட்டிகள் ஊழல் தொடர்பான வழக்கில் சுரேஷ் கல்மாடி மட்டுமே பலி ஆடு ஆக்கப்பட்டு... பல ஆவணங்களைக் காணாமல் போக்கி விட்டு... சோனியாவின் மருமகன் வதேராவின் நண்பர்களும் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் மகனது தொடர்புகளும் அப்படியே மறைக் கப்பட்டு இருக்கின் றன.

கார்கில் போரில் ரத்தம் சிந்திப் போராடிய ராணுவ வீரர்களின் நலனுக்காக மும்பை - கொலபா பகுதியில் கட்டப்பட்ட ஆதர்ஷ் குடியிருப்பு மனை ஒதுக்கீட்டில் ராணுவ உயர் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் லபக்கிக்கொண்ட கொடுமை அம்பலமாகி... மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் பதவி விலகினார். இதில் மையக் கருவாக இருந்த காங்கிரஸ் பிரமுகர் கன்யாலால் கித்வாய் இப்போதுதான் ஜாமீனில் வந்துள்ளார். மகாராஷ்டிர காங்கிரஸின் இரண்டு கண்களாக இருக்கக் கூடிய, முன்னாள் முதல்வர்கள் விலாஸ்ராவ் தேஷ்முக், சுஷில் குமார் ஷிண்டே ஆகிய இருவர் மீதும் விசாரணை நடப்பதாக சி.பி.ஐ. மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இவை போக,

சறுக்கல் சிங்!

22 லட்சம் கோடி கறுப்புப் பணம் வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டு இருப்பதை மீட்பதற்கான எந்தக் காரியத்தையும் மன்மோகன் பார்க்கவில்லை. இந்தக் கட்டுரை எழுதப்படும்போது டெல்லியில் இருந்து ஒரு தகவல்... அந்நியச் செலாவணி என்று சொல்லக்கூடிய ஃபோரெக்ஸ் வர்த்தகத்தில் இந்திய நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக செய்துள்ள ஏய்ப்பு மட்டும்

சறுக்கல் சிங்!

32 ஆயிரம் கோடி இருக்கலாம் என்று சி.பி.ஐ. தகவல்கள் கூறுகின்றன. மன்மோகன் சிங் ஆட்சி முழுக்கவே ஊழல் கறை படிந்ததாக மாறி விட்டது. கொள்ளை லாபம் பார்க்கும் ஓர் அதிகார மையத்தின் முகமும் முகமூடியாகவும் செயல்பட்டதைத் தவிர இவரால் வேறு எதையும் செய்ய முடியவில்லை.

பொருளாதாரம் மாயம்!

மன்மோகன் சிங்கை நிதி அமைச்சராக, பிரதமர் நரசிம்ம ராவ் அழைத்து வரும்போது ஏக இந்தியாவும் மகிழ்ந்தது. 'நிதி அமைச்சகத்தை இது வரை அரசியல்வாதி கள் கவனித்ததால்தான் இந்தியா பொருளா தாரத்தில் முன்னேறவில்லை. இப்போது ஒரு பொருளாதார மேதையின் கையில் நாடு சென்றுவிட்டது. இனி எல்லாம் சுகமே என்று பலரும் பாட்டுப் பாடினார்கள். புதிய பொருளா தாரக் கொள்கை மூலமாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவில் தடங்கல் இல்லாமல் பாதை அமைத்த ஒன்று மட்டுமே அவருடைய சாதனையாக இருந்தது.

அப்போது நிதி அமைச்சராக இருந்தவர்... பிரதமராகவே ஆகி எட்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்தியப் பொருளாதாரத்தால் ஓட அல்ல... நடக்கக்கூட முடியாத நிலைமைதான் இப்போது என்பதை மன்மோகன் சிங்கே ஒப்புக்கொண்டுவிட்டார். 'இந்தியா நெருக்கடியான காலகட்டத்தை எதிர்கொண்டுவருகிறது. உலகப் பொருளாதாரத்தில் ஸ்திரமற்ற நிலைமை காணப்படுவதுடன் மோசமான புறப் பொருளாதாரச் சூழலும் நிலவுகிறது. கடன்களைத் திருப்பிச் செலுத்துவதிலும், நிதி நிலைமையிலும் நமக்கு நெருக்கடிகள் உள்ளன’ என்று தனது மூன்று ஆண்டு சாதனைப்(!) புத்தகத்தில் பூசி மெழுகி இருக்கிறார். 'தற்போது வறுமை வெகுவாகக் குறைந்துவருவதற்கு ஆதாரங்கள் உள்ளன’ என்கிறார் பிரதமர். 'யுனிசெஃப்’ சமீபத்தில் எடுத்த புள்ளிவிவரத்தின்படி, போதுமான ஊட்டச் சத்து இல்லாததால் ஆண்டுக்கு 11 ஆயிரம் குழந்தைகள் பார்வை இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு இருப்பது மன்மோகன் கண்ணுக்குப் படாமல் போனது எப்படி? புள்ளிவிவரங்களுக்குள் கொண்டுவராமல் இருந்தாலே ஏழைகள் ஒழிந்துவிட்டதாகச் சொல்லிவிட முடியும் என்பது எந்தப் பொருளாதார வல்லுநரும் இதுவரை சொல்லாதது!

மெத்தப்படித்த மன்மோகன், மாண்டேக் சிங் அலுவாலியா, சி.ரங்கராஜன், ஜெய்ராம் ரமேஷ் போன்ற இந்திய யதார்த்தம் புரியாத மனிதர்களால் பொருளாதாரம் கூடவில்லை. விலைவாசிதான் கூடி இருக்கிறது. பெட்ரோலை ரத்தத்துக்குச் சமமானதாக மாற்றிவிட்டார்கள். ஓட்டு வாங்குவதற்கு ரோட்டுக்கு வராத எண்ணெய் கம்பெனிகள் மீது பழியைப் போட்டு... வரி வசூலை விட்டுத்தராமல் பட்டப்பகலில் மத்திய தர வர்க்கத்தின் பாக்கெட்டில் இருந்து பிக்பாக்கெட் அடிப்பது தான் இந்த மேதைகளின் சூட்சுமப் பாதையாக இருக்கிறது. சரி, இலக்கு... இலக்கு என்று மன்மோகன் சொல்வதுதான் என்ன? இந்தியாவையே இல்லாமல் ஆக்குவதா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism