Published:Updated:

மிஸ்டர் கழுகு: சீறிய ஜெ.அன்பழகன்!

மிஸ்டர் கழுகு: சீறிய ஜெ.அன்பழகன்!

மிஸ்டர் கழுகு: சீறிய ஜெ.அன்பழகன்!

மிஸ்டர் கழுகு: சீறிய ஜெ.அன்பழகன்!

Published:Updated:
##~##

ழுகார் உள்ளே நுழைந்ததும் தனது குறிப்புப் புத்தகத்தைச் சிறகுகளுக்குள் இருந்து கத்தையாக எடுத்தார். 

''வெயிட்டாகத்தான் வந்திருப்பீர் போலிருக்கே...'' என்றோம் குஷியாக. ''முதலில் தி.மு.க. செயற்குழு!'' என்றபடி தொடங்கினார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''தி.மு.க. தன்னுடைய பழைய பாணியிலான சிறை நிரப்பும் போராட்டத்தைக் கையில் எடுத்து​விட்டது. அது எந்த அளவுக்கு சக்சஸ் ஆகும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த முடிவை எடுப்பதற்கு முன்னதாக நடந்த ஆலோசனைக் கூட்டம் கட்சிப் புள்ளிகளை கதிகலங்க வைத்துள்ளது. முன்பெல்லாம் முரசொலி மாறன் மட்டும்தான் கட்சி நிர்வாகிகள், அமைச்​சர்கள், தலைமைக் கழகப் பிரமுகர்களைக் காய்ச்சி எடுப்பார். சில நேரங்களில் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றி பேராசிரியர் அன்பழகன் அந்தக் காரியத்தை கச்சிதமாகப் பார்ப்பார். இந்த முறை, தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் பேசிய பேச்சு அறிவாலயத்தையே ஆட்டம் காண வைத்து விட்டது!''

''மறு ஒலிபரப்பு செய்யும்!''

மிஸ்டர் கழுகு: சீறிய ஜெ.அன்பழகன்!

''கருணாநிதியையும் ஸ்டாலினையும் மையமாக வைத்துக் கொண்டு ஜெ.அன்பழகன் சீறிய வார்த்தைகளை அப்படியே தருகிறேன். 'தலைவரைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கு. தளபதியைச் சுற்றியும் ஒரு கூட்டம் இருக்கு. இவங்க மத்தவங்க யாரையும் தலைவருக்குப் பக்கத்திலேயும் தளபதிக்குப் பக்கத்திலேயும் நெருங்க விடுவது இல்லை. இதனால் தொண்டர்கள் நினைப்பதை

மிஸ்டர் கழுகு: சீறிய ஜெ.அன்பழகன்!

அவர்களிடம் சொல்ல முடியவில்லை. ரெண்டு லட்சம், மூணு லட்சம் செலவு செய்து கூட்டம் நடத்துறோம். ஆனா தலைமைக் கழகம் சார்பில் வந்து பேசும் முக்கியமான மனிதர்கள் சிலர், இப்போது நடக்கும் ஆட்சியைப் பற்றியோ, ஜெயலலிதாவின் அராஜகத்தைப் பற்றியோ விலைவாசி உயர்வைப் பற்றியோ பேசுவதே இல்லை. தலைவரையும் தளபதியையும் வானளாவப் புகழ்ந்து பேசிட்டுப் போயிடுறாங்க. தலைவரைப் புகழ்ந்து பேசினால் மட்டும் கட்சியை வளர்க்க முடியாது. ஜெயலலிதாவின் பலவீனங்களை மக்களுக்கு எடுத்துச் சொன்னால்தான் கட்சியை வளர்க்க முடியும்' என்றார்.''

''நியாயமான பேச்சு!''

''அவர் சொன்ன மிச்சத்தையும் கேளும். 'இவங்​களுக்கு ஜெயலலிதாவைத் திட்டிப் பேசப் பயம். போராட்டக் களத்துக்கு நம்மை அனுப்புவதற்கான அறிவிப்பை தலைவர் வெளியிடப் போறார். அதுக்கான விளக்கப் பொதுக்கூட்டத்துக்கும் தேதி குறிக்கப் போறோம். அது போதாது... அந்தக் கூட்டங்​களில் யார் யார் என்ன பேசுறாங்கன்னு தலைவர் உளவு பார்க்கணும். ஜெயலலிதாவை உள்ளது உள்ளபடி எத்தனை பேர் திட்டிப் பேசுறாங்கன்னு கவனிக்கணும். இங்கே நான் இதையெல்லாம் எடுத்துச் சொன்ன பிறகாவது, ஜெயலலிதா ஆட்சியை பயமில்லாமல் விமர்சனம் செய்தால் சந்தோஷம்!’ என்று, ஜெ.அன்பழகன் நக்கலாக நிறுத்த... கூட்டத்தில் பலரும் கைதட்டிக் குவித்திருக்கிறார்கள். முன்வரிசையில் இருந்த சிலரோ, யாரைச் சொல்கிறார் என்று தெரியாமல் முழித்திருக்கிறார்கள்!''

''கிழிக்க முன்வராதவர்கள் முழிக்கத்தான் செய்வார்கள்!''

''அதோடு நிறுத்தவில்லையே ஜெ.அன்பழகன்... 'போன தடவை ஆட்சிக்கு வந்ததும் தலைவரைக் கைது செய்தது அந்த அம்மா. உடனடியாக நாம் எல்லோரும் வீறுகொண்டு எழுந்தோம். அதுக்குப் பிறகு யார் மீதும் கை வைக்கல! இந்தத் தடவையோ இரண்​டாம் கட்டத் தலைவர்​களை எல்லாம் பிடிச்​சுப் போ​டுறாங்க. அத​னால எல்லோரும் பயந்து அமைதி ஆகிட்​டாங்க. அந்தத் துணிச்​சல்லதான் தொடர்ந்து கைது பண்றாங்க. ஆந்திராவுல ஜெகன்மோகன் ரெட்டியைப் பழி வாங்கினாங்க. அதுவே, அவருக்குச் சாதகமாக மாறி... தேர்தலில் ஜெயித்து விட்​டார். அந்த மாதிரி நாமும் சூழ் நிலையைப் பயன்படுத்தி, கொந்​தளித்து செயல்பட்டால் மட்டும்​தான் ஜெய​லலிதாவை அடக்க முடியும்’ என்று 'மினி மனசாட்சி'யாக மாறிப் பேசினார் அன்பழகன்!''

''ஓ!''

''அது மட்டுமில்லை... மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கம் மீதும் சீற்றம் காட்டி இருக்கிறார். 'மத்திய நிதி இலாகா அமைச்சரா நம்ம கட்சிக்காரர் ஒருத்தர் இருக்கார். அவர் இங்கே இருக்காரா?’ என்று கிண்டலாகத் தொடங்கிய ஜெ. அன்பழகன், 'இதோ இருக்காரே... அவர் என்ன பண்றார்? அந்தப் பதவியை வைத்து ஏதாவது கட்சிக்கு நல்லது பண்றாரா?

ஜெயலலிதாவுடன் இருப்பவர்கள், அவருக்கு வேண்டியவர்கள், நம் மீது வழக்குப் போடும் ஐ.பி.எஸ். அதிகாரிகள், அவர்களுக்கு வழக்குப் போட ஆவணங்கள் எடுத்துத் தரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்... அவர்கள் எல்லாம் யோக்கியர்களா? வரு​மானத்துக்கு மீறி சம்பாதிக்கவில்லையா? அதை எல்லாம் கண்காணிக்க வேண்டிய அதிகாரம் இந்த மந்திரிகிட்டதானே இருக்கு? அவர் அதைச் செய்தாரா? செய்யவில்லை என்றால் அதைத் தலைமை கேட்டதா? இதைவிட அவருக்கு என்ன வேலை? நம்மைப் பழி வாங்கியவர்களை நாம் பதிலுக்குப் பழி வாங்க வேண்டாமா? இதை தனிப்பட்ட முறையில் நான்

மிஸ்டர் கழுகு: சீறிய ஜெ.அன்பழகன்!

கேட்க முடியாது. தலைமைதான் கேட்கணும்’ என்று தடாலடி பாலிடிக்ஸ் பேசினார்.  முன்வரிசையில் இருந்த பழனிமாணிக்கம் ஆடாமல் அசையாமல் இருந்தார்!''

''தானாகவே இத்தனை ஓபனாகத் தாக்கித் தள்ளினாரா அன்பழகன்?''

''யாருக்குத் தெரியும்? கனிமொழி பேசும்போது, 'ஜெய​லலிதாவைப் பற்றி பேசுவதற்குப் பயப்படுபவர்களை எல்லாம் ஏன் கூட்டத்தில் பேச அழைக்கிறீர்கள்? தைரியமாகப் பேசுபவர்களை மட்டும் அழையுங்கள்’ என்று சொன்னாராம். சிறை நிரப்பும் போராட்டம் அறிவிப்பதால், அதற்குத்

மிஸ்டர் கழுகு: சீறிய ஜெ.அன்பழகன்!

தொண்டர்கள் கூட்டத்தை அழைத்துவரச் சொல்லி அனைத்து மாவட்டச் செயலாளர்களிடமும் வெளிப்படையான வாக்குறுதி வாங்க நினைத்த கருணாநிதி, அத்தனை பேரையும் கூட்டத்தில் பேச வைத்​திருக்கிறார். 'சிறைகளை நிரப்புவோம்’ என்று அனைத்து மா.செ-க்களும் உறுதி அளித்து இருக்கிறார்கள்!''

''பழனிமாணிக்கம் தன் முறை வந்தபோது என்ன சொன்னார்?''

''அவர் வேறு ஏதோ சப்ஜெக்ட் பேசத்தொடங்க... பேராசிரியர் அன்பழகன், 'மாவட்டச் செயலாளருக்கான எல்லையை உணர்ந்து பேச வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார். 'இதுக்குக்கூட எனக்கு அதிகாரம் இல்லையா?’ என்று சொல்லிவிட்டு, கீழே போய் உட்கார்ந்து விட்டாராம் பழனி மாணிக்கம். ஆ.ராசா வந்திருந்தார். ஆனால், அவர் எதுவும் பேசவில்லை. அழகிரி வரவே இல்லை. பொதுவாக செயற்குழு, பொதுக்குழு என்றால் உறுப்பினர்கள் அனைவருக்கும் மதியச் சாப்பாடு நிச்சயம் இருக்கும். இந்த முறை சாப்பாடு இல்லாமல் அனைவரையும் வெளியே போய் சாப்பிட்டுவிட்டு 'ஒரு மணி நேரத்தில் வரவேண்டும்’ என்று, ஸ்கூல் மாதிரி அனுப்பி விட்டார்கள். 'கட்சி நிதி அவ்வளவு சீக்கிரமாவா வற்றிப் போச்சு?' என்று புலம்பியபடி மூத்த நிர்வாகிகள் வெளியில் ஓடினார்கள்!''

குறு அமைதி காத்த கழுகார், ''அதே தினம் மாலையில் தாணா தெருவில் நடந்த பொதுக்கூட்டத்தில், 'பரவாயில்லை, நமக்குப் பிறகு ஒரு அன்பழகன் இருக்கிறார்’ என்று, ஜெ.அன்பழகனைப் பாராட்டினார் பேராசிரியர் அன்பழகன். இதைக் குறிப்பிட்ட கருணாநிதி, 'பேராசிரியரின் இந்தப் பாராட்டை தம்பி அன்பழகன் தனது வீட்டு முகப்பில் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும்’ என்றார். இதில் உமக்கு ஏதாவது புரிந்தால் சரி!'' என்று நிறுத்தினார் கழுகார்.

மிஸ்டர் கழுகு: சீறிய ஜெ.அன்பழகன்!

அடுத்த சப்ஜெக்ட்டுக்கு அவரைத் திருப்பும் முகமாக, ''ராமஜெயம் கொலை விவகாரத்தை திடீரென சி.பி.சி.ஐ.டி. போலீஸுக்கு மாற்றியது பற்றி புதுத்தகவல் கிடைத்ததா?'' என்று கேட்டோம்.

''என்னென்னவோ டெக்னிக்கல் காரணங்களைத்தான் சொல்​கிறார்கள். ஆனால், 'கேஸ்  ஒன்று... பாஸ் இரண்டு' என்று ஆனதால், உயர் அதிகாரிகளுக்குள் ஈகோ மோதல் ஏற்பட்டு விட்டதாம். இதுதான் மாறுதலுக்குக் காரணம் என்கிறது திருச்சி காக்கி வட்டாரம். திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமாரும், சரக டி.ஐ.ஜி-யான அமல்ராஜும் விசாரித்து வந்தார்கள். இருவருமே கில்லாடிகள். நல்ல திறமைசாலிகள். அதனால், நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. ஆனால், க்ளைமாக்ஸில் ஏதோ கருத்து வேறுபாடு வந்து விட்டதாம்.''

''ஐயோ... என்ன அது?''

''ராமஜெயம் கொலையில் வி.ஐ.பி-கள், பெண்கள் என்று பலரையும் விசாரிக்க வேண்டி வரும். இம்மி அளவுக்குக்கூட புகார் வராத மாதிரி அறிவியல்பூர்வமாகவும் சி.பி.ஐ. பாணியிலும் விசாரிக்க​ வேண்டும் என்று 10 கட்டளைகளைப் போட்டாராம் கமிஷனர். தனிப்படை போலீஸார் ஒவ்வொருவரின் பாக்கெட்டிலும் இந்த 10 கட்டளை சுற்றறிக்கை இருந்ததாம். இதன்படி, சந்தேக நபர்களை வரவழைப்பதும் எட்டி நின்று கேள்விகளைக் கேட்பதும் அவர்கள் ஏதாவது பதில் சொல்லிவிட்டுப் போவதுமாகவே இரண்டு மாதங்கள் சாத்வீக முறையில் ஒடிவிட்டன.  தேர்தல் பணிக்காக கமிஷனர் ஆந்திரா போனதும் அமல்ராஜ் களத்தில் இறங்கினார். 'மிரட்டல், அடி, உதைதான் வாய்ப்பூட்டை உடைக்கும்' என்பது இவரது பாணி. அதுவரை வாய் திறக்காத ஆசாமிகள் பலரும், தெரிந்த விஷயங்களை தனிப்படையினரிடம் கக்கினர். இதேநேரம், கமிஷனர் போட்ட பாதையிலும் அறிவியல்பூர்வ விசாரணைகள் நடந்துகொண்டு இருந்தன. தேர்தல் பணி முடிந்து திருச்சிக்கு வந்தார் கமிஷனர். இவரும், அமல்ராஜும் கைகோத்து விசாரணையில் ஆர்வம் காட்டினர். கொலையாளிகளைத் தொட்டுவிடும் தூரம்தான். தனிப்படையினர் பூரிப்பில் இருந்தனர். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன், இந்த வழக்கின் போக்கு பற்றி கேஷ§வலாக மீடியாவிடம் அமல்ராஜ் ஏதோ சொல்ல, அது செய்தியாகி விட்டது. 'இவர் எப்படி பேட்டி தரலாம்' என்று, கமிஷனர் டென்​ஷன் ஆகிவிட்டாராம். ஓலைகள் திருச்சிக்கும் சென்னைக்கும் பறந்தன. சி.பி.சி.ஐ.டி-க்கு வழக்கை மாற்றினாராம் டி.ஜி.பி-யான ராமானுஜம்!''

''எந்த ஒரு முக்கிய விவகாரத்தையும் கிடப்பில் போடவேண்டுமானால், உடனே அதை சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு அனுப்புவார்கள். அப்படித்தான் ராமஜெயம் விவகாரத்திலும் நடக்கிறது என்று தி.மு.க-வில் சிலர் பேச ஆரம்பித்து உள்ளார்களே?''  

''இன்னும் ஐந்து மாதங்களில் ரிட்டயர்டு ஆகப்போகிற டி.ஜி.பி. ராமானுஜம் இந்தக் கொலை விவகாரத்தை நேரடியாகக் கவனிக்கிறார். பரஸ்பர மோதல்கள் இல்லாமல், 'ஒரு கேஸ், ஒரு பாஸ்' என்ற ரீதியில் விசாரணை நடக்க வேண்டும் என்றுதான் சி.பி.சி.ஐ.டி. டீமை முடுக்கி விட்டிருக்கிறாராம். ராமஜெயம் கொலை நடந்ததவுடன், ஜெயச்சந்திரனை விசாரணை அதிகாரியாக நியமிக்கச் சொன்னதே டி.ஜி.பி-தானாம். தனிப்படையில் முழுவீச்சில் செயல்பட்ட வேறு சிலஅதிகாரிகளை டெபுடேஷனில் சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு அனுப்பப் போகிறாராம் ராமா னுஜம்''

''அதெல்லாம் சரி. கொலையாளிகள் எவ்வளவு தூரத்தில் இருக்கிறார்கள்?''

''கொலையாளிகள் புதுச்சேரியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்பது போலீஸின் லேட்டஸ்ட் யூகம். ஈரோடு மாவட்டத்தில் ஒரு மில்லை குத்தகைக்கு எடுத்த விவகாரத்தில் பிரபல வி.ஐ.பி. ஒருவருக்கும் ராமஜெயத்துக்கும் மோதல் இருந்ததாம். தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது, அந்த மில்லை தனது கஸ்டடியில் வைத்திருந்தாராம் ராமஜெயம். ஆனால், அ.தி.மு.க. ஆட்சி வந்ததும், அந்த பிரபல வி.ஐ.பி. சுதாரித்து, அங்கு ஆக்கிரமிப்புக் காவலில் இருந்தவர்களை விரட்டி மீண்டும் தனது கஸ்டடிக்கு எடுத்துக்கொண்டாராம். அதை தன்வசமே மறுபடி கொண்டுவர ராமஜெயம் தீவிரம் காட்டினாராம். அந்த வி.ஐ.பி-க்கு புதுச்சேரியில் பிசினஸ், போக்குவரத்து தொடர்புகள் இருக்கிறதாம். 'அங்குள்ள கூலிப்படைக்கு வேலை கொடுத்திருப்பாரோ?' என்ற ரீதியில் முடிச்சுப்போட்டுப் பார்க்கிறது போலீஸ்!''

''ம்...''

''இன்னொரு புதுக்கோணம்... ராமஜெயம் உடல் கிடந்த திருவளர்சோலை ஏரியாவில் அவர் தொடர்புடைய 50 ஏக்கர் நிலபுலன்கள் இருக்கிறதாம். ராமஜெயம் இறப்பதற்கு ஒருவாரம் முன் அந்த நிலத்தின் ஒரு பகுதியை குடும்ப உறுப்பினர் பெயருக்கு திடீரென மாற்றினாராம். அடுத்த சில நாட்களில் மேலும் கொஞ்சம் நிலத்தை அதே உறுப்பினர் பெயருக்கு மாற்றும் வகையில் ஆவணங்களை ரெடி பண்ணும்படி தனது நண்பர்களிடம் சொல்லி இருந்தா£ராம். அதற்குள் இந்தக் கொலை. இது தொடர்பான விவரத்தை போலீஸே கண்டுபிடித்து சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரிக்கிறதாம்.''

''ஓஹோ!''

''புதுச்சேரி கூலிப்படை என்று சொன்னேனே...  'ஒரு வார காலமாக புதுச்சேரி கூலிப்படை ஒன்று ஸ்கார்பியோ காரில் திருச்சியை வட்டமடிக்கிறது. யாரோ ஒரு வி.ஐ.பி-யை போட்டுத் தள்ளப்போகிறார்கள்' என்கிற ரகசிய தகவலும் சமீபத்தில் போலீஸுக்கு எட்டியதாம். அதைத் தொடர்ந்து, உருட்டி மிரட்டிப் பிழைக்கும் சில பிரபலங்களை உஷார் படுத்தி இருக்கிறார்களாம் போலீஸார்'' என்று ரெட் அலர்ட் கொடுத்தபடி கிளம்பினார் கழுகார்!

படங்கள்: என்.விவேக்

மீண்டும் முதலில் இருந்தா..?

 'சசிகலா அடுத்த முறை ஆஜராகாவிட்டால் பிடிவாரன்ட்’ என்று நீதிபதி மல்லிகார்ஜுனைய்யா கண்டிப்பு காட்டினார். அதனால் 25-ம் தேதி சசிகலா 'கண் கட்டோடு’ வருவார் என்று எல்லோரும் எதிர்பார்க்க... அனைவருக்கும் ஏமாற்றம். சசி வரவில்லை. அவர் வராததால் இளவரசி, சுதாகரனும் வரவில்லை!

வராதது கூடப் பரவாயில்லை. அஸ்திவாரத்தையே அசைப்பது மாதிரி, சிறப்பு நீதிமன்ற நீதிபதியை நோக்கியே கேள்விக்கணைகளை தொடுக்க ஆரம்பித்துவிட்டது சசி தரப்பு.

காலை 11 மணிக்கு நீதிபதி வந்தவுடன், ஜெயலலிதாவின் வக்கீல் பி.குமாரும் சசிகலாவின் வக்கீல் மணிசங்கரும் இணைந்து புதிதாக ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர். அந்த மனுவை வாசிக்க ஆரம்பித்ததுமே நீதிபதியின் முகம் மாறிவிட்டது. அந்த மனுவில் என்ன இருக்கிறது? 'ஊழல் தடுப்புத் துறை சட்டப்பிரிவு 3-ன் படி, ஸ்பெஷல் கோர்ட்டில் நடந்து வரும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்கும் அதிகாரம் உங்களுக்கு இல்லை. ஏனென்றால் ஸ்பெஷல் கோர்ட் நீதிபதியாக வரவேண்டியவரை சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி, கர்நாடக உயர் நீதிமன்றமும் கர்நாடக அரசும் கலந்து ஆலோசித்து அறிவிக்க வேண்டும். அதன் பிறகு முறையான அரசாணை வெளியிட வேண்டும். அப்படித்தான் இந்த வழக்கை முன்பு விசாரித்த நீதிபதி ஏ.எஸ்.பச்சாபுர்ரே நியமிக்கப்பட்டார். ஆனால், உங்களை அப்படி நியமிக்கவில்லை. நீங்கள் பதவி உயர்வின் அடிப்படையில் நியமிக்கப்பட்டீர்கள்’ என்று இருந்தது.

நீதிபதி மல்லிகார்ஜுனைய்யா, ''என் நியமனச் சிக்கல் விவரத்தை கர்நாடக உயர் நீதிமன்றம் கர்நாடக அரசின் உதவியோடு தெளிவுப்படுத்தும்'' என்று கூறி விசாரணையை ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

கோர்ட்டை விட்டு வெளியே வந்த ஜெ. தரப்பு வக்கீல்களுக்கு அடக்க முடியாத சந்தோஷம். ''இந்த ஜட்ஜ் விசாரித்த எதுவுமே செல்லாது. அம்மாவைக் கேள்வி கேட்டதும் செல்லாது. இனி புதிய ஜட்ஜ் வந்து கேஸை முதலில் இருந்து தொடங்கவேண்டும்'' என்று மீடியாக்களிடம் சத்தம் போட்டு பேசினார்கள். 

மிஸ்டர் கழுகு: சீறிய ஜெ.அன்பழகன்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism