Published:Updated:

எம்.பி-க்களுக்கு மோடி வைத்த விருந்து செலவு 21.47 லட்சம்! #VikatanExclusive

மோடி அளித்த விருந்தில்
மோடி அளித்த விருந்தில்

நாடாளுமன்றத் தேர்தலில் வென்ற பிறகு எம்.பி-க்களுக்கு பிரதமர் மோடி விருந்து வைத்தார். அதன் செலவு விவரங்கள் பிரத்யேகமாக விகடனுக்கு கிடைத்திருக்கிறது!

மீண்டும் மோடியா... ராகுல் காந்தியா என்ற கேள்வியுடன் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது. இரண்டாவது முறையாகப் பிரதமர் ஆனார் நரேந்திர மோடி. பிரதமராக மீண்டும் பதவியேற்றதைக் கொண்டாடும் வகையில் எம்.பி-க்களுக்கு தடபுடல் விருந்து ஒன்றையும் வைத்தார் மோடி. அந்த விருந்து ஏன்?

மோடி
மோடி

2014 நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முறையாக வென்று மோடி பிரதமர் ஆன பிறகு, `எதிர்க்கட்சிகளை ஒரு பொருட்டாகவே அவர் மதிக்கவில்லை' என்ற விமர்சனம் எழுந்தது. ``நாடாளுமன்ற நடவடிக்கைகளிலும் விவாதங்களிலும்கூட மோடி பங்கேற்பதில் அதிக கவனம் செலுத்தவில்லை'' என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகள் படித்தன. பத்திரிகையாளர்கள் சந்திப்பையும் மோடி தவிர்த்து வந்தார். இப்படியான சூழலில்தான், இரண்டாவது முறையாக மோடி பிரதமர் ஆன நிலையில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

விருந்துக்கான ஏற்பாடுகளை நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சகம்தான் செய்திருந்தது. `பிரதமர் நரேந்திர மோடி அளிக்கும் விருந்தில் நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கட்சிப் பாகுபாடு இன்றி அவசியம் கலந்துகொள்ள வேண்டும்' என எம்.பி-க்களுக்கு அழைப்பு அனுப்பினார் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி.

மோடி
மோடி

17-வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தேர்வு பெற்ற எம்.பி-க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி இரண்டு நாள்கள் நாடாளுமன்றத்தில் நடைபெற்றன. அது முடிந்த அன்றுதான் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 2019 ஜூன் 20-ம் தேதி நடைபெற்ற அந்த விருந்தில் புதிய எம்.பி-க்களுடன் மாநிலங்களவையைச் சேர்ந்த எம்.பி-க்களும் கலந்துகொண்டார்கள். டெல்லியில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலான அசோகா ஹோட்டலில்தான் பிரதமரின் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. விருந்தில் சைவ உணவு வகைகள் மட்டும் பரிமாறப்பட்டன.

பிரதமர் மோடியும் புதிதாகப் பொறுப்பேற்ற மத்திய அமைச்சர்களையும் நாடாளுமன்ற இரு அவைகளின் எம்.பி-க்கள் அறிந்துகொள்வதற்காகத்தான் இந்த விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விருந்து நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் அலுவல் ரீதியாக அல்லாமல் சாதாரணமாக எம்.பி-க்கள் உரையாடினார்கள். மோடியுடன் பலர் செல்ஃபியும் எடுத்துக் கொண்டார்கள்.

விருந்தில்..
விருந்தில்..

பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த எம்.பி-க்கள் விருந்தில் தவறாமல் பங்கெடுத்துக் கொண்டார்கள். மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத், தி.மு.க எம்.பி. கனிமொழி, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், பி.ஜே.பி-யைச் சேர்ந்த தெலுங்கு தேசம் எம்.பி-க்கள் சவுத்ரி, ரமேஷ், வெங்கடேஷ் ஆகியோரும் கலந்துகொண்டார்கள். சோனியா காந்தி, ராகுல் காந்தி உட்பட முக்கியத் தலைவர்கள் சிலர் பங்கேற்கவில்லை. திரிணமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்.பி-க்களும் விருந்தில் கலந்துகொள்ளவில்லை.

விருந்தில் கனிமொழி
விருந்தில் கனிமொழி

இந்த விருந்து நிகழ்ச்சி தொடர்பாகக் கருத்து வெளியிட்ட பிரதமர் மோடி, ``விருந்து நிகழ்ச்சியில் எம்.பி-க்களுடன் நேரத்தை செலவிட்டது மகிழ்ச்சி அளித்தது'' என்றார். இந்த விருந்தின்போது தமிழக எம்.பி கனிமொழி, மோடி அமர்ந்திருந்த மேஜையில் நேருக்கு நேர் அமர்ந்து விருந்து உண்டார். அப்போது இருவரும் சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

மோடி அளித்த விருந்துக்கு எவ்வளவு செலவு ஆகியிருக்கும்? RTI மூலம் விடை தேடினோம். நாடாளுமன்ற விவகாரத் துறை செயலகத்தின் சார்பு செயலாளர் முகேஷ் குமார் நமக்கு அளித்த பதிலில், `பிரதமர் அளித்த விருந்துக்கு 21,47,600 ரூபாய் செலவானது' எனத் தெரிவித்திருக்கிறார்.

விருந்தில் மோடி
விருந்தில் மோடி

விருந்தில் மொத்தம் 700 பேர் கலந்துகொண்டிருக்கிறார்கள். அதன்படி பார்த்தால் ஒரு எம்.பி-க்கு 3,068 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அசோகா ஸ்டார் ஹோட்டலில் அளிக்கப்பட்ட அந்த விருந்தின் பெயர் Veg Special Dinner and Orange Juice. இந்த விருந்தில் அரசு உயர் அதிகாரிகள் யாரும் கலந்துகொள்ளவில்லை. விருந்துக்குச் செய்யப்பட்ட செலவுத் தொகையை ஆன்லைன் மூலம் அசோகா ஹோட்டலுக்கு மத்திய அரசு அளித்திருக்கிறது.

மோடி இரண்டாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்ற பின், அதாவது இந்த விருந்து நடப்பதற்கு இரண்டு நாள்கள் முன்பு, மீடியாக்களை சந்தித்து உரையாடியபோது, ``நாடாளுமன்ற ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளின் பங்கு முக்கியமானது. எண்ணிக்கை பற்றி கவலை வேண்டாம். எதிர்க்கட்சிகளின் ஆலோசனைதான் பலம். மக்கள் பணிகளை இணைந்து நிறைவேற்றுவோம்'' என்றார் மோடி.

இந்த விருந்து நிகழ்ச்சி ஆளும் கட்சி எதிர்க்கட்சி இடையே இருந்த பகைமையைப் போக்கியதா என்றால், அதற்கு விடையில்லை. டெல்லி கலவரம் விவகாரத்தில் நாடாளுமன்றம் முடக்கப்பட்டது. காங்கிரஸ் எம்.பி-க்கள் 7 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்கள்!

அடுத்த கட்டுரைக்கு