Published:Updated:

மிஸ்டர் கழுகு: பிரணாப் பராக்!

மிஸ்டர் கழுகு: பிரணாப் பராக்!

##~##

டெல்லி சேனல்களை மாற்றி மாற்றிப் பார்த்துக்கொண்டு இருந்தார் கழுகார். இன்றைய ஸ்பெஷல், ஜனாதிபதி தேர்தலாகத் தான் இருக்கும் என்று நாம் நினைத்தபடியே, ஆரம்பித்தார் கழுகார். 

''ஜனாதிபதி தேர்தல் இந்த அளவுக்கு அதிரடிக் காட்சிகள் நிரம்பியதாக இருக்கும் என்று யாரும் நினைக்கவில்லை. சோனியா ஒரு வேட்பாளரைச் சொல்வார்... அவரது கூட்டணி ஆட்கள் தலை ஆட்டுவார்கள். பெரும்பான்மை வாக்குகள் அந்தக் கூட்டணிக்கு இருப்பதால், காங்கிரஸ் ஆதரிக்கும் வேட்பாளர் புதிய ஜனாதிபதி ஆவார் என்றுதான் ஆரம்பத்தில் பேசப்பட்டது. திடீரென, ஜெயலலிதாவும் நவீன் பட்நாயக்கும் சேர்ந்து சங்மாவை வேட்பாளராக அறிவித்தார்கள். டெல்லியில் லேசான பரபரப்பு கிளம்பியது. ஜெயலலிதாவும் நவீனும் டெல்லிக்கு வந்து, சங்மாவை ஜெயிக்க வைப்பதற்கான முயற்சியில் இறங்குவார்கள் என்று காங்கிரஸும் பி.ஜே.பி-யும் ஆரம்பத்தில் எதிர்பார்த்தது. ஆனால், இவர்கள் சைலன்ட் ஆகிவிட்டாலும் அந்தப் பரபரப்பை மம்தா கைப்பற்றி விட்டார். யாருமே எதிர்பாராத திருப்பம் இது!'' என்று அமைதியானார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மிஸ்டர் கழுகு: பிரணாப் பராக்!

''சோனியாவை, மம்தா பார்க்கச் சென்றாரே... அன்று என்னதான் நடந்தது?''

''சுமுகமான நட்புக்கான சூழ்நிலைதான் அப்போது இருந்ததாம். மரியாதை கொடுத்து வரச் சொன்னதால், மம்தா மகிழ்ச்சியுடன் வந்துள் ளார். அவரது முதல் கோரிக்கை, மேற்கு வங்க மாநிலத்துக்கு ஏராளமான நிதிஉதவி வழங்க வேண்டும் என்பதாகத்தான் இருந்தது. 'இதை பிரதமரும் திட்டக் கமிஷன் துணைத் தலைவரும் செய்து கொடுப்பார்கள். உங்களது கோரிக்கையை நானும் சொல்கிறேன்’ என்று சோனியா சொல்லி இருக்கிறார். அடுத்து, ஜனாதிபதி தேர்தல் சம்பந்த மான பேச்சு வந்துள்ளது. அப்போது, 'காங்கிரஸ் கூட்டணி மட்டுமல்ல... கூட்டணிக்கு வெளியில் உள்ள கட்சிகளும் இணைந்து ஒருமனதாக ஏற்றுக் கொள்ளும் மனிதராக வேட்பாளர் இருந்தால் நல்லது’ என்று சோனியா சொல்லி இருக்கிறார். 'வெளியில் இருப்பவர்கள் என்றால் யாரை மனதில் வைத்துச் சொல்கிறீர்கள்?’ என்று மம்தா கேட்டுள்ளார். 'கம்யூனிஸ்ட்டுகளுடனும் பேசலாம் என்று நினைக்கிறோம்’ என்று சோனியா சொன்னதுமே, முகம் சிவக்க ஆரம்பித்ததாம் மம்தாவுக்கு. 'கம்யூனிஸ்ட்களும் ஆதரிக்கும் வேட்பாளரை நான் எப்படி ஆதரிக்க முடியும்?’ என்றவர், சில நொடி களிலேயே வெடுக்கென எழுந்து விட்டாராம். இதை, சோனியா கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை!''

''அப்புறம்?''

மிஸ்டர் கழுகு: பிரணாப் பராக்!

''அப்புறம் என்ன? எதுவுமே நடக்கவில்லை. கோபமாக மம்தா வெளியேறியதைக் கண்டு அதிர்ந்துபோன சோனியா, 'என்ன மாதிரியான பொலிட்டிக்கல் லீடர் இவர்?’ என்ற அர்த்தத்தில் பிரதமரி டம் கமென்ட் அடித்தாராம். அந்தக் கோபத்தில்தான் முலாயம் சிங்கை சந்திக்க மம்தா போனார். இதேபோன்று மாயாவதியின் ஆதரவையும் பெற்றுக்கொள்ள காங்கிரஸ் திட்டமிட்டது. தனது எதிரியை காங்கிரஸ் வளைக்கப் பார்க்கும் கோபம் முலாயமுக்கு இருந்தது. அதனால்தான் இவர்கள் இருவரும் கைகோத்தார்கள்!''

''இதில், மன்மோகன் சிங்கை ஏன் இழுத்தார்கள்... பாவம்!''

''மூன்று பெயர்களை மம்தா - முலாயம் கூட்டணி அறிவித்துள்ளது. இன்றைய பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி. 'மன்மோகன் சிங்கை ஜனாதிபதி ஆக்கவே சோனியா திட்டமிட்டு வருகிறார்’ என்பது மம்தாவுக்குக் கிடைத்த தகவலாம். 'ராகுல் காந்தியைப் பிரதமராகவும் பிரணாப் முகர்ஜியை துணைப் பிரதமராகவும் மன்மோகனை ஜனாதிபதியாகவும் ஆக்க சோனியா திட்டம் போட்டுள்ளார்’ என்று காங்கிரஸ் தரப்பில் இருந்து மம்தாவிடம் சொன்னார்களாம். 'மன்மோகன் சிங் பெயரை நாம் முதலில் அறிவித்தால், நம்முடைய வேட்பாளரை காங்கிரஸ் ஆதரித்து வெற்றி பெறச்செய்தது போல் இருக்கும்’ என்று மம்தா நினைத்துச் செயல்பட்டதாகச் சொல்கிறார்கள்''

''இதில் மன்மோகனுக்கு விருப்பம்தானா?''

''அவருக்கு பிரதமர் பதவியை விட்டு விலக கொஞ்சமும் விருப்பம் இல்லை. ஆனால், 'அடுத்த தேர்தல் ராகுலை முன்னிலைப்படுத்தித்தான் நடத்த வேண்டும். மன்மோகன் தொடர்ந்து நீடித்தால், ஒரு நெருக்கடியான கட்டத்தில் அவரை நீக்க முடியாத நிலைமை ஏற்படும்’ என்று சோனியா உறவு லாபி நினைக்கிறது.''

''பிரணாப்?''

''குட்டை குழம்பியதில் பிரணாப்புக்கு சந்தோஷம்தான். மம்தா குழப்பியதை நல்லது என்றே நினைக்கிறார். 'வேறு வழி இல்லாமல் தன்னைத் தேர்ந்து எடுக்கும் நிலைமைக்கு சோனியா தள்ளப்பட்டு விட்டார்’ என்று நினைக்கிறாராம் பிரணாப்.

வியாழக்கிழமை காலை முதல் சோனியா படபடப்புடன் காணப்படுகிறார். அவரை பிரணாப், அந்தோணி, சிதம்பரம் ஆகியோர் மாறி மாறி வந்து சந்தித்தார்கள். 'அப்துல் கலாம், சோம்நாத் ஆகிய இருவரையும் நாம் ஏற்க முடியாது. மன்மோகனைப் பற்றிப் பேசுவதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை’ என்றாராம் சோனியா. 'உடனடியாக நமது வேட் பாளரை அறிவித்தாக வேண்டும்’ என்று அந்தோணி சொல்லி இருக்கிறார். 'இன்னும் இரண்டு நாட்கள் அவகாசம் தேவை’ என்று கேட்டாராம் சோனியா. 'அதுவரை மீடியா அமைதியாக இருக்காது’ என்று பிரணாப் அவசரப்படுத்தி இருக்கிறார்''

''அது சரி, அவர் அவசரம் அவருக்குத்தானே தெரியும்?''

''அதனால்தான் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜனார்த்தன் திரிவேதியை வரச்சொல்லி இருக்கிறார் சோனியா. 'மம்தா - முலாயம் அறிவித்த வேட்பாளர்களை காங்கிரஸ் ஏற்கவில்லை என்று மட்டும் சொல்லுங்கள்’ என்றார். இந்த நெருக்கடியான நிலையிலும் அவரது வாயில் இருந்து வேட்பாளர் பெயர் வரவில்லை என்பது, காங்கிரஸ் மேல்மட்டத் தலை வர்களுக்கு கடும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது!''

''டி.ஆர்.பாலுவை கருணாநிதி டெல்லிக்கு அனுப்பியதாகச் சொல்கிறார்களே?''

''பிரணாப் முகர்ஜியைத்தான் கருணாநிதி ஆதரிக்கிறார் என்று சொல்கிறார்கள். அந்தத் தகவல்தான், பாலு மூலமாக சொல்லப்பட்டு உள்ளது. சில வாரங்களுக்கு முன், டெல்லி சென்ற ஸ்டாலின் அங்கு சோனியா, மன்மோகன் ஆகியோரை சந்தித்தார் அல்லவா? அப்போது பிரணாப் முகர்ஜிக்கும் சால்வை போர்த்தினார். இதை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது கருணாநிதியின் எண்ணம் புரிகிறது. 'ஒரு வாரத்தில் வேட்பாளர் பெயரை அறிவித்து விடுவோம்’ என்று பாலுவிடம் சொன்னாராம் சோனியா. 'ஒரு வாரம் தாங்காது. இரண்டு நாட்களில் அறிவித்து விடுவார்கள்’ என்கிறார் சோர்ஸ்'' என்ற கழுகார், அடுத்து கோட்டை மேட்டருக்கு வந்தார்.

''முதல்வரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்த முதன்மைச் செயலாளர் ஷீலா ப்ரியாவுக்குப் பொறுப்பு குறைக்கப்பட்டது குறித்து நான் சொன்னதை, கட்டம் கட்டி செய்தியாக வெளியிட்டு இருந்தீர். உள் துறையைக் கவனிக்கும் செயலாளர்தான் அதிகாரம் பொருந்தியவர் என்று கோட்டையில் ஒரு நம்பிக்கை உண்டு. அந்த உள்துறையைத்தான் ஷீலா ப்ரியா கவனித்து வந்தார். அதை அவரிடம் இருந்து பறித்து, மூன்றாவது செயலாளராகவும் சமீபத்தில் பதவி நீட்டிப்பு பெற்றவருமான வெங்கட்ரமணனுக்குக் கொடுத்து விட்டார் முதல்வர்''

''ஏன் என்ற காரணம் தெரிய வந்ததா?''

''கொஞ்சம் விஷயம் தெரிய வந்துள்ளது. லாட்டரி மார்ட்டின் பெயருடன் இதைச் சிலர் சம்பந்தப்படுத்துகிறார்கள். மார்ட்டின் மீது ஏராள மான வழக்குகளை அடுத்தடுத்துப் போட்டு, அவரைத் தொடர்ந்து உள்ளே வைக்கத்தான் ஆட்சி மேலிடம் திட்டமிட்டது. அப்படித்தான் நடந்துகொண்டும் இருந்தது. ஆனால் திடீரென, அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இது எப்படி என்பதுதான் முதல்வருக்கு அதிர்ச்சி. அதற்குப் பின்னணியில் முதல்வர் அலுவலகத்துக்குள் சிலர் செயல்பட்டது அவருக்குத் தெரிய வந்ததாம்!''

''மார்ட்டின் மேட்டரை வைத்து, சில மாதங் களுக்கு முன் நடந்த சில டீலிங்குகளைச் சொல்கிறார்களே?''

''ம். அமைச்சர் ஒருவரை இந்த விஷயத்தில் வேண்டுமென்றே மாட்டிவிட்டு, அதிகாரிகள்  இருவர் காரியம் சாதித்துக்கொண்ட கொடுமையும் நடந்தது என்று சொல்கிறார்கள் உள்விவரங்கள் அறிந்தவர்கள். 'அந்த அமைச்சர் கொண்டுவந்த சில திட்டங்களுக்கு முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்த அதிகாரி ஒருவர் முட்டுக்கட்டை போட்டார். தனக்கு வசதிப்பட்ட கம்பெனிகள்தான் வரவேண்டும் என்று அவர் நினைத்தார். ஆனால் அமைச்சரோ, இந்த விஷயங்களை நேரடியாக முதல்வரிடம் சொன்னார். இது அந்த அதிகாரிக்குக் கோபத்தைக் கிளப்பியது. நேரம் பார்த்துக்கொண்டே இருந்தார். தனக்கு வேண்டிய போலீஸ் அதிகாரி மூலமாக ஓர் அறிக்கையை வரவைத்து... அந்த அமைச்சரைக் காலி செய்யப் பயன்படுத்தினார்’ என்று சொல்கிறார்கள் கோட்டையில்!''

''அடேங்கப்பா..!''

''அப்போது இதை முறைப்படி விசாரணை நடத்தி இருந்தால், உண்மை தெரிந்திருக்கும். ஏனோ முதல்வர் அதைச் செய்யவில்லை. அதன் தொடர்ச்சிதான் சமீபத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும் சொல்கிறார்கள். தன்னுடைய பொறுப்புக் குறைப்பு ஷீலா ப்ரியாவை வருத்தப்பட வைத்துள்ளது. ஆனால், இதை மற்ற அதிகாரிகள் மனசுக்குள் மகிழ்ச்சியுடன் ரசிக்க ஆரம்பித்துள்ளார்கள்!''

''புதுக்கோட்டையில் இருந்து அமைச்சர்கள் திரும்பி விட்டார்களா?''

''ஒரு மாதமாக தொகுதியிலேயே இருந்து கஷ்டப்பட்ட அமைச்சர்களை நிம்மதி இழக்கச் செய்துள்ளது உளவுத் துறையின் அறிக்கை. பணம் பட்டுவாடா விஷயத்தில் சரியாகச் செயல்படவில்லை என்று சில அமைச்சர்கள் மீது புகார். தேர்தல் முடிவு வெளியான பிறகு, வார்டு வாரியாக பெற்ற ஓட்டுகளின் எண்ணிக்கை அடிப்படையில்தான் இதைக் கணிக்க முடியும் என்று அமைச்சர்கள் நினைத்திருந்தனர். ஆனால், அமைச்சர் படைக்குச் சமமாக அவர்களைக் கண்காணிக்க முதல்வர் உளவுத்துறையினரை அனுப்பி இருந்தார். உளவுத்துறை முதல் கட்டமாக திங்கள்கிழமை அனுப்பிய அறிக்கையில், அமைச்சர்களில் சிலர் செலவு செய்திருக்க வேண்டியதை அமுக்கிய விவரங்கள் இருக்கிறதாம். 'எப்படியும் வெற்றி பெற்று விடுவோம். பிறகு எதற்காக செலவு செய்ய வேண்டும்?’ என்று நினைத்த அமைச்சர்கள்தான் இப்படி நடந்து கொண்டார்களாம்''

''இதனாலும் சிலர் தலை உருளுமோ?''

''ஏற்கெனவே உருள இருப்பவர்களோடு இதை ஒப்பிடக் கூடாது. பொதுப்பணித் துறையின் மிக முக்கியமான பொறுப்பில் இருந்தவர் அந்த அதிகாரி. இவரது பணிக் காலம் சென்ற மாதமே முடிந்து விட்டது. வளம் கொழிக்கும் பதவி என்பதால் பெரும் தொகையை முக்கியஸ்தர் ஒருவருக்குக் கொடுத்து,  பணி நீட்டிப்பு பெற்றுள்ளார். 'இதுவும் முதல்வருக்குத் தெரியாது. அந்த அதிகாரி தி.மு.க. ஆட்சியில் அமைச்சர் துரைமுருகனுக்கு நெருக்கமாக இருந்தவர் என்பதும் தெரியாது’ என்கிறார்கள் கோட்டையில்.

அடுத்து பல கோடி ரூபாய்க்கு ஏலம் போகக்கூடிய பதவியாக சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியைச் சொல்கிறார்கள். ஜுலை 27-ம் தேதியுடன் இப்போது இருப்பவரின் பதவிக் காலம் முடிகிறதாம். 'இதை அடைவதற்கு கொங்கு மண்டலப் பிரமுகர் ஒருவர் துடியாய்த் துடிக்கிறார். கல்விக்கும் தகுதிக்கும் முக்கியத்துவம் கொடுத்து இந்த நியமனத்தை முதல்வர் செய்ய வேண்டும்’ என்றும் சிலர் பிரார்த்தனை செய்கிறார்கள்!'' என்றபடி கிளம்பப்போன கழுகார்...

''ஜெயலலிதா குறித்த வழக்கு ஆவணங்களை டெல்லி மேலிடம் கேட்டு வாங்கிய விஷயங்களை நான் ஏற்கெனவே உமக்குச் சொல்லி இருக்கிறேன். கடந்த இரண்டு நாட்களாக அதில் இன்னொரு இம்ப்ரூவ்மென்ட். சசிகலாவுக்கு கண் ஆபரேஷன் செய்ததாக சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றிலிருந்து வாங்கி பெங்களூர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணம் பற்றியும் ஒரு விசாரணை நடந்து வருகிறது'' என்று சொல்லிவிட்டு பறந்தார்!

படங்கள்: பொன்.காசிராஜன்,

சொ.பாலசுப்ரமணியன்

 கலைந்துபோன கனவு!

திண்டுக்கல் சீனிவாசன், திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் மனோகரன் எம்.எல்.ஏ, சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் செல்வராஜூ எம்.எல்.ஏ., குன்னம் தொகுதிச் செயலாளர் முத்தமிழ்ச்செல்வன் ஆகிய நான்கு கட்சி நிர்வாகிகளின் இல்லத் திருமணங்களை 14-ம் தேதி சென்னையில் நடத்தி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா.  

மிஸ்டர் கழுகு: பிரணாப் பராக்!

திருமண நிகழ்ச்சியில் நிர்வாகிகளின் கட்சிப் பணிகளைப் பாராட்டிவிட்டு, மணமக்களை வாழ்த்துவது ஜெயலலிதாவின் ஸ்டைல். ஆனால் இங்கே நிர்வாகிகளைப் பற்றி எதுவும் பேசாமல், வாழ்த்துகளை மட்டும் தெரிவித்தார். இந்தத் திருமணத்தின் மூலம் கட்சியில் மீண்டும் முக்கிய இடத்துக்கு வரலாம் என்று கனவு கண்டார் திண்டுக்கல் சீனிவாசன். ஆனால், சீனிவாசனைப் பற்றி முதல்வர் ஒரு வார்த்தைகூட பேசாமலே கிளம்பிப் போனது அவரது ஆதரவாளர்களுக்கு வருத்தம்!

 கிடைத்த ஜாமீன்... கிடைக்காத விடுதலை!

நித்தியானந்தாவைப் போலவே அவரது பரம வைரி லெனின் கருப்பனும் இப்போது சிக்கலில் இருக்கிறார். புழல் சிறையில் இருக்கும் லெனின் கருப்பனுக்கு, நீதிமன்றம் ஜாமீன் வழங்கி 17 நாட்கள்

மிஸ்டர் கழுகு: பிரணாப் பராக்!

ஆகி விட்டன. ஆனால், சிறை நிர்வாகம் அவரை இன்னும் வெளியில் விடவில்லை. அதனால் லெனின் கருப்பனின் வழக்கறிஞர் சுமதி, ஆட்கொணர்வு மனு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். லெனின் கருப்பனுக்கு எதிராக ஆஜரான அரசு வழக்கறிஞர், 'வாரணாசி நீதிமன்றம் லெனின் கருப்பனுக்கு ஒரு வழக்கில் பிடிவாரன்ட் பிறப்பித்திருக்கிறது. அதற்காக வருகிற ஜுலை 2-ம் தேதி லெனின் கருப்பனை வாரணாசி கொண்டு செல்ல இருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.

இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த வழக்கறிஞர் சுமதி, 'ரிமாண்டில் உள்ளவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தால் மட்டுமே, சிறை நிர்வாகம் அவர்களை சம்பந்தப்பட்ட கோர்ட்டுக்குக் கொண்டுசெல்ல முடியும். நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய ஒருவரை இன்னும் சிறையில் வைத்திருப்பது சட்ட விரோதம்’ என்று ஆவேசமானார். இதைஅடுத்து விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது நீதிமன்றம்.

இதற்கிடையில், கடந்த 14-ம் தேதி அன்றே லெனின் கருப்பனை ரகசியமாக வாரணாசிக்குக் கொண்டுசெல்ல முயற்சி நடந்திருக்கிறது. சிறை நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை குறித்து நீதிபதிகள் நாகப்பன், கருப்பையா ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையிட்டார் சுமதி. உடனே, அரசு வழக்கறிஞரை அழைத்து விசாரித்த நீதிபதிகள், டென்ஷன் ஆகியிருக்கிறார்கள். அதன்பிறகே, எழும்பூர் ரயில் நிலையம் வரை அழைத்துச் செல்லப்பட்ட லெனின் கருப்பனை, மீண்டும் புழல் சிறைக்குக் கொண்டுபோய் இருக்கிறார்கள்.