Published:Updated:

நல்ல பெயரை எடுங்கள்: ஜெயலலிதாவுக்கு வீரமணி அறிவுரை

நல்ல பெயரை எடுங்கள்: ஜெயலலிதாவுக்கு வீரமணி அறிவுரை
நல்ல பெயரை எடுங்கள்: ஜெயலலிதாவுக்கு வீரமணி அறிவுரை
நல்ல பெயரை எடுங்கள்: ஜெயலலிதாவுக்கு வீரமணி அறிவுரை

சென்னை: 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்கள் அனைவரையும் பணியில் அமர்த்தி மக்கள் நல அரசு என்ற நல்ல பெயரை ஈட்டுமாறு முதலமைச்சர் ஜெயலலிதாவை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்கள் நலப் பணியாளர்களைப் பணி நீக்கம் செய்த உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்கிறோம். உயர் நீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் விசாரித்துத் தீர்ப்பளிக்க வேண்டும். பல ஆண்டு காலமாக பணியாற்றிய மக்கள் நலப் பணியாளர்களை தமிழ்நாடு அரசு பணி நீக்கம் செய்தது தவறானது. அவர்கள் வாழ்க்கையை அரசு விளையாட்டாகக் கருதியுள்ளது. எனவே, சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்.

ஆறு மாத விசாரணைக் காலத்தில் அரசுத் தரப்பிலும், மக்கள் நலப் பணியாளர்கள் தரப்பிலும் வாய்தா கோரி வழக்கில் கால தாமதத்தை ஏற்படுத்தக் கூடாது’’ என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனில்தவே, தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்புக் கூறியுள்ளது.

1989 முதல் மாறி மாறி நியமனமும் - நீக்கமும் மக்கள் நலப் பணியாளர்கள் 1989ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியால் பணியமர்த்தம் செய்யப்பட்டனர். ஒவ்வொரு முறை அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த போதெல்லாம் அவர்களைப் பணி நீக்கம் செய்வதும், தி.மு.க. ஆட்சிக்கு வரும் போதெல்லாம் மீண்டும் பணியமர்த்தம் செய்வதும் ஒரு தொடர் கதையாகவே ஆகி விட்டது. இதனைத்தான் உச்ச நீதிமன்றம் அரசு ஊழியர்களின் வாழ்க்கையை விளையாட்டாக அரசு கருதியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

13,000 பணியாளர்கள் என்றால் அதன் பொருள் 13,000 குடும்பங்களின் வயிற்றில் அடித்ததாகப் பொருள்படும். அரசு என்றால் அதனை நம்பி வாழும் மக்களைக் காப்பாற்ற வேண்டும் - மக்கள் நல அரசு என்பதற்கு அதுதான் பொருள்.

அன்று சாலைப் பணியாளர்கள் தி.மு.க. ஆட்சியில் நியமனம் செய்யப்பட்ட சாலைப் பணியாளர்களை இதே முறையில்தான் 2001இல் அ.தி.மு.க அரசு பணி நீக்கம் செய்தது. கடுமையான போராட்டத்துக்குப்பின் நீதிமன்ற உத்தரவின்பேரில்தான் அவர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டனர். ஓர் அரசு, தேர்தலில் வெற்றி பெற்று வந்திருக்கிறது என்றால் அது கடந்த ஆட்சியின் தொடர்ச்சிதான் என்று அ.தி.மு.க. அரசுக்கு ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் வேறொரு வழக்கில் சுட்டிக் காட்டியதை ஏனோ அ.இ.அ.தி.மு.க.
அரசு மறந்து விட்டது.

அ.தி.மு.க., ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் கொடுத்ததை திமுக ஆட்சி ரத்து செய்யவில்லையே, அந்தத் திட்டத்தைத் தொடரத்தானே செய்தது. அந்த அணுகுமுறை அ.தி.மு.க. ஆட்சிக்கு இல்லாது போனது மிகவும் வருத்தத்திற்குரியது.

##~~##
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு, உயர் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வரை காத்துக் கொண்டு இருக்காமல், மக்கள் நலப் பணியாளர்கள் அனைவரையும் பணியில் அமர்த்தி மக்கள் நல அரசு என்ற நல்ல பெயரை ஈட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் அதிர்ச்சியின் காரணமாக தற்கொலைகூட செய்து கொண்டுள்ளனர், சிலர் நோய்வாய்ப்பட்டனர். பிச்சை எடுக்கும் போராட்டம்வரை நடத்திவிட்டனர். இதற்கு மேலும் அரசு இந்தப் பிரச்னையை மனித நேயக் கண்ணோட்டத்தில் அணுகியிருக்க வேண்டாமா?
நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக அமையட்டும் என்று அறிஞர் அண்ணா சொன்னதையே அண்ணாவின் பெயரில் உள்ள அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு சிறப்பாக அதன் முதலமைச்சருக்குச் சுட்டிக்காட்டி 13,000 மக்கள் நலப் பணியாளர்கள் குடும்பங்களை வாழ வைக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறியுள்ளார்.