பிரீமியம் ஸ்டோரி

என்.சண்முகம், திருவண்ணாமலை.

கழுகார் பதில்கள்!

தமிழக முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் சாதனைகள் எதுவுமே செய்யவில்லையா? அவர் பெயரை யாருமே சொல்வது இல்லையே ஏன்?

சொல்ல வேண்டியவர்கள் காங்கிரஸ்காரர்கள்தான். அவர்களுக்கு இதைவிட 'முக்கியமான’ வேலைகள் இருக்கிறது. அதனால் மறந்திருப்​பார்கள்!

அந்தக் காலத்தில் '1,000 ஏக்கர் வைத்திருந்தவர்’ என்று சொல்லத்தக்க செல்வாக்குள்ள குடும்பத்து பிள்ளை பக்தவத்சலம். சுதந்திரப் போராட்டத்தில் தியாகத் தழும்புகள் தாங்கியவர். ராஜாஜியின் வார்ப்பாக வளர்ந்தவர். காமராஜரை எதிர்த்தவர். ஆனாலும், தான் அமைச்சரவை அமைத்தபோது பக்தவத்சலத்தை விட்டுவிடக் கூடாது என்கின்ற அளவுக்கு காமராஜர் மனதில் இடம்பிடித்தவர். அவர் முதலமைச்சராக இருந்த​போது, தமிழக ஆட்சி நிர்வாகம் துலாக்கோல் போல் நேர்மையாக, நியாயமாக இருந்தது என்பதை அவரது எதிரிகளும் ஒப்புக்கொள்வார்கள். பொதுப்பணித் துறை, இந்து சமய அறநிலையத் துறை இரண்டுக்கும் அது பொற்காலம். பழுத்த பக்தரான அவர், பயனற்றுக் கிடக்கும் கோயில் சொத்துக்கள் மூலமாக பள்ளி, கல்லூரிகள் அமைக்கலாம் என்று சட்டமே இயற்றினார். தன்னுடைய விருப்பங்களை, யாருக்​கும் பயப்படாமல் செய்து காட்டியவர். அவரது துரதிஷ்டம், உணவுப் பஞ்சம் வந்தது. அவரால் சமாளிக்க முடியவில்லை. இந்தியைத் திணித்த டெல்லித் தலைவர்கள் தப்பித்துக்கொள்ள... இவர் இங்கே மாட்டிக்கொண்டார். இந்த இரண்டு விமர்சனங்கள் மட்டும் இல்லாவிட்டால்... பக்தவத்​சலம், முழுமையாகப் பின்பற்றத்தக்கவரே!

 மா.சந்திரசேகர், மேட்டு மகாதானபுரம்.

இரண்டு கட்சி ஆட்சி முறை நம் நாட்டில் ஏற்புடையது இல்லையா?

இத்தனை கட்சிகள் இருக்கும்போதே ஜன​நாயகத்​தின் நிலைமை, கவலைக்கிடமாக இருக்கிறது. இரண்டு கட்சி ஆட்சி முறை இருந்தால் அதோகதி​தான்!

ம்... தமிழகத்தைப் பொறுத்தவரை, இப்போதும் இரண்டு கட்சி ஆட்சி முறைதானே இருக்கிறது!

 அர்ஜுனன்.ஜி., திருப்பூர் -7.

இந்திப் போராட்டத்தை கிண்டல் செய்து பாடப் புத்தகத்தில் கேலிச் சித்திரம் வெளியிட்டது சரியா?

##~##

1965-ல் நடந்தது இந்தி எதிர்ப்புப் போராட்டம் அல்ல. இந்தித் திணிப்பை எதிர்க்கும் போராட்டம். அதை எதிர்த்துப் போ​ராட்டம் நடத்தியது தனிப்​பட்ட ஒரு அரசியல் கட்சி அல்ல. மாண​​வர்கள்... மருத்​துவம், சட்டம், பொறியியல், கலைக் கல்லூரிகளில் படித்​துக்கொண்டு இருந்த மாணவர்கள். எனவே, அவர்களுக்கு 'ஆங்​கிலம் வாசிக்கவே தெரியாது’ என்ற அர்த்தம் பொதிந்த வாசகங்​கள்​கொண்ட கேலிச் சித்திரம் என்பது ஒட்டு​மொத்த மாணவ சமுதாயத்தை இழிவு​படுத்து​வதுதானே தவிர, இந்திப் போ​ராட்​டத்தைக் கொச்​சைப்​படுத்துவது மட்டும் அல்ல!

அந்தப் போராட்டத்தை வழிநடத்தியவர்கள் ஆங்கி​லத்தில் மணிக்​கணக்கில் பேசக்​கூடியவர்​களாக பின்னர் வளர்ந்து காட்டிய வரலாறுதான், அந்தக் கேலிச்சித்திரத்துக்கான உண்மையான பதில்!

அ.குணசேகரன், புவனகிரி.

ஆன்மிகவாதிகளிடம் உள்ள சொத்​துக்கள் மயக்கம் வர வைக்கின்றனவே?

மன்னர் ஆட்சிக் காலத்தில் அரசாங்க கஜானா​வாகவே கோயில்கள் பயன்படுத்தப்பட்டன. பணம், நகைகள் அங்கு பத்திரமாக இருக்கும் என்று மன்னர்கள் நினைத்தார்கள். அதைப் போலத்தான் சில தொழில் முதலைகள் இப்போது ஆன்மிகவாதிகளைப் பயன்படுத்துகிறார்கள். ரெய்டு இல்லை... டேக்ஸ் நெருக்கடி இல்லை. எனவே, நிம்மதியான லாக்கராக பல ஆசிரமங்கள் அமைந்துள்ளன.

நித்தி மாதிரியான ஆட்கள், 'வினையை விலைக்கு வாங்குவதால்’ இனி அங்கு வைப்பதற்கும் பலர் யோசிக்கவே செய்வார்கள்!

 பி.சூடாமணி, திருச்சி-6.

பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதி வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்தது ஏன்?

மன்மோகனுக்கு பின்னால் உட்கார்ந்துகொண்டு கொடுத்த ஒரு குடைச்சல் நீங்கியது. அடுத்து, ராகுல் காந்திக்கு இணையாக பிரதமர் வேட்பாளர் என்று பேசக்கூடிய ஓர் அவஸ்தை அடங்கியது. எல்லாக் காரியக் கமிட்டிகளிலும் தான் நினைத்ததை பேசிக்கொண்டே இருந்த ஒரு தொந்தரவு முடங்கியது. இவை மூன்றும் உடனடியாக ஏற்பட்ட மூன்று முக்கியமான நன்மைகள்!

அடுத்த தேர்தல் முடிந்து தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால், 'காங்கிரஸைக் காக்க’ எதையும் செய்வார் பிரணாப். ஒருவேளை, பி.ஜே.பி. ஆட்சி அமையுமானால், குடைச்சல் கொடுக்கவும் தயங்க மாட்டார் பிரணாப். இவை இரண்டும் எதிர்பார்க்கப்படும் நன்மைகள்!

 ரேவதிப்ரியன், ஈரோடு.

முன்பு உள்துறை அமைச்சரகத்தில் தீ, இப்போது நிதி அமைச்சரகத்தில் தீ... எனத் தொடர்கிறதே?

இது உண்மையான தீ அல்ல. சந்தேகத் தீ!

 எஸ்.ஜெயக்குமார், கூடுவாஞ்சேரி.

கருணாநிதியை தயவுசெய்து ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பார்க்கச் சொல்வீர்களா?

அவருக்கு அப்படி ஒரு விமர்சன உலகு இருப்பது தெரியுமா எனத் தெரியவில்லை. இன்றைய இளைய தலைமுறை இந்த உலகத்தைப் பற்றி என்ன மாதிரியான கருத்து வைத்துள்ளது என்பதை கருணாநிதி பார்க்க வேண்டும். அவர் தனக்குத்தானே கேட்டுக்கொண்டு பதில் சொல்ல நிறையக் கேள்விகள் அங்கு கிடைக்கும்!

 ஜி.குப்புசாமி, சங்கராபுரம்.

நித்தியானந்தா அசர மாட்டார் போலிருக்கிறதே?

அத்தனை பப்ளிகுட்டியும்  பொதுமக்கள் மத்தியில் நெகடிவ் ஆகிக்கொண்டு இருப்பதை நித்தி உணர்ந்தாரா எனத் தெரியவில்லை!

 அழகப்ப ராஜேந்திரன், செங்கல்பட்டு-1.

நாட்டின் முதல் குடிமகன் ஓர் அரசியல்வாதியாகத்தான் இருக்க வேண்டுமா?

அரசியல்வாதிகளால் தேர்ந்தெடுக்கப்படுபவர் அரசியல்வாதி​யாகத்தானே இருப்பார். அதுவும் தங்களுக்கு ஏற்றவரைத்தானே வைத்துக்​கொள்​வார்கள். பொதுவானவரைத் தேர்ந்தெடுக்க, நம் தலைவர்கள் தேசத்தைப் பற்றி மட்டுமே கவலைப்படுபவர்களா என்ன?

 கே.மனோகரன், மதுரை.-11.

ஐந்து வருடங்களில் நமது ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் சாதித்தது என்ன?

இரண்டு நாட்களாக யோசித்தும் எதுவும் தோணவில்லை!

இன்னொன்று தெரியுமா மனோகரன், சமீப காலமாக பள்ளிக்கூட க்விஸ் போட்டியிலும்கூட  ஏனோ, 'இந்தியாவின் ஜனாதிபதி யார்?’ என்று கேட்கப்​படுவது இல்லையாம்!

 மா.சுந்தரமூர்த்தி, செய்யாறு.

மற்றவர்களுக்காக தன் கொள்கைகளை மாற்றிக்​கொள்பவன் நல்ல மனிதனா? யாருக்காகவும் தன் கொள்கை​களை மாற்றாமல் இருப்பவன் நல்ல மனிதனா?

'ஒத்ததறிவான் உயிர் வாழ்வான்; மற்றை​யான்

செத்தாருள் வைக்கப்படும்’ என்கிறது திருக்குறள். உலகத்தார் ஏற்றுக்கொண்ட நெறிமுறைகளின்படி  வாழ்பவனே உயிர் வாழ்பவன். மற்றவன் இறந்த​வரோடு வைக்கத்தக்கவன் என்பது இதனுடைய பொருள்!

கழுகார் பதில்கள்!
கழுகார் பதில்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு