Published:Updated:

ஓவியர் பாப்லோ பிகாசோ பிறந்த தினம் - சிறப்பு பகிர்வு

ஓவியர் பாப்லோ பிகாசோ பிறந்த தினம் - சிறப்பு பகிர்வு
ஓவியர் பாப்லோ பிகாசோ பிறந்த தினம் - சிறப்பு பகிர்வு

ஸ்பெயின் நாட்டின் தெருவில் பல ஓவியங்களை அந்த இளைஞன் கடை விரித்து இருந்த பொழுது ,"என்ன பைத்தியக்காரத்தனம் இது ?" எனதான் ஊரே சிரித்தது.ஓவியம் என்பது இருப்பதை இருக்கிற மாதிரி வரைவது தான் ஓவியம் என்பதை உடைத்து பல்வேறு தளங்களில் ஓவியத்தை பயணம் போக வைத்தான் அந்த இளைஞன் . தனக்கு தோன்றியதை ஓவியமாக வடித்து தள்ளிய உண்மைக் கலைஞன் அவர்.

இளம் வயதில் அப்பாவுடன் ஸ்பெயினில் காளைச்சண்டைகள் பார்க்க போனது அவரின் வாழ்வில் பெரிய தாக்கத்தை உண்டு செய்தது. அவருடைய ஓவியங்களில் தொடர்ந்து காளைச்சண்டைகள் தோன்றிக்கொண்டே இருந்தன. காலையில் பதினோரு மணிக்கு பொறுமையாக எழுந்துவிட்டு இரவு மூன்று மணி வரை ஓவியங்கள் வரைகிற குணம் அவருக்கு இருந்தது. எப்படி தொன்னூறு வயதிலும் இத்தனை ஆர்வத்தோடு இயங்குகிறீர்கள் என்று கேட்கப்பட்ட பொழுது ,"சிலர் இளவயதிலேயே முதியவர் போல உணர்கிறார்கள். நான் இந்த வயதில் முப்பது வயது இளைஞனாக தொடர்ந்து முயற்சித்து கொண்டிருக்கிறேன் !" என்றார்

ஓவியர் பாப்லோ பிகாசோ பிறந்த தினம் - சிறப்பு பகிர்வு

அரசியல் கட்சிகளின் பெயர்கள் கூட தெரியாமலே இயங்கிக்கொண்டு இருந்தார் அவர்.  அவரின் ஓவியங்கள் 1936 க்கு முன்னர் அரசியல் சார்ந்து வரையபட்டதே இல்லை. பாசிஸ சக்திகள் குறிப்பாக ஹிட்லரின் படைகள் அமைதி தவழ்ந்த எண்ணற்ற பொதுமக்கள் இருந்த கார்னிகா நகரத்தை தாக்கி உயிர்களை குடித்து வெறியாட்டம் போட்ட பொழுது தான் பிகாசோ கோபப்பட்டார். அரசு ஒரு ஓவியம் வரையச்சொல்லி ஏற்கனவே கேட்டிருந்தது. எல்லா கோபத்தை, அவர்களின் வெறியாட்டத்தை ஓவியத்தில் அப்படியே கொண்டுவந்தார். பற்றியெரியும் நெருப்பும்,அதில் சிக்கிக்கொண்ட பெண்ணும் என்று அவர் அப்படியே காட்சிப்படுத்திய விதம் உலகம் முழுக்க போருக்கு எதிரான அடையாளமானது.

அதிகம் பொருள் ஈட்டிய அவர் தான் இறக்கிற வருடத்தில் கூட இருநூறு ஓவியங்கள் வரைந்தவர் அவர். அவர் நாட்டை ஜெர்மனி பிடித்துக்கொண்ட பொழுது பிரான்ஸ் தேசத்தில் தஞ்சம் புகுந்து அங்கேயே இருந்தார்;அவரை அந்நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்கா போகச்சொன்ன பொழுது கம்பீரமாக மறுத்தார் . அங்கே இருந்தே தைரியமாக ஓவியங்கள் வரைந்தார் .

அவர் எண்ணற்ற ஓவியங்கள் வரைந்தாலும் அதில் சிலவற்றை மட்டுமே விற்பனைக்கு
விடுவார். எண்ணற்ற ஓவியங்கள் ஒரே சமயத்தில் சந்தைக்கு வந்தால் அவரின்
மார்கெட் போய்விடும் என்கிற தெளிவு அவருக்கு இருந்தது. பிரான்ஸ்
கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றிக்கொண்டு இருந்தார் அவர்.
ஸ்டாலின் இறந்த பொழுது அவரை இளைஞராக காண்பித்து ஓவியம் தீட்டி இருந்தார்
இவர்.

பிரான்ஸ் தேசத்தை ஜெர்மனி பிடித்துக்கொண்ட பொழுது இவர் அங்கேயே
இருந்தாரில்லையா ? அப்பொழுது ஒரு ஜெர்மானிய ராணுவ அதிகாரி இவரைப்பார்க்க
வந்தார். கார்னிகாவை கண்களை விரித்து பார்த்துவிட்டு ,"இந்த ஓவியத்தை நீ
தானே வரைந்தாய் ?" என்று கோபத்தோடு கேட்ட பொழுது பிகாஸோ சலனமே இல்லாமல்
தீர்க்கமாக ,"இல்லை இதை நீங்கள் தான் வரைந்தீர்கள் !" என்றார். எல்லாமும்
கலையாகுமா என்றொரு இளைஞன் கேட்ட பொழுது ஒரு மிதிவண்டியின் இருக்கை அதன்
ஹாண்டில் பார் இரண்டையும் சேர்த்து ஒரு காளையின் தலையை உருவாக்கிவிட்டு
"முடியும் !" என்றார் அவர்.

ஒரு நாளைக்கு பலமணிநேரம் நின்றுகொண்டே வரையும் குணமும் இருந்தது. அமைதிக்கான அடையாளமாக புறாவை பிரபலப்படுத்தியதும் அவரே ; அதே சமயம் கொரியப்படுகொலைகள்,'போரும்,அமைதியும்' என்று போரின் தீங்குகளுக்கு எதிராக
ஓவியங்கள் தீட்டி கலை மூலம் அமைதிக்காக குரல் கொடுத்தார் அவர்.

ஓவியர் பாப்லோ பிகாசோ பிறந்த தினம் - சிறப்பு பகிர்வு

மரபை மீறும் ஆவேசம் அவரிடம் இருந்ததுபெரும்பாலான நவீன ஓவியங்கள் குறிப்பாக அவருடைய ஓவியங்கள் புரியவில்லை எனக்கேட்ட பொழுது  "உங்கள் வீட்டின் அருகில் உள்ள மரத்திலிருந்து குயில்  கீதத்தை கூவுதல் மூலம் கசிய விடுகிற பொழுது அதன் அர்த்தம் புரிகிறதா உங்களுக்கு ? உங்கள் வீட்டின் கண்ணாடியில் வழிந்து மென்மையாக படிகிறதே பனித்துளி, அதை எந்த பொருளில் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் ? ஒவ்வொரு நாளும் மேகம் புதுப்புது வடிவம் எடுக்கிறதே அதற்கு என்ன பொருள் ?. வெயிலை, இரவை, மழையை எப்படி புரிந்து வைத்திருக்கிறீர்கள்.எல்லாவற்றிலும் மனதார கரைந்திடுங்கள் .எல்லாவற்றின் ஊடாகவும் நீங்கள் இருப்பதை உணரத் துவங்குங்கள் உலகின் காட்சிகளும்.அதன் வனப்பும் உங்களுக்குப் புரியத் துவங்கினால் நவீன ஓவியங்கள் தானே புரியத் துவங்கிடும் ".

கியூபிசம் எனும் ஓவிய பாணி அவரால் உருவானது .பைத்தியம் என்ற அதே உலகம்
,"நவீன ஓவியத்தின் தந்தை !"என அவரை ஏற்றுக்கொண்டது.பாப்லோ பிகாசோ எனும்
மாபெரும் கலைஞரின் பிறந்தநாள் இன்று (அக்.25, 1881)

- பூ.கொ.சரவணன்