என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

தலையங்கம் - ஒரு பொம்மை உருவாகிறது

தலையங்கம் - ஒரு பொம்மை உருவாகிறது

தலையங்கம் - ஒரு பொம்மை உருவாகிறது
தலையங்கம் - ஒரு பொம்மை உருவாகிறது

பிரதமர் பதவிதான் எட்டாக் கனி ஆகிவிட்டது. குடியரசுத் தலைவர் வேட்பாளராகவாவது நிறுத்தினார்களே என்று உள்ளூரத் துள்ளி இருப்பார் பிரணாப் முகர்ஜி. ஹமீது அன்சாரியை மனதில்வைத்திருந்த சோனியாவோ, கூட்டாளிகளும் எதிராளிகளும் கிடுக்கிப்பிடி போட்டு பிரணாப் பெயரைச் சொல்லவைத்துவிட்டதில், சற்று சோர்ந்துபோயிருப்பார்.

மன்மோகன் சிங்கை முன்மொழிந்து, சோனியாவின் 'கை'யை வைத்தே அவர் கண்ணைக் குத்தப் பார்த்த மம்தாவும்... இங்கே தலையும் அங்கே வாலும் காட்டிய முலாயம் சிங்கும்... 'கலாம் என்றால் தமிழில் கலகம் என்றும் பொருள் உண்டு' என்ற கருணாநிதியின் அகராதியும்... இந்தக் கொலு கச்சேரியின் உப காட்சிகள்!

தன் கட்சித் தலைவரான சரத் பவாரிடம் ஆதரவு - அனுமதி பெறாமலே, 'நானும் ஜனாதிபதி வேட்பாளர்தான்' என்று கோஷமிட்டு, வலியப்போய் வாக்கு சேகரித்த பி.ஏ.சங்மாவின் ஆசையும் அவசரமும் தனி!

தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்க முடியாமல் திணறிய மார்க்சிஸ்ட் தோழர்கள், பிரணாப்புக்கு வாழ்த்து சொன்னதன் மூலம், தங்களின் வங்கத்துப் பாசத்தைப் பறைசாற்றுகிறார்கள். திரும்பத் திரும்பக் கூடிப் பேசிய பா.ஜ.க. தலைமையிலான எதிர்க் கட்சிக் கூட்டணியினர், நறுக்கென்று ஒரு வேட்பாளர் பெயரைச் சொல்ல முடியாமல் தவித்த தவிப்பிலேயே அவர்களின் 'ஒற்றுமை'யும் நன்றாக விளங்கிப்போனது நாட்டுக்கு.

'கட்சி பேதமின்றிக் கூடிப் பேசுவோம். ஒருமித்த கருத்துடன் போட்டியின்றி ஒருவரைத் தேர்ந்தெடுப்போம்' என்று ஆரம்பத்தில் சோனியா, அத்வானி உட்பட தலைவர்கள் பலரும் சொன்ன வார்த்தைகள் காற்றோடு கரைந்து போனதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. குடியரசுத் தலைவர் என்பவர்  தலையாட்டி பொம்மையாக, எப்போதும் தங்கள் பக்கமே சாய வேண்டும் என்ற ஒவ்வோர் அணியும் ஆசைப்படும்போது, எப்படி உண்டாகும் ஒருமித்த கருத்து?

அப்பப்பா... யார் சொன்னது பொம்மை விளையாட்டு சுலபம் என்று?