Published:Updated:

அண்ணன் சிக்கல் போதாது... அடுத்த சிக்கலும் ஆரம்பம்!

தலை சுத்தும் தளபதி வழக்கு!

##~##

நில மோசடி வழக்குகளின் அடுத்த விக்கெட் தளபதி! பூங்கா, விளை யாட்டு மைதானம் என்று பல பொது இடங்களை ஸ்வாகா செய்ததாகக் கைது செய்யப்பட்டு இருக்கிறார், மதுரை மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதி. 

புகார் கொடுத்திருக்கும் தியாகராசர் காலனியைச் சேர்ந்த முருகேசன் சொல்வதன் சாராம்சம் இதுதான்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'1957-ல் மதுரை மீனாட்சி மில் தொழி லாளர்களுக்காக பசுமலையில் 23 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தி, 161 வீடுகள் கொண்ட தியாகராசர் காலனியை அரசே ஏற்படுத்திக் கொடுத்தது. 'ஒரு வேளை மில் மூடப்பட்டால், அந்த வீடுகளை மில் ஊழியர்களுக்கே விற்றுவிட வேண்டும், இல்லை என்றால், அதனை இடித்துவிட்டு இடத்தை அரசிடம் ஒப்படைத்துவிட வேண்டும்’ என்பது விதி. இதன்படி, 161 வீடுகளை ஊழியர்களுக்கும், அவர்களின் வாரிசுகளுக்கும் விற்றது மில் நிர்வாகம்.

அண்ணன் சிக்கல் போதாது... அடுத்த சிக்கலும் ஆரம்பம்!

எனது தந்தை மலைச்சாமி, 1,896.75 சதுர அடி வீட்டை வாங்குவதற்காக தனது பி.எஃப். பணத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை மில் நிர்வாகத்துக்குச் செலுத்தி இருந்தார். அவரது மறைவுக்குப் பிறகு வீட்டையும், பின்புறம் உள்ள காலி இடத்தை யும் வாங்குவதற்காக 1.26 லட்சத்தை 2007-ம் ஆண்டே செலுத்திவிட்டேன். ஆனால், வீட்டையோ, மனையையோ என் பெயரில் கிரையம் செய்து கொடுக்காமல் இழுத்தடித்தார்கள்.

மில்லின் வணிக மேலாளர் சீனிவாசனைச் சந்தித்துக் கேட்டபோது, 'தி.மு.க. மாவட்டச் செயலாளர் தளபதியைப் போய் பாருங்க’ என்றார். நான் பார்க்கவில்லை. இதற் கிடையே, பக்கத்து வீட்டில் குடியேறிய தளபதிக்கு நெருக்கமான ரியல் எஸ்டேட் புரோக்கர் ரவிச்சந்திரன் என்பவர், எங்கள் வீட்டையும், வீட்டை ஒட்டிய காலி மனை யையும் அபகரிக்க முயன்றார். நான் எதிர்ப்பு தெரிவித்ததால்

அண்ணன் சிக்கல் போதாது... அடுத்த சிக்கலும் ஆரம்பம்!

ரவிச்சந்திரன், தளபதியின் உறவினர் வெங்கடேஷ் என்று சுமார் 10 பேர் வீடு புகுந்து என் அம்மா, மனைவி, மகனை கொலைவெறியோடு தாக்கினார்கள். உடனே என் மனைவி சுமதி,  திருப்பரங்குன்றம் போலீஸில் புகார் செய்தார். ஆனால், அப்போது தி.மு.க. ஆளும் கட்சி என்பதால் மனு ஏற்புச் சான்றிதழ் மட்டும் கொடுத்த போலீஸார், வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. அதன் பிறகும் வீட்டையும் இடத்தையும் அபகரிக்க அவர்கள் முயன்றதால்,  மீண்டும் என் மனைவி புகார் கொடுத்தார். மறுநாளே ரவிச்சந்திரன், தன்னுடைய உறவினர்களுடன் வீடு புகுந்து என்னையும், என் மனைவியையும் தாக்கினார். உடனே நியாயம் கேட்டு எஸ்.பி-யிடம் மனு கொடுத்தேன். முதல்வரின் தனிப் பிரிவுக்கும், துணை முதல்வர் ஸ்டாலினுக்கும் தனிப்பட்ட முறையில் புகார் அனுப்பினேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அடுத்து என் நிலத்தில் அடாவடியாக வேலி போட்டார் ரவிச்சந்திரன். இதுபற்றி  எஸ்.பி. பாலகிருஷ்ணனிடம் புகார் கொடுத்தோம். அவரது உத்தரவின் பேரில் போலீஸார் இப்போதுதான் உடனடி நடவடிக்கை எடுத்து உள்ளார்கள்' என்றார்.

தளபதி மீது அடுத்த புகார் மனுவோடு காத்திருக்கும் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் சுரேஷ்குமாரைச் சந்தித்தோம். 'எங்க ஊராட்சியில பொதுப் பயன் பாட்டுக்காக ஒதுக்கப்பட்டிருந்த விளையாட்டு மைதானம், பூங்கா மொத்தத் தையும் ரவிச்சந்திரன் உதவியோட அபகரிச்சிட்டார் தளபதி. முதல்ல, 3.72 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிச்சு, ஜாட் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் 94 பிளாட் போட்டு விற்றார். இந்த இடம் நில உச்சவரம்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டபோது தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது. இங்கே ஒரு சென்ட் இடத்தை விற்பதாக இருந்தாலும், சட்டப்படி அரசின் அனுமதி பெற வேண்டும் என்று ஆரம்பத்திலேயே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். ஒரு கட்டத்தில், தன் மனைவி வீரலட்சுமி பெயரில் கல்யாண மண்டபம் கட்டுவதற்காக தளபதியே என்னிடம் பிளான் அப்ரூவல் கேட்டார். சட்டத்தை மீறி, பாதாள சாக்கடைக்கு மேல் பிளாட் போட்டு இருக்கிறார்கள். என்னால் அப்ரூவல் பண்ண முடியாது என்று சொன்னேன். நேரடியாக மிரட்டியும் பணியாததால், இன்ஸ்பெக்டராக இருந்த என் தந்தையை மதுரையில் இருந்து சிவகிரிக்கு டிரான்ஸ்ஃபர் செய்தார்கள். தமிழ்நாடு பாலிடெக்னிக்கில் வேலை பார்த்த என் மாமனாரையும் இடமாற்றம் செய்யப்போவதாக மிரட்டினார்கள். அன்று மதுரை கலெக்டராக அடுத்தடுத்து இருந்த இரண்டு அதிகாரிகளும்   உடந்தையாக இருந்தார்கள்.  இது தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளேன். விரைவில் எஸ்.பி-யிடம் புகார் கொடுக்கப்போகிறேன்' என்றார்.

கைதாகி பாளையங்கோட்டை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தளபதியிடம் கேட்டபோது, 'ஏற்கெனவே ஒரு முறை பொய் வழக்குப் போட்டு உள்ளே தள்ளினார்கள். இப்போது மீண்டும் பொய் வழக்குப் போட்டு இருக்கிறார்கள். ஆளும் கட்சியினரின் இந்த அடக்குமுறை நடவடிக்கைகளை சட்டப்படி எதிர்கொள்வோம்'' என்றார்.

எஸ்.பி. பாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, 'முருகேசனின் நிலத்தை மட்டும் அல்ல, தியாகராசர் காலனியில் இருந்த பூங்கா, விளையாட்டு மைதானம் என்று சுமார் 15 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முறைகேடாக விற்றுள்ளது விசாரணையில் தெரியவந்து உள்ளது. அதன் அடிப்படையில்தான் தளபதி, அவரது உறவினர் வெங்கடேசன், நிலப் புரோக்கர் ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்களைக் கைது செய்தோம். இவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட மில் நிர்வாகத்தைச் சேர்ந்த சீனிவாசனைத் தேடி வருகிறோம்'' என்றார்.

ஏற்கெனவே கட்சியில் அழகிரியின் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் தளபதிக்கு, மேலும் நெருக்கடிகள் தொடரும் என்றே தெரிகிறது!

- கே.கே.மகேஷ்

படங்கள்: எஸ்.கிருஷ்ணமுர்த்தி