என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

ஆந்திர அலாரம்!

ப.திருமாவேலன்

##~##

சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வதில் காங்கிரஸ் தலைமையை யாரும் மிஞ்சவே முடியாது. சோனியாவின் புண்ணியத்தில் ஜெகன்மோகன் ரெட்டி, 'ஜெய்’மோகன் ரெட்டியாக வளர்ந்து நிற்கிறார்.

இன்றைக்கு ஆந்திரத்தைக் காப்பாற்ற வந்த ஆபத்பாந்தவன் அவதாரம் எடுத்துவிட்டார் ஜெகன்மோகன் ரெட்டி. அவரை சி.பி.ஐ. கைதுசெய்த அன்று, அருண் நேரு எழுதினார், 'ஜெகன்மோகனைத் தியாகி ஆக்கிவிடாதீர்கள்’ என்று. ஆனால்,அதைத் தான் காங்கிரஸ் கட்சி  செய்தது.

ஆந்திரத்தில் 18 இடங்களில் நடந்த இடைத்தேர்தலில் 15 இடங்களைக் கைப் பற்றி இருக்கிறது ஜெகன்மோகன் ரெட்டி யின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ். 'சிறை வைக்கப்பட்டு உள்ள ஜெகன்மோகனுக்கு 600 கிராம் அரிசி சாதம், 110 கிராம் பருப்பு, 250 கிராம் காய்கறி கொடுத்துள்ளோம். அவரது கைதி எண்: 6093’ என்று காங்கிரஸ் கட்சி ஜெகன்மோகனை அவமானப்படுத்த நினைத்து புள்ளிவிவரங்களை வெளி யிட்டது. ஆனால், 18 இடங்களில் இரண்டை மட்டுமே கையில் கொடுத்து காங்கிரஸை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி விட்டார்கள் அந்த மாநில மக்கள். சோனியா வையும் ராகுலையும் இந்த முடிவு வெட்கப் பட வைக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால், ஆந்திர காங்கிரஸ் தொண்டன் ஆத்திரம் அடைந்துள்ளான்.

ஆந்திர அலாரம்!

தமிழ்நாட்டைப் போலவே ஆந்திரத்திலும் காங்கிரஸ் கட்சி மக்களால் தீண்டப்படாமல் 25 ஆண்டுகளுக்கு மேல் இருந்தது. அதை உடைத்து 'கார்ப்பரேட் கடவுள்’ சந்திரபாபு நாயுடுவின் கவர்ச்சியைக் கலைத்து, காங்கிரஸை ஆட்சிக் கட்டிலில் ஏற்றியவர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி. கிராமங்களை மையப்படுத்திய பல திட்டங்கள் கொண்டுவந்ததால், 'விவசாய முதலமைச்சர்’ என்று அழைக்கப்பட்டார். ஒய்.எஸ்.ஆருக்கு ஏற்பட்ட எதிர்பாராத விபத்தைத் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பாகப் பலரும் கருதினார்கள். இதுவரை இந்தியத் தலைவர் எவர் இழப்புக்கும் இத்தனை தற்கொலைச் சம்பவங்கள் நடந்தது இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டார்கள்.

இதனால், ஒய்.எஸ்.ஆர். மகன் ஜெகன் மோகன் ரெட்டியைத்தான் காங்கிரஸ் கட்சி அடுத்த முதலமைச்சராக ஆக்கும் என்று மக்கள் நினைத்தார்கள். காங்கிரஸ் தொண்டர்களும் நினைத்தார்கள். ஆனால், ஜெகனை விடுத்து, ரோசய்யாவை முதலமைச்சர் ஆக்கினார் சோனியா. இதை ஜெகன் தனக்கு இழைக்கப்பட்ட துரோகமாகப் பார்த்தார். ஆனாலும், காங்கிரஸைவிட்டு விலக மனம் இல்லை. 'அப்பாவுக்காக உயிரைக் கொடுத்த குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்லப்போகிறேன்’ என்று கிளம்பினார். போகாத ஊர் இல்லை என்கிற அளவுக்குச் சுற்றிச் சுழன்றார். எல்லா ஊர்களிலும் ஆயிரக்கணக்கானவர்கள் கூடினர். ஒரு மத்தியான நேரத்தில் கட்சியை ஆரம் பித்தார் ஜெகன்மோகன்.  

ஆந்திர அலாரம்!

ஆட்சி மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. காங்கிரஸுக்கு எதிராக வாக்களித்தார்கள் 16 பேர். இதனால், அவர்களுடைய பதவி பறிபோனது. அந்தப் பதவிகளுக்குத்தான் இப்போது இடைத்தேர்தல் நடந்தன. சி.பி.ஐ. விசாரணையைத் தூண்டிவிட்டு ஜெகன்மோகனைக் கைது செய்தது சி.பி.ஐ. ஜெகன்மோகன் தேர்தல் பிரசாரத்துக்குப் போகாவிட்டால், ஊழல் வழக்கில் கைதானால், அவரது கட்சி தோற்றுப்போகும் என்பது காங்கிரஸின் லாஜிக். கண்ணீரும் கம்பலையுமாக ஒய்எஸ்.ஆரின் மனைவி விஜயம்மாவும் மகள் ஷர்மிளாவும் மக்கள் முன் வந்தார்கள். ''என் மகன் செய்த ஒரே தவறு, என் கணவர் இறப்பைத் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டவர்களின் வீட்டுக்கு ஆறுதல் சொல்லப் போனதுதான். இந்த நாட்டில் துக்கம் கேட்கக்கூட உரிமை இல்லையா?'' என்று அழுதார் விஜயம்மா. அவரோடு சேர்ந்து வாக்காளனும் அழ ஆரம்பித்தான்.

காங்கிரஸும் இல்லாமல், அப்பாவும் இல்லாமல் தனி ஆளாகத் தனது செல்வாக் கைக் காட்டிவிட்டார் ஜெகன்.

'சொந்தச் செல்வாக்கு உள்ள தலைவர் களை மாநிலங்களில் வளரவிடுவது இல்லை’ என்கிற ஒரே தவறை 50 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து செய்கிறது. அதற்கான தண்டனையையும் பெறுகிறது. ஆனாலும், திருந்தியதாகத் தெரியவில்லை. அடுத்த ஆண்டு, ஆந்திர சட்டமன்றப் பொதுத் தேர்தல் வரப்போகிறது. இந்த முடிவுகள்தான் அப்போதும் எதிரொலிக்கும். ஆச்சர்யம் இல்லை.

நம்முடைய வருத்தம் எல்லாம்... பல்லாயிரம் கோடி ஊழல் செய்தவர் என்று குற்றம்சாட்டப்பட்டு, ஜெகன்மோகன் சிறை வைக்கப்பட்ட நேரத்திலும் வெற்றி பெறுகிறார் என்றால், அது ஊழல் அரசியல்வாதிகளுக்குச் சந்தோஷம் அளிக்கும் வகையில் 'ரெண்டாவது லட்டு’ம் கொடுத்துவிட்டார்களே ஆந்திர மக்கள் என்பதுதான்!