Published:Updated:

''ராசாக்கள் இருப்பதால் தி.மு.க-வை வீழ்த்த முடியவில்லை!''

திருவாரூரில் புதிய கருணாநிதி

##~##

ஜாமீனில் தமிழகம் வந்திருக்கும் ராசா, திருவாரூரில் இருந்து தன்னுடைய இரண்டாவது அரசியல் பயணத்தைத் தொடங்கி விட்டார்! 

கருணாநிதியின் 89-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் திருவாரூரில் கடந்த 9-ம் தேதி நடக்க இருந்தது. இந்த நேரத்தில் ஆ.ராசா ஜாமீனில் தமிழகம் வந்து விடவே, அவரை மேடை ஏற்ற வேண்டும் என்பதற்காகவே 13-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. காலை 7.30 மணிக்கு கம்பன் எக்ஸ்பிரஸில் மனைவி தயாளு அம்மாளுடன் வந்த கருணாநிதி, காட்டூரில் உள்ள அவரது தாயார் அஞ்சுகம் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர், புள்ளவராயன் குடிகாட்டில் நடந்த தி.மு.க. கிளையின் 100-வது மாதக் கூட்டத்தில் பங்கேற்றார். அடுத்து, திருவாரூர் மேலவீதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்துக்குச் சென்று பொதுமக்களின் மனுக்களைப் பார்வையிட்டார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
''ராசாக்கள் இருப்பதால் தி.மு.க-வை வீழ்த்த முடியவில்லை!''

அதன்பிறகு, பொதுக்கூட்டத்துக்குக் கிளம்பினார். திருவாரூர் தேர் போன்று விழா மேடை அமைக்கப்பட்டு இருந்தது. எதிர்பார்த்ததைவிட மக்கள் குவியத் தொடங்கவே, வழக்கத்தைவிட அதிக அளவில் காவல்துறை பாதுகாப்புப் பணியில் இறங்கியது ஆச்சர்யம்தான். நேரடியாகப் பொதுக் கூட்டத்துக்கு வந்து சேர்ந்த ஆ.ராசாவைக் கண்டதும் தொண்டர் கூட்டம் விசிலடித்து ஆரவாரம் செய்தார்கள்.  கருணாநிதிக்கு அருகே அமர வைக்கப்பட்டார் ராசா. கருணாநிதியுடன் கனிமொழி நிச்சயம் வருவார் என்று எதிர்பார்க்கப்​பட்டது. ஆனால், அவர் வரவில்லை.

விழாவில் பேசிய ஆ.ராசா, 'இந்தியாவிலேயே மிகச்சிறந்த தலைவர் கலைஞர் மட்டும்தான். இந்தியச் சட்டத்தை, இறையாண்மையை ஏற்றுக்கொண்டவர். ஆனால், இன்றைய தமிழக அரசு என்பது ஒரு நிறுவனம். அந்த நிறுவனத்தின் தலைவராக ஜெயலலிதா இருக்கிறார். அவர் சொல்வதுதான் நடக்க வேண்டும் என்று நினைப்பார். ஆனால், அது நடக்காது. ஒரு சில தனி மனிதர்களிடம் மட்டுமே, சொல்வதை நடக்க வைக்கும் 'பவர்’ இருக்கும். அவர்கள் சொல்வது அப்படியே நடக்கும். அப்படிப்பட்டவர் தலைவர் கலைஞர். சமச்சீர்க் கல்வியில், அண்ணா நூற்றாண்டு நூலகம் போன்றவற்றில் ஜெயலலிதா சொன்னது நடக்கவில்லை. தலைவர் கலைஞர் சொன்னதுதான் நடந்தது. நாம் தோல்விகளைப் பெற்றுக்கொண்டே இருந்தாலும், கடைசியில் வெற்றி பெறுவோம்' என்றவர் இறுதிவரை 2ஜி விவகாரம் பற்றியோ, சிறை அனுபவத்தைப் பற்றியோ ஒரு வார்த்தைகூட பேசவில்லை.

''ராசாக்கள் இருப்பதால் தி.மு.க-வை வீழ்த்த முடியவில்லை!''

நிறைவாகப் பேசிய கருணாநிதி, 'ராசாவைப் போன்ற கழகத் தம்பிகள் இருப்பதால்தான், தி.மு.க-வை யாராலும் வீழ்த்த முடியவில்லை. நாங்கள் அமைச்சர்களாக இருந்தாலும்... உங்​களால் அடிமைகளாக ஆக்கப்பட்டாலும், சிறையில் அடைக்கப்​பட்டாலும் பயந்துகொண்டு கொள்கை​களை மாற்றிக்கொள்ள மாட்டோம். ராசா சிறையில் இருந்தது வருத்தமாக இருந்தாலும், ஒரு வகையில் சந்தோஷம். நிறையப் புத்தகங்கள் படித்திருக்கிறார். நிறைய அனுபவங்கள் பெற்று இருக்கிறார். உலகத் தலைவர்கள் பற்றி அறிந்து உள்ளார்.

தினமும் பத்திரிகையை எடுத்தால், நில மீட்புச் சட்டத்தில் ஒரு மாவட்டச் செயலாளர் கைது என்ற செய்திதான் வருகிறது. குறை கூறுவோர் யார் என்பதைப் பார்க்கவேண்டும். அவர்கள், பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில் 200 முறை வாய்தா வாங்கி​யவர்கள். எனக்கு அடுத்த ஜென்மத்தில் நம்பிக்கை இல்லை. ஆனால் ஆளுகின்றவர்களுக்கு அந்த நம்பிக்கை உள்ளது. அதனால் அடுத்த ஜென்மத்தில் இவர்களுக்குக் கூலி கிடைக்கும். அது மறுபிறப்பாகவும் இருக்கலாம். அல்லது இந்தப் பிறப்பிலேயே தண்டனை பெறலாம்...' என்று நிறுத்தியதும்... 'கைதட்டுவதா, வேண்டாமா’ என்று புரியாத குழப்பத்தில் தொண்டர்கள் இருந்தனர். திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் கூட்டத்தைப் பார்த்து கை தட்டியதும் தொண்டர்களும் கைதட்டத் தொடங்கினார்கள்.

'திருவாரூர் பல்கலைக்கழகம், மருத்துவக் கல்​லூரி ஒருங்கிணைந்த நீதிமன்றம் ஆகியவற்றுடன் புதிய பேருந்து நிலையம் கட்டவும் முயற்சிகள் மேற்​கொள்ளப்பட்டுள்ளது. கொராடாச்சேரியில் பாலம் கட்டப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற கனிமொழி 2.40 கோடி ரூபாய் கொடுத்துள்ளார். பணி தொடங்கப்பட்டு உள்ளது. நான் வரவில்லை என்றாலும் மக்களின் தேவை அறிந்து செயல்படுவேன்.

புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு மீட்சி வழங்க, இந்திய அரசை வலியுறுத்துவோம். இந்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்போம். இதற்காக டெசோ அமைப்பின் மாநாடு ஆகஸ்ட் 5-ம் தேதி நடக்க இருக்கிறது. ஈழத்தமிழர் உரிமை வென்​றெடுக்க, அவர்களின் நல்வாழ்வுக்கு உத்தரவாதம் கிடைப்பதற்காக இந்த மாநாட்டை நடத்த உள்ளோம். கொசோவா, தெற்கு தைமூர் நாடுகள் அமைய ஐ.நா. வாக்கெடுப்பு காரணமாக இருந்தது. அதேபோன்று, ஈழத்தை உருவாக்கும் பணியை நடத்த உள்ளோம். தமிழ்ஈழம் உருவாக வேண்டும். அதை விரைவில் காண வேண்டும். அதற்காகவே வாழ விரும்புகிறேன். அதைக்கண்டதும் உயிரைவிடவும் காண்பதற்காக உயிரை விடவும் விரும்புகிறேன்' என்று உருக்கமானார்.

ராசாவுக்குப் பின்னால் கட்சி இருக்கிறது என்பதை யாருக்கோ(?) காட்டும் விதமாகத்தான் இந்தப் பொதுக்கூட்டம் நடந்ததாக தி.மு.க-வினரே பேசிக் கொண்டார்கள்!

- சி.சுரேஷ்

படங்கள்: கே.குணசீலன், செ.சிவபாலன்