Published:Updated:

மிஸ்டர் கழுகு: நிம்மதி... மந்திரி...

மிஸ்டர் கழுகு: நிம்மதி... மந்திரி...

பிரீமியம் ஸ்டோரி
##~##

ம்முன் வந்து உட்கார்ந்த கழுகார், ''ஃப்ளைட் டேக் ஆப் ஆயிடுச்சா?'' என்று யாரிடமோ கேட்டார். 

''அப்படியா!'' என்றபடி நம்மைப் பார்த்தார்!

மிஸ்டர் கழுகு: நிம்மதி... மந்திரி...

''கொடநாடு பயணத்துக்கான திட்டமிடுதலில் இருக்கிறார் முதல்வர் என்று கடந்த முறை சொல்லி இருந்தேன். இதோ... ஜெயலலிதா கொடநாடு கிளம்பி விட்டார். அநேகமாக ஜூலை 7-ம் தேதி வரை அங்கே இருப்பார் என்கிறார்கள். அதன்பிறகு சென்னை திரும்புவாரா அல்லது கொடநாடு தொடருமா என்பது தெரியாது'' என்றவர் தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.

''வியாழன் காலை முதல் ஜாலியான மூடில்தான் இருந்தார் முதல்வர். அன்று காலை, தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கியின் மகள் பிரபா திருமணம். அதில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் முதல்வரின் கொடநாடு பயணமே தள்ளிப்போனது. திருமண மண்டபத்துக்குள் வந்த முதல்வருக்கு பிரத்யேகமாக ஒரே ஒரு நாற்காலி மட்டும் போடப்பட்டு இருந்தது.''

''முன்பெல்லாம் சசிகலாவும் வருவார்... இரண்டு நாற்காலிகள் காத்திருக்கும் என்பதைத்தானே சொல்ல வருகிறீர்?''

''அந்த ஒரு நாற்காலியில் முதல்வர் தனியாக உட்கார்ந்து திருமணத்தைக் கண்டுகளித்தார். அமைச்சர்கள் தனியாக உட்கார்ந்து விட்டார்கள். தலைமைச் செயலாளரும் மணமேடையில் இருந்தார். தாலிகட்டி முடித் ததும் ஆசீர்வதிப்பதற்காக அட்சதை கொடுத்தார்கள். அதை எடுத்துச் சென்று மேடைக்கு கீழே நின்று முதல்வர் தூக்கிப் போட்ட காட்சி, அவரது இயல்பான நடவடிக்கையைக் காட்டியது. தாலிகட்டி முடிந்ததும், பிரபாவும் அவரது கணவர் அபிநப்-பும் முதல்வர் அருகே வந்தார்கள். பிரபாவின் நெற்றியில் குங்குமம் இட்ட முதல்வர், அவரது தாலிக் கும் குங்குமம் வைத்துவிட்டார். இதைப் பார்த்து தலைமைச் செயலாளரும் அவரது மனைவியும் உணர்ச்சிவசப்பட்டார்கள்!''

மிஸ்டர் கழுகு: நிம்மதி... மந்திரி...

''ஆச்சர்யமான காட்சிதான்!''

''அங்கே இருந்து நேராக, விமான நிலையத் துக்கு முதல்வர் செல்வதாக முதலில் திட்டம். ஆனால், திடீரென முடிவை மாற்றி போயஸ் கார்டன் போய்விட்டார். அங்கே இருந்துதான் விமான நிலையம் கிளம்பினார். அவருக்காகவே அமைச்சர்கள், கட்சிப் பிரமுகர்கள் கூட்டம் காத்திருந்தது. 'அமைச்சர்கள் சார்பில் ஓ.பன்னீர் செல்வமும், கட்சி நிர்வாகிகள் சார்பில் அவைத்தலைவர் மதுசூதனனும் மட்டும் பொக்கே கொடுத்தால் போதும்’ என்று முதல்வர் சொல்லிவிட்டதால், அவர்கள் கையில் இருந்ததை மட்டும் வாங்கிக்கொண்டார். தனிவிமானத்தில் முதல்வருடன் அவரது ஆஸ்தான செயலாளரான வெங்கடரமணன், ராமலிங்கம் ஆகியோருடன் பாதுகாப்பு அதிகாரிகள், உதவி செய்ய ஒரு பெண் உள்ளிட்ட எட்டுப் பேர் சென்றுள்ளனர். இப்போதும் சசிகலா இல்லை!''

''இதையும் நீர் சொன்னீர்!''

''இதை ஓர் அதிகாரியிடம் கேட்டேன், 'அவர்தான் எஸ்.பி. ரேங்கில் இருந்து சப்-இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டு விட்டாரே’ என்று கிண்டல் அடித்தார்.''

''யார் என்ன கிண்டல் அடித்தாலும் கார்டனுக்குள்தானே இருக்கிறார்?''

''இருக்கட்டும்! ஜெயலலிதா கொடநாடு போனதில் அமைச்சர்களுக்குத்தான் ரொம்பவும் சந்தோஷம். 'கொடநாடுக்கு முன் கேபினெட் மாற்றங்கள் இருக்கும்’ என்று பரவிய செய்திதான் அதற்குக் காரணம். 'இனி அம்மா வரும் வரை எந்த சேஞ்சும் இருக்காது’ என்று அவர்களுக்குள் குதூகலம்.''

''முதல்வர் அலுவலகத்துக்குள் திடீரென புதிய அதிகாரி ஒருவர் வந்து சேர்ந்துள்ளாரே?''

''சுடலைக் கண்ணன் ஐ.ஏ.எஸ். முதலமைச்சரின் இணைச் செயலாளர்களில் ஒருவராக சேர்க்கப்பட்டு உள்ளார். 'முதல்வருடன் கொடநாடு பயணத்தில்  செயலாளர் ராமலிங்கம் செல்ல இருக்கிறார். எனவே, கோட்டையில் இணைச்செயலாளர் அந்தஸ்தில் ஒருவர் இருந்தால் நல்லது’ என்றாராம் முதல்வர். அதனால்தான் இவரை நியமித்துள்ளனர். இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்காதவர் என்ற ஒரே தகுதியின் அடிப்படையில் இவரை நியமித்து உள்ளார்களாம்!'' என்ற  கழுகார் அடுத்த சப்ஜெக்ட்டுக்கு மாறினார்.

''கருணாநிதி ஆரம்பித்துள்ள டெசோ அமைப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடந்த வாரத்தில்

மிஸ்டர் கழுகு: நிம்மதி... மந்திரி...

சேர்க்கப்பட்டு உள்ளது. விழுப்புரத்தில் நடக்க இருக்கும் மாநாட்டில் திருமாவளவன் பேச இருக்கிறார். மாநாட்டு ஏற்பாடு களைச் செய்யும் குழுவில் அதே கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் சேர்க்கப்பட்டு இருக்கிறார். ஆனால், இதை எதிர்த்து அந்தக் கட்சியின் செயற்குழுவிலேயே கடுமையான விமர்சனங்கள்!''

''என்னவாம்?''

''சிறுத்தைகளின் மாநில செயற்குழுக் கூட்டம் ஒன்பது மணி நேரம் நடந்துள்ளது. டெசோவில் சிறுத்தைகள் இணைந்தது தொடர்பாகவும் திருமாவின் 50-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்குத் தங்க நாணயங்கள் வழங்கும் விழா நடத்துவது தொடர்பாகவும்தான் இந்தக் கூட்டம். தி.மு.க-வுடன் அதிகப்படியான நெருக்கம் குறித்து சிறுத்தைகளுக்குள் இருக்கும் கோபத்தைத் தணிப்பதற்காகவே இந்தக் கூட்டத்தை திருமா கூட்டினாராம். '2014 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் எந்தக் கூட்டணியில் இருக்க வேண்டும் என்பதை இப்போதே முடிவெடுத்தாக வேண்டும். ஜெயலலிதாவுடன் நாம் சேர முடியாது. நம்மைச் சேர்க்கவும் மாட்டார். அதனால் கலைஞருடன்தான் சேர்ந்தாக வேண்டும். பாரதிய ஜனதாவுடன் நாம் கூட்டணி வைக்க முடியாது. அதனால், காங்கிரஸுடன்தான் சேர்ந்தாக வேண்டும். முக்கியக் கட்சிகளுடன் இணைந்து செயல் படவில்லை என்றால், நாம் காணா மல் போய்விடுவோம்’ என்று முன்னுரையாக சில விளக்கங்கள் சொன்னாராம் திருமா!''

''மற்றவர்கள்?''

''பலரும் 'அண்ணன் சொன்ன முடிவை ஏற்போம்’ என்று சொல்ல, வேலுச்சாமி, வன்னியரசு, துரை, பொன்னரசு உள்ளிட்ட சிலர் மட்டும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தார்களாம். 'தமிழ் ஈழப் பிரச்னையை கையில் எடுத்த பிறகுதான் தலித் வட்டாரத்தில் இருந்து அனைவரது கவனத்தையும் சிறுத்தைகள் ஈர்த்தது. ஆனால் கடந்த நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் தி.மு.க., காங்கிரஸுடன் நாம் கூட்டணி வைத்ததால், அனைத்து தரப்பில் இருந்தும் விமர்சிக்கப் பெற்றோம். இது, சமீப காலமாகத்தான் குறைந்தது. கருணாநிதியுடன் டெசோ வில் சேர்ந்தால், உலகத்

தமிழர்கள் நம்மைத் திட்டுவார்கள். உடனடியாக நாம் அதில் இருந்து விலக வேண்டும்’ என்றாராம் வேலுச்சாமி. 'ஃபேஸ்புக்கில் மிக மோசமாகக் கருணா நிதியைத் திட்டி கமென்ட் போடுகிறார்கள். அவரோடு நாம் சேரக் கூடாது’ என்றாராம் பொன்னரசு.

'நம்முடைய தலைவருக்கு என்று ஒரு இமேஜ் இருக்கிறது. அதை வைத்துத்தான் நாம் அரசியல் செய்கிறோம். டெசோவில் இணைந்ததன் மூலமாக தலைவரின் இமேஜ் சரிந்து விடும். கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது, ஈழத் தமிழர்களுக்கு எதையும் செய்யாமல் இருந்து விட்டு, இப்போது டெசோ ஆரம்பிப்பது துரோகம். காலில் விழுந்து கேட்கிறேன், அதில் இருந்து தலைவர் விலக வேண்டும்’ என்றாராம் வன்னியரசு.''

''திருமா என்ன சொன் னாராம்?''

''டெசோ வரவேற்புக் குழுவில் இருக்கும் ரவிக்குமார் கூட மைய மாக தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். 'கருணாநிதி நம்மைப் பயன்படுத்தப் பார்க்கிறார். ஈழப் பிரச்னையில் நம்மைக் கேடயம் ஆக்கப் பார்க்கிறார். நாம் நம்மை ஒழுங்குபடுத்திக்கொள்ள வேண்டும். நம்முடைய கட்சிக்குள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அஜெண்டாவுடன் வருகிறார்கள். நாம் ஆதிதிராவிடர் பிரச்னைகளுக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும்’ என்ற அர்த்தத்தில் பேசினாராம் ரவிக்குமார். 'உங்களது உணர்வுதான் என்னுடைய உணர்வும். ஆனால் நமக்கு வேறு வழி இல்லை. கலைஞருடன்தான் நாம் இருந்தாக வேண்டும்’ என்று முடித்தாராம் திருமா!''

''ம்!''

''பெரியார் தி.க-வுக்குள் உள்குத்து தொடங்கி உள்ளது. கொளத்தூர் மணிக்கும் கோவை ராமகிருஷ்ணனுக்குமான பிரச்னை நெடுநாட்களாக நடக்கிறது. இவர்கள் இருவரையும் ஒட்ட வைக்கும் காரியமும் நெடுநாட்களாக நடக்கிறது. ஆனால் ஏனோ, ராம கிருஷ்ணனை விலக்கியாக வேண்டும் என்பதில் மணி உறுதியாக இருக்கிறார். இறுதிக்கட்ட முறிவுக்கான பேச்சுவார்த்தை இந்த வாரத்தில் நடக்கப்போகிறதாம்!'' என்ற கழுகார் எழுந்து பறந்தார்!

அட்டை மற்றும் படங்கள்:

என்.விவேக், ச.வெங்கடேசன்

 ராமஜெயம் கொலை... இனி சி.பி.சி.ஐ.டி. கையில்?

ராமஜெயம் விவகாரத்தை சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றி இருக்கிறாரம் டி.ஜி.பி. ராமானுஜம். திருச்சியில் உள்ள சில போலீஸ் அதிகாரிகள், இந்த யோசனையை 'காலம் கடந்து எடுக்கப்பட்ட முடிவு' என்றே சொல்கிறார்கள். 'ஏற்கெனவே ரியல் எஸ்டேட் அதிபர் துரைராஜ் மற்றும் அவரது கார் டிரைவரையும் காரில் வைத்தே எரித்துக் கொன்ற விவகாரத்தை, பல வருடங்களாகவே சி.பி.சி.ஐ.டி. போலீஸார்தான் விசாரித்தார்கள். விசாரிக்கிறார்கள். இன்னும் விசாரிப்பார்கள். இந்த விவகாரம் போலவே ராமஜெயம் விவகாரத்தையும் கிடப்பில் போட்டு விடுவார்கள்'' என்று போலீஸில் சிலரே வருத்தப்படுகிறார்கள்.

'ராமஜெயம், நேரு குடும்பத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு? எங்கெங்கே அசையா சொத்துகள் இருக்கின்றன. என்பது போன்ற விவரங்களைத்தான் இதுநாள் வரை போலீஸார் சேகரித்தார்களே தவிர, குற்றவாளியை எங்கே தேடினார்கள்?’ என்று தி.மு.க-வினர் குமுறுகிறார்கள்.

 ஜெயேந்திரருக்கு ஜெயம்?

சங்கரராமன் கொலை வழக்கில், தனக்குச் சாதகமாக தீர்ப்பளிக்கும்படி, ஜெயேந்திரர் பேசியதாக ஒரு சி.டி. கிளம்பியது. அந்த சி.டி. உண்மைதானா என்று விசாரிக்க, சைபர் க்ரைம் போலீஸுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த விசாரணை அறிக்கையை சைபர் கிரைம் ஒப்படைத்து விட்டதாம்.

'தொலைபேசி உரையாடல் போலி. பல இடங்கள் தேவைக்கு ஏற்ப வெட்டி ஒட்டப்பட்டு இருக்கிறது’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறதாம்.

ஓ... பார்ட்டி நல்ல பார்ட்டிதான்!

சர்ச்சைக்குரிய தொழில் அதிபர் ஒருவர் சமீபத்தில் பெரிய பார்ட்டி வைத்தாராம். அது வழக்கமானதுதான். ஆனால், அதில் கலந்து கொண்ட ஆளும் கட்சிப் பிரமுகர் பற்றித்தான் அதிர்ச்சியுடன் பேசிக்கொள்கிறார்கள். 'அரசாங்கத்தை எதிர்த்து சமீபத்தில் வழக்குப் போட்டவர் அந்தத் தொழில் அதிபர். அப்படிப்பட்டவர் நடத்திய விருந்தில் இருந்த சட்டப்புள்ளி எப்படி கலந்து கொள்ளலாம்? வழக்கில் நியாயமாக இவர் எப்படி செயல்பட்டிருக்க முடியும்?’ என்று கேட்கிறது ஒரு டீம்.

கவலையை மறக்க என்ன வழி?

கடந்த ஆட்சியில் கொடிகட்டியும் கரன்ஸி கறந்தும் வாழ்ந்த மந்திரி அவர். அவருக்கு நிழலும் நிஜமுமாக இருந்து கவனித்துக் கொண்டவர் சமீபத்தில் இறந்து போனார். 'ஐயோ... அவன் பேர்லதானே நிறைய வைச்சிருந்தேன். இப்படித் தவிக்கவிட்டுட்டுப் போயிட்டானே’ என்று சொல்லி கவலையை மறக்க வழி தெரியாமல் மிதக்க ஆரம்பித்து விட்டாராம் மாஜி!

  ''இது ஜெயலலிதா ஆபீஸா?''

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை குண்டாஸில் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளார்கள். ஸ்டாலின் ஏற்கெனவே சென்று அவரைப் பார்த்து விட்டார். கடந்த வியாழன் அன்று, கனிமொழியின் கார் வேலூரை நோக்கிப் பறந்தது. அவருடன், ராசாத்தி அம்மாளும் வந்தது கட்சியினருக்கு புதிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

மிஸ்டர் கழுகு: நிம்மதி... மந்திரி...

இந்தச்செய்தியைக் கேள்விப்பட்டு லோக்கல் தி.மு.க-வினர் சிறை வளாகத்தில் மளமளவெனக் கூடிவிட்டனர். அவர்களை அமைதிப்படுத்துகிறேன் என்று போலீஸார் தடுத்ததும் கொந்தளிப்பு கிளம்பியது.

ராணிபேட்டை நகர தி.மு.க செயலாளரான குட்டி (எ) கிருஷ்ணமூர்த்தி, ''இது என்ன ஜெயலலிதா கட்சி ஆபீஸா? ஆட்சி மாறும்போது எங்களுக்கு நீங்கள் எல்லாம் சல்யூட் அடிக்கணும். அதை மறந்துடாதீங்க!'' என்று டென்ஷனாகவே, அங்கிருந்த காவலர்கள் அனைவரும் கப்சிப் ஆனார்கள். அரை மணி நேரம் கழித்து வெளியே வந்த கனி மொழி, 'அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தது முதல் தி.மு.க-வினர் மீது தொடர்ந்து பொய் வழக்குப் போட்டு வருகிறார். இது தான் ஓராண்டு சாதனை!'' என்று பஞ்ச் வைத்துக் கிளம்பினார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு