Published:Updated:

டீசல், கேஸ் விலை உயர்வுக்கான பரிந்துரையை ஏற்க கூடாது: ராமதாஸ்

விகடன் விமர்சனக்குழு
டீசல், கேஸ் விலை உயர்வுக்கான பரிந்துரையை ஏற்க கூடாது: ராமதாஸ்
டீசல், கேஸ் விலை உயர்வுக்கான பரிந்துரையை ஏற்க கூடாது: ராமதாஸ்
டீசல், கேஸ் விலை உயர்வுக்கான பரிந்துரையை ஏற்க கூடாது: ராமதாஸ்

சென்னை: ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலனுக்கு எதிரான கிரித் பாரிக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்கக்கூடாது என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணய முறை குறித்து ஆலோசனை வழங்குவதற்கு அமைக்கப்பட்ட திட்டக்குழுவின் முன்னாள் உறுப்பினர் கிரித் பாரிக் தலைமையிலான வல்லுனர் குழு அளித்துள்ள பரிந்துரைகள் நடைமுறைக்கு சிறிதும் ஒத்து வராதவையாக உள்ளன.

டீசல் விலையை உடனடியாக லிட்டருக்கு ரூ.5 உயர்த்த வேண்டும், டீசல் விற்பனையில் லிட்டருக்கு ஆறு ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படும்போது, அதற்கேற்றவாறு டீசல் விலையை உயர்த்த வேண்டும், மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயு உருளைகளின் எண்ணிக்கையை ஆண்டுக்கு ஆறாக குறைக்க வேண்டும், எரிவாயு விலையை உருளைக்கு ரூ.250 உயர்த்த வேண்டும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் சமையல் எரிவாயுவுக்கு வழங்கப்படும் மானியத்தை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும், ஏழைகளின் எரிபொருளாக விளங்கும் மண்ணெண்ணெயின் விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்த வேண்டும், அடுத்த சில ஆண்டுகளில் மண்ணெண்ணெய் வினியோகத்தை பெருமளவில் குறைக்க வேண்டும் என்று கிரித் பாரிக் குழு அரசுக்கு பரிந்துரைத்திருக்கிறது. இந்த பரிந்துரைகள் அனைத்துமே ஏற்கமுடியாதவை.

##~~##
டீசல் விலை கடந்த மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 4 மாதங்களில் லிட்டருக்கு ரூ.4.19 உயர்த்தப்பட்டிருக்கிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு சமையல் எரிவாயு விலை ரூ.190 அதாவது 76 சதவீதம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த விலை உயர்வு போதாதென்று மேலும் விலையை உயர்த்த வேண்டும் என்று பரிந்துரைப்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை சமையல் எரிவாயு எந்தவித எண்ணிக்கை உச்சவரம்பும் இல்லாமல் வழங்கப்பட்டு வந்தது. 2012 ஆம் ஆண்டு செப்டம்பரில் தான் வீடுகளுக்கு ஆண்டுக்கு 6 உருளைகள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. அதற்கு பிறகு தான் கடந்த ஜனவரி மாதத்தில் வீடுகளுக்கு வழங்கப்படும் உருளைகளின் எண்ணிக்கை 9 ஆக உயர்த்தப்பட்டது. இதை மீண்டும் ஆறு ஆக குறைக்க வேண்டும் என்று கிரித் பாரிக் குழு அளித்துள்ள பரிந்துரை மிகவும் பிற்போக்கானது.
இந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டு விடும். எனவே, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலனுக்கு எதிரான கிரித் பாரிக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்கக்கூடாது'' எனக் கூறியுள்ளார்.